"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, December 27, 2011

கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?


                                                        ஓரிறையின் நற்பெயரால்

கடவுள்!
மனித சமூகத்தோடு பிண்ணி பிணைக்கப்பட்ட ஒரு வார்த்தை. இருத்தன்மைகளில் கடவுளை மையப்படுத்தியே மனித வாழ்வு இருக்கிறது.
ஒன்று கடவுளை ஏற்று மற்றொன்று கடவுளை மறுத்து.

 கடவுளை ஏற்பதென்பது அவர்கள் சார்ந்த மத/ மார்க்கத்தின் ஊடாக பிறப்பின் அடிப்படையில் இயல்பாக உருவாகும் நம்பிக்கை சார்ந்த விசயமாக தொடங்கி, பிறந்த இடம், வளர்ந்த சூழல், மற்றும் ஆய்தறிவும் எண்ணங்கள் போன்றவற்றின் தாக்கத்தால் கடவுளின் மீதான நம்பிக்கையை அதிகரித்து வாழும் மக்கள்.

அதைப்போல சுற்றுசூழல், வர்த்தரீதியான சமூகப்பின்னணியில் தம் வாழ்வை தொடர்ந்து பிரிவினைவாதம், அறிவுக்கு பொருந்தாத மூட நம்பிக்கைகள், மதத்தின் பெயரால் அனாச்சாரியங்கள், கடவுளுக்கே பூஜை புனஷ்காரங்கள் போன்றவற்றை பார்த்து சிந்தனை வயப்பட்டு தம்மை "நாத்திகவாதியாக" அடையாளப்படுத்திக்கொண்டு இச்சமூகத்தில் கடவுளை எதிர்த்து அல்லது மறுத்து உலாவரும் மக்களில் ஒரு பிரிவினர்.

ஆக இருபாலருக்கும் தங்களுக்கு எது உணர்த்தப்படுகிறதோ, தங்களின் சிந்தனையில் எது உதிக்கிறதோ அதுவே அவர்கள் சார்ந்து செயல்படுவதற்கு பிரதான காரணமாகிறது.

ஆத்திகர்கள், கடவுளின் பெயரால் தமக்கு போதிக்கப்படுபவற்றை மையமாக வைத்தே கடவுளை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் தாங்களோ ஆய்வு ரீதியாக சிந்தித்து அதில் காணக்கிடைப்பதை மட்டுமே ஏற்றுக்கொள்வதாக  சொல்கின்றனர் நாத்திகர்கள்.

உண்மைதான். ஆய்ந்தறியாத எந்த செயலின் உண்மை நிலையும் முழுவதும் நம்பகத்தன்மை வாய்ந்ததல்ல என்பது ஏற்புடையது தான். ஆனால், அறிவியலால் எல்லா செயல்களையும் முழுவதும் ஆய்தறிந்து உண்மையான தகவல்களை தர முடியாது. தரும் வரையில் பொறுத்திருந்தால் நம்மால் எந்த செயலையும் முழுமையாக செயல்படுத்த முடியாது.

அதுவரை பொய்பிக்காத நிகழ்வை மட்டுமே உண்மையெனும், அதையே நாம் ஏற்றுக்கொள்கிறோம். இன்னும் அறிவியல் மெய்படுத்தாத விசயங்களும் உலகில் உள்ளன. அதையும் நாம் ஏற்றுதான் கொள்கிறோம். அதனால் தான் கெடு தேதிக்கு முன்னமே கெட்டுப்போகும் உணவுப்பொருட்களுக்கும், காலாவதியாகும் தேதி முடிந்தும் இயங்கும் பேட்டரி போன்ற பொருட்களுக்கும் நாம் அறிவியல் முரண்பாட்டை அங்கு கற்பிப்பதில்லை.

அறிவியலால் நிருபிக்கப்படாமலும் ஒன்றை நாம் உண்மைப்படுத்தலாம்.  ஆம்!  ஒருபுறம் தலை, மறுபுறம் பூ என இரு பக்கங்களைக்கொண்ட நாணயம் சுண்டிவிடப்படும் போது தலை அல்லது பூ என நம்மால் நூறு சதவீகிதம் சரியான பதிலை சொல்ல முடியும். அதுவும் ஒரு முறையல்ல... ஆயிரம் முறைக்கூட நம்மால் சொல்ல முடியும். ஆனால் அவையெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு நமக்கு கிடைத்த முடிவுகளை வைத்தோ அல்லது நமது சிந்தனைரீதியான அறிவை வைத்தோ அல்ல.. வெற்று ஊகங்களை வைத்து மட்டுமே அவற்றை உண்மைப்படுத்துகிறோம்.

இப்படியான கடவுள் குறித்த அனுமானங்கள் - எண்ணங்களை தான் அறிவியலா(க்)க பெரும்பாலான நாத்திகர்கள் நினைக்கிறார்கள் 

சரி, சிந்தனைரீதியாக எடுக்கும் முடிவுகளும் முழுவதும் சரியாக இருக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நமது சிந்திக்கும் திறன் நாம் பெற்ற அறிவின் அளவிற்கு மட்டுமே செயல்பட முடியும். ஆகவே தான் சில நேரங்களில் மற்றவர்களின் பார்வையில் சரியாக தெரிகின்ற ஒரு செயல் நமது சிந்தனைக்கு தவறாக தெரிந்தும், நிதர்சனமாக பின்னாளில் உணரும் போது பிறரின் நிலைப்பாடே சரியானதாக நமக்கு படுகிறது. இதை நம் வாழ்நாளில் பலமுறை உணர்ந்தும் இருப்போம்,

காரணம், நமது சிந்தனைக்கு உட்பட்டே எல்லா முடிவுகளையும் நாம் எடுக்கிறோம். நமது சிந்தனையின் திறம் தாண்டி செயல்படும் பிறரால் அச்செயலின் தன்மை ஆராயப்படும் போது நமது தவறு தெளிவாய் விளங்கும். இப்படி மனிதர்களுக்கு மனிதர் சிந்தனை மாறுபடுவதால் ஒரு செயலில் உண்மையான விளைவு நாம் எடுக்கும் முடிவுக்கு நேர்மாறாக இருக்கவும் வாய்ப்ப்பிருக்கிறது. 


ஒன்றை குற்றப்படுத்தவோ விமர்சிப்பதாகவோ இருந்தால் விமர்சனத்திற்கு உள்ளாகும் அந்த நிலைகளை விட விமர்சிக்கும் நிலை மேலான தன்மைகளை கொண்டிருக்க வேண்டும்.

அதாவது, கடவுளை மனிதன் விமர்சிப்பதாக இருந்தால் கடவுளின் விளக்கப்பட்ட எல்லா தன்மைகளையும் விட விமர்சிக்கும் மனித அறிவு ஒரு படி மேல் இருக்கவேண்டும். குறைந்த பட்சம் கடவுளின் தன்மைகளோடு சமமான அறிவையாவது மனிதன் பெற்றிருக்க வேண்டும்.

ஆக்ஸிஜன் முதல் முதல் ஆகாய விமானம் வரை எந்த ஒன்றின் தன்மையும் விமர்சிக்க அல்லது குற்றப்படுத்த ஒரு துணை சாதனத்தின் உதவிக்கொண்டு ஆராயும் நாம்...கடவுள் என்ற நிலையை மட்டும் புறக்கண்ணில் தெரியும் காட்சிகளையும் நமக்கு மட்டுமே திருப்தியை ஏற்படுத்தும் நமது பகுத்தறிவின் வெளிப்பாட்டையும் வைத்து விமர்சிப்பது எப்படி பொருத்தமான செயலாக இருக்கும்?

பேரண்ட படைப்பாளனான கடவுளை அதுவும் அவன் சார்ந்த இனத்தில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது அவன் செயலை / தன்மைகளை விமர்சிக்க நமதறிவை அளவுகோலாக வைப்பது எப்படி சாத்தியமாகும்? ஏனெனில் கடவுள் சார்ந்த இனம் என்னவென்றே அறியாதபோது நாம் பெற்ற அறிவை உலகின் உச்சமாக வைத்து கடவுளை குறைப்படுத்தி விமர்சிப்பதென்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்?

ஆனால் மனித அறிவு மற்றோருவருடன் ஒப்பிடாதவரை மட்டுமே நிறைவானதாக நம்ப முடியும். அவனைக்காட்டிலும் அறிவார்ந்தவருடன் ஒப்பிடும் போது குறைப்படுத்தபடுகிறது.

இலட்சகணக்கான யுகங்களாக பயணிக்கும் இவ்வுலகத்தில் முடிவுற்ற பெரும்பாலான நிகழ்வுகளுக்கே காரணம் கண்டறியப்படா நிலையில் சிறுப்புள்ளியாய் தோன்றி மறையும் மனிதன் பேரண்ட விதிகளை தாண்டி செயல்படும் முடிவுறா நிலையில் இயங்கும் ஒன்றை விமர்சிக்கும் அறிவாளியாக தன்னை சொல்லிக்கொள்வது தான் ஆச்சரியமான அறியாமை!

                                                    அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?"

Tuesday, December 13, 2011

நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?

                                                              ஓரிறையின் நற்பெயரால்

தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு 'ஒருமைப்படுத்துதல்' என்றும் பொருள்.
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் கூறப்பட்டிருக்கின்றதோ அவைகள் அனைத்திலும் அல்லாஹ்வுக்கு நிகர் யாருமில்லை என்றும் அவன் தனித்தவன் என்றும் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதற்கு 'தவ்ஹீத்' என்று பெயர்.

அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத்
  'அஹ்லுஸ் ஸூன்னத் என்பதற்கு நபி வழியென்றும், 'வல்ஜமாஅத் என்பதற்கு அவ்வழியை பின்பற்றுவர்கள் என்றும் பொருள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழியை பின்பற்றும் யாவரும் அஹ்லுஸ் ஸூன்னத் வல்ஜமாஅத் ஆவர்

இப்பெரும் வார்த்தைகள் இரண்றிற்கும் நேரடி அர்த்தங்கள் இவை. இவ்விரு வார்த்தைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பவர்களே முஸ்லிம்கள். ஒன்றை ஏற்று பிறிதொன்றை விட்டவர்கள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வரமாட்டார்கள். இப்படி இஸ்லாத்தின் உரைக்கல்லான இவை இன்று எதிர் எதிர் நிலையில் செயல்படும் இயக்கம் சார்ந்த வார்த்தைகளாக சமூகத்தில் வலம் வருவதுதான் ஆச்சரியமான வேதனை!

இஸ்லாத்தை பொறுத்தவரை அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் ஒன்றை ஏவினால் அதை ஏற்று நடப்பதே ஒருவர் முஸ்லிம் என்பதற்கு சான்று. மாறாக அவற்றில் மாற்றம் கொள்வதற்கோ - திருத்தம் செய்வதற்கோ அதிகாரம் இல்லை. இதை அல்லாஹ் தன் வான் மறையில்

 அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை ஆகவே, அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்மான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ((33:36))

 திருக்குர்-ஆன் மிக தெளிவாக எந்த ஒரு காரியத்தை செய்வதற்கும் விலக்குவதற்கும் அளவுக்கோலை ஏற்படுத்தி இருக்க எந்த ஒரு காரியமெனிலும் அது அல்லாஹ்வுடைய அங்கீகரிப்பும், அவனுடைய தூதரின் வழிக்காட்டுதலும் இருக்க வேண்டியது அவசியமான ஒன்று. அதிலும், குறிப்பாய் மார்க்க விசயங்களில் இவை இன்னும் அதிக கவனத்துடன் கையாளப்பட வேண்டும்.

இறைவனை மையப்படுத்தும் விசயங்களிலெல்லாம் இறை நேசர்களை  முன்னிலைப்படுத்தும் நபர்கள் ஒருங்கிணைந்த கூட்டமைப்புக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்றும் அவற்றை களைவதற்காக குழுமியிருக்கும் நபர்கள் தவ்ஹீதுவாதிகள் என்ற பெயரிலும் சமூக பார்வையில் அறிமுகப்படுத்தப்படுகின்றனர்.

சுன்னத் ஜமாஅத்தினர் என தம்மை அடையாளப்படுத்திக்கொள்வோர்களிடம் நாம் வினவினால் அவர்கள் கூறும் பதில் இது தான்
அல்லாஹ்விற்கு யாரையும் நாங்க இணைவைப்பதில்லை. மாறாக இறைவனிடத்தில் எங்களின் துஆ விரைவாக ஏற்றுக்கொள்ளப்பட இறை நேசர்களை முன்னிலைப்படுத்துகிறோம் என்பதே...

 கப்ரு ஜியாரத்திற்கு இது தாம் மையக்காரணமாக கொண்டால் இச்செய்கை அவர்களின் அறியாமையென்று தெளிவாய் நிரூபிக்கலாம்.
பிடரியின் நரம்பை விட அருகாமையில் இருப்பதாக சொல்லும் போது இறைவனிடம் நம் துஆக்களை சொல்ல இரண்டாம் நபரின் குறுக்கீடு அங்கு அவசியமானதன்று. அதுவும் எந்த ஒரு நபருக்கும் மற்றவரின் பரிந்துரையும் ஏற்க்கபட மாட்டாது என தெளிவாய் சொல்லப்பட்டிருக்கும் போது மேற்கண்ட காரணம் அறியாமையின் விளைவே!

அதுமட்டுமில்லாமல் இறை நேசர்களின் வருகையின் நோக்கம்
அல்லாஹ் மட்டுமே வணத்திற்குரியவனாக ஏற்க வேண்டும் -அவனுக்கு இணை துணை கற்பிக்க கூடாதென்றும்
நபிகள் (ஸல்) அவர்களின் போதனைப்படி வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும். புதிதாய் மார்க்கத்தில் எதையும் ஏற்படுத்தக்கூடாது -என்பதை தெளிவாய் வலியுறுத்துவதற்கே என்பதாய் இருக்கும்.

மேற்கண்ட நோக்கத்திற்காக ஒருவரது வருகையும் வாழ்வும் இருப்பது உண்மையானால்
  • எந்த தேவைக்கும் என்னை முன்வைத்து அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள் என்றோ
  • எனது மரணத்திற்கு பிறகு ஆண்டுக்கு ஒரு முறை கப்ருரில் சந்தனம் பூசி கந்தூரி விழா நடத்துங்கள் என்றோ எப்படி சொல்வார்? 

    ஒருவரை நாம் மதிப்பது உண்மையென்றால் அவரது வழிமுறைகளை பேணுவது அவசியமான ஒன்று. இன்று இறை நேசர்களுக்கு கண்ணியம் செய்கிறோம் என்ற பெயரால் அவர்கள் மீதான புகழ்ப்பாக்களாக மௌலிதுகளை படிப்பது ஒருபுறம் இருக்கட்டும்.

    அவர்களின் வாழ்வில் எந்த சந்தர்ப்பத்திலும் நபிகள் மீது மௌலிதுகளை ஓதியதாக எந்த வித ஆதாரப்பூர்வ வரலாற்று சான்றுகளும் இல்லை, ஏனெனில் மார்க்கம் அங்கீகரித்திராத செயல் என்பதை அவர்களே அறிந்திருந்தனர். ஆக அவர்களே செய்யாத, முன்மொழியாத ஒன்றை அவர்களின் பெயரில்
செய்வதற்கு மார்க்க ரீதியில் ஆதார தரவுகளை எங்கிருந்து பெற்றீர்கள்..?

இவைதான் 
இப்படித்தான்
தர்ஹா -கந்தூரி- தகடு தாயத்துக்களை ஆதாரிப்போர் மத்தியில் எழுப்ப வேண்டிய கேள்விகள்... 

ஆனால்,


" தர்காவுக்கு போறியா அப்ப நீ நரகத்திற்கு தான் போவே...! "

    ஏற்படும் தீமையின் விளைவை மென்மையின்றி எடுத்துரைப்பதால் அவர்களின் செவிப்பறையில் செருக்குடன் அமர்ந்திருக்கும் சைத்தான் செயலில் மாற்றத்தை ஏற்படுத்துகிறான். ஏற்க மறுப்பதோடு எதிர் வினையும் ஆற்றுகிறான். செவி மூடும் சைத்தான் பிரச்சனைக்கான வழி திறக்கிறான்
அவர்களுக்கிடையில் ஏற்படும் விவாதம் ஒரு கட்டத்தில் இறை நேசர்களின் வாழ்வை விமர்சிக்கும் நிலைக்கு செல்கிறது.

ஒருவரை விமர்சிப்பதற்கு இரண்டு அடிப்படை தகுதிகள் இருக்கவேண்டும்.


1. அவரது சொல், செயல் மற்றும் வாழ்வியல் கூறுகளை நாம் நேரடியாக அறிந்திருக்க வேண்டும். அதற்கு அவரது சமகாலத்தில் வாழ்ந்தால் மட்டுமே நமக்கு சாத்தியம்.


2. அவரது வாழ்வை விளக்கும் நம்பத்தகுந்த ஆவண சான்றுகளில் அவர் குறித்த விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்

இன்று இறைநேசர்களின் வரலாறுகள் என்று நமக்கு கிடைக்கபெற்றிருப்பதெல்லாம் அவர்களின் மறைவுக்கு பின்னரே அதுவும் நம்பகதன்மை குறைபாடுடன் எழுதப்பட்ட வரலாறுகளே. அதிலும் அவர்கள் மீதான விமர்சனங்கள் ஏதுமின்றி கறாமத்துகள் எனும் பெயரில் அற்புதங்களாக அவர்களின் வாழ்வில் சில செயல்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

    நம்பக தன்மையில்  குறைப்பாடுடைய இத்தகைய வாழ்க்கை வரலாற்றை ஆதாரமாகக் கொண்டு ஒருவரை உண்மையாக விமர்சிக்க முடியாது. ஆக அவர்களின் வாழ்வை குற்றப்படுத்தி விமர்சித்தல் என்பது பொருளற்றதாக தான் இருக்கும். ஒருவர் மரணித்தவுடன் அவரது செயல்களுக்கான பிரதிபலனை இறைவனிடத்தில் அடைந்துக்கொள்வார் எனும் போது அவர்களை விமர்சிப்பதும் தேவையில்லாத ஒன்றே!


   

       மேலும் அப்படி விமர்சிப்பதிலும் எதிர்விளைவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. தான் மதிக்கும் / நம்பும் ஒன்றை விமர்சிக்கும் போது அதன் தாக்கம் கோபமாக மாறி சொல்வோர் மீது வெறுப்பாய் திரும்புகிறது. சொல்லுவது உண்மையாக இருப்பீன் கூட மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பின் கூறும் இறைமறை வழி விளக்கமும், நபிமொழி போதனையும் பயனற்று தான் போய்க்கொண்டிருக்கின்றது.  இதன் விளைவாய் தனிமனித சாடல்களும் -இயக்க மோதல்களும் அரங்கேறுகின்றன.


மேலும் இயக்கம் சார்ந்து இஸ்லாமிய குறியீடுகள் முன்னிருத்தப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்ன தெரியுமா? 

     இவ்வுலகின் உயர்ந்த ஒற்றை சொல்லான தவ்ஹீது என்ற பதம் இயக்கரீதியில் முன்னிருத்தப்படுவதாக எண்ணி எத்தனையோ பேர் நான் தவ்ஹீதல்ல..! என்றும் தர்காவை மையப்படுத்தி சுன்னத் வல் ஜமாஅத் என்ற வார்த்தை ஆனாச்சாரங்களின் ஆணிவேராய் நிறுவப்படுவதால் அதை தவிர்ப்பதாக எண்ணி நான் சுன்னத் ஜமாஅத் காரனல்ல..! என்று பலர் இன்றும் சொல்ல காண்கிறோம்.

உங்களில் சில பேருக்குக்கூட இவ்வாக்கத்தின் தலைப்பு ஒருவித சலனங்களை மனதில் ஏற்படுத்தி இருக்கலாம்... சிந்திக்கவேண்டும் சகோ! இவ்விரு வார்த்தைகளின் செயல்முறை வடிவம் ஒருசேர நம்மிடையே அமையா விட்டால் நமக்கு பெயரே வேறு! 

  அறியாமை களையப்படவேண்டியது என்பது சந்தேகமில்லை ஆனால் அவற்றை விளக்கும் முறை அழகிய வழியில் வெளிப்பட வேண்டும் என்பது அவசியமென்பதை விட மார்க்க கடமையும் கூட!. மாறாக முன்முடிவுகள் -பிடிவாதத்தோடு செயல்படுவோரை என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்???

   நபி வழியில் தான் தமது வாழ்வை அமைத்துக்கொள்வதாக கூறுவோர் மேற்கண்ட நிலைகளை சற்று ஆராய வேண்டும். ஏனெனில் நமது வாழ்வியல் முறைக்கு அல்லாஹ்வின் தூதர் அனைத்திலும் முன்மாதிரியாய் செயல்பட்டிருக்க அடுத்தவர்களின் வழிக்காட்டுதல் அவசியமில்லாத ஒன்று.

இறைநேசர்கள் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் சந்தேகமில்லை ஆனால். அவர்கள் வணங்கப்படுபவர்களாக யாரும் பொருள் கொள்ள வழி செய்து விடாதீர்கள்!
நாம் மட்டுமல்ல நாளை அவர்களும் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்!

                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "நீங்க தவ்ஹீதா... சுன்னத் ஜமாத்தா..?"

Thursday, December 08, 2011

கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?


                                   ஓரிறையின் நற்பெயரால்

     ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி! கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.

   கடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா ? என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்

முதலில் நன்மையை எடுத்துக்கொள்வோம். 

   எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்!

  ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..
அப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்?
 இருங்க., இன்னும் டீப்பாக போகலாம்

  நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.

    அதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.

     ஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..

 ஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 சிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.

நூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை! என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.

அப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..?
 இல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்களை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.


சரி தீமைக்கு வருவோம்.


  நன்மை!  அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
  • செல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்
  •  ஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே 
                தீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என "மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.
சரி, உடன்படுவோம்.  இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்! 

   ஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக
செல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் ,  ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...

வெயிட்...
அப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே! 

  குட்!. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.

   மூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்...  சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று!

சரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...?

 இருக்கலாம்! ஆனா
 குற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.

 மேற்கண்ட இரு நிலைகளிலும் "அதுவரை" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது

உதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.
  ஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு
ஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன?  ஐந்து முறை தூக்கா!
          1 :  1
          5 :  1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...?

அதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்!
 சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? 

தீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...

அவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.

கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது
 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்!

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்