"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label இணையம். Show all posts
Showing posts with label இணையம். Show all posts

Friday, December 07, 2012

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"


                                        ஓரிறையின் நற்பெயரால்..

விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.

இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர! இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.

இறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி? என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.

ஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்

இப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.

ஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

இறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.

ஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல.,  நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும்! அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.

இணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.

இங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.

கட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.

யாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு!
ஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more " "நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!" "

Thursday, January 05, 2012

நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!


                                                     ஓரிறையின் நற்பெயரால்


இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக்குடனே பதிவுலகில் கரம் பதிந்தவர்கள் நம்மில் அதிகம்! நாம் சார்ந்த ஒரு கொள்கை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அதுவல்லாத மக்கள் பயன்பெறும் ஆக்கங்களையோ குறைந்தபட்சம் வெறும் பொழுதுப்போக்கான செய்திகளை வெளியிட்டோ நமது இருப்பை இணைய வாழ் உள்ளங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

குறிப்பாக சமூகம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வலைத்தளங்களை பலர் தொடங்கினாலும் இஸ்லாம் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விசயங்களில் முஸ்லிம் பதிவர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.! அதன் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு...  

முஸ்லிம் பதிவர்கள் குறித்து பரவலாக சொல்லப்படும் இரு குற்றச்சாட்டுகள்,

(1) அவர்கள் கொண்ட மதமான இஸ்லாத்தை பெரிதுப்படுத்தியும் அவர்களின் கடவுளான அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தியும் எந்த ஒரு சின்ன விசயமானாலும் சொல்கிறார்கள்.

(2) அவர்களில் சிலர், தீமை ஏற்படுத்தும் விசயங்களையும் பதிவிடுகிறார்கள்

  • ஒன்று., முஸ்லிம் பதிவர்களின் மீது தவறு
  • மற்றொன்று முஸ்லிம் பதிவர்களின் தவறு

அதற்கு முன்பாக...

நாம் பின்பற்றும் ஒரு கொள்கையானது அது எல்லா நிலையிலும், எல்லா காலங்களிலும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அஃதில்லாமல் சில நேரங்களில் மட்டுமே அக்கொள்கையின் நிலைப்பாடுகளை பின்பற்றி ஏனைய காலங்களில் நமது எண்ணத்தின் படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என இருந்தால் நாம் பின்பற்றும் அந்த கொள்கை முழுமையானதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விதிமுறை, கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வாழ எத்தனிக்கும் எல்லா மதங்களுக்கும், மதம் சாரா இயக்கங்களுக்கும் பொருந்தும். மதங்களோ அல்லது வேறு கோட்பாடுகளோ மனித வாழ்வை சீர் செய்யவே உருவானதாக கூறினால் அதன் தலையீடு மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.

நம் வாழ்வில் எல்லா நிலைக்கும் வழிகாட்டுதலை நாம் பின்பற்றும் கொள்கை வகுக்கவில்லையென்றால் அதை எப்படி முழுமைப்பெற்ற ஒரு கோட்பாடாக சொல்ல முடியும்...?

முழுமைப்பெற்ற தொகுப்பாக இஸ்லாம் இருப்பதால் ஒரு முஸ்லிமின் எல்லா செயல்களிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. காலையில் எழுந்து கழிவறை செல்வதிலிருந்து உண்டு, உழைத்து, உறங்க செல்லும் வரை இறைவனின் நெறிமுறைகள் அவன் தூதரின் வழிமுறையில் ஒரு முஸ்லிமீன் வாழ்வில் எல்லா நிலைகளிலும் அங்கம் வகிக்கிறது.

அப்படியிருக்க உலகத்தில் எங்கிருந்தாலும் வாழும் நிலைக்கு தோதான வாழ்வியல் நெறிகளை பின்பற்றும் இஸ்லாத்தையும், ஏற்படுத்தி தந்த அல்லாஹ்வையும் எந்த இடத்திலும் நினைவு கூற என்ன தயக்கம்? அதற்கு இணையம் மட்டுமென்ன விதிவிலக்கா?

நீங்க பின்பற்றுவதோட இருக்க வேண்டியது தானே.. மற்றவர்களையும் ஏன் இங்கே வா இங்கே வானு கூப்பிடுறீங்க? - படிக்கும் உங்களில் ஒருசிலர் இப்படி கேட்கலாம்.

அழைக்கிறோம் சரிதான்..

எதற்கு?

இங்கே வந்தா நாலு பொண்டாட்டி கட்டிகிட்டு ஜாலியா வாழ்க்கைய நடத்தலாம் அப்படின்னா.? 

  • ஏனைய மதங்கள் இப்படி வாழுங்கள் என்று சொல்லும் போது இஸ்லாம் மட்டுமே எப்படி வாழக்கூடாதென்றும் சொன்னது.
  • ஏனைய கோட்பாடுகள் உழையுங்கள் என்று சொன்னபோது போது இஸ்லாம் மட்டுமே வட்டி வாங்கி உண்ணாதீர்கள் என்றது.

அதுமட்டுமா...

  • இந்த சமூகம் முறையற்ற உறவுக்கு பாதுக்காப்பு அவசியம் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கும்போது விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
  • அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்கி அருந்துங்கள் என்ற போது அல்கஹாலுடனான இறை வணக்கத்தால் எந்த பயனும் இல்லையென்று அறைகூவலிடுகிறது.

அரேபிய பாலையில் தொடரப்பட்ட அந்த இஸ்லாம் இங்குள்ள பாமர மக்களிலும் வாழ்விலும் படர என்ன காரணம்?
சிந்திக்க வேண்டும் சகோ..!

இனத்தால் அடையாளப்படுத்தினால்...
பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்

மொழியால் அடையாளப்படுத்தினால்...
பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்

எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
அயல் நாட்டிற்கு அந்நியம் நாம்

இப்படி எங்காவது ஒரு இடத்தில் முற்றுகையிடப்படும் அடையாளங்களை வைத்துக்கொண்டு எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தை அடைய முடியும்???

இப்படி இனம், மொழி, எல்லை கடந்து அனைவரையும் ஒரே அணியில் மட்டுமே நிற்க செய்யும் அந்த தூய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதில் என்ன தவறை கண்டு வீட்டீர்கள் சகோ..?

உங்கள் மீதும் உண்மையில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பதற்காக அழைக்கும் அந்த அழைப்பை தவறென்று சொல்கிறீர்களா...? உங்கள் பார்வையில் இது தவறென்றால் நிச்சயமாக அதே தவறுகள் இனியும் தொடரத்தான் செய்யும் .....
* * * 
                                       

முஸ்லிம் பதிவர்களுக்கு இந்நேரத்தில் ஒரு ...

  • கோரிக்கை - 
  • அறிவிப்பு
  • வேண்டுகோள் - அல்லது
  • எச்சரிக்கை

(படித்த பிறகு உங்கள் மன நிலைக்கு தகுந்த ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்)

தனிமனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மையமாகக்கொண்டு இங்கு எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் ஆக்கத்தை ஒருபுறம் எழுதி வந்தாலும் மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...

ஏனைய பதிவர்கள் தேவையற்ற அருவறுக்கதக்க பதிவிடும் போது வரும் எதிர்மறை பின்னூட்டத்தை விட இஸ்லாமிய பதிவர்கள் வெளியிடும் அத்தகைய நெருடல் பதிவுகளுக்கு வரும் கண்டனங்கள் மிக அதிகம். இது தான் இச்சமூகம் இஸ்லாம் மீது வைத்திருக்கும் கண்ணியத்தின் அடையாளம்.

வீண், கொச்சை பதிவுகளை பதிவிடுவதால் ஒருவேளை மக்களில் ஒரு பகுதினரிடம் வேண்டுமானால் பிரபலம் அடையலாம். ஆனால் நடுநிலை மக்களின் பார்வையில் தங்களின் தரம் தாழ்ந்து போவதோடு இஸ்லாம் மீதான அதிருப்தியையும் அத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும்.

ஏனெனில் இஸ்லாம் அங்கீகரிக்காத செயல்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகளாக பதிவிடும் போது அங்கு நமது பெயர் மறையப்பட்டு முதல் நிலையில் வைத்து இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது. அடுத்தவர் இஸ்லாம் குறித்து வசைப்பாடும் போது அதை விளக்கி பதிவிட முடியாவிட்டால் கூட பரவாயில்லை. மட்டமான, ஆபாசமான செய்திகளை பதிவிட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்தாதீர்கள்!

நம் எழுத்துகளால் ஆயிரம் பேர்கள் நன்மையை நோக்கி வராவிட்டால் கூட நமக்கு ஒரு பாதகமும் இல்லை. மாறாக ஒருவர் தீமை நோக்கி செல்ல நமது எழுத்துக்கள் காரணமாகின் நிச்சயமாக அதற்கு இறைவனிடத்தில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

மஸ்ஜிதுகளின் வாசலோடு மார்க்கத்தை நிறுத்திவிட்டு மாற்று எண்ணங்களோடு எதையும் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அது இணையமாக இருந்தாலும் சரியே! ஏனையவைகளை போல இறைவன் நமக்களித்த அமானிதம் இணையம். அத்தகைய அமானிதம் குறித்தும் நாளை நாம் வினவப்படுவோம் என்பதை மறந்து விட வேண்டாம்!

டிஸ்கி: இது எதிர்ப்பதிவு / உள்குத்து பதிவோ அல்ல.. இணையத்தில் முஸ்லிம் பதிவர்கள் குறித்த என் பார்வையும், ஏனையவர்கள் குறித்த முஸ்லிம் பதிவர்கள் பார்வையின் விளைவே இவ்வாக்கம். 

பிற சேர்க்கை: இஸ்லாமிய பதிவர் வட்டம் எனும்போது அதில் நானும் அடக்கம். மேற்சொன்ன விசயங்கள் முதலில் எனக்கே பொருந்தும். பின்னரே ஏனைய பதிவர்களுக்கு சொல்கிறேன். இத்தளத்தில் மார்க்கத்திற்கு முரணாக விசயங்கள் இருப்பீன் சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் நீக்கி விடுகிறேன்.

அப்புறம் ஒரு விசயம்
மைனஸ் வோட்டு போடுவதாக இருந்தால் ஒருவரியில் காரணத்தை சொல்லிவிட்டு தாரளமாக போட்டுக்கொள்ளவும்.
  

                                                          அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!"

Tuesday, September 21, 2010

இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)

  அஸ்ஸலாமு அலைக்கும்அளவற்ற அருளாளன் நிகரே இல்லா அன்புடையோன் அல்லாஹுவின் பெயரால் ஆரம்பம் செய்து ...
 சாட் பண்ணுவதை பற்றி கொஞ்சம் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கட்டுரையை அமைக்கின்றேன்..


   இது சரியா பிழையா என விவாதம் பண்ண போனால் விளைவுகள் பாதகமாகவே அமையும் ஆயினும் உண்மை என்னவென்றால் இது தவிர்க்க படவேண்டிய ஒன்று...சாட் பண்ணுவது நேர்முகமாக அல்லாமல் மறைமுகமாக ஒரு ஆணும் பெண்ணும் தனிமையில் இருப்பதை போன்றதே..எங்கு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கு மூன்றாவதாக ஷெய்த்தான் வந்துவிடுகிறான்.((நபி மொழி)) 


  
நாம் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் நம் எண்ணங்களில் ஊடுருவியுள்ள ஷெய்த்தான் நல்லவன் இல்லையே! நம்மை வழி தவற செய்வதுதான் அவன் தலையாய நோக்கம்..


       நாம் மார்க்கம் சம்பந்தமான விடயங்கள் தான் பகிர்ந்து கொள்கிறோம் என சொல்லி கொள்பவர்களும் இருக்கின்றனர்.எனினும் எவரின் நம்பகத்தன்மையும் யாரும் அறியமுடியாது.அப்படியிருக்க ஒருவர் நல்லவர் என்று நினைக்கும் அதே நேரத்தில் அவர் கெட்டவராகவும் இருக்க வாய்பிருக்கிறது. மேலும் ஒருவர் மற்ற நபர்களுடன் பொதுபடையாக பழக வேண்டிருப்பதால் முடிந்த அளவிற்கு தன்னை நல்லவனாகவே தான் காட்டிக்கொள்வார். 


   ஆக இணையத்தில் இருப்பவர்கள் ஒன்று நல்லவராக இருக்கலாம்.அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிந்தவன் அல்லாஹு ஒருவன்தான்.எப்படித்தான் சகோதரங்கள் என்ற வார்த்தைகளை பிரயோகித்தாலும் உண்மையான சகோதரங்கள் ஆகிவிடாது..மார்க்கத்தில் உடன் பிறவா சகோதரங்கள் என்று ஒன்று இல்லை... 


  வீணான பேச்சுக்கள் தேவையில்லாத விடயங்கள் தவிர்க்க பட வேண்டும்.ஆணோ பெண்ணோ யாராக இருந்தாலும் நம்மால்முடிந்தவரை மற்றவர்களுக்கு நன்மைகளை பெற்று கொடுக்க முயற்சிக்க வேண்டுமே தவிர பாவங்களுக்கு நாம் காரணமாக அமைந்து விட கூடாது.சாட் பண்ணுவது வழி தவறுதல்களுக்கு அழைத்து செல்லுமே தவிர அவற்றால் நன்மைகள் விளைவது மிகவும் குறைவு
  • அறிமுகம் இல்லாத புதிய நபர்களுடன் குறிப்பாக எதிர்பாலினத்துடன் சாட் பண்ணுவதை தவிர்ப்பது சிறந்தது 
  • இரவு நேரத்தில் காலம் தாழ்த்தி சாட் பண்ணுவது தவிர்க்கப்பட வேண்டும்
என் அன்புக்குரிய சகோதரிகளே...!!!


''நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசுங்கள். (33;32)'


         நபியின் மனைவிமார்களுக்கே இந்த கட்டளை என்றால் நாம் எல்லாம் எங்கே ?
தயவு செய்து நளினமான பேச்சுகளை தவிர்த்து கொள்ளுங்கள். நண்பன்தானே என்ற நோக்கில் தொலைபேசி இலக்கங்களை பகிர்ந்து கொள்வது, புகைப்படங்களை பகிர்ந்து கொள்வது. தொலைபேசியில் பேசுவது..இவை எல்லாம் நம் மார்க்கம் கற்றுத்தந்த வழிமுறைகள் அல்ல.என்னதான் நண்பன் , சகோதரன் என்றாலும் அல்லாஹு ஹராம் ஆக்கியது ஹராம் தான் அதை மாற்றும் அதிகாரம் எவருக்கும் இல்லை.


அன்புக்குரிய சகோதரர்களே! பெண்களை பாவம் செய்வதற்கு காரணமாக நீங்கள் இருப்பதை தவிர்த்து கொள்ளுங்கள் .அவர்களின் பேச்சுகளில் பிழைகள் இருப்பின் சுட்டிகாட்டுங்கள் அவர்கள் தவறிழைக்கும் வேலையில் கண்டியுங்கள் மாறாக சுதந்திரம்,சம உரிமை எனும் பெயரில் தட்டி கொடுக்காதீர்கள்,ஊக்கபடுத்தாதீர்கள் 


 நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் நாளை நம் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படுவோம்.அல்லாஹுவின் முன் நாளை நிற்க போவதை எண்ணி அஞ்சி கொள்வோம்.நம் இறைவனிடம் நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். ஏனெனில் எத்தனையோ சகோதரிகளின் அனுபவமும் அவல நிலையுமே வெளிப்பட்டு இவ்வுண்மைக்கு சாட்சியாக இருக்கின்றது. நாளை மறுமையை அஞ்சி கொள்வோமாக!


சுவனம் எனும் எம் இலட்சிய பயணத்தில் விளையும் இடையூறுகளை இறைவனுக்காக களைவோமாக !
அல்லாஹு நம் அனைவரையும் நேரான வழியில் செலுத்துவானாக !!
ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்....!!!

ஈமான் கொண்டவர்களே! ஷைத்தானுடைய அடிச்சுவடுகளை நீங்கள் பின்பற்றாதீர்கள்; இன்னும் எவன் ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுகிறானோ அவனை, ஷைத்தான் மானக் கேடானவற்றையும், வெறுக்கத்தக்கவற்றையும், (செய்ய) நிச்சயமாக ஏவுவான்; அன்றியும், உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், அவனுடைய ரஹ்மத்தும் இல்லாதிருந்தால், உங்களில் எவரும் எக்காலத்திலும் (தவ்பா செய்து) தூய்மையயடைந்திருக்க முடியாது - எனினும் தான் நாடியவர்களை அல்லாஹ் துய்மைப் படுத்துகிறான் - மேலும் அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும், நன்கறிவோனாகவும் இருக்கின்றான்.  (24:21)
                        
                                                          - ருக்கையா அப்துல்லாஹ்
                                                               S R I   L A N G A

read more "இணையம் சொல்லும் பாடம் (குறிப்பாய் பெண்களுக்கு!)"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்