"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, October 06, 2011

ஒரு நீதிக்கவிதை..!


சூரியனுக்கும் தாகமெடுக்கும் நண்பகல் கோடை
கானல் நீரும் கரைந்துப்போகும் கடுமையான சூடு...
எங்கு நோக்கினும்.,
வெப்பக்காற்றின் வேதனையான வருடல்...
எச்சில்- விலை என்ன என்றுக்கேட்க தோன்றும் நாவறட்சி

புழுதிப்படிந்த பெருந்திறலில்
திசைமாறிய தசை உருவம்
உயிரற்ற காற்றின் உஷ்ணம் தாங்காமல் மேலெழும்பி -கீழே
மயங்கிவிழும் மஞ்சள் நிற மணல் நிறைந்த 
பாலை தேசத்தின் நடுவே

கண்களுக்குள் விரல் புதைத்து வாழ்வின் வழி செல்ல
மெல்ல மெல்ல தள்ளாடி வந்தது....
அயர்ந்த அவ்வேளையிலும்
வறண்ட வாய் தேசம் புக துளித் தண்ணீரை தேடி
சுடுமணலில் சுருங்கி நின்றது

சுழற்றி அடிக்கும் சூறாவளின் சுவாலைகளில்
சுழலாமல் கருக்கும் அனலின் சுவாசங்களில் - சிக்குண்டும்
ஒற்றை உயிர் இனியும் உலவ வேண்டும் என்ற எண்ணத்தில்
கண்ணின் வழி
காட்சிகளை
பற்றி பிடிக்க...

சற்றே தூரத்தில் அசாதரணமாய் ஏதோ தென்பட
அங்கேணும் தண்ணீர்
கிடைக்குமா
என சந்தேகத்தில் கண்கள் கண்ணீர் கொண்டது
கிடைக்கும் இந்த தேசத்தில்...
கால்கள் நம்பிக்கை கொண்டது.

கால் வாசி உயிரும்
முக்கால் வாசி உணர்வும் அற்ற நிலையில்
அவ்விடம் நோக்கி தேகம் மையல் கொண்டன
தண்ணீரின் தடயங்கள் இருப்பதை பார்த்து
தாகத்தின் சுவடுகள் சாந்தம் கொண்டன...

ஆயிரம் வால்ட் மின்சாரத்தை
அதிவேகமாக மின்மினி பூச்சிகளில் புகுத்திய
புத்துணர்ச்சி...
காரணம் கண்ட காட்சி
அகல விழி திறந்து
ஆராவாரம் அற்ற அப்பகுதியில்
அறிவார்ந்து
அதை நோக்கிய போது

கரைப்படிந்த பாத்திரம் - எனினும்
அதனுள்ளே கால்வாசி தண்ணீர்..!
அதிர்ச்சி விழிகளில் ஆசை தீ பரவ
எடுத்து பருகும் எண்ணத்தில்
பாத்திரம் நோக்கி தம் கரம் நீட்ட
பாத்திரம் தொடும் முன் ஒரு பத்திரம்
கண் சுட்டது

ஆம்! அங்கே ஒரு பலகை
பலவகை வார்த்தைகளுடன்.,
நேற்றி சுருக்கி எழுத்தை ஆராய்ந்தான்...


                                                                  அறிவிப்பு
====================================================================
  இந்த பாத்திரத்தில் இருக்கும் தண்ணிரை அருகே இருக்கும் குழாயில் ஊற்றி
பம்பில் அடித்தால் தண்ணீர் வரும்- 
குடித்து முடித்தப்பின் அந்த பாத்திரத்தில் மீண்டும் தண்ணீர் நிரப்பி இங்கு வைத்து விடவும.
=====================================================================

" வார்த்தைகள் படித்ததும் வரையறையற்ற குழப்பம்.."

அருகே...
ஆயிரம் வருடங்களுக்கும் மேலான
அரதபுரதான...
ஆழ்துளை ஆயுத குழாய் - தண்ணீர்
வருவதற்கான அடையாளங்களை முற்றிலும் தொலைத்த
அறிகுறீகளுடன் அயர்ந்து நின்றது.

வார்த்தை பிழையென்றால்
தண்ணீரும் வீண்
தம் உயிரும் வீண்
செய்முறை பயிற்சிப்படி செயல்பட மனம் மறுத்தது

 சுயநல சுருக்கு
சிந்தையை இறுக்கி கட்டியது
சூன்யமாய் விளக்கி...
கொண்ட தாகத்தை பெரிதாய் காட்டியது
முடிவில் முரண்பாட்டு அறிவு சொன்னதை
முழுதாய் மனம் ஏற்றது

பருகலாம் என்று பத்திரமாய் எடுத்த
பாத்திரம் வாய்வரை செல்ல
உதட்டின் ஓரத்தில் ஒருதுளி விழ
சுளிரென்று சுட்டது சுய சிந்தனை

எழுதிய வார்த்தைகள் உண்மையென்றால்...
அறிவற்று அனேக மக்களுக்கு
அநீதி விளைவித்தவன் போலாவேனே...?

இன்றைய என் சுய நலத்திற்காக
இந்நீர்அருந்தினால்
இவ்விடம் நோக்கும்
நாளைய மனிதர்களின் நல்வாழ்வை நாசமாக்குதல்
சரியா...?

பராவயில்லை.,
இருக்கும் தண்ணிரை குழாயில் ஊற்றுவோம்
எழுதியது பொய்யென்றால்
பயனற்று போவது நம்வாழ்வு மட்டும்
உண்மையென்றால்
பயனடையபோவது
இனிவரும் எல்லோரும் தான்

முடிவாய் குழாயில் நீர் ஊற்ற
முடிவு செய்தான்.

ஊற்றினான்..!
ஒன்றும் ஆகவில்லை -எனினும்
உயிர் இன்னும் போகவில்லை... எண்ணிணான்
சில நிசப்தங்களுடன் கணங்கள் தொடர்ந்தன


ஆச்சரியம்!
இறக்க முனைந்தவனின் மீது 
இரக்கம் கொண்டதோ என்னவோ...
மெல்ல தலைக்காட்டிய  தண்ணீர்
புவியில் கால்ப்பதித்த மகிழ்ச்சியில்
குழாயின் வாய் பிளந்து
தம் வருகையே
அதிகரித்தது...

வாயில் நுழைந்த நீர் அவனது
வாழ்வையை ஈரமாக்கியது
புத்துணர்ச்சி...பூ
அப்பாலையில் புதிதாய் பூத்தது
மனமகிழ்ச்சி பொங்க.. அள்ளி பருகிய
நீர்
தாகத்தை தகர்த்தது...
பெருகிய வெள்ளத்தில் அவனது
சுயநல அழுக்கு அடித்துப்போனது...

நிரம்ப குடித்த மகிழ்ச்சியில்
கடவுளுக்கு நன்றி உதிர்த்துவிட்டு
பவ்யமாய் பழைய பாத்திரத்தில்
புதுநீர் புகுத்தி
நலமுடன் வைத்து

வெற்றி புன்னகையோடு
வடக்கோ தெற்கோ.. ஏதும் அறியாமல்
வாழ்வியல் திசை நோக்கி புறப்பட்டான்...
அந்த பொதுநல விரும்பி..!

.  .  .

 இந்த நீதிக்கதை நாம் எல்லோரும் அறிந்த ஒன்று தான்., எனினும் கவிதை வடிவில் எழுத இங்கு சிறிய முயற்சி.

     நம் எல்லோர் வாழ்விலும் இக்கட்டான சில தருணங்கள் வரத்தான் செய்கிறது. எனினும் சுய நலமிக்க மனிதர்கள் கிடைக்கும் அந்த வாய்ப்பை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள்... ஆனால் அத்தருண சுய நலங்கள் பலரது வாழ்வையை அழித்து விடுகிறது., ஆக நமக்கு எவ்வளவு சிரமம் ஏற்பட்டாலும் பொது நல விரும்பியாக இருக்கவேண்டும் அல்லது இறக்கவேண்டும் என்பதே இக்கதை சொல்லும் நீதி!!!


read more "ஒரு நீதிக்கவிதை..!"

Sunday, August 28, 2011

மாதங்களின் முன்மாதிரி..!


அன்புடையோனின் அருளோடு
அழகிய ஆரோக்கியத்தையும்
அகிலத்தார்க்கு
அள்ளி தரும்
அறிவார்ந்த மாதம்..!


உண்டு பருக ஓராயிரம் வகை
உணவிருந்தும்... 
மறையோனின் சொல் கேட்டு
இறையச்ச உணர்வை மட்டுமே -
நன்றாய் பருக வழிவகுக்கும் 
சங்கை மிகு மாதம்..!


இறுதித்தூதர் -தூய
இறைவனை
இனங்கண்ட..
இரட்சகன் -தன்
இறுதித்தூதரை
ஈருலகிற்கும்
இனங்காட்ட...

இயற்கை வேதம்
இறங்க தொடங்கிய
இறை நெறி மாதம்..!


நின்று வணங்கும் போதெல்லாம்
நன்று வணங்கும்
நல்லெண்ணத்தை என்றும் உண்டாக்கும்
புண்ணிய மாதம்!


பசித்திருக்க.
தாகித்திருக்க..
விழித்திருக்க...
அனைத்திற்கும் மத்தியில்
இறைவனை பயந்திருக்க
எப்போதும் இதை
நினைத்திருக்க...
வருடத்திற்கு ஒரு முறை
மட்டுமே வருகை தந்து
வாழ்நாள் முழுவதையும்
வசந்தமாக்கும்
விசித்திர விருந்தாளி..!


பசி வந்தால் பத்தும் பறக்கும்
பழமொழியை பொய்யாக்கி
அதிக பசி இருப்பதை அறிந்தும் 
அருகே வந்தவருக்கு
ஏராளமான உணவும் -அதை விட 
தாரளமான இடமும் கொடுக்கச்செய்யும் 
மனித நேய மாதம்..!

கெட்டதை
பார்க்காதே..!
தீயதை
பேசாதே..!!
தேவையற்றதை
எண்ணாதே..!!!
அறிந்திருந்தும் மறந்த
ஆறறிவு மனிதனுக்கு
அறிவார்ந்த பாடம் புகட்டும்
அஃறிணை
ஆசான்.!


இரவெல்லாம் பகலாக்கி
நிலைத்திருந்து
பகலெல்லாம் இரவாக
நினைத்திருந்து
இறை தொழ...
பருவ நிலை மாற்றத்தை
மனநிலை ஏற்றத்தோடு
பக்குவமாய் பொருத்தும் 
பயன்மிக்க மாதம்


ஏனைய நாட்களில்
எப்படி வாழ வேண்டுமென்பதை
ஏற்றத்துடன்
மனித சமுகங்களுக்கு
எடுத்துக்காட்டும்
மாதங்களின்
அழகிய முன்மாதிரி


ரமலான் -
இறைவன் ஈந்த 
பரிசு.,
பெருநாள்- 
ரமலான் ஈன்ற
பரிசு...



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   கண்ணியமானவர்களுக்கு., " நோன்பு பெருநாள் வாழ்த்துகள் ”
பேரறிவாளன் அல்லாஹ் இந்த ரமலான் மாதத்தில் நாம் மேற்கொண்ட எல்லாஅமல்களையும் பொருந்திக்கொள்வானாக..!
உங்களுக்கும் எனக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் குடும்பத்தார்க்கும் இருக்கும் காலமெல்லாம் இனிதே வாழ அருள் புரிவானாக..!!




read more "மாதங்களின் முன்மாதிரி..!"

Monday, May 23, 2011

உயிரின் நிழல்...

உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுக
ளில் என்று




இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. 
என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட
வாழமுடியவில்லையெனும் போது...

விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கன் 
யோசிப்பதில்லை ..
அதுப்போல...நானும் நேசித்ததில்லை
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் எனக்காக
எப்போது வாழ்ந்தாய்...
நீ
உனக்காக...?

தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்காக
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியாமலே...


read more "உயிரின் நிழல்..."

Saturday, March 12, 2011

-இப்படிக்கு இப்லிஸ்

ன் இறைவா..!
ஆதத்தை (அலை) வழிக்கெடுக்க
முனைந்தவன் நான்
ஆனால் அவர் தம் மக்களோ
என்னையல்லவா.... வழிக்கெடுக்க முயல்கிறார்கள்
இது உனது விதியோ...
இல்லை
பழிக்கு பழியோ...

உன் கட்டளைக்கு உடன்படாததால்
மக்களுக்கு
மாறு செய்பவன் நான்
உன் கட்டளைக்கு உடன் பட்டும் 
எனக்கு மாறு செய்வதில்லையே மக்கள்....

சஹாபாக்கள் காலத்தில்
சர்வ காலமும் போராட்டமாக இருந்தது...
பல முறை அவர்கள் வெல்ல...
சிலமுறை வென்றிருக்கிறேன்.
ஆனால்... இன்றோ
அப்துல் ரஹ்மானை வழிக்கெடுக்க முயலும் முன்
அப்துல்லாவையும் இலவசமாக
வழிகெடுத்தே என் முன் வருகிறார்.

உன்னைப் பற்றி அறியாததால்..
நான் ஏதோ ஆனேன்
என்னைப்பற்றி அறிந்தும் -மக்கள்
வீணாய் போனது ஏன்...?

நபிகளார் காலத்தில் நாளெல்லாம்
யோசித்தேன்...
துன்பம் தருவது எவ்வாறு என்று
ஆனால் இன்றோ...
யோசிக்கிறார்கள்
இன்பம் பெறுவது என்னிடம் எவ்வாறு என்று

அன்று உமரோ (ரலி) ஒரு தெரு வழி நடக்க
நானோ பிறிதொரு தெரு ஓடினேன்
இன்று எவரும் 
வருவதை கண்டு ஓடி ஒளிந்தாலும் 
கண்டறிந்தல்லவா...
என் தோள் மீது கைப்போட்டு
அழைத்து செல்கிறார்கள்
அனாச்சாரியங்கள் பல புரிவதற்கு

பாங்கொலி சத்தம் கேளாமல் இருக்க
"பாடு" பட்டேன் அப்போது
பாங்கொலி கேட்டுவிட போகிறது என்பதற்காக
'பாட்டு' கேட்கிறார்கள் எப்போதும்....

உன் இறைமறையில் 
எண்ணற்ற இடங்களில்
என்னைப்பற்றி
எச்சரித்தாய் அல்லவா... மக்களுக்கு 
ஒருமுறையேனும் 
அவர்களை குறித்து என்னிடம் சொல்லிருந்தால்
அப்போதே....
சிரம் பணிந்திருப்பேனே... 
ஆதி பிதா ஆதமுக்கு 
கியாம நாள் வரை வாழ அவகாசம் கேட்டவன் நான்
சரியென, அதுவரை சாகாவரம் தந்தவன் நீ....
போதும்....
பொய்யானவர்களுடன்
பொறுப்போடு வாழ்ந்தது
ரப்பே., இனி எனக்கு இங்கு வேலையில்லை...

உயர்ந்தோனே....
யாரை வழி கெடுப்பது இனி...
உண்மையானவர்களை 
உலகத்தில்
இனங்காட்டு...
இல்லையேல் 
உண்மையாகவே 
மரணித்து விடு... என்னை
                                                               -இப்படிக்கு இப்லிஸ் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது கற்பனையாக எழுதப்பட்டாலும்., இன்றைய சமுகத்தில் வாழும் மக்களின் நிலைபாட்டை விவரிக்கும் சில வரிகளே இது. இன்று சைத்தானே கெட்கம் கொள்ளும் அளவிற்கு தான் மனிதர்களின் நடத்தைகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் செயல்கள் இருக்கின்றன...கேடுகெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி படைத்தவனுக்கே முற்றிலும் பணிந்து சைத்தானுக்கு மாறு செய்யும் மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக
பின் குறிப்பு: மேலுள்ள புகைப்படத்திற்கும் இப்லிஸூக்கும் (சைத்தான்) எந்தவித சம்பந்தமுமில்லை 
                                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "-இப்படிக்கு இப்லிஸ்"

Friday, December 10, 2010

தூயோனின் தூதரகம்..!

படைத்தவனை வணங்குவதற்காக
படைப்பினங்கள் ஒன்றுகூடும்
பயிற்சி பாசறை!

அல்லாஹ்வின் பெயர்தனை - 
ஐவேளை தினம் கூறி 
அனைவரையும் வரவேற்கும் 
அருளால் அலங்கரிக்கப்பட்ட
ஆன்மிக ஆபரணம்... 

இபாதத்தோடு இணக்கத்தையும்
சலாத்தோடு சகிப்புத்தன்மையும்
மனித மனங்களில்
இறுகக் கட்டும்
இறைவனின் இல்லம்...!

இங்கு, 
தீண்டாமையையும்
தீண்டுவோர் இல்லை
மொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க
தம் மௌனத்தால் சாதித்தது 
மறை ஓதும் மாளிகை.

ஏற்றத்தாழ்வுகள்
எங்கே? - என
எவரையும்
கேட்க வைக்கும்
இஸ்லாத்தின் அத்தாட்சி.,

ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
பணம் கொண்டவனும்
தினம் உழைப்பவனும்
வாழ்வில் தேரியவனும்
வாழ்வை தேடுபவனும்
ஆகாய விமான ஓட்டியும்
அன்றாட காட்சியும்...
அருகருகே தொழ வைக்கிறது  - 
தூர தேசத்திலும்...
சகோதரத்துவத்தை எழ செய்கிறது

வணக்கத்தோடு
வாழ்வியல் வெற்றிக்கும்
வழிக்காட்டும்
வசந்தங்களின் கூடாரம்

மார்க்கத்தை முன்னிருத்தி
மற்றவை பிற -என
மனித நல்லெண்ணங்களுக்கு
மாசற்ற வர்ணம் பூசும்
மனிதநேய ஆலயம்

அல்லும் -பகலும்
அனைத்துக்காகவும்
அலைந்து திரியும்
அற்ப மனிதர்களுக்கு
அல்லாஹ்வின் நினைவை
அதிகம் ஊட்டி
அழகிய ஆதாயத்தை
அன்றாடம் தரும்
அருளாளனின் சின்னம்..!

உள்ளே ஏதுமில்லையென்றாலும்
வெளியே வரும்போது
மனது நிறைய
நம்பிக்கையும், நன்மைகளையும்
கொடுக்கும் 
தூயோனின் தூதரகம்..!

சமுகத்தில் ஓரு சிலரை
முன்னிலைப்படுத்தும்
அரங்கங்களுக்கு மத்தியில்
ஓர் சமுகத்தையே
கண்ணியப்படுத்தும்
கருணை தளம்...

வல்லோன் சொல் கேட்டு
வாக்களித்ததை நிறைவேற்ற..
விரையும் எவருக்கும்
வரையறையற்ற 
இலாபத்தினை மட்டுமே தரும் 
வாழ்வியல் வர்த்தக மையம்...



read more "தூயோனின் தூதரகம்..!"

Sunday, September 05, 2010

மனிதம் மறைத்த மரணங்கள்....













குருதியின் நிறம் கூட அறியாதவர்களின் 
சடலங்கள் குவியலாய்., 
காஃபா-  புண்ணிய பூமி.., வல்லோன் சொன்னது
காஸா - புண்படுத்தப்பட்ட பூமியோ.. யார் செல்வது?

அந்த சகோரங்களுக்கும் சேர்த்தே நமது "துஆ" இருக்கட்டும்
ஓடித்திரிந்த சாலைகள் 
உறவுகளுடன் கூடி மகிழ்ந்த இல்லங்கள் 
தொழுது தியானித்த மசூதிகள் 
இவை மட்டுமா ?

இன்னோரன்ன எத்தனையோ...
இழந்து நிற்கின்றோம் பேதைகளாக 
உடமைகளை மட்டும் அல்ல
உரிமைகளையும் தான்!

உயிரின் பெறுமதி உணரப்பட வில்லை 
அது காரணமே இன்றி பறிக்கபடுகிறது 
யூதனின் துப்பாக்கி முனையாலே ...
எம்மவரின் குருதியில் மட்டும் ஏனோ 
இனம் தேடபடுகிறது 

நிரை நிரையாக பேரீச்சை மரங்கள் ,
மனதை கவரும் பூஞ்சோலைகள் 
ஆயினும் அம்மலர்கள் கூட 
மணம் வீச மறுக்கின்றன 
பலஸ்தீனியன் புதையுண்ட மண்ணில் 
அது முளை கொண்டமயலோ ?

இது நாம் சுரண்டிய பூமி அல்ல 
எமக்கே உரித்தான பூமி 
எமது புனித பூமி 
விடியலுக்காக காத்திருக்கின்றோம் 
எம் இறைவனிடம் கை ஏந்தி !!!


என்னோடு சேர்ந்து நீங்களும்...

                                                                                                                           - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                                                                               S R I   L A N G A
read more "மனிதம் மறைத்த மரணங்கள்...."

Wednesday, June 23, 2010

மாநபிக்கு ஓர் மடல்

    மதீன மண்ணில் துயில் கொள்ளும் எங்கள் மஹமூதரே! தாங்கள் கண்ட  தொல்லைகளும்,கொடுமைகளும்,சமுக அவலங்களும் சொல்லிமாளாது.


    சாயம் போன சரித்திர பக்கங்களும் தங்களின் உலர்ந்த உதிர வரலாற்றை காய்ந்திடாமல் இன்னும் வைத்திருக்கிறது.
இறையாணை கொண்டு தமக்கு துன்பம் விளைவித்த கொலைகார மக்களை அழிக்க வாய்ப்பு வழங்கிய போதும் அவர்கள் அறியாதவர்கள் - எனக்கூறி அம்மக்களை சபிக்காமல் நேர்வழி பட வழிந்தோடும் குருதி வாய் துடைத்து கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்த  தூயோரே! அந்த தூயோனின் இறுதி தூதே!

நாயகமே சகிப்புத் தன்மையின் தாயகமே!
படைப்பினம் அல்லாது  படைத்தவனிடம் பாடம் பயின்ற பகுத்தறிவின் பெட்டகமே!  
உண்மைக்கு உயிர் தந்த உத்தமரே!

மனித பிறவிகளின் மத்தியில் நீங்கலோர் மனிதநேய பிறவி!
பொறுமையே உங்கள் மீது பொறாமை கொண்டது; பொறாமையோ உங்கள் பொறுமை கண்டு அகன்று சென்றது. !
வாய்மையும் தங்களிடம் வாழ்வு தேடியது,வலிமையோ வாஞ்சையுடன் துணை நின்றது ..!

உங்கள் உருவ படத்தை அறிந்தவர் உலகில் எம்மில்  இல்லை -உங்களை அறியாதவர் உலக வரைபடத்தில் எவரும் இல்லை

கலப்பின உறவு அது வெறும் கனவு என எண்ணி உறங்கிய சமுகத்தை சகோதர வீதியில் கைக்கோர்த்து சமமாய் நடக்க செய்த எங்கள் உயிரே!


உங்கள் உம்மத்தின் இந்த சமுக நிலை அறிவீரோ...?
*வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியவர் நீங்கள்
வாயே திறக்க கூடாதென வன்முறையால் கூறுபோடும் சமுகத்தில் நாங்கள்


*தீண்டாமையை திக்கற்ற திசைக்கு திருப்பியவர் நீங்கள்
யாரும் தீண்டினால் அவரை தீக்கு இரையாக்கும் தீய சமுகத்தில் நாங்கள்


*அநாதைகளுக்கும்,அமானிதங்களுக்கும் வரம்பின்றி அடைக்கலம் தந்தவர்  நீங்கள்
அமானிதங்களை திரும்ப கேட்போரை வரம்பு மீறி அனாதைகளாக்கும் வஞ்சக சமுகத்தில் நாங்கள்

*வட்டியை மூர்ச்சையாக்கி வணிகத்தை வளமுடன்  வாழ செய்தவர் நீங்கள்
வணிக வாயடைத்து வட்டியின் வயிறு வளர்க்கும் வழிகெட்ட சமுகத்தில் நாங்கள்


*பெண்ணினத்தை பொன்னென எண்ணி பொத்தி வைக்க சொன்னவர் நீங்கள்
பெண்ணையும்,பொன்னையும் வியாபார பொருளாக்கிய விரச சமுகத்தில் நாங்கள்      
  
*பெருங்கல்லும் சிரம் பணிய கண்டீர் நீங்கள்
சிறுக்கல்லுக்கு சிரம் பணிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமுகத்தில் நாங்கள்


*தொண்டர்களை ஒழித்து உயிர் கொடுக்கும் தோழர்களை உருவாக்கியவர் நீங்கள்
தொண்டர்களை ஒழித்து உயிர் எடுக்கும் குண்டர்களை உருவாக்கும் கேவல சமுகத்தில் நாங்கள்


*பாவத்தின் சாயல் கூட அறியாதவர் நீங்கள் .,
பாவ முட்டைகளை பொதிகளேன  சுமக்கும் கழுதை சமுகத்தில் நாங்கள்


*உங்கள் நிழல் கூட புகழ் மீது விழ மறுத்த மாமனிதர் நீங்கள்.  
புகழ்தரா மக்களை நிழல் கொண்டு அழிக்கும் நீதியற்ற சமுகத்தில் நாங்கள்


*எளிமையை தோழானாக்கி,பகட்டை பரதேசியாகிய பகலவன் நீங்கள்
எளிமையை ஏளனம் செய்யும் பதவி மோக சமுகத்தில் நாங்கள்  


*பெருமை -இறை ஆடை அது வேண்டாம் இங்கே நமக்கு என உரக்க கூறினீர்கள் நீங்கள்
அவ்வாடையை அகங்கார அலமாரியில் அழகாய் அடிக்கி உடுத்தி மகிழும் உதாசீன சமுகத்தில் நாங்கள்


     மதீனா, மக்கள் பலரை புனிதராக்கியது மாநபி தங்களின் வருகையால் மதீன  மண்ணின் புழுதி கூட புனிதமாகியது

  எங்கள் இரட்சகனின் தூதர் ரவ்லாவை காண அந்த மதீன புழுதிகளோடு நானும் காத்திருகின்றேன் இறை நாடினால்...     
               
 உங்களை வர்ணிக்க வார்த்தைகள் ஏங்குகின்றன., வாய்ப்புக்கு மொழிகளும் காத்திருக்கின்றன
நான் என்ன செய்யஅடியேனுக்கு அவ்வளவே அறிவு!
முதலோனின் இறுதித் தூதே,இறுதி நாளின் முதலாமானவரே.,    நீங்கள் எங்களோடு இருந்திருக்க கூடாதா...? எல்லாம் வல்லவனின் எண்ணம் தானே எல்லாமாகிறது.உங்கள் மீது சாந்தியையும்,சமாதானத்தையும் வல்ல ரஹ்மான் வாரி வழங்குவானாக! உங்களோடு சுவர்க்கத்தில் இருக்கும்  நஸிபை  எங்களுக்கும் நாடுவானாக!! 

குறிப்பு:
எந்த ஒரு வரியும் இறைவனுக்கு இணைவைக்கும் விதத்திலோ,அவனது தன்மைக்கு சமமாகவோ வர்ணிக்கபடவில்லை,பொய்யோ,கற்பனையோ இதில் இடம் பெறவில்லை,மேலும் ஹதிஸ்களின் அடிப்படையிலேயே உருவாக்கபட்டது.  
read more "மாநபிக்கு ஓர் மடல்"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்