"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, June 13, 2012

சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....


ஓரிறையின் நற்பெயரால்

மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)

சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.

  • கருத்துரிமை
  • பேச்சுரிமை
  • அரசியல் உரிமை
  • சமய உரிமை

இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.

இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.

இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...

நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.

சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.

மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...

சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..!


இறுதியாய்
சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...

பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.

மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.

எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க

எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

சிந்தியுங்கள் ...
எது சுதந்திரம்..?
எது முழுமையான சுதந்திரம்..?

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "சுதந்திரம் எனப்படுவது யாதெனில்...."

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்