"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, November 23, 2013

கடவுளின் நிறம்?!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..! 

  • பறப்பதாகட்டும்
  • மிதப்பாதகட்டும்
  • நடப்பதாகட்டும்
  • பாசத்தை பொழிவதாகட்டும்


கைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.

மற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலைக்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும்.? பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை

* * *

மனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை  என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.

இங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,

கடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,

# புலன்களுக்கு அகப்படாமை
# இப்பிரஞ்சத்தில் காணக்கிடைக்காமை
# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை

இப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..

ஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.

 பொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க

1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ
2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ

எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர்.? அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்

கடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.

கடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..?

ஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.

பதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.

இப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம்! இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,

நேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த(?) பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு!


கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை

கேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி., 

சூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக  வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி?

பூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்?

சூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி?

சந்திரனில் வெப்பம் அதிகம்,  வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்?

இன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட  இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது? என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.

இந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன?

ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.

ஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

கடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..

குட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது!

அடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்!


புரிதலில் உதவி
பிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book) 


                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


தொடர்புடைய ஆக்கங்கள் :
கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்.
பரிணாமத்தில் மனிதன்.
read more "கடவுளின் நிறம்?!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்