"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, October 27, 2010

இயற்கை இறைவனா...?

                                       ஓரிறையின் நற்பெயரால்

    இக்கட்டுரை யாரையும் விமர்சிக்கும் நோக்கில் இங்கு பதியவில்லை. சிறு தெளிவு பெறும் பொருட்டே....உங்கள் பார்வைக்கு

     மனித மூலங்கள் மண்ணில் தோன்றிய நாட்களிலிருந்தே ஓரிறை கொள்கை மட்டுமே தொடங்கி-தொடரப்பட்டது. எனினும் காலம் செல்ல செல்ல தங்கள் மன இச்சையின்படி செயலாற்றும் மனிதர்களும், சுயநலத்தின் அடிப்படையில் செயல்படும் மனிதர்களின் செயல்களும் ஓரிறை கோட்பாடென்னும் இந்நேரிய பாதையை விட்டு ஏனைய மக்களை திசை திருப்பச்செய்தது....

      அதன் வாயிலாக பல மக்களின் இச்செயல்களால் பல தெய்வ கொள்கையும் வளர்ந்தது. அதில் இன்னும் ஒரு படி மேலே போய் மனித எண்ணங்களில் தோன்றுவதையெல்லாம் கடவுளாக வர்ணிக்க தொடங்கினார்கள்.

   அவ்வபோது அவர்களை சீர்திருத்த தீர்க்கதரிசிகள் வந்தார்கள். எனினும் இங்கு அத்தகைய மனிதர்கள் கடவுளாக கொண்டது எதையெல்லாம் என்பதை குறித்து காண்போம்


மனிதன் தன் எண்ணத்தின் படி கடவுளை உருவகிக்க தொடங்கினான். அதாவது எதை கண்டு பயந்தானோ அதை கடவுளாக, எதன் மீது பிரியம் கொண்டானோ, இன்னும் சொல்ல போனால் தனது ஆசைக்காக கூட கடவுளை உருவாக்க தொடங்கினான். அதில் முக்கியமானதாக   "இயற்கை"யை கடவுளாக கண்டான். உதாரணத்திற்கு இங்கு ஒன்று...

      மக்களில் சூரியனையும், சந்திரனையும் தெய்வமாக கருதி வணங்குவதை நாம் பார்க்கிறோம். இங்கு ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ஒரு செயலை பின் தொடர்வதாலோ அல்லது அச்செயலை தொடர்ந்து செய்து வருவதாலோ மற்ற யாவரையும் விட நாம் அதிக பலன் பெற வேண்டும். ஆனால் பாருங்கள் சூரியனை வணங்காதவனுக்கு அது எத்தகைய வெப்பத்தை தருமோ அதைப்போல தான் அதனை கடவுளாக வணங்குபவனுக்கும் தரும்.மாறாக வணங்கிய காரணத்திற்காக எந்த வித கூடுதல் பலனும் பிரத்தியேக நிழலோ கொடுக்காது.
 
   சந்திரனும் தன்னில் எவ்வளவு பிரகாசிக்க முடியுமோ அதன் மட்டுமே தன்னை வணங்கும் மற்றும் வணங்கா மக்களுக்கு மத்தியில் வெளிப்படுத்தும். மாறாக அவர்களின் நிலையறிந்து எதையும் கொடுக்காது.

  இன்னும் சொல்லப்போனால் மழைக்காலத்திலும், மேக மூட்டத்திலும் சூரியன் காணக்கிடைக்காது அல்லது தன் ஒளியிழந்தே காணக்கிடைக்கும். அதுப்போல அமாவாசை இரவுகளில் சந்திரனே கண்களுக்கு தெரிவதில்லை. இவ்வாறு கடவுளாக காணும் அதன் நிலைகளை சற்று ஆராய்ந்தால் அவைகள் நிரந்தமற்ற மற்றும் பலஹீனமான ஒரு படைப்பு என்பதையே நமக்கு காட்டுகிறது. 
 அதுப்போலதான் ஏனைய கடவுளாக கொண்ட அனைத்து இயற்கைகளும்.


 இந்த இடத்தில் ஒரு கேள்வி எழலாம். இவைகளை வணங்குபவருக்கு-வணங்காதவருக்கு பிரித்தறிந்து எப்படி இவை பலன் தர இயலாதோ அதுப்போல தானே பொதுவாக அல்லாஹ்வை வணங்காதவனுக்கும் இறைவன் எந்த இழப்பையேயும் ஏற்படுவதில்லையே -அது ஏன்?

   அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவர்பவர்களில் பலர் ஏழைகளாகவும்,  உடல் ஊனமுற்றவர்களாவும், கஷ்டம் நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வையன்றி பிறரை அல்லது மற்றவைகளை வணங்குபவர்கள் செல்வந்தர்களாகவும், உடல் ஆரோக்கியம் நிறைந்தவர்களாகவும் இன்பமான வாழ்வை வாழ்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

   இன்னும் ஒரு படி மேலே போய் அல்லாஹ்வை வணங்காமல் -அஃது அவனை திட்டுபவர்களும் கூட நலமாக இப்பூமியில் நடமாடுகிறார்களே அது ஏன்... இதற்கு அழகான பதிலை இஸ்லாம் சொல்கிறது. இதற்கு முதற்காரணம்


(அவன்) அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன்.  (1:2)


மேலும் பார்க்க: 6:164, 10:32, 11:6, 29:60, 37:5, 40:65, 51:58

        அடுத்து, அல்லாஹ்வை வணங்கினாலும் அவனை வணங்காவிட்டாலும் இவ்வுலகில் அவனது கருணையே பொதுவாக்கி வைத்திருக்கிறான். எனவே அவனை வணங்காதவர்களுக்கு இவ்வுலகத்தில் துன்பம் தருவதாக இருப்பின் அவனுக்கு ஒரு நொடி பொழுது கூட தேவையில்லை.

  எனினும் அஃது பாவங்களும் தீமைகளும் செய்யும் மற்றும் அவனை வணங்க மறுக்கும் மக்கள் தங்கள் இறுதி வேளைக்குள் அவனை அறிந்து அவர்களின் செயல்களை சீர்த்திருத்தி கொள்கிறார்களா என பார்க்கவே இத்தகைய அவகாசம். அதனை அல்குர்-ஆன்


மனிதர்களை அவர்கள் சம்பாதித்த (தீ) வினைக்காக அல்லாஹ் அவர்களை (உடனுக்குடன்) பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் பூமியில் உயிர்ப் பிராணிகள் ஒன்றையுமே விட்டு வைக்கமாட்டான்; ஆயினும், ஒரு குறிப்பிட்ட தவணைவரை அவர்களைப் (பிடிக்காது) பிற்படுத்துகிறான்; அவர்களுடைய தவணை வந்துவிட்டால் நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குபவனாகவே இருக்கின்றான். (35:45) 

 இவ்வாறு இயம்புகிறது. எனவே இறைவனை மறுப்பவர்களும்- மறந்தவர்களும் தங்களின் பிறவி மார்க்கத்திற்கு வருவதற்காக எல்லா வழிவகைகளையும் ஏற்படுத்தி வைக்கிறான் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கும் போதே இறைவன் அவர்களுக்கு வேதனையே அளிக்கிறான்.

எனவே இத்தகைய
இயற்கைகள் படைப்பாளன் அல்ல., மாறாக படைப்பாளனுடையதே!...

   நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22)

                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "இயற்கை இறைவனா...?"

Saturday, October 23, 2010

எதில் கண்ணியம்

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
   என் இணைய தள சகோதரிகளே! பொழுதுப்போக்கிற்காக உலாவரும் இவ்விணையத்திலும் மார்க்கம் குறித்து பேசுவது மகிழ்வளிக்கிறது.இன்றைய கால கட்டத்தில் சுதந்திரம் -பெண்ணுரிமை- நாகரீகம் என பேசி ஆண்களுக்கு சமமாக பெண்களையும் வழி நடத்தி செல்வதாக போலி நட்புறவில் தங்கள் வாழ்க்கை பயணத்தில் வாழ்வை தொலைக்கும் அநேகம் பெண்கள்.  உண்மை நிலை உணராமல் அஃது விபரீத பாதைக்கு இன்று பயணம் மேற்கொள்கின்றனர். எனினும் அதனால் ஏற்படும் இழப்பை அடையும்போது தான் தங்களின் பாதை பயனற்றது என அறிகின்றனர். பெண்களே! அஃதில்லாமல் அல்லாஹ்வும் அவன் தூதரும் கூறிய வழியில் வாழ்வை அமைக்க வல்லோன் நமக்கு நற்கிருபை புரிவானாக! 

• 3006. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள். ( புஹாரி )

• 1513. அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஃபழ்ல்(ரலி) நபி(ஸல்) அவர்களுக்குப் பின் (ஒட்டகத்தில்) அமர்ந்து கொண்டிருந்தபோது 'கஸ்அம்' எனும் கோத்திரத்தை சார்ந்த ஒரு பெண் வந்தார். உடனே ஃபழ்ல் அப்பெண்ணைப் பார்க்க அப்பெண்ணும் இவரைப் பார்த்தார். (இதைக் கவனித்த நபி(ஸல்) அவர்கள்) ஃபழ்லின் முகத்தை வேறு திசையில் திருப்பினார்கள். பிறகு அப்பெண் நபி(ஸல்) அவர்களை நோக்கி, 'இறைத்தூதர் அவர்களே! நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். ஆனால் என்னுடைய வயது முதிர்ந்த தந்தையால் பயணிக்க முடியாது. எனவே நான் அவருக்குப் பகரமாக ஹஜ் செய்யலாமா? எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்!" என்றார்கள். இது இறுதி ஹஜ்ஜில் நிகழ்ந்தது.( புஹாரி )

• 1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்
.( புஹாரி )


• 5232. உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார்
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் '(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'கணவருடைய
(சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்..( புஹாரி )

• மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர்களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது;( 24;31)

நபியின் மனைவிமார்களாகிய) அவர்கள், தங்களுடைய தந்தையர் முன்பும், தங்கள் ஆண் மக்கள் முன்பும் தங்கள் சகோதரர்கள் முன்பும், தங்கள் சகோதரர்களின் ஆண்மக்கள் முன்பும், தங்கள் சகோதரிகளின் ஆண்மக்கள் முன்பும், அவர்களின் பெண்கள் முன்பும்; அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்கள் முன்பும் (வருவது) அவர்கள் மீது குற்றமாகாது எனவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள்; (நபியின் மனைவிமார்களே!) நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சாட்சியாக இருக்கின்றான். ( 33;55)

அல்லாஹு ஹராம் ஆக்கியதை ஹலால் ஆக்கும் உரிமை எவருக்கும் இல்லை
அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்
அல்லாஹு எம் அனைவரையும் பாதுகாப்பானாக ஆமீன்


• மேலும், முஃமின்களே! (இதில் உங்களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்,) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி), நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனைவரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்அன் 24:31)
                                                                                  - ருக்கையா அப்துல்லாஹ்

           S R I   L A N G A

read more "எதில் கண்ணியம்"

Monday, October 11, 2010

யார் கடவுள்...?

                                    ஓரிறையின் நற்பெயரால்

    இன்று உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் பேசுவதற்கு இருக்க. "கடவுளை குறித்து மட்டும் கட்டுரை வடிக்க காரணம் என்ன? என்ற எண்ணம் சிலருக்கு ஏற்படலாம்.
இஸ்லாத்தை பொருத்தவரை மனிதர்களை இறைவன் படைத்ததே அவனை வணங்குவதற்காக தான்! எனும்போது உலக மானிட படைப்பின் நோக்கம் ஈடேற அவனை வணங்கும் முறையும் அதை விட அவ்வாறு வணங்குவதற்குறியவன் யார் என்பதையும் நினையுட்டவே இங்கு ஒரு சிறிய ஆக்கம்.

   கடவுளை வணங்குவது இருக்கட்டும் அதற்கு முன்பாக அத்தகைய கடவுள் இருப்பது உண்மைதானா? கடவுளை ஏற்பது நமது அறிவுக்கு பொருத்தமானதா? முதலில் பார்ப்போம்.

இயற்கையா? இறைவனா?


     இன்று கடவுளை மறுப்போர், உலக தோன்றங்கள் குறித்தும் இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்தும் கூறும்போது மிக தெளிவாக அறிவியல் ரீதியாக காரணங்கள் கொண்டு விளக்கி கூறுகின்றனர்.எனினும் இத்தகைய இப்பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பதில் அறிவு பூர்வமாக கூறினாலும் "அஃது ஏன் உலகம் உண்டாக வேண்டும்?" என்ற கேள்விக்கு எந்த பதிலும் அறிவு பூர்வமாக இதுவரை இல்லை.

     அதுப்போலவே ஏனைய கோள்களும், சூரியன், சந்திரன்,நட்சத்திர கூட்டங்கள், ஆகியவை உண்டான முறை குறித்தும் அவைகள் தற்போது வரை செயல்படும் நிலை குறித்தும் இனி அவைகளுக்கு ஏற்படும் மாற்றம் குறித்தும் மிக துல்லியமாக தகவல்கள் தந்த போதிலும் சூரியனும் சந்திர பூமி இயக்கமும் ஏனைய கோள்களும் தத்தமது பாதையில் மிக நேர்த்தியாக செயல்பட எந்த மூலங்கள் அதற்கு அடிப்படை? என்ற கேள்விக்கும் விடையில்லை.

   சுருக்கமாக கூறினால் நடைபெறும் அனைத்து வித செயல்களும் அறிவியல் ரீதியாக சொல்ல முடிந்த கடவுளி மறுக்கும் விஞ்ஞானம் அத்தகைய பால்வெளியில் நடைபெறும் நிலையான மற்றும் சமச்சீரான இயக்கத்தை எது அவைகளுக்கு கற்று தந்தது?
  
   இந்த வினாவிற்கு விடை கூறவேண்டும் எனபதற்காக ஒரு பதில் முன்னிறுத்தி சொல்லப்பட்டது தான் "இயற்கை" அதாவது மேற்கண்ட நிகழ்வுகள் உருவாக்க மூலம் இயற்கையாக அதாவது "தற்செயலாக" -எதிர்பாராத விதமாக ஏற்பட்டது என்கின்றனர்.

இது கடவுள் படைத்தார் என்பதற்கு மாற்றமாக சொல்ல வேண்டுமென்பதற்காக கூறப்பட்ட வாதமே தவிர அறிவு பூர்வமானவாதமல்ல.
   ஏனெனில் தற்செயல் என்பது எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல், யாதொரு திட்டமிடலும் இல்லாமல் நிகழும் ஒரு செயலாகும்.

   இச்செயலின் மூலம் அந்நிகழ்வு மிக நேர்த்தியாக இருப்பதற்கு நூறில் ஒரு பங்கே வாய்ப்புள்ளது.அதுவும் ஆயிரத்தில் ஒரு முறை மட்டுமே அத்தகைய சமச்சீர் ஒழுங்குமுறை சாத்தியம். அதன் அடிப்படையில் தற்செயல் அல்லது எதிர்பாராவிதமாகவே இப்பிரபஞ்ச உருவாக்கம் ஏற்பட்டது என ஏற்றுக்கொண்டாலும் அதை தொடர்ந்த நிகழ்வுகள் அதாவது சூரியன், சந்திரன் மற்றும் ஏனைய கோள்கள் மிக நேர்த்தியாக தத்தமது நீள்வட்ட பாதையில் சொல்லிவைத்ததுப்போல சிறிதும் ஒழுங்கினமின்றி சுழல்கின்றதே இது எப்படி தற்செயலால் சாத்தியமாகும்.

    ஏனெனில் தற்செயல் ஏற்படுத்தும் விளைவுகள் பெரும்பாலும் ஒரு சமச்சீரற்ற நிலையே உருவாக்கும். அஃது ஒரு முறை நேர்த்தியாக தற்செயல் விளைவகளை வெளிப்படுத்தினாலும் தொடர்ந்து மிக தெளிவான ஒழுங்கான விளைவுகளை தரமுடியாது., அஃது அவ்வாறு தந்தால் அதற்கு பெயர் தற்செயல் அல்ல! முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயல்.

  ஆக! மேற்குறிப்பிட்ட பால்வெளி நிகழ்வுகள் அனைத்தையும் ஆராயும் எந்த ஒரு சாரசரி அறிவுள்ளவனும் அதன் இயக்கம் ஏதோ திடீரென்று எதுவென்ற தெரியாத ஒரு நிலையோ அல்லது "தற்செயல்" மூலத்திலோ ஏற்பட்டதன்று. மாறாக முன்கூட்டியே அதன் விளைவுகளை நன்கு ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கப்பட்ட ஒரு புத்திசாலித்தனத்தால் தான் உருவாக்க முடியும் என்பதை உணர்ந்துக்கொள்வான்.

  எனவே தற்செயல் என்பது புத்திசாலித்தனம் ஆகாது!அஃது புத்திசாலித்தனமாக செயல்படுவதாக இருந்தால் அது எப்படி தற்செயலாகும்? எனவே இத்தகைய புத்திசாலித்தனம் நமது அறிவுக்கும் பொருந்தக்கூடிய நிலையிலேயே இருக்கிறது.மேலும் அந்த புத்திசாலித்தனத்தை இதுவரையிலும் நமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும் முடியவே இல்லை.

  ஆக அறிவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஐம்புலன்களுக்கும் ஆட்கொள்ளப்படாத அந்த ஒரு சக்தியே "கடவுள்" என ஏற்றுக்கொள்வதில் என்ன தடை இருக்கிறது?யார் கடவுள்?

    சரி., கடவுள் இருப்பதாக ஏற்றுக்கொள்கிறோம். எத்தனை கடவுள்? ஒருவரா? பலரா? அல்லது ஒருவர் தான் என்றால் எந்த கடவுள் உண்மையானவர்? இது கடவுளை ஏற்போர்களும் சிந்திக்கவேண்டிய கேள்வி., நீங்களோ நானோ பிறந்த மதத்தின் அடிப்படையில் கடவுளை பின்பற்றினால் போதுமென்றிருந்தால் "கடவுள்' நமக்கு பகுத்தறிவு என்ற ஒரு அறிவை வழங்க வேண்டும் என்ற அவசியமே இல்லை.

  பிறப்போர் உண்மையான கடவுள் யார் என அறியவும் அஃது அதிலே இருப்போர் உண்மையான கடவுள் வழி அறிந்து நடந்திடவுமே நமக்கு ஏனைய உயிரினத்திற்கு தரப்படாத ஒரு சிறப்பம்சத்தை தந்திருக்கிறான். ஆக கடவுள் என்று சொல்லக்கூடியவர் எப்படி இருக்கவேண்டும் என்பதை முதலில் தேர்வு செய்யுங்கள் அந்த நிலைக்கு ஒருவர் இருந்தால் அவர் தான் உலகின் கடவுள் ஒரே கடவுள்.
 • கடவுள் என்று சொல்லக்கூடியவர் தான் தோன்றியாக இருக்க வேண்டும். அவருக்கு தகப்பனோ,மகனோ வம்சாவழிகளோ இருக்கக்கூடாது.
 • அவர் இணை துணை இல்லாதவராக இருக்கவேண்டும், மனைவி மக்கள் இல்லாதவராக இருக்கவேண்டும்.
 • எந்த ஒரு உயிரினத்திடமிருந்தும் எந்தவித தேவையும் அற்றவராக இருக்கவேண்டும்.
 • மனிதர்களின் கற்பனைக்கு அப்பாற்பட்டவராக; கட்டுப்பாட்டிற்குள் அகப்படாதவராக இருக்கவேண்டும்.
 • மனித மற்றும் ஏனைய உயிரினங்களின் பலகினங்களை தன்னுள் கொண்டவராக இருக்கக்கூடாது
 • அவரை பற்றிய வரையறைகள் முழுதாக மற்றும் தெளிவாக நமக்கு விளக்கப்பட்டிருக்க வேண்டும்.
 • மனித சமுதாய முழுவதற்கும் கடவுளை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் "அத்தாட்சிகள் கடவுள் புறத்திலிருந்து" அந்தந்த சமுகத்திற்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
 • எக்காலத்திற்கும் பின்பற்றத்தகுந்த செயல்முறைகள் உலகம் அழியும் வரையிலும் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கவேண்டும்
 • நன்மைகள் புரிந்தால் பரிசும், தீமைகள் புரிந்தால் தண்டனையும் அளிக்கவேண்டும் அதுவும் மேற்கொள்ள மற்றும் தவிர்க்கவேண்டியவை குறித்த விளக்கங்கள் மற்றும் சட்டமுறைமைகள் எந்த ஒரு தனிமனிதனுக்கும் இலகுவாக வழங்கப்பட்டிருக்கவேண்டும்.
 • மனித நலத்திற்கோ சமுகத்திற்கோ பிரயோஜனமற்ற சடங்குகள் சம்பிரதாயங்கள் ஏற்படுத்தபடாமல் இருக்கவேண்டும்.
 • இறுதியாக, தனி மனித வாழ்வுக்கு ஏதுவான அனைத்து நடைமுறை சாத்தியக்கூறுகளும் அவரால் மனித சமுதாய முழுமைக்கும் தெளிவுறுத்தப்பட்டிருக்க வேண்டும்
இதை அடிப்படையாக கொண்டு எவர் இருக்கிறானோ "அவர் தான் கடவுள்"

                                                                அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

read more "யார் கடவுள்...?"

Tuesday, October 05, 2010

இடைவேளை

எவன் கைவசம் நம் உயிர் உள்ளதோ அவனை துதித்து....

வண்ணங்களுடன் வாழ்ந்தவர்களை 
வெண்மையாக அழகு பார்ப்பது மரணம்..

நம்மை சிரிக்க வைத்தவர்களை கூட
அழ வைப்பது 
நம்மை வியக்க வைத்தவர்களை கூட
வியர்க்க செய்வது...
அறிந்துக்கொள்ளும் முன்னே நம்மை அழைத்து செல்வது

எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும்
வேண்டும் என்று கேட்காமலே 
நம்மை தேடி வரும் நேரம் அறியாத பயணம் 

எல்லா நிலைகளிலும் ஜெயித்தவர் கூட
தோற்பது இதனிடம் மட்டும் தான்

மரித்த மனிதர்களின் கருவறை மண்ணறை
அதை உணர்வதற்கே நமக்கு மரணம் எனும் முன்னுரை

கால்கள் பிண்ணி கொள்ள உயிர் தொண்டை குழியிலே ஜனிக்க 
இவ்வுலகிலே சுவைத்து பார்த்து அனுபவிக்க முடியாத சுவை 
அனைத்து ஜீவனும் சுவைத்தே ஆகவேண்டிய சுவை 

மரணம் முன்னோருடன் சென்று சேர
உள்ளோர் கப்ர் வரை வந்து 
வழியனுப்பும் தொடர் பயணம்...

அற்பமான இவ்வுலக வாழ்கையின் எல்லை..
மறுமை வாழ்கையின் திறவுகோல்
அது திறக்க போவது 
சொர்கத்தின் வாயிலா?
நரகத்தின் வாயிலா?

இதுதான் நாம் சம்பாதித்தவற்றின் இறுதி முடிவு...
நிரந்தரமான வாழ்கையின் ஆரம்பம்...
நாம் இல்லாமல் போகும் முன்
இறைவனை தவிர எதுவும் இல்லை என சொல்ல முற்படுவோம்.

மனம் சொல்லும் மக்கா நோக்கி புனித பயணம்
மரணம் செல்லுமோ மண்ணறை நோக்கி புதிய பயணம்...

நாம் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை
மாறாக வீழ்ந்து கொண்டிருக்கிறோம்
முழுதாய் விழு முன்
மார்க்கம் அறிந்துடுவோம்.

மரணம் வாழ்வின் நீதியா? வாழ்வின் மீதியா...?
விடை அறிந்தால்....
நம்மில் மரணம் ஜனிக்கும் முன்- ஏனையோருக்கு
நம்மின் மனிதம் அளிப்போம்...
                                                                                             - ருக்கையா அப்துல்லாஹ்
                                                                     S R I   L A N G A

read more "இடைவேளை"

Sunday, October 03, 2010

தேவையுடையவனா...இறைவன்?

                                                          ஒரிறையின் நற்பெயரால் 


       இஸ்லாத்தை பொறுத்தவரை மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்பே அவர்களுக்கு உண்டான தெரிதல்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளும் தெளிவாக வழங்கப்பட்ட பின்னரே மனிதர்கள் அவ்வழி வாழ எத்தனித்தது. அதன் அடிப்படையில் மனிதர்கள் படைக்கப்பட்டதன் நோக்கம் குறித்து திருக்குர்-ஆன் கூறும்போது


      இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56)


              இங்கு இறைவன் மனிதர்கள் படைக்கப்பட்ட காரணமே அவனை வணங்குவதற்காகதான் எனும்போது மனிதர்கள் வணங்குவவேண்டுமென்பது ஏக இறைவனுக்கு தேவையா..? என்றே கேள்வியே அபத்தமானது. 


    ஏனெனில் அல்லாஹ் மனிதர்கள் மற்றும் ஜின்களை படைத்ததால் வணங்க சொல்லவில்லை. வணங்குவதற்கு வேண்டிய அவைகளை படைத்திருக்கிறான். சரி., அவ்வாறு வணங்க சொன்னப்போதும் அது தேவையே அடிப்படையாக கொண்டதா?


  ஏனெனில் தேவையானது ஒரு சொல். செயல் அல்லது ஏனையவற்றின் மூலமாக ஒருவர் மற்றவரை சார்ந்திருப்பது. அந்த அடிப்படையில் தேவைகள் என்பது இரண்டை மையப்படுத்தி இருக்க வேண்டும். ஒன்று, பெறப்படும் தேவையின் மூலம் அதை சார்ந்தவர் பயன்பாடு பெற வேண்டும்.அல்லது, அத்தேவையே அடையாவிட்டால் அதன் விளைவால் அவர் பாதிக்கப்படவேண்டும். இதுவே "தேவை" என்பதன் அளவுகோல். 


இதை அடிப்படையாக வைத்து இனி காண்போம்.
                                                


தேவையுடையவனா..? இறைவன்! 


இஸ்லாம் ஐந்து காரியங்கள் மீது நிர்மானிக்கப்பட்டுள்ளது.

 • வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராவார்கள் என்று சாட்சி கூறுவது,
 •  தொழுகையை நிலை நாட்டுவது
 •  ரமளான் மாதம் நோன்பு நோற்பது
 • ஜகாத் கொடுப்பது
 •  ஹஜ் செய்வது .
                (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்அறிவிப்பவர் : இப்னு உமர் -ரலி, நூல் : புகாரீ)     
  
        பொதுவாக, இஸ்லாத்தில் அடிப்படை கொள்கைகள் அனைத்தும் இறைவனோடு தொடர்புடையதாக இருந்தாலும் முதலாவது மற்றும் நான்காவது (கலிமா மற்றும் ஜகாத்) ஆகியவை தவிர ஏனைய மூன்று கொள்கைகளும் நோன்பு, தொழுகை மற்றும் ஹஜ் ஆகியவைகள் இறைவனுக்கு செய்யவேண்டிய வணக்கம் என்ற நிலைகளிலேயே குறிப்பிடப்படுகிறது. ஆக இம்மூன்றும் இறைவனை தேவையுடையவனாக ஆக்குகிறாதா?


   
தொழுகை
     தொழுகை என்ற இறைவணக்கம் நாளொன்றுக்கு ஐந்துமுறையென ஏழு வயது முதல் சுய அறிவுள்ள ஏனைய ஆண், பெண் அனைவரின் மீது கடமையாக இஸ்லாம் பணிக்கிறது.தொழுகை பொதுவாக இறைவனுக்கு மேற்கொள்ளும் வணக்கமாக கூறினாலும் அத்தொழுகையால் மனிதர்கள் அடையும் விளைவை குறித்து வல்லோன் தன் வான் மறையில்
    
   (நபியே!) இவ்வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக இன்னும் தொழுகையை நிலை நிறுத்துவீராக நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும். நிச்சயமாக, அல்லாஹ்வின் திக்ரு (தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தியா)கும்; அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிகிறான்.  (29:45)
    மேற்கூறப்பட்ட வசனத்தில் தொழுகையானது மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்குவதாக இருக்கிறது என அல்லாஹ் கூறுகிறான்.ஆக தொழுகை என்பது மனித மனங்களில் தோன்றும் அனைத்து விதமான தனி மனித ஒழுக்க சீர்க்கேடுகளையும் அருவறுக்கத்தக்க சமுக தீமைகளையும் வேரறுக்கவே இறைவன் புறத்தில் ஒவ்வொரு முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்ட பிரத்தியேக பாதுகாப்பு என்பதை அறியலாம்.
நோன்பு
ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)


       பசி உணர்தல், தீய செயல் மற்றும் பேச்சுக்கள் தவிர்த்தல் போன்றவைகள் இருந்தாலும் நோன்பின் பிரதான நோக்கம் தூய்மையே ஆகும். இங்கு தூய்மை என்பது உளத்தூய்மையே குறிக்கும் அதாவது நாம் மேற்கொள்ளும் எந்த ஒரு செயலையும் இறைவனுக்கு பயந்து செயல்படுத்தும்போது தவறுகள் களையப்பட்டு நன்மைகள் பக்கமே நமது வாழ்வின் பயணமிருக்கும். இதுவே உளத்தூய்மையின் அடிப்படையாகும்.
ஹஜ்
அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது. மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்) பாதுகாப்பும் பெறுகிறார்;. இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்தி பெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும். 
  ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப் போவதில்லை. ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாக இருக்கி;றான்.  (3:97)

    மேற்கூறிய வசனம் மிக தெளிவாக ஹஜ்ஜிக்கான இரண்டு அடிப்படை கூறுகளை சொல்கிறது. ஒன்று, அவ்விடத்தில் ஒன்றுகூடும் போது அவர் அச்சமற்று பாதுக்காப்பு பெறுகிறார், பிறிதொன்று வசதியிருந்தால் மட்டுமே நிறைவேற்ற வேண்டிய கடமையாக பணிக்கிறது .


     மேலும் பாருங்கள் அஃது அக்கடமையே நிறைவேற்றும் வாய்ப்பு கிட்டியும் நிறைவேற்றவில்லையென்றால் அதனால் இறைவனுக்கு எந்த இழப்பும் ஏற்படபோவதில்லை என்பதை இந்த மனித சமுகத்திற்கு அவனே உரக்கச்சொல்கிறான்
    ஆக இஸ்லாம் ஏனைய வணக்கங்களை மேற்கொள்ள சொன்னாலும் அதற்கு அடிப்படைக்காரணம் தக்வா எனும் 'இறையச்சத்தை' மனித சமுகம் எக்காலமும் பேணவேண்டும் என்பதற்காக தான் தவிர அவர்களின் பால் இறைவன் தேவையுடையவன் என்பதற்காக அல்ல. 


   ஏனெனில் இந்த நொடியிலிருந்து கூட எவரும் எத்தகைய வணக்கங்களையும் அறவே செய்யாவிட்டாலும் கூட அவர்களுக்கும் அவர்களின் சமுகத்திற்கும் தான் இழப்பே தவிர ஏக இறைவனின் கண்ணியத்திற்கு அணுவளவேனும் கூட தீங்கு ஏற்படாது. வணக்கங்கள் என்பது இஸ்லாத்தை பொருத்தவரை இறைவனை முன்னிருத்தி மனிதன் நன்மையின் பக்கம் விரையச் செய்யும் ஒரு காரியமே!   


    எந்த ஒரு மனிதனும் வணக்கத்தை செய்யும்போதோ அல்லது தவிர்க்கும்போதோ இறைவன் எந்த இலாபமோ, நஷ்டமோ அடைவதில்லை. எனும்போது "தேவை" என்ற அளவுகோல் இறைவனுக்கு பொருந்தாது. ஏனெனில்...


மனிதர்களே! அல்லாஹ்வின் உதவி (எப்பொழுதும்) தேவைப்பட்டவர்களாக இருப்பவர்கள் நீங்கள்; ஆனால் அல்லாஹ் எவரிடமும் தேவைப்படாதவன்; புகழுக்குரியவன்.(35:15)


                                                           அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "தேவையுடையவனா...இறைவன்?"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்