"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, April 28, 2012

வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!

                                           ஓரிறையின் நற்பெயரால்


இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...

ஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...


கி.பி 634  ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.
பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:
"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.
மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள். 
சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...
. . . 
ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .
உமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...

                                         அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Reference :

http://ta.wikipedia.org/wiki/omar(rali)
http://azeezbaqavi.blogspot.com/
http://www.tamililquran.com
http://peacetrain1.blogspot.com/
http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
Gibbon - In The Decline and Fall of the Roman Empire
Washington Irving - In his book Mahomet and His Successors


read more "வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!"

Tuesday, April 17, 2012

ஓர் அழைப்பு!


                                          ஓரிறையின் நற்பெயரால்


நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!

முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு

ஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.

பொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே..! ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.

அப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,

தொடருங்கள்...

இன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை...? இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -

ஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...?

கடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்
மேற்கண்ட வினாவிற்கு

எந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..?

இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று

நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?

இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்

  • ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
  • அல்லது அறியாமை.

வேறன்ன சொல்ல முடியும்?

கடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...?

பின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...?

அதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)
எனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
என் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..!


உங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...
உங்கள் சகோதரன்.
G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்



இஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு
விளக்கமாய்
சகோதரிகளின்
ஒர் புதிய வலைத்தளம்..!





   




  1. கடவுள் இருகின்றானா?
  2. கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
  3. கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?
  4. கடவுளில்லா உலகம்...?
  5. நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?
  6. பதில் தருமா பரிணாமம்..?
  7. தேவையுடையவனா...இறைவன்?
  8. யார் கடவுள்...?
  9. மனித வாழ்வில் மனசாட்சி!
  10. பரிணாமத்தில் மனிதன்..?
  11. கடவுள் இருந்தால்..
  12. கடவுளும்- நாமும்
  13. பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
  14. "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"
  15. மரணம்:- பொய்க்கும் நாத்திகம்
  16. நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!
  17. 'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
  18. கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
  19. இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?
  20. கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?
  21. கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?
  22. இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?
  23. கி.மு வில் கடவுள்!
  24. நாத்திகம் விரும்பும் இஸ்லாம்..!..?
  25. #கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!



                                     (நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)

read more "ஓர் அழைப்பு!"

Wednesday, April 11, 2012

"பொய்யும், பொய் சார்ந்த இடமும்..."

                                                  ஓரிறையின் நற்பெயரால்

இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையேன்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஒரு ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.

உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், இப்படி மக்கள் கூடும் வியாபார தளங்களில் எல்லாம் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

நம்மிடம் அரை மணி நேரம் ஒருவர் கூடுதலாக பேசினால் கூட அர்ஜன்ட்டா சின்ன வேலை இருக்கு என...அவரிடமிருந்து தப்பிப்பதற்கு பொய்யாக தான் ஒரு காரணத்தை தேர்ந்தெடுக்கிறோம். பொய் என்பதற்கு தற்கால அகராதியில் பொருள் தேடினால் சாமர்த்தியம் என்றே பொருள் மாற்றம் செய்யப்பட்டிருக்கும்.பொய் பேச மறுப்பவனை பிழைக்க தெரியாதவன் என்று கேலி பேசுகிறது இந்த சமூதாயம்.

இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். இந்த பழக்கம் பின்னாளில் நமக்குள் பல்வேறு தீய எண்ணங்களையும் உள்வாங்கிக்கொள்கிறது நெருப்பு விறகினை தின்பதுப்போல்...

இந்த சமூகத்திற்கு தீமையென்று என்று தெரியாமலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை செய்துக்கொண்டிருக்கிறோமென்றால் அது பொய் என்று சொல்வதில் பொய்யில்லை.! சகோஸ்

பொய்யானது பிறர் மீது வெறுப்பையும், பொறாமையும், பிறரை மதிக்காமல் ஏளனம் செய்யும் நிலையையும் இயல்பாகவே நம்முள் ஏற்படுத்த வழிவகுக்கிறது. உதாரணம் சில சொல்லணும்னா.,

நம்மை கடக்கும் ஒருவர் கால் வழுக்கி சறுக்கினால் கூட ஒரு நமட்டு சிரிப்பிற்கு பின்னரே அவருக்கு உதவ விரைகிறோம். சாலையோர கூட்டத்தை பிளந்து என்னமோ ஏதோ என வேகமாய் முண்டியடித்து போய் பார்க்கும் போது ஏற்பட்ட விபத்து அவ்வளவு பெரிதொன்றுமில்லையென்றால் நமக்கு ஏற்படும் நிம்மதியை விட ஏமாற்றமே அதிகம்.

இப்படி பிறர் நலனில் கொள்ளவேண்டிய அக்கறையை கூட பொழுதுப்போக்காக்கும் இந்த கொடிய பழக்கத்தை நாம் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லையென்றால் பொய் என்னும் போதை நம் உள்ளத்தில் ஊடுறவ தொடங்கிவிட்டதென்ற பொருள்.



இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையே நபிகள் நாயகம் அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.


ஒருமுறை தோழர்கள் மத்தியில் நபியவர்கள்,


‘பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?' என்று மூன்று முறை கேட்டார்கள். நாங்கள், ‘ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)' என்று கூறினோம்.‘அல்லாஹ்வுக்கு இணை வைப்பதும், பெற்றோரைப் புண்படுத்துவதும்' என்று சொல்லிவிட்டு சாய்ந்து கொண்டிருந்த அவர்கள் எழுந்து அமர்ந்து, ‘அறிந்து கொள்ளுங்கள்: பொய் பேசுவதும், பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்); பொய் பேசுவதும் பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்தான்)' என்று கூறினார்கள். இதை அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள். (இதைக் கண்ட) நான் ‘அவர்கள் நிறுத்திக்கொள்ளக் கூடாதா?' என்று நினைக்கும் அளவிற்கு சொல்லிக்கொண்டிருந்தார்கள்.(1)

இறைவனுக்கு இணைவைக்கும் பெரும்பாவ பட்டியலில் பொய்யையும் இணைத்து இருக்கிறார்கள் என்றால் பொய் பேசுவது நம்மை எங்கே கொண்டு போய் நிறுத்தும் என்பதை நாம் நிதர்சனமாக உணர்ந்துக்கொள்ளலாம்

அடுத்து பாருங்கள்.
 ‎'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என நபிகள் நாயகத்திடம் வினவப்பட்ட போது, அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்றபோது அதற்கும் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.(2)


இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு காட்டி அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என்பதையும் பறை சாற்றுகிறது இந்நபிமொழி..

சிறு பருவத்தில் கற்பிக்கப்படும் எதுவும் அவர்களின் மனதில் ஆழமாக பதிய வாய்ப்பு அதிகம். அப்படி அவ்வயதில் விளையாட்டிற்காக சொல்லப்படும் பொய்களை கூட அங்கீகரிக்கவில்லை நபிகள் நாயகம் ஸல் அவர்கள்

ஒருமுறை எங்கள் வீட்டிற்கு நபி (ஸல்) அவர்கள் வருகை தந்தபோது என் தாயார் என்னை அழைத்து, ‘இங்கே வா! உனக்கு ஒரு பொருள் தருகின்றேன்!' என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார், ‘நீர் அவனுக்குத் எதனைத் தர விரும்புகின்றீர்?' என்று வினவினார்கள். அதற்கு என் தாயார், ‘நான் அவனுக்கு பேரித்தம் பழம் தர விரும்புகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு அண்ணலார் என் தாயாரிடம், ‘நீர் எதனையாவது அவனுக்குக் கொடுப்பதாக அழைத்து கொடுக்கவில்லையென்றால், உம் வினைப்பட்டியலில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்' என்று கூறினார்கள்.(3)


பொய் என்பதின் அளவுக்கோல் என்னவென்பதை உண்மையாய் விளக்க இந்த ஒரு நபிமொழியே போதுமென்று நினைக்கிறேன்.

பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த சிறுவ(யது மக)னை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம்..
அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...

அந்நிலை மாற்றப்பட வேண்டுமென்றால்
மலையோ, மணலோ, காடோ, வயலோ, கடலோ இப்படி எதுவாக இருப்பீனும் அது

பொய்யும், பொய் சார்ந்த இடமும் ஆகாமல் பார்த்துக்கொண்டால் போதும்.!


                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்


(1).அறிவிப்பவர்: ஸஃப்வான் இப்னு ஸலீம்
ஆதாரம்: முஅத்தா
(2).அறிவிப்பவர்: அபூ பக்ரா நுஃபைஉ இப்னு ஹாரிஸ் (ரலி)
ஆதாரம்: புகாரி.
(3).அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)
ஆதாரம்: அபூதாவூத்.
read more ""பொய்யும், பொய் சார்ந்த இடமும்...""

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்