"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, December 07, 2012

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"


                                        ஓரிறையின் நற்பெயரால்..

விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.

இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர! இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.

இறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி? என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.

ஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்

இப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.

ஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

இறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.

ஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல.,  நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும்! அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.

இணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.

இங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.

கட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.

யாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு!
ஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more " "நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!" "

Friday, November 02, 2012

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!


                                     ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)



இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..! "

Friday, October 12, 2012

உங்களில் சிறந்தவர்..

                                            ஓரிறையின் நற்பெயரால்.

பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.

மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...

தங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்

ஒரு நபித்தோழர் குறிப்பிடுகிறார்...
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள். 
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

ஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள். 

மற்றொரு நிகழ்ச்சி...
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093 ,15726, 15717 

ஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். 

அதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.

அடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.
அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.
இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.
பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.

தமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...

புகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள்.  எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.
அவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். 

நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917

இந்த  நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.  

இன்னும் சொல்லலாம்... 
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

  உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை. 

கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!

மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.

 தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள். 

இறுதியாக... 
அவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்!
'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! 

அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள். 
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...

அவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..
.

தொடர்புடைய ஆக்கம்

                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Reference :
read more "உங்களில் சிறந்தவர்.."

Friday, September 14, 2012

#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!

                                           ஓரிறையின் நற்பெயரால்

 உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது. 

உலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

அப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே "கடவுள்" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.

தொடர்வோம்...

 கடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திகளோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை. 

 இன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும்? வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக, 

ஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.

சரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆதார நிருபணம்...?

மனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது. 

அதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம்.  ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது. 

இதை இன்னும் எளிதாக விளக்கிட... 
நல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை. 

அதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும்? அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்?

வெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....
இன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து அப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க?



Good Question! But...
அறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று. 

இனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்

ஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது? 
மனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது?
மனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.? 

இன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். 

அதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.  

இப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே... 

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும்! அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்... 

ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்

மேலும் தொடர்புடைய ஆக்கங்கள்:
பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
read more "#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்! "

Sunday, July 22, 2012

முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்!

                                            ஓரிறையின் நற்பெயரால்

                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! 

நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்

 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
   
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." 
என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,

    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
        
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.



      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சில நபர்கள் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி...
      
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும், 
      
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும்,

    திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும், அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும் அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

  • இரட்சிப்புக்காக தம் கைகளை உயர்த்தியவர்களின் கையில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.

↻ இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 

↻ இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 

↻ தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?

சில பள்ளி வாசல்களில் ரமலான் முழுக்க நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டாலும் ரமலான் முடிந்த பிறகு அவ்வாறு காண்பது அரிதாகிறது... இதற்கு என்ன காரணம்  இன்னும் வேதனை ஒரு சில பள்ளிவாசல்களில் நோட்டிஸ் அடித்து தொழுகையாளிகளை தேடும் நிலை... 

நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..? 

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்... 
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,

         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதே அல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.

      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்

 குறிப்பு : கடந்த ஆண்டு ரமலானில் வெளியிட்ட "ரமலானில் முஸ்லிம்கள்" என்ற ஆக்கத்தின் மீள்பதிவு இது.
read more "முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்!"

Wednesday, June 13, 2012

சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....


ஓரிறையின் நற்பெயரால்

மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)

சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.

  • கருத்துரிமை
  • பேச்சுரிமை
  • அரசியல் உரிமை
  • சமய உரிமை

இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.

இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.

இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...

நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.

சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.

மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...

சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..!


இறுதியாய்
சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...

பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.

மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.

எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க

எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

சிந்தியுங்கள் ...
எது சுதந்திரம்..?
எது முழுமையான சுதந்திரம்..?

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "சுதந்திரம் எனப்படுவது யாதெனில்...."

Thursday, May 10, 2012

வார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..?'


                                          ஓரிறையின் நற்பெயரால்

இரண்டும் சுழலும் தன்மையுடையது, தேவைக்கேற்ப அதன் வேகத்தை கூட்டலாம், குறைக்கலாம். மனிதனின் அடிப்படை வசதிக்கு இன்றியமையாத பயன்பாட்டை தருகிறது. இப்படி இரண்டு பொருட்களுக்கும் இடையே உள்ள ஒரு சில பொதுவான விசயங்களை எடுத்துக்கொண்டு வாகனத்தின் சக்கரமும், வீட்டின் மின்விசிறியும் அடிப்படையில் சமமானது என உங்களிடம் ஒருவர் வாதிட்டால் அவரை என்ன சொல்வீர்கள்….?

இதைப்போலதான் சமூகத்தின் சில தவறான புரிதல்களால் ஆணும் -பெண்ணும் சமம் என்ற பேச்சு நடைமுறையில் இருக்கிறது., ஆணும் பெண்ணும் சமமா -சமமில்லையா என பார்ப்பது ஒருபுறம் இருக்கட்டும் அதற்கு முன்பு இவர்களை ஓப்பிட்டு பார்க்க முனைவது அறிவுப்பூர்வமானதா..?

தொடர்வோம்...

பொதுவாக, ஒப்பிடப்படும் இருப்பொருட்கள் அல்லது இரு நிலைகள் ஒரே அளவு, தன்மை, மற்றும் இயல்பியல் பண்புகளை கொண்டிருக்க வேண்டும். அப்போது தான் அவற்றிற்கிடையே ஒப்பிட்டு அதனை சமன் செய்ய முடியும். அஃதில்லாமல் இரண்டிற்கு மத்தியில் இருக்கும் ஒரு சில பொதுவான ஒற்றுமைகளை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டையும் சமன் செய்ய முற்பட்டால் நமக்கு தெளிவான முடிவுகள் கிடைக்காது.

மேலும், ஒப்பிடப்படும் இரண்டு நிலைகளின் உண்மை நிலையை அறிய அவை இரண்டும் அல்லாத மூன்றாம் மூலத்திலிருந்து இவற்றை அணுகினால் மட்டுமே நம்பகதன்மை வாய்ந்த விடை நமக்கு கிடைக்ககூடும். ஆனால் இங்கே ஆணையும் பெண்ணையும் ஒப்பிடுவது ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோவாக தான் இருக்க முடியும். அதனால் சமம் என்று சொன்னாலோ சமமில்லை என்று சொன்னாலோ அது சந்தர்ப்பவாத சூழ்நிலையில் எடுக்கப்பட்ட முடிவாக தான் இருக்கும். ஆக இரண்டு விடைகளில் எந்த ஒன்று உண்மையாக இருக்க முடியும் என்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் எதில் இருக்கிறது என்று ஆராய்வதே இங்கே அறிவுப்பூர்வமானது.

ஆணையும் பெண்ணையும் ஒப்பிட வேண்டுமானால் இருவரும் அடிப்படையில் ஒரே தன்மைகளை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பேச்சு, செயல், நகைச்சுவை, உணர்வுகள், அறிவுத்திறன் போன்ற பொதுவான படைப்பியல் ஒற்றுமைகளை தவிர உடலியல் ரீதியாகவும், இயங்கியல் ரீதியாகவும் பல வேற்றுமைகள் இருவருக்குமிடையே இருக்கிறது. அதிலும் இருக்கும் ஒற்றுமைகளில் கூட நிலையான சமன்பாடு கிடையாது. இடத்திற்கு கால சூழ் நிலைக்கு தகுந்தார்போல் இருவருக்குமிடையே திறன்கள் மாறுபடும்.

உடலியல் அமைப்பை எடுத்துக்கொண்டால் இருவரும் சமமான நிலையை பெற்றிருக்கவில்லை என்பதை நாம் எல்லோரும் எளிதாக அறிவோம். ஏனெனில் நீண்ட தூர பயணம், அதிகப்படியான வேலைப்பளு, விரைவான ஓட்டம் இப்படி அதிகமாக அல்லது வேகமாக செயல்படும் நிலையில் ஆண்களை விட பெண்கள் முன்னமே களைப்படைந்து விடுகிறார்கள்.

குணாதிசயங்களை எடுத்துக்கொண்டாலும் இருவருக்குமிடையே தெளிவான வேறுபாடு. ஆண்களை காட்டிலும் பெண்கள் எளிதாக உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள், அதிக இரக்க மனப்பான்மை கொண்டவர்கள். பொறுமை அதிகம் கொண்டவர்கள். வெட்கம் எனும் பண்பு அவர்களிடத்தில் மிக மிக அதிகம். இதற்கு அடையாளமாக தான் ஆண்கள் அணியும் ஆடைகளை விட கூடுதலாகவே பெண்கள் உடை அணிந்தே உலா வருகிறார்கள்.

அடுத்து முக்கியமாக பொது வாழ்க்கையில் இருவரும் ஒரே மாதிரி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. அடுத்தவருக்கு உதவுதல், பிறரை மதித்தல் போன்ற நன்மையான விசயங்களில் இருவருக்குமிடையே ஒரளவு சமமான நிலை நிலவினாலும், சிகரெட், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களில் பெண்களை விட ஆண்களே அதிகமாக ஈடுபடுகின்றனர். வன்முறை, கலவரம் போன்ற தகாத செயல்களில் ஆண்களை காட்டிலும் பெண்களின் பங்களிப்பு மிக மிக குறைவே.,

உடலியல்க்கூறுகள், பண்பியல் மற்றும் சமூகரீதியான செய்கைகளில் பெண்களும் ஆண்களும் சமமான நிலையில் இல்லவே இல்லை. இப்படி சமமற்று இயங்கும் இரு நிலைகளை பொதுவில் வைத்து சமம் என்று வர்ணித்தால் அது எப்படி அறிவார்ந்த வாதமாகும்? வார்த்தையில் மட்டும் பேணப்படும் சமத்துவம் என்பதாக தான் பொருள்படும்.
இருவரும் அடிப்படையில் சமமானவர்கள் இல்லை என்பதை நடைமுறைகளில் காணப்படும் சாத்தியங்களை வைத்து தர்க்கரீதியாகவும் நிருபிக்கலாம்.

  • இன்றும் சென்னைப்போன்ற பெருநகரங்களில் பெண்கள் மட்டும் தனியாக பயணம் செய்யும் பொருட்டு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுப்போலவே இரயில்களிலும் இரண்டு கம்பார்ட்மெண்ட் ஒதுக்கப்பட்டு தான் இருக்கிறது. இது எதற்காக...? பெண்களின் சிரமத்தை குறைப்பதற்காகதான் என சொல்வீர்களேயானால்.. அதே சிரமம் ஆண்களுக்கும் இருக்க தானே செய்கிறது. ஆனால் எங்கும் பிரத்தியேகமாக ஆண்களுக்கென்று எந்த பேருந்தோ, ரயில்களோ இயக்கபடுவதில்லை.
  • அதுமட்டுமா, இன்று விவாகரத்து கோரும் தம்பதியரில் தீர்ப்புக்கு பிறகு பெண்களுக்கே ஜீவானம்சம் வழங்கப்படுகிறது, மாறாக ஆண்களுக்கு எந்த பெண்ணிடம் இருந்தும் வாழ்வாதரம் வாங்கி தரப்படுவதில்லை. 
  • பொதுவாக, பெண்களின் பெயருக்கு பின்னால் தன் தந்தையின் பெயரையோ அல்லது கணவனின் பெயரையோ இணைத்து கூறும் பழக்கம் இன்னும் நடைமுறையில் இருக்கிறது. எந்த ஆணின் பெயரோடும் தம் தாய் அல்லது மனைவியின் பெயர் இணைத்து முன்மொழியப்படுவதில்லை. ( சில மேலை நாடுகளில் வேண்டுமானால் இந்நிலைக்கு மாற்றமாக இருக்கலாம். ஆனால் எதற்க்கெடுத்தாலும் ஆணும்-பெண்ணும் சமம் என வாதிடும் இந்தியா போன்ற நாடுகளில் இந்நிலை தொடரத்தான் செய்கிறது)

இதைப்போன்ற செயல்கள் சமூகத்தில் ஆண்களும் பெண்ணுகளும் சமமற்ற நிலையில் இருப்பதை தான் காட்டுகிறது. மேற்கண்ட செயல்கள் பெண்ணிற்கு இழைக்கப்படும் அநீதியாக எந்த ஒரு சமூக நல ஆர்வலரும் எதிர்ப்பு தெரிவித்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால் ஆணும் பெண்ணும் சமம் என சமத்துவம் பேசும் மனிதர்கள் கூட இந்நிலையே பொது வாழ்வில் ஏற்றுத்தான் கொள்கிறார்கள்.

ஆணோ பெண்ணோ அவர்கள் படைக்கப்பட்டிருக்கும் விதத்திற்கு தகுந்தாற்போல சிற்சில செயல்களில் ஒருவரைக்காட்டிலும் ஒருவர் ஏற்ற இறக்க வாழ்வியல் நிலைகளை கொண்டு தான் இருக்கின்றனர். அதைத்தான் மேற்கண்ட செயல்கள் காட்டுகின்றன.

அதுமட்டுமல்ல, ஒரு செயலின் விளைவில் ஏற்படும் இழப்பு இருவருக்கும் பொதுவாக இருப்பதில்லை. ஆண்களை விட பெண்களுக்கே எந்த பிரச்சனைகளின் முடிவிலும் பாதிப்பு அதிகம். அதை நிதர்சனமாக விளக்கும் எத்தனையோ செய்திகளை அன்றாடம் நாம் பார்த்தும் படித்தும் வருகிறோம்.

ஆணும் பெண்ணும் சமம் என வாதிடுவோர்களின் அடிப்படை நோக்கம் அவர்களின் வாழ்வு வீட்டு சமையலறையோடு மட்டுமே முடங்கி விடக்கூடாது அவர்களுக்கும் இந்த சமூகத்தில் அங்கீகாரம் கிடைக்கவேண்டும் என்பதாக தான் இருக்கும். அதற்கு ஆணும் பெண்ணும் சமம் என்று சொல்வதில் அந்த அங்கிகாரம் கிடைக்க போவதில்லை.

சுதந்திரம் எனும் பெயரில் போலியாய் சமத்துவத்தை நிலை நாட்டுவதில்(?) எந்த பயனும் இல்லை. சமம் எனும் பெயரில் பெண்கள் காட்சி பொருளாகத்தான் இன்று மேலை நாடுகளில் காட்டப்பபடுகின்றனர். இதில் அவர்கள் கண்ணியம் கேவலப்படுத்தப்படுவது தான் நிதர்சனமான உண்மை. அப்படியானால் சமமும், சமத்துவமும் உண்மையில் எங்கேதான் இருக்கிறது..?

அவர்களின் உரிமைகளை அவர்களுக்கு வழங்கி அவர்களது கடமைகளையும் சரிவர செய்ய ஆர்வமூட்டுவதில் தான் இருக்கிறது சகோஸ்...

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "வார்த்தையில் மட்டும் பேணப்படும் 'சமத்துவம்..?'"

Saturday, April 28, 2012

வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!

                                           ஓரிறையின் நற்பெயரால்


இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...

ஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...


கி.பி 634  ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.
பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:
"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.
மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள். 
சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...
. . . 
ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .
உமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...

                                         அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Reference :

http://ta.wikipedia.org/wiki/omar(rali)
http://azeezbaqavi.blogspot.com/
http://www.tamililquran.com
http://peacetrain1.blogspot.com/
http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
Gibbon - In The Decline and Fall of the Roman Empire
Washington Irving - In his book Mahomet and His Successors


read more "வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!"

Tuesday, April 17, 2012

ஓர் அழைப்பு!


                                          ஓரிறையின் நற்பெயரால்


நம் அனைவரின் மீதும் ஓரிறையின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக..!

முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு -குறிப்பாய் என் நாத்திக சகோதரர்களுக்கு ஒரு சிறிய நினைவூட்டலாய் இப்பதிவு

ஏனையவைகள் போலல்லாமல் எதற்கெடுத்தாலும் இன்று இஸ்லாம் விவாதிக்கும் பொருளாக மாறிவிட்டது. மற்ற எந்த கொள்கை /துறை சார்ந்த கோட்பாடுகளை விட இஸ்லாம் விமர்சித்து குற்றப்படுத்தபடுவது அதிகம் என்றே சொல்லலாம்.

பொதுவில் பகிரப்படும் எதன் மீதும் விமர்சனம் ஏற்படுவது இயல்பே. ஆனால் விமர்சனங்கள் அல்லது குற்றச்சாட்டுகள் என்பன தெளிவு பெறும் நோக்கில் அமைந்தால் சந்தோசமே..! ஆனால் இன்று இணையத்தில் நாத்திகராக தம்மை முன்னிருத்திக்கொள்வோரில் ஒரு பகுதியினர் காழ்ப்புணர்ச்சி ஒன்றை மட்டுமே பிரதானமாக கொண்டு போலி பெயர்களுடன் இஸ்லாத்தை எதிர்க்க முற்படுவதுதான் பலதளங்களில் காண முடிகிறது.

அப்படிப்பட்ட நாத்திக முகமூடியுடன் இணைய உலாவரும் அத்தகையவர்களுக்காக இந்த பதிவு அல்ல.. உண்மையாக கடவுள் கொள்கைகளில் ஏற்பட்ட அதிருப்தி, அறிவுப்பூர்வமான சிந்தனைக்கு இறை மறுப்பே சிறந்த வழி என்ற உண்மையாய் நாத்திகத்தின் பக்கம் சென்றவர்களுக்கே,

தொடருங்கள்...

இன்று உலகில் நடக்கும் வன்முறைகள், வறுமை பட்டினி சாவுகள், இயற்கை சீற்றங்கள், போர்கள் போன்றவற்றால் மக்கள் படும் அவதிகளை கண்டு மனம் பொறுக்காமல் கடவுள் இருந்தால் ஏன் மக்களுக்கு இப்படியான பிரச்சனை...? இந்த கேள்வியே அறிவுப்பூர்வமாக ஏற்று கடவுளை மறுக்கும் நீங்கள் -

ஒருவேளை கடவுளே இல்லையென்பதை ஏற்றுக்கொண்டாலும் அப்பவும் இதே பிரச்சனைகள் இவ்வுலகில் தொடரத்தானே செய்யும்.. இதற்கு என்ன பதில் வைத்து இருக்கீறீர்கள் சகோ...?

கடவுள் இருக்கிறார் என ஏற்றுக்கொண்டாலும் இல்லையென மறுத்தாலும் சில செயல்கள் இவ்வுலகில் நடைபெறத்தான் செய்யும். அப்படியிருக்க இங்கு ஏற்பு அல்லது மறுப்பு இதில் ஒன்றை சார்ந்திருக்க நமக்கு அத்தகையே செயல்களுக்கான காரணங்கள் நமதறிவுக்கு எட்டும் வகையில் தர்க்கரீதியாகவும் -அறிவுப்பூர்வமாகவும் விளக்கப்பட அல்லது விளக்கப்பட்டிருக்க வேண்டும்
மேற்கண்ட வினாவிற்கு

எந்த நாத்திகராவது, உங்களின் முன்முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டு உண்மையாய் இஸ்லாம் இந்த நிலைப்பாட்டிற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என யோசித்து இருக்கிறீர்களா..?

இஸ்லாத்தை விமர்சிக்கும் எந்த நாத்திகரும் அதிகப்பட்சம் நூறு வசனங்களை குர்-ஆனில் படித்திருந்தாலே ஆச்சரியம்... ஆனால் எடுத்த மாத்திரத்திலே சொல்வார்கள் குர்-ஆன் குறைபாடுடையது என்று

நான் சீன மொழியை கற்றுக்கொண்டிருக்கும் போதே அதில் சில வார்த்தைகள் தெரிந்தவுடன் சீன மொழி இலக்கணம் முழுக்க குறைபாடுடையவை என்றால் என்னை என்ன சொல்வீர்கள் நீங்கள் ..?

இப்படித்தான் நாத்திக சகோதரர்களுக்கு குர்-ஆனோடு தொடர்பு. ஆறாயிரம் வசனங்களுக்கு மேலுள்ள குர்-ஆனில் வெறும் நூற்றை மட்டுமே தொட்டு அவை மனித வாழ்வுக்கு ஒத்துவராதவை என்றால் அதற்கு இரண்டு அர்த்தம் மட்டுமே கொடுக்க முடியும்

  • ஒன்று, முன்முடிவுகளோடு அதை அணுகுவது,
  • அல்லது அறியாமை.

வேறன்ன சொல்ல முடியும்?

கடவுளை கண் முன் நிறுத்தினால் தான் நான் நம்புவேன் என்றால் அந்த செயலை நீங்களோ அல்லது நானோ மரணிக்கும் வரை என்னால் நிருபிக்க முடியாது. என்னால் மட்டுமல்ல இவ்வுலகில் எவராலும் நிருபிக்க முடியாது...?

பின் எப்படி தான் கடவுளின் இருப்பை ஏற்பது...?

அதற்கான முயற்சியில் பல தளங்கள் இயங்க., கடவுளின் இருப்பை தர்க்கரீதியாக உணர்த்த இந்த தளத்திலும் சில ஆக்கங்கள் வரையப்பட்டுள்ளது. கடவுளை ஏற்க மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பதை ஒவ்வொரு ஆக்கத்திலும் தர்க்கரீதியாக சொல்லப்பட்டிருக்கிறது. அதன் கீழாக நாத்திக சகோதரர்களுடன் நடந்த விவாதமும் பின்னூட்டமாக சில பதிவுகளில் இருக்கிறது. நீங்களே பார்வையிடுங்கள். கண்ணியமாய் விவாதிக்க அல்லது கருத்து பரிமாறவும் நான் தயார் - இன்ஷா அல்லாஹ்

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள்;. (அல்குர்-ஆன் 04:01)
எனக்கு நாத்திகர்கள் எதிரிகளல்ல.. அவர்களும் என் சகோதரர்களே., இந்த இறைவசனம் அப்படித்தான் எனக்கு கற்றுக்கொடுத்து இருக்கிறது.
என் எதிர்ப்பெல்லாம் போலியாய் சமத்துவம் பேசும் நாத்திகத்திற்கே..!


உங்கள் உள்ளங்கள் உண்மையான தேடுதலில் செல்ல பிரார்த்திக்கும்...
உங்கள் சகோதரன்.
G u l a m 
இறை நாடினால் இனியும் சந்திப்போம்...


                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்



இஸ்லாம் -பெண்ணியம் குறித்த விமர்சனங்களுக்கு
விளக்கமாய்
சகோதரிகளின்
ஒர் புதிய வலைத்தளம்..!





   




  1. கடவுள் இருகின்றானா?
  2. கடவுள் படைப்பில் மனிதர்களிடையே ஏற்ற தாழ்வு ஏன்?
  3. கடவுளை அறிய ஐம்புலன்கள் போதுமா ?
  4. கடவுளில்லா உலகம்...?
  5. நிதியை மிஞ்சும் நீதி -யாரிடம்...?
  6. பதில் தருமா பரிணாமம்..?
  7. தேவையுடையவனா...இறைவன்?
  8. யார் கடவுள்...?
  9. மனித வாழ்வில் மனசாட்சி!
  10. பரிணாமத்தில் மனிதன்..?
  11. கடவுள் இருந்தால்..
  12. கடவுளும்- நாமும்
  13. பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
  14. "நாத்திகர்களிடம் முஸ்லிம் பதிவர்களின் கேள்விகள்"
  15. மரணம்:- பொய்க்கும் நாத்திகம்
  16. நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!
  17. 'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.
  18. கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
  19. இயற்கையின் தேடலா - தெரிவா கடவுள்..?
  20. கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?
  21. கடவுளை விமர்சிக்கும் ஓர் அறிவாளி?
  22. இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?
  23. கி.மு வில் கடவுள்!
  24. நாத்திகம் விரும்பும் இஸ்லாம்..!..?
  25. #கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!



                                     (நாத்திகர் மறுக்கும் இறைவன் நாடினால் இனியும் தொடரும்)

read more "ஓர் அழைப்பு!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்