"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, September 14, 2012

#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!

                                           ஓரிறையின் நற்பெயரால்

 உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது. 

உலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

அப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே "கடவுள்" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.

தொடர்வோம்...

 கடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திகளோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை. 

 இன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும்? வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக, 

ஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.

சரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆதார நிருபணம்...?

மனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது. 

அதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம்.  ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது. 

இதை இன்னும் எளிதாக விளக்கிட... 
நல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை. 

அதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும்? அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்?

வெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....
இன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து அப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க?



Good Question! But...
அறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று. 

இனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்

ஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது? 
மனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது?
மனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.? 

இன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். 

அதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.  

இப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே... 

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும்! அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்... 

ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்

மேலும் தொடர்புடைய ஆக்கங்கள்:
பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
read more "#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்! "

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்