"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."
Showing posts with label முரண்பாடு. Show all posts
Showing posts with label முரண்பாடு. Show all posts

Saturday, November 23, 2013

கடவுளின் நிறம்?!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி..! 

  • பறப்பதாகட்டும்
  • மிதப்பாதகட்டும்
  • நடப்பதாகட்டும்
  • பாசத்தை பொழிவதாகட்டும்


கைத்தேர்ந்த ஆசானிடம் கற்ற பாடம் போன்று பிறப்பிலேயே மனிதனல்லா எல்லா உயிர்களும் வாழ்வியல் நடவடிக்கைகள் அனைத்திலும் தெளிவான மற்றும் பாதுக்காப்பான கட்டமைப்பை வழக்கமாக்கிக்கொண்டிருக்கின்றன. ஆனால் அனைத்தையும் அடக்கி ஆளும் வல்லமைப்பெற்ற மனிதனோ பிறக்கும் போது எல்லாவற்றிலும் கீழாக பூஜ்யம் கூட அறியாதவனாய் பிறக்கிறான்.

மற்ற உயிரினத்தை காட்டிலும் மனித படைப்புக்கு மட்டும் இந்த தலைக்கீழ் மாற்றத்திற்கான காரணம் என்ன? ஏன் அப்படி பிறக்க- அல்லது பிறப்பிக்கப்பட வேண்டும்.? பிறப்பின் அடிப்படையிலேயே மற்ற உயிரினத்திற்கும், மனித படைப்பிற்கும் உள்ள வித்தியாசங்கள் இங்கே நமக்கு தெளிவாய் எதையோ உணர்த்துக்கின்றது. புரிந்துக்கொள்ள முற்படுவதில் தான் நமதறிவில் பிரச்சனை

* * *

மனிதன் உட்பட அனைத்து படைப்பின் நோக்கம் குறித்து ஆராய முற்படும் போது இவ்வுலகில் இரண்டு விதமான கருத்துகள் நிலவுவது நாம் அறிந்ததே. எல்லாவற்றையும் படைத்தது கடவுள் என்று ஆத்திகர்களும், எதையும் படைக்க கடவுள் தேவையில்லை  என்று நாத்திகர்களும் கூறுகின்றனர்.

இங்கே பொது நிலையில் வைத்து விமர்சிக்கப்படுவது கடவுள் என்ற பதமே. படைப்பு நிலை குறித்து பின்னர் பார்ப்போம், கடவுள் என்பது யார் அல்லது என்ன என்பதை இருவருக்கும் பொதுவாக முதலில் வரையறை செய்வோம்,

கடவுள் என்பதனை இவ்வுலகில் இதுவரை எவரும் கண்ணால் கண்டதில்லை. இதுதான் ஆரம்ப மற்றும் பொதுவாக கடவுள் குறித்து எவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட உண்மை. இதை அடிப்படையாக வைத்து கடவுள் இல்லையென்பதை ஒருவர் முடிவு செய்யலாம். ஆனால் அப்படி முடிவு செய்வதாக இருந்தால் ஒரு பொது நிலை உடன்பாட்டிற்கு அவர் வந்தாக வேண்டும். அதாவது,

# புலன்களுக்கு அகப்படாமை
# இப்பிரஞ்சத்தில் காணக்கிடைக்காமை
# நம்புவதற்கான காரண - காரியங்கள் இல்லாமை

இப்பிரஞ்ச முழுக்க தேடினாலும் கடவுள் கண்ணுக்கு தெரிவதில்லை. கடவுளின் இருப்பும் நிருப்பிக்கப் படவில்லை. உறுதி செய்யப்படாத ஒன்றை நம்பவேண்டும் என்ற அவசியமுமில்லை என கடவுளை மறுக்க ஆய்வுகளை துணைக்கழைக்கும் நாத்திகர்கள் அதே அளவுகோலை தான் ஏற்பதாக சொல்லும் அறிவியலுக்கு கொடுப்பதில்லை..

ஏனெனில் காரண காரியங்களின் வெளிப்பாடே அறிவியல். அந்த அறிவியலின் உறுதிப்பாட்டிலே பெரும்பான்மை விசயங்கள் ஏற்கவோ, மறுக்கவோ படுகிறது.

 பொதுவில் இல்லாத, கண்ணுக்கு தென்படாத ஒன்றை நம்ப தேவையில்லையென சொல்லும் அறிவியல் கடவுளின் இல்லாமை குறித்து எந்த பிரகடனத்தையும் தெளிவாக முன்மொழியவில்லை. அப்படியிருக்க

1. கடவுள் என்றால் கண்களுக்கு தெரியும்படியாக இருக்க வேண்டும் என்றோ
2. இப்பிரபஞ்சக்கூட்டுக்குள் இருந்தாக வேண்டும் என்றோ

எந்த ஆதாரத்தை அடிப்படையாக வைத்து நாத்திகர்கள் இந்த கேள்விகளை எழுப்புகின்றனர்.? அறிவியல் ஒன்றை இல்லையென்று சொன்னால் அது பார்க்கும் வடிவில் இருந்தாக வேண்டிய பொருள் என்பது பொதுவில் நிருபணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதே அதன் எதிர் நிலையே பொய்யென நிருபிக்க முடியும்

கடவுள் என்பது / என்பவர் பார்க்கும் பொருளாக இருந்தாக வேண்டும் என அறிவியல் வரையறை தந்திருந்தால் மட்டுமே இப்பிரபஞ்சத்தில் அதன் இருப்பு இல்லா நிலை பார்த்து, கடவுள் என்பது ஒரு வெற்று நம்பிக்கையென்பதாக பொருள்கொள்ள முடியும்.

கடவுளின் இருப்பை ஆதாரப்பூர்வமான நிருபிக்க அறிவியல் எங்கும் வரையறை தந்திடா பொழுது கடவுள் என்பது /என்பவர் காணும் வடிவில் இருந்தாக வேண்டும் என்ற அறிவை நாத்திகர்களுக்கு யார் கொடுத்தது..?

ஆய்வு ரீதியாக கடவுளை மறுக்க வழியில்லை எனும் போது தம் சாத்தியக்கூற்றை மெய்ப்பிக்க எதிர் நிலையே தான் கையாள வேண்டும். அதாவது, கடவுள் பெயரால் முன்னிருத்தப்படும் எல்லாவற்றிற்கும் உரிய பதிலை அறிவுப்பூர்வமாகவும், ஆதாரப்பூர்வமாகவும் நாத்திகம் வளர்க்கும் அறிவியல் கொண்டிருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, இந்த மேஜையையும் அதன் மீது ஒரு பேனாவையும் வைத்தது நான் என்கிறேன். அதை மறுக்கும் நீங்கள் என்னை பொய்ப்படுத்த வேண்டுமென்றால் எனக்கு எதிரான நிருபணம் தந்தாக வேண்டும். அந்த மேஜை மற்றும் பேனாவை வைத்தது நான் இல்லையென்று நீங்கள் சொன்னால் சாத்தியக்கூற்றில் ஐம்பது சதவீகிதத்தை மட்டுமே நீங்கள் நிறைவு செய்து இருக்கீறிர்கள்.

பதிலின் இரண்டாம் பாதியாய் அதனை அங்கே வைத்தது யாரென சொல்லியாக வேண்டும். அப்போதே பதில் முழுமையுறும். மேஜையும், பேனாவும் உங்கள் முன் இருப்பது மட்டும் நிஜம், திடீரென மேஜை தோன்றி அதில் நேர்த்தியாக பேனாவும் வைக்கப்பட்டிருக்கிறது என யாரேனும் சொல்வாரானால்... என்னை பொய்ப்பிக்க அல்ல, என் கேள்வியை உள்வாங்கும் அடிப்படை தகுதி கூட உங்களிடம் இல்லையென தான் சொல்லுவேன்.

இப்படியான உதாரணம் தான் இன்று உண்மைப்படுத்தப்படுகிறது. ஆம்! இப்பிரபஞ்சத்தை, அதில் உள்ள அனைத்தையும் படைத்தது கடவுள் என்று கூறினால் அதை மறுக்கும் நாத்திகக்கூட்டம், எதையும் படைக்க கடவுள் தேவயில்லையென என பதில் கூறுகிறது,

நேர்த்தியாக படைக்கப்பட்டதற்கு காரணம் கேட்டால் அங்கே அறிவுப்பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் பதில் பதிவு செய்யப்படுவதில்லை. திடிரென இயற்கை ஏற்படுத்தியாக சில அறிவார்ந்த(?) பதிலும் அங்கே சொல்லப்படுவதுண்டு. எதற்காக கடவுளை மறுப்பதாக சொல்கிறார்களோ அதே காரணத்தை அறிவியலாக்க முயல்வது தான் நாத்திகர்களின் தெளிவான முரண்பாடு!






கடவுளின் இருப்பை பொய்ப்பிக்க வேண்டுமானால்.. உலக படைப்பின் துவக்கம் முதல் இன்று வரையிலும் இப்பிரபஞ்ச பெருவெளியில் நிகழும் அனைத்து இயக்கங்களுக்கும் காரணங்களையும், அவசியங்களையும், ஆதாரத்தோடு அறிவியல் கையில் வைத்திருக்க வேண்டும். ஆனால் இன்றைய பல கேள்விகளுக்கு அறிவியலிடமும், அதை கடவுளாக்க முயற்சிக்கும் அறிவிலிகளிடமும் பதில் இல்லை

கேள்விகள் விரிந்துக்கொண்டே தான் இருக்கின்றன இப்படி., 

சூரியன், விண்மீன் (Galaxy) மண்டலத்தை 225 (~) மில்லியன் ஆண்டுகளுக்கு ஒரு முறையும், அந்த விண்மீன் மண்டலம் அண்ட மையத்தை 550km/s என்ற வேகத்திலும் சுற்றிவருகிறது, ஆனால் அந்த அண்ட மையம் எதை மையமாக  வைத்து சுற்றுகிறது- பதில் வரா கேள்வி?

பூமியும், பிற கோள்களும் அதனதன் ஈர்ப்பு விசையில் தனக்கான பாதைகளை அமைத்துக்கொண்டு மிக நேர்த்தியாக சுற்றி வருகிறதே அந்த எல்லைக்கோடுகளை உருவாக்கியது எந்த அறிவியல்?

சூரியனிடமிருந்து தீங்கு விளைவிக்கும் வகையில் வெளியாகும் புற ஊதா கதிர்களை (UV - Ultra Violet ) தடுத்து நிறுத்தும் கேடயமாக பூமியின் ஓசோன் படலம் இருக்கிறது. ஓசோன் மட்டுமில்லையென்றால் இப்புவியில் எந்த உயிரினமும் உயிர்வாழ முடியாது. உயிர்களின் பாதுக்காப்பு கவசமான ஓசோன் தேவையான இடைவெளியில் 15 முதல் 45 கி.மி உயரத்தில் மட்டும் வளிமண்டத்தில் ஏற்படுத்தப்பட்டது எப்படி?

சந்திரனில் வெப்பம் அதிகம்,  வியாழனில் 350 மடங்கு ஈர்ப்பு விசை அதிகம். இன்னும் சில கிரகங்களில் வெப்பமும் ஈர்ப்பு விசையும் குறைவு, காற்று இல்லை, தண்ணீர் இல்லை இப்படி உயிர்வாழ எந்த தகுதிகளும் ஏனைய கோள்களில் இல்லா நிலையில் பூமியை மட்டும் உயிர் வாழ உகந்த அளவில் தயார் படுத்தியது யார்?

இன்னும் சொல்லப்போனால் இறந்த காலத்திற்கு கூட  இவர்களிடம் தெளிவான சான்று இல்லை. உலகப்படைப்பின் ஆரம்பமான பெருவெடிப்புக்கொள்கை எப்படி ஏற்பட்டது? என விவரித்து சொல்லும் அறிவியல் ஏன் ஏற்பட வேண்டும்? என்ற ஒற்றை கேள்வியில் தன் இயலாமையை இவ்வுலகத்திற்கு வெளிப்படுத்திக்கொண்டு தான் இன்னும் இருக்கிறது.

இந்த கேள்விகள் பரிணாமம் வரையிலும் தொடரத்தான் செய்கிறது. எந்த உயிரினத்தை எடுத்துக்கொண்டாலும் ஒன்று மற்றொன்றிலிருந்து வேறுப்பட்டு பற்பல உடற்கூறுகளையும், சிக்கலான மூலக்கூறுகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இப்படி தொடர்பற்ற உயிரின வரிசைகள் எந்த சூழலில் எதுவாக மாற்றமடைந்ததன?

ஏற்பட்ட உயிரின மாற்றம் குறித்து மட்டுமே விவரிக்கிறார்களே ஒழிய ஏன் ஏற்பட வேண்டும் என்பதற்கு இதுவரை பதிலில்லை. உதாரணமாய், தாவரங்கள் எந்த உயிரின மூலத்திலிருந்து தோன்றியது என்பதற்கோ, அதன் தொடர்ச்சியாக எந்த உயிரினம் பரிணாமம் அடைந்தது என்பதற்கோ எந்த ஆவண- ஆதாரப்பூர்வ சான்றுகளும் பரிணாம ஆதாரவாளர்களால் பதிவு செய்யப்படவில்லை.

எதற்கெடுத்தாலும் அறிவிலை ஆதாரமாக்குவோர் ஒன்றை கவனிக்க வேண்டும். அறிவியல் எதையும் உருவாக்குவதில்லை. மாறாக ஒன்றை கண்டறிந்து மட்டுமே சொல்கிறது. ஆகவே தான் பலக்கோடி உருவாக்கத்திற்கு பதில் இல்லையென்றாலும் அங்கே அறிவியல் முரண்பாட்டை நாத்திகர்கள் கற்பிப்பதில்லை.

ஒரு விசயம் மட்டும் தெளிவு. விடையில்லா கேள்விகள் நாத்திகர்களிடம் முன்னிருத்தப்பட்டால் விரைவில் விடை கண்டுப்பிடிக்கப்படலாம் என எதிர்க்காலத்தின் பக்கம் கை காட்டுகிறார்கள். அல்லது இயற்கை இறந்த காலத்தில் ஏற்படுத்தியதாக சொல்கிறார்கள்.

கடவுளை மறுக்க இதை ஒரு அறிவார்ந்த விளக்கமாக வேறு சொல்கிறார்கள். மொத்தத்தில், கடவுளை மறுக்க எந்த நிருபிக்கப்பட்ட ஆதார சான்றுகளும் இதுவரையிலும் நாத்திகர்களிடம் இல்லை. கடவுள் இல்லையென எதிர்க்காலத்தில் கண்டறிப்படலாம் என எவராவது சொல்வாரானால்..

குட் இது ஏற்றுக்கொள்ளும் வாதம். ஆனால் அதுவரை கடவுள் இல்லையென பொதுவில் எந்த நாத்திகரும் சொல்ல கூடாது!

அடிப்படை அறிவற்ற ஒரு கோட்பாட்டை வைத்துக்கொண்டு சூழலுக்கும், இடத்திற்கும் தகுந்தார்ப்போல் தங்கள் நிறங்களை மாற்றிக்கொண்டே இருக்கும் நாத்திகம் - தவறான புரிதலுடன் கடவுளை மறுக்க முற்படுவது தான் அபத்தமான ஆச்சரியம்!


புரிதலில் உதவி
பிரபஞ்சம்- ஓர் அறிவியல் பார்வை (Book) 


                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்


தொடர்புடைய ஆக்கங்கள் :
கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்.
பரிணாமத்தில் மனிதன்.
read more "கடவுளின் நிறம்?!"

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?"

Friday, November 02, 2012

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!


                                     ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)



இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..! "

Wednesday, June 13, 2012

சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....


ஓரிறையின் நற்பெயரால்

மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)

சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.

  • கருத்துரிமை
  • பேச்சுரிமை
  • அரசியல் உரிமை
  • சமய உரிமை

இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.

இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.

இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...

நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.

சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.

மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...

சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..!


இறுதியாய்
சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...

பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.

மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.

எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க

எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

சிந்தியுங்கள் ...
எது சுதந்திரம்..?
எது முழுமையான சுதந்திரம்..?

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "சுதந்திரம் எனப்படுவது யாதெனில்...."

Tuesday, January 17, 2012

இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?


                                                ஓரிறையின் நற்பெயரால்


 மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவையாக இருப்பினும் அதனைப் பின்பற்றுவோர் அனைவரும் நல்லவர்களாக இல்லையே...? -அப்படியென்றால் மதங்களின் ஊடான கடவுளின் ஆளுமை மக்கள் மீது இல்லையா...? தவறு செய்யும் மதம் சார்ந்த நபர்களை பார்க்கும்போது...

கடவுள் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை அப்படி
கண்டிக்காத கடவுள் நமக்கு ஏன் இருக்க வேண்டும் ?

இப்படி ஒரு பொது நிலை கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது இயல்பே...
பொதுவாக மதங்களை நோக்கி இக்கேள்வி முன்வைக்கப்பட்டாலும் இஸ்லாம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என பார்ப்போம்!

இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு செயலை முன்னிருத்தி அதை எப்படி நன்மையாக மேற்கொள்வது என்ற வழிமுறையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அத்தோடு அச்செயலுக்கு மாறாய் உண்டாகும் எதிர்விளைவையும் விளக்கி அதற்குண்டான பிரதிபலன்களையும் தெளிவாய் மக்கள் முன்னிலையில் பிரகனப்படுத்துகிறது.

ஆக எந்த ஒரு செயலையும் மிக தெளிவாக மனித சமூகத்திற்கு விளக்கி பின்னரே அவற்றை செய்யவோ, தவிர்க்கவோ பணிக்கிறது.


 அவ்வாறு மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் இறைவனின் வழிக்காட்டுதலை மையமாக வைத்து தங்களின் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது.,


 ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்ற வழியும் அச்செயலை செய்வதால் எற்படும் சாதகம் /பாதகம் குறித்த அறிவும் மிக தெளிவாய் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இவற்றை வைத்து எந்த செயலையும் ஏற்று செய்வதாக இருப்பீனும் விட்டு விலகுவதாக இருப்பீனும் கடவுளின் போதனைகளை அடிப்படையாக வைத்து நாம் சிந்தனைரீதியான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆக ஒரு செயலுக்கு முழுமுதற் காரணகர்த்தா கடவுளாயினும் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த முடிவுகள் நமது சிந்தனையிலே விடப்படுவதால் அவற்றிற்கு முழுப்பொறுப்பு நாம் தாம் என்பது தெளிவாகிறது. 

அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல...! (விதி என்ற நிலைப்பாட்டை குறித்து இங்கு சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க) 


அதாவது கடவுளோ....

கொலை செய்யாதே
விபச்சாரம் புரியாதே
வட்டி வாங்காதே
பிறரை ஏமாற்றதே...
ஒழுக்கமாய் இரு... 
 என தம்மை வணங்கி வழிபடும் மக்களுக்கு போதனைகளை வழங்கினால்...

கொலை செய்து
விபச்சாரம் புரிந்து
வட்டி வாங்கி
பிறரை ஏமாற்றி 
ஒழுங்கின்றி அலையும் 
மக்களாக இருந்தால்... அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி கடவுள் பொறுப்பாவார்?

கடவுளோ மேற்கண்டவற்றை செய்யாதே என்று சொல்வதோடு அஃது செய்பவன் முறையாய் இறையை பின்பற்றுபவன் அல்ல என்றே பணிக்கிறார். ஒரு கொள்கையே ஏற்பதென்பது அதனை தமது நடைமுறை வாழ்வில் பின்பற்ற தகுந்த தருணங்கள் அனைத்திலும் செயல்படுத்துவதே.

 அவ்வாறு இருக்கும் போது கடவுளை ஏற்பதாவோ அல்லது அவனது போதனைப்படி வாழ்வதாகவோ இருந்தால் அவனது சொல்லுக்கு மாறு செய்யா வாழ்வை வாழ வேண்டும். ஆனால் தங்களின் சுய நலத்திற்காக கடவுளின் சொல்லை புறக்கணித்து சமூகத்திற்கு தீமை ஏற்படுத்தினால் அவன் கொண்ட கொள்கைக்கே மாற்றமானதாக அவன் நிலை இருக்கும். அதாவது

கடவுளை ஏற்காதவர் எப்படி இறை நம்பிக்கையாளர் என்று அழைக்கப்பட மாட்டானோ அதைப்போல கடவுளை ஏற்று அவனது போதனைகளின் படி வாழ்வை அமைக்காத அல்லது அவனது போதனைகளுக்கு மாறு செய்து வாழ்பவன் எப்படி கடவுளை ஏற்பவன் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியும்.? அவனை ஒரு முழுமைப்பெற்ற இறை நம்பிக்கையாளனாக ஏற்க முடியாது. 

 ஏனையவர்களை விட மதரீதியான குறியீடுகளால் ஒருவன் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும்போது அவன் செய்யும் தவறுகள் திரிபு அடைந்து கடவுளின் நீததன்மையின் மேல் பழிப்போட வழிவகுக்கிகிறது! கடவுளின் கூற்றுக்கு மாறு செய்யும் எவரையும் கடவுளை பின்பற்றுவோராக இனியும் இச்சமூகத்தில் முன்மொழியக்கூடாது மாறாக இறைச் சொல்லுக்கு மாறுசெய்வோர் இறை நிராகரிப்பாளர் என்றே அடையாளப்படுத்தப்படவேண்டும்!

அப்படினா.... கடவுள் இவ்வாறு கொலை, கொள்ளை &Etc தவறுகள் செய்யும் மனிதர்களை ஏன் ஒண்ணும் செய்வதில்லை....? 

 நல்ல கேள்வி!

 இதற்கு இஸ்லாம் கூறும் இறை வழிக் கோட்பாடுகள் என்ன பதில் வைத்திருக்கிறது என முதலில் பார்க்கவேண்டும். பின்னே நமது நிலைப்பாட்டை அதில் பொருத்த வேண்டும். ஆனால் இக்கேள்வியே கேட்கும் பலரும்.. அதற்கான பதிலை தாங்களே வைத்திப்பதுப்போல...

 நானே இவ்வளவு நாள் கடவுளை கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னையே ஒண்ணும் செய்யவில்லையே உங்கள் கடவுள்...?


  மனிதனின் சுய நிலை எண்ணங்களின் வாயிலாக ஒரு செயலின் முடிவை தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதால்  அவசரத்திலோ, ஆத்திரத்திலோ தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள் உடனுக்குடன் அவர்களுக்கு தண்டனை வழங்கினால் பின்னாளில் அவர்களின் தவறுகளுக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்காது.

மேலும் மக்களில் சிலர் வேண்டுமென்ற தவறுகள் செய்த போதிலும் அவர்களுக்கும் சிறு அவகாசம் கொடுக்கப்படுதற்காகவே காலம் தாழ்த்தப்படுகிறது. இதை தன் மறையில் இறைவன்

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். ((16:61))

என தெளிவாக பிரகனப்படுத்துகிறான். மாறாக உடனே தண்டிக்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லையென்றாகி விடாது. ஏனெனில் மனித தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டும் தான் கடவுள் இருப்பது உண்மையென்றால் அதற்கு பகரமாக தவறுகள் செய்யா நிலையிலேயே மனிதர்களை இயல்பாகவே கடவுள் படைத்திருக்கலாம். அதுவும் அனைவரையும் முஸ்லிம்களாகவே!

இறைவனை வணங்கி குற்றமிழைக்காத மக்கள் மட்டுமே இப்பூவியில் இருப்பர். அப்படி நன்மை செய்பவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தீமையை தவீர்த்து வாழ சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

 தீமையும் -நன்மையும் கலந்த வாழ்வில் தனக்கு பாதகமாக இருப்பீனும் அத்தகைய சூழ்நிலையிலும் நன்மையே மட்டுமே மேற்கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானா என சோதிக்கப்படுவதற்கே இவ்வுலக வாழ்க்கை!

                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?"

Thursday, December 08, 2011

கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?


                                   ஓரிறையின் நற்பெயரால்

     ஒவ்வொரு மனிதனும் நன்மைக்கும் - தீமைக்கும் இடைப்பட்ட நிலையை பகுத்தறிந்து வாழ்வதே இவ்வுலக வாழ்வின் பொதுவான நியதி! கடவுளை ஏற்றாலும்- மறுத்தாலும் நன்மையை செய்து தீமையை விலக்கி வாழ்வதே பெரும்பாலான மக்களின் செயலாக இருக்கிறது.

   கடவுளின் பெயர் முன்னிருத்தப்படாமலும் மக்களால் நன்மை- தீமை என்ற இரு பண்புகளையும் பிரித்தறிந்து பேண முடியும் என்றாலும் அது எல்லா சூழ்நிலைகளிலும் முடியுமா ? என்பதே இவ்வாக்கம் முன்னிருத்தும் கேள்விகள்

முதலில் நன்மையை எடுத்துக்கொள்வோம். 

   எந்த வித எதிர்ப்பார்ப்புமின்றி சொல், செயல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒருவருக்கு நம்மால் பயன்பாடு ஏற்படுத்துவதே நன்மை என்பதன் பொருள்!

  ஏதோ ஒரு வகையில் நமக்கு பயன் கிட்டினால் மட்டுமே அதற்கான செய்கைகளை நம்மால் இயல்பாகவே தொடர்ந்து செய்ய முடியும். ஆனால் பிரதிபலனற்ற ஒரு செயலை நாம் மேற்கொள்வதால் எந்த நன்மையும் நமக்கு ஏற்பட போவதில்லை. அப்படியிருக்கும் போது தர்க்கரீதியாக யோசித்தால் அச்செயலை செய்யவேண்டும் என்ற அவசியமே இல்லை..
அப்புறம் ஏங்க நன்மை செய்து வாழ வேண்டும்?
 இருங்க., இன்னும் டீப்பாக போகலாம்

  நமது குடும்பத்திலுள்ளவர்களுக்கு அல்லது உறவினர்களுக்கு நன்மை செய்வதால் அவர்கள் மத்தியில் நமக்கான அந்தஸ்து உயர வாய்ப்பிருக்கிறது. அத்தோடு அவர்மேல் கொண்ட அன்பால் மன திருப்தியும் கிடைக்கிறது.

    அதைப்போல் நம் பழக்க சூழலில் அறியப்பட்டவராக இருப்பவருக்கு நன்மை செய்வதால் அவர் நம் கொடை தன்மையின் புகழை பிறர் மத்தியில் பரவ செய்யலாம் - இப்படி இரு வழிகளில் உண்டாகும் நன்மையின் விளைவு நமக்கு மன திருப்தியையும் - சமூக அந்தஸ்தையும் ஏற்படுத்தும். அதன் ஊடாக பொதுப்படையாக மற்றும், உளவியல் பயன்பாடு ஏற்படுகிறது.

     ஆனால் நம்மை யாரென்ற அறியாத பிறருக்கு அல்லது யாருக்கும் தெரியாத வகையில் அல்லது நேரடி தொடர்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் நன்மைகளால் சமூக ரீதியான எந்த ஒரு பயனும் நமக்கு ஏற்படாது. சரி மன திருப்தியாவது கிடைக்குமா என்றாலும் அதுக்கும் சான்ஸ் இல்லை..

 ஏன்னா நமது செயலுக்கு பிறரால் அங்கீகாரம் அளிக்கப்படும் நிலையில் மட்டுமே மன திருப்தியை முழுவதும் நாம் அடைந்துக்கொள்ள முடியும். ஆனால் மேற்கண்ட நிலையில் அதற்கான தன்மைகள் ஏற்பட வாய்ப்பில்லை.

 சிரமப்பட்டு ,உண்மையாக சம்பாதித்த பொருளாதாரத்தை பிறருக்கு எந்த வித பிரதிபலனும் இன்றி அளிப்பதால் அத்தகைய சூழலில் நாம் பெறும் வாழ்வியல் பயன்பாடு ஒன்றுமில்லை.

நூறு சதவீகித நன்மைகள் செய்து வாழ்வதென்பது கடவுளை ஏற்காத வாழ்வில் சாத்தியமில்லை! என்பதைவிட பிரதிபலனற்ற நன்மைகளை செய்ய மனம் இயல்பாகவே அவ்விடத்தில் பணிக்காது என்பதே உண்மை.

அப்போ கடவுளை ஏற்பவர்களால் மட்டும் தான் நூறு சதவீகிதம் நன்மையை செய்ய முடியுமா..?
 இல்லை... ஆனால் நன்மை செய்வதற்கான அதிகபட்ச வாய்ப்பு கடவுளை மறுப்பவர்களை விட ஏற்பவர்களுக்கே இருக்கிறது. ஏனெனில் மேற்கண்ட நிலையில் செய்யும் நன்மைகளுக்கு சமூகமத்தியில் பலன்கிட்டா விட்டாலும் இறைவனிடத்தில் அதற்கான பிரதிப்பலன் உண்டு என்ற எண்ணம் இயல்பாகவே ஏற்படும்.


சரி தீமைக்கு வருவோம்.


  நன்மை!  அதை செய்யாவிட்டால் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட போவதில்லை. ஆனால் தீமை நிச்சயம் சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்த வல்லது.
  • செல்வந்தர்கள் தம் புகழ் பழிக்கப்பட்டு சமூகத்தில் தனது அந்தஸ்து பாழாக்கப்படும் என்ற எண்ணத்திலும்
  •  ஏழைகள் தனது வறுமையின் காரணமாக பிறருக்கு அஞ்சுவதுமே 
                தீமைகள் செய்வதிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கு தோதுவான காரணிகள். மாறாக கடவுளின் மீதான பயமில்லை .. என "மக்களின் சமூகரீதியான தீமைக்குறைவுக்கு" நாத்திகர்கள் காரணங்கள் சொல்கின்றனர்.
சரி, உடன்படுவோம்.  இவையெல்லாம் அவர்களின் எண்ணங்கள் சீராக ஒரே நேர்க்கோட்டில் இறுதிவரை பயணித்தால் மட்டுமே சாத்தியம்! 

   ஆனால் மனித மனங்கள் இயக்க சூழ்நிலையை மட்டுமே மையமாக கொண்டு செயல்படுவதால் நேரத்திற்கு தகுந்தார்போல் நெகிழ்வுத்தன்மை உடையது. ஆக
செல்வந்தர்கள் தம் புகழின் துணைக்கொண்டு தவறு செய்ய தொடங்கினால் ,  ஏழைகள் தம் செல்வ நிலையை பெருக்க வேண்டும் என தீர்மானித்து எப்படியும் வாழலாம் என முடிவெடுத்தால்...

வெயிட்...
அப்படி அவங்க வாழ்ந்தாலும் சட்டங்கள் போட்டு அவர்களை கட்டுப்படுத்தலாம் ஏன்.. மீறும் மக்களுக்கு தண்டனையும் கொடுக்கலாம் தானே! 

  குட்!. ஆனால் மனித சட்டங்கள் என்பது நூறு சதவீகிதம் முழுமையடையாத ஒன்று. ஏனெனில் ஒரு மனிதரின் அறிவை தாண்டி ஒருவரால் சிந்திக்க முடியாது. அவ்வறிவை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றையும் சரி தவறு என அவரால் இனங்காண முடியும். ஆனால் அவரைக்காட்டிலும் பிறிதொருவரின் அறிவு சற்றுக்கூடுதலாக அங்கே செயல்பட்டால் முன்னவரின் முடிவில் இருக்கும் சரி தவறை மேலும் தெளிவாக வரையறுக்கும்.

   மூன்றாம் நபர் இன்னும் அறிவுமிகுந்தவராக இருப்பின்...  சரி / தவறை அறியும் விகிதம் அதிகரித்துக்கொண்டே போகும். இப்படியாக அதன் நம்பக தன்மை விரிவடைந்துக்கொண்டே இறுதிவரை போகும்.இது எல்லா மனிதர்களுக்கும் எல்லா காலத்திலும் பொருந்தும். இதனடிப்படையில் மனித உருவாக்கச்சட்டங்கள் என்றுமே முழுமை பெறாத ஒன்று!

சரிங்க... கண்டுப்பிடிக்கப்பட்ட குற்றங்களுக்கு தண்டனை கொடுக்க தானே செய்யுறோம் அப்புறம் என்ன...?

 இருக்கலாம்! ஆனா
 குற்றங்களின் நிருபணம் என்பது கண்ட, கேட்ட, பார்த்த சாட்சியங்களை வைத்தும் , அந்நிகழ்வோடு ஓத்துபோகும் பெரும்பான்மை செய்கைகளின் முடிவுகளுமே தண்டனையை தீர்மானிக்கிறது.

 மேற்கண்ட இரு நிலைகளிலும் "அதுவரை" தெரிவுறுத்தப்பட்ட வற்றை மட்டும் வைத்து சரியென ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இவற்றை மையப்படுத்தி மட்டுமே தீர்ப்புகள் வழங்கப்படுவதால் ஒரு நிலையில் குற்றவாளிகள் கூட தப்புவதற்கும்- நல்லவர்கள் தண்டனையுள்ளாவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.

அப்படியில்லாமல் நன்கு விசாரிக்கப்பட்டு உண்மையான குற்றவாளிக்கு தண்டனைகள் வழங்கப்பட்டாலும் அவையும் ஒருவர் மேற்கொண்ட குற்றத்தின் அளவிற்கு அளிக்கமுடியாது

உதாரணமாக ஒருகொலைக்கு பதிலாக குற்றவாளிக்கு தூக்கு தண்டனை தரப்படுவதாக கொள்வோம்.
  ஒரு கொலை செய்வதவனுக்கு ஒரு தூக்கு., மிக சரியான தீர்ப்பு
ஐந்து கொலைகள் செய்த ஒரு குற்றவாளியாக இருப்பீன்... என்ன?  ஐந்து முறை தூக்கா!
          1 :  1
          5 :  1 எப்படி இது நியாயமான தீர்ப்பாகும்...?

அதுவுமில்லாமல் இவையெல்லாம் சட்டத்தின் முன் கொண்டு வரப்படும் மனிதர்களுக்கு தான்!
 சட்டங்களில் சிக்கிக்கொள்ளாமல் மரிக்கும் வரை தீமைகளை செய்து வாழும் மனிதர்களுக்கு... மனித நீதிகளால் என்ன செய்ய முடியும் என்பதே இவ்விடத்தில் கேள்வி? 

தீமை செய்து வாழ்ந்து மனித சட்டங்களில் தப்பி மரணித்தாலும் நாளை கடவுள் முன் நிறுத்தப்படும் போது கண்டிப்பாக அத்தீமைக்கான தண்டனை வழங்கப்படும் என்றால்...

அவை நம்பமுடியாத கற்பனைக்கு உட்பட்ட இறை சட்டங்கள் என எள்ளி நகையாடுவோர் அதற்கான மாற்றுத்தீர்வை இவ்வுலகத்திலே ஏற்படுத்த வேண்டும். ஆனால் அதற்கான ஒரு வாய்ப்பை இயற்கை இதுவரை ஏற்படுத்தவில்லை.. ஏன் உலகம் அழியும் நாள்வரையிலும் ஏற்படுத்தவும் போவதில்லை.

கடவுளின் தலையீடு ஒன்றே அதிகப்பட்சமாக நன்மை செய்வதற்கும் தீமை செய்வதிலிருந்து விலகி இருப்பதற்கும் வழிமுறைகளை ஏற்படுத்த வல்லது
 மறுமையில் வழங்கப்படும் தீர்ப்பை நம்பா விட்டாலும் ,மனித உருவாக்க தீர்ப்புகள் முழுமையற்றவை என்பதை ஏற்றதாக தான் வேண்டும். பொறுத்திருப்போம் என்ன சொல்லுகிறதென நாத்திகம்!

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்


read more "கடவுள் ஏன் இருக்க வேண்டும்....?"

Wednesday, October 12, 2011

கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."

                                 ஓரிறையின் நற்பெயரால்
  • இந்த உலகத்தையும் அதில் உள்ள யாவற்றையும் படைத்தது கடவுளென்றால் அந்த கடவுளை படைத்தது யாரு...? 
      விவாத முடிவில் இறை ஏற்பாளர்களை நோக்கி நாத்திகர்கள் வீசும் இறுதி வார்த்தை ஆயுதம் தான் மேற்சொன்ன வாக்கியம்....
. . .
    விஞ்ஞானத்தை பொருத்தவரை எந்த ஒன்றையும் அதுவரை முடிவுற்ற நிகழ்வுகளின் வெளிபாட்டை அடிப்படையாக வைத்து ஊகங்களில் ஒன்றை உலகுக்கு சொல்லலாம். பின் அதன் நம்பக தன்மையில் குறைவு ஏற்பட்டாலோ அல்லது அவ்வுண்மை திரிபு அடைந்தாலோ பிறிதொரு (புதிய) அறிவியல் தெரிவுகளை மேற்கோளாக காட்டலாம்.
   
ஆனால் இஸ்லாத்தை பொருத்த வரை எந்த ஒன்றை விளக்குவதாக இருந்தாலும் விமர்சிப்பதாக இருந்தாலும் அவை குர்-ஆன் சுன்னாவில் கூறப்பட்ட விதத்திலேயே மேற்கோள் காட்டப்பட வேண்டும். அதனடிப்படையில் இஸ்லாமிய வட்டத்திற்குள்ளாக இருந்தே மேற்கண்ட தலைப்பை அணுகுவோம்.

கடவுளின் பிறப்பு..?
இறை நம்பிக்கையாளர்கள் வணங்கும் கடவுள் என்பவர் சர்வ வல்லமை பெற்றவராக -இணைத்துணை இல்லாதவராக - குறிப்பாய் யாராலும் பெற்றெக்கப்படாதவராக இருக்கவேண்டும் இதை இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் எந்த ஒன்றின் மூலமும் உருவாக்காத அல்லது எந்த ஒரு மூலத்திலிருந்தும் உருவாகதாக ஒன்றாக இருக்கவேண்டும்.

     அதாவது உயிரினங்களின் சிந்தையில் உதிக்கும் எண்ணம் கடந்து கடவுள் என்பவர் தோன்றி இருக்கவேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவரை மனித பகுத்தறிவு கடவுளாக அதை / அவரை ஏற்றுக்கொள்ளும். மேலும் இந்நிலை மட்டுமே படைப்பினங்களை படைக்கும் நிகரற்ற தனித்தன்மை வாய்ந்த ஒரு படைப்பாளர் என்பவராகவும் அதை /அவரை காட்டும்.

  கடவுளை என்பதை /என்பவரை ஏற்றுக்கொள்ளும் நிலை இப்படியிருக்க படைப்பினங்களுக்கு உரிய செய்கைகளை உயரிய படைப்பாளனோடு எப்படி பொருத்த முடியும். ?

 மேற்கண்ட கேள்விகளை உற்று நோக்கினால்... இக்கேள்வியே நியாயமற்றது என்பதை விட அர்த்தமற்றது என்பது தெளிவாய் புரியும்
 
      கடவுளை படைத்தது என்று ஒன்று இருந்தால் கடவுள் என்பவர் படைப்பாளன் அல்ல மாறாக படைக்கப்பட்டவர் என்ற நிலையை அடைவார். அந்நிலையில் எப்படி படைக்கப்பட்ட ஒன்று கடவுளாக இருக்க முடியும்.? அதுமட்டுமில்லாமல் கடவுளை படைக்கும் அதுவல்லவா "பெரிய"கடவுளாகி விடும். இந்நிலையிலும் மீண்டும் அதேக்கேள்வி இங்கேயும் தொடரத்தான் செய்யும். அந்த பெரிய கடவுளை படைத்தது யார் என்று..?

     ஆரம்பமும் இறுதியுமாக இருக்கும் இயங்கும்,  யாராலும் உருவாக்க முடியாத கடவுள் என்பவரை உருவாக்கியது யார்..? -என்று முரண்பாட்டில் மூழ்கிய ஒரு கேள்வியை முன்னிருத்தினால் எப்படி சரியான பதிலை தர முடியும். ஆக இங்கு சரியான பதில் தரவில்லையென்பதை விட சரியான பதில் தரும் பெறும் வகையில் கேள்வி அமைக்கப்படவில்லையென்பதே சரி..!


கடவுளின் இருப்பு..?


  கடவுளின் இருப்பு -மனித சமூகங்களுக்கு தெரியும் வகையில் அமைய வேண்டும் என்பது நியாயமான சிந்தனையா...? பார்ப்போம்


     ஒரு வாதத்திற்கு , கடவுள் என்பவர் பார்க்கும் பொருளாவோ அல்லது ஏற்கும் கருத்தாகவோ இருந்தால் அவரது இருப்பு எல்லோருக்கும் தென்படும் ஆக நமக்கிடையில் தெளிவாக தெரியும் அப்பொருள் அல்லது அந்த செய்கையை எத்தனைப்பேர் நம்மில் கடவுளாக ஏற்றுக்கொள்வார்கள்? ஒருவர் கூட கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

     ஏனெனில் நமக்கு தென்படும் ஒன்றின் இருப்பை கண்டிப்பாக வரையறை செய்ய முடியும். ஆக வரையறை செய்ய முடிந்த ஒன்றை கடவுளாக ஏற்றுக்கொண்டால் அதை சர்வ சக்தி பெற்றதாக எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ஆக வரையறை செய்ய முடியாத ஒரு உயரிய சக்தி மட்டுமே கடவுளாக இருக்க முடியும் என்பது பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் வாதம்.

மேலும் மனிதனால் இறைவனின் இருப்பை அறிந்துக்கொள்ள முடியாதென்பதை தர்க்கரீதியாகவும் விளக்(ங்)கலாம்.

          உதாரணமாக பறவையினங்கள் மற்றும் விலங்கினங்கள் குறித்த முழு செய்கையும் மனிதன் தெளிவாக வரையறுத்து பதிந்து வைத்திருக்கிறான். எனினும் அவற்றின் ஊண் ,உறக்கம் என எல்லா பண்பியல் நிலைகளையும் ஆராய்ந்து அவற்றின் செயல்பாடுகள் முழுவதையும் துல்லியமாக அறிய குறிப்பிட்ட பறவையாகவோ அல்லது விலங்காகவோ மனிதன் மாற வேண்டிய அவசியமில்லை. ஆய்ந்தறியும் தன்மை மட்டுமே போதுமானது.

  ஆக ஒரு செயல் குறித்த தகவல்களை முழுவதும் திரட்ட மனிதன் அச்செய்கையாக காட்சியளிக்க தேவையில்லை. ஆனால் இதே நிலை ஒப்பிட்டு நிலையில் கீழாக அதே பறவையினம் அல்லது விலங்கினம் மனிதன் குறித்த எல்லா தகவல்களையும் அதே உயிரின வளர்ச்சியிலிருந்து துல்லியமாக பெற முடியாது., மனிதனின் சில செயல்களை சில பறவை மற்றும் விலங்குகள் உணர்ந்தாலும் பொதுவாக எல்லா உயிரினங்களின் சிந்தனையாலும் மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளையும் துல்லியமாக கணிக்க முடியாது.,

  மாறாக கலவியல் ரீதியாக இன்பம் பெறுவதிலும், உணவிட்டலிலும், இன்னபிற தன்னின் சமூகம் சார்ந்த செயல்களில் மட்டுமே அவைகளின் கவனம் இருக்கும் மாறாக மனிதன் கண்டறிந்த முற்போக்கு ரீதியான அறிவியல் கண்டுப்பிடிப்புகளை குறித்து அறிந்திருக்க முடியாது என்பதை விட அதுக்குறித்த சிந்தனை அவைகளுக்கு ஏற்பட வாய்ப்பே இல்லை.,

   மனிதனை விட ஆய்வு ரீதியாவும் அறிவு ரீதியாகவும் சிந்தனை செய்வதில் பலஹீன படைப்பாக அத்தகைய உயிரினங்கள் இருப்பதே இதற்கு காரணம்.

   ஆக இங்கு படைப்பினங்களின் படைப்பு நிலைக்கேற்ப அளவிலேயே சிந்திக்கும் திறனுடன் ஏனைய திறன்களும் வேறுப்படும். ஆக ஐந்தறிவு உயிரினங்களின் சிந்தனையானது, பகுத்தறிவு என்ற ஓரறிவு கூடுதலாக கொண்ட மனித சிந்தனை தாண்டி எப்படி செயல்பட முடியாதோ., அதுப்போல மனித சிந்தனையை மிகைத்து செயல்படும் ஒன்றை மனிதனால் அறிந்துக்கொள்ள முடியாது என்பதும் தெளிவு!

    அதனடிப்படையில்,
  • மனிதன் உட்பட ஏனைய உயிரினங்களின் செயல் திறத்தை முழுவதும் வடிக்கும், 
  •  எந்த ஒன்றின் ஆரம்பம் மற்றும் இறுதி நிலையையும் தீர்மானிக்கும் அறிவுமிக்க மனிதனை விட அளவிட முடியா அளவிற்கு அறிவார்ந்த சிந்தனை திறனையும், 
  • எண்ணிடலங்காத தெரிவுகளையும் உள்ளடக்கிய கடவுள் எனும் ஒட்டுமொத்த உலகின் செய்கைகளை நிர்ணயிக்கும் ஒரு மூலத்தின் இருப்பை மனிதர்கள் சிந்தனையில் உருவான ஆய்வறிவில் கொண்டு வர முயற்சிப்பது எப்படி பொருந்தும்?????
 ஆக கடவுளின் இருப்பை உணர்த்தும் குறீயிடுகள் மனிதனுக்கு அறிமுகமான வகையில் இருக்க அவசியமில்லை என்பதை விட அவனின் இருப்புக்குறித்து அறிய மனிதனுக்கு தகுதி இல்லை என்பதே மிக்க பொருந்தும்., ஆக
எதையும் மறுப்பதற்கல்ல ஏற்பதற்க்கே வேண்டும் பகுத்தறிவு..!


படைப்பினங்களுக்கு முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான்;. அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்துகொள்ள முடியாது.  (02:255)

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்.""

Thursday, September 29, 2011

'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.


                                          ஓரிறையின் நற்பெயரால்
     கடவுளின் இருப்பே தெரியவில்லை. இதில் அவர் கூறும் சொர்க்கம், நரகம் எனும் மறு உலகக் கோட்பாடு இருப்பது உண்மைதானா....?

  அடிப்படை மற்றும் ஆரம்பமாக இன்று வரை நாத்திகர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்... உண்மையாகவே இவை சிந்தனை ரீதியாக உயர்ந்த கேள்விகள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை., கவனிக்க., இவை கேள்விதான் ஒழியே வரையறுக்கப்பட்ட முடிவுகளல்ல
(ஏற்கனவே கடவுள் குறித்த ஆக்கங்கள் இத்தளத்தில் காணக்கிடைப்பதால் மறுமைக்குறித்து இங்கு காண்போம்)
   
   இப்பிரபஞ்சத்தில் செயல்படும் எந்த ஒரு மூலத்தின் செயல்பாடுகளும் இருப்பெரும் தலைப்பின் கீழ் தான் வந்தாக வேண்டும்,


1.கருத்தியல் கோட்பாடு (Ideological theory) 
2.இயங்கியல் கோட்பாடு (Dialectical theory)

   இவற்றின் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்கும் ஒரு செய்கை கருத்தாகவோ அல்லது பொருளாகவோ இவற்றில் ஒரு வாதத்தை மையப்படுத்தி இருக்கவேண்டும். இதைத்தாண்டி மூன்றாம் நிலையில் ஒன்று இருந்தால் அது நம்பிக்கைச்சார்ந்த -விளக்கமுடியாத வெற்று ஊகங்களில் அமைந்ததாக அறிவியல் உலகம் கொள்ளும்.

    இவ்விதிகளே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அளவுகோல்., ஆக, இவற்றை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றின் மூலத்தின் நம்பக தன்மையும் அறிய அதற்குரிய இலக்கணத்தோடு நிருபணமான ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்க வேண்டும். அதன் வடிவிலக்கணம் ஒப்பிடும் அல்லது சோதிக்கும் அவ்வாய்வோடு நேர்கோணத்தில் அமைய பெற்றால் அந்த மூலம் நம்பக தன்மை வாய்ந்தது. அப்படி இல்லாது அவ்வாய்விற்கு நேர் எதிராக முரண்பட்டால் அச்செய்கை பிழையானது அல்லது பொய்யானது என முடிவு செய்யலாம்.
. . .  


  சரி இப்போது பதிவிற்கு செல்வோம்.,
   ஒரு செய்கைக்குறித்து இரு வேறுக்கருத்துக்கள் நிலவினால் அதன் உண்மை நிலையறிய அச்செய்கையின் வரைவிலக்கணத்தோடு மாறுபடும் அக்கருத்துக்களை ஒப்பு நோக்கவேண்டும். பின்பு எந்த கருத்துக்களோடு வரையறை செய்யப்பட்ட அதன் மூலம் பொருந்தி வருகிறதோ அக்கருத்து முன்மொழிவதே உண்மை.

    உதாரணத்திற்கு ஒரு திட அல்லது திரவ பொருளின் இருப்புக்குறித்து இருக்கருத்துக்கள் நிலவினால் இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். இல்லையென வாதிடுவோர் அப்பொருளை தம் கண்ணால் காணவில்லையென்று பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று. ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத ஆனால் கண்ணுக்கு புலப்படக்கூடிய அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .

   ஏனெனில் நாம் எல்லோருக்கும் நன்றாய் தெரியும் எந்த ஒரு திட திரவ பொருளும் கண்களால் பார்த்து அறியக்கூடியதே மேலும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது. ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,

 இச்சோதனை முறையோடு மறுமைக்கோட்பாட்டை ஒப்பு நோக்குவோம்
   ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் மறுமைக்குறித்த கேள்விக்கு மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது. ஆக மறுமை உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,

   ஆனால் பொதுவாக சாத்தியக்கூறுகள் விதிப்படி இல்லை என்பதை விட இருக்கிறது என்பதை நிருபிக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணம் வாயிலாக அறிந்தோம். ஆனால் மறுமைக் கோட்பாட்டின் மூலம் (Origin) அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தால் நிருபிக்க வழியின்றி இச்சோதனையில் மறுமைக்கோட்பாடு முரணான பதிலை தான் தரும்.,அதை மறுக்கும் நாத்திகம் நூறு சதவீகித வெற்றி காணும்.

  ஆனால் அறிவியலோடு ஒப்பு நோக்கி அதை தவறு என்று பொய்பிக்க முதலில் மறுமைக்கோட்பாடின் இலக்கணம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்
 மறுமை எனும் கோட்பாட்டை குறித்து இங்கு நீங்களும் நானும் பேசுகிறோம் என்றால் அதற்கான மூலம் குர்-ஆனிலிருந்தே பெறப்படுகிறது. மாறாக இதுவல்லாத வேறு ஒன்றின் வழியாக அறியப்படவில்லை.

    ஆக மறுமையெனும் மூலத்தின் வரையறையை குர்-ஆன் கூற்றை அடிப்படையாக வைத்தே எதனுடனும் ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் குர்-ஆனோ மறுமையென்பது இப்பேரண்ட விதிகளை தாண்டி உருவாக்ககப்பட்டதாக கூறும் போது இருப்பெரும் (கருத்து அல்லது பொருள் எனும்) பிரிவுகள் கீழ் நிறுத்தி மறுமைக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக எப்படி பொய்பிக்க முடியும்?

   மேலும் எந்த வழிகளிலும் அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் மறுமையை சுட்ட முடியாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் போது மனித உருவாக்க சாதனங்களால் மறுமைக்கோட்பாட்டை சோதித்து அறிய முடியும்? அல்லது சோதித்தல் என்பது எப்படி பொருந்தும்?

  ஆக அறிவியல் ரீதியாக இப்பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யப்படாத மறுமையை உணடு என வாதிடுவோர் அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தர தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபிப்பதாக இருந்தால் நூறு சதவீகித மேற்கண்ட இரு பிரிவுகளை தாண்டி மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும். 
     
   ஆக இங்கு மறுமை உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை. என்பதை விட மறுமை என்ற ஒன்று இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை.

சரி, தர்க்கரீதியாக மறுமையை மறுப்பதால் நாத்திகத்திற்கு பயனுண்டா... என்றால் வழக்கம்ப்போல் அதுவும் இல்லை... 

   இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டை ஏற்பதால் தனி மனித ஒழுக்கமும் பிறர் நலன் பேணுதலுமே இச்சமுகத்திற்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் இறப்பிற்கு பின்னுண்டான வாழ்வில் தமது செய்கை குறித்து வினவப்படுவோம் என்ற இறையச்ச உணர்வே பாவமாக காரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை குறைக்கும்.

    மாறாக தன் மன இச்சைகளை பின்பற்றி தான் எடுக்கும் முடிவுகளின் படி வாழ்வை மேற்கொள்வதால் எல்லா தருணங்களிலும் நூறு சதவீகித நன்மையான மற்றும் பிறருக்கு தீங்கு தராத முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது.,-


சரி இப்போது முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு சோதனைக்கு தயாராவோம்..!

இவ்வுலகில் இறப்பிற்கு பிறகு ஒரு மறுமை வாழ்வு என்றொன்று இல்லை., நாம் அனைவரும் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடுவோம் என வைத்துக்கொள்வோம். 


  இதனால் கடவுளை ஏற்றவர்- நிராகரித்தவர் அடையும் பயன்பாடு என்ன என்பதையும் காண்போம்.

      சராசரியாக மனிதர்களின் ஆயூட்காலம் அறுபது என வைத்து இரு தரப்பினரின் வாழ்வியல் நிலைக்குறித்த கணக்கீட்டை காண்போம்

   கடவுள் இல்லையென்று எண்ணத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு செய்யவேண்டிய செயல்ரீதியான வழிப்பாடு பணிகளையும் செய்யாமல் தம் வாழ்வின் எல்லா தருணங்களையும் கழித்து கடவுளுக்காக எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் சிரமமின்றி வாழ்ந்ததால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை.,

  அறுபது வருட வாழ்வு முழுவதும் இலாபம்

  • ஆக அவர் வாழ்வின் பெற்ற இழப்பு =        0 %
  • மாறாக பெற்ற வாழ்வியல் பயன்பாடு = 100 %

      மாறாக கடவுள் உண்டு என நம்பி அவனுக்காக வணங்குதல் மற்றும் இதர கடமைகளை மேற்கொண்டவரின் வாழ்வியல் பயன் மற்றும் இழப்பை கணக்கிட்டால்.,
 பொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும் அஃது இது உணர்வுரீதியான கணக்கீட்டில் வருமே தவிர செயல்ரீதியான கணக்கீட்டில் சேராது ஆக செயல்ரீதியாக தொழுகை, நோன்பு , ஹஜ் போன்றவற்றிற்காக ஒரு இறை ஏற்பாளன் அடைந்த இழப்பை காண்போம்

முதலில் தொழுகை
  ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஐந்து நேர தொழுகைக்காக சராசரியாக பதினைந்து நிமிடங்களை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் எனில் அவர் ஒரு நாளைக்கு எழுபத்தைந்து நிமிடங்களை இறைவனுக்காக செலவழிக்கிறார். அதாவது
5 x 15 = 75 
ஒரு நாளைய எழுபந்தைந்து நிமிடத்தை ஆண்டிற்கான எண்ணிக்கைக்கு உட்படுத்தினால் 
0.000142694  ஒரு ஆண்டிற்கு வரும்
இதை அவரது ஆயுள் சராசரியோடு சமன்படுத்தினால் 
0.000142694  X  60 
ஆக வாழ் நாள் முழுவதும் அவர் தொழுகைக்காக செலவழித்த ஆண்டுகள் 
0.00856164 வருடம்

  ஆயுளில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தையை ஒரு சராசரி இறை ஏற்பாளன் தொழுகைக்காக பயன்படுத்துகிறார்.எனினும் குறைந்தபட்சமாக ஆண்டு கணக்கீட்டில் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்.
ஆக தொழுகைக்காக தம் வாழ் நாளில் ஒரு வருடம் செலவழிக்கிறார்


அடுத்து நோன்பு
             ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரமலான் மாதம் முழுவதும் கண்டிப்பாக நோன்பு நேற்பது கடமையாக பணிப்பதால் வருடத்திற்கு ஒரு மாதத்தை நோன்பிற்காக செலவழிக்கிறார். ஆக அவரது ஆயூளின் சராசரியோடு அவர் நோன்பிற்காக செலவழித்த மாத்த்தை கணக்கிட்டால்
1 X 60 = 60 ÷ 12 = 5
ஆக நோன்பிற்காக தம் வாழ் நாளில் ஐந்து வருடம் செலவழிக்கிறார்

இறுதியாக ஹஜ்
          மற்ற இரண்டைப்போல கட்டாய கடமையல்லாமல் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இக்கடமை பணிக்கப்பட்டதாக இருப்பதால் இதற்கான ஒருவர் செலவழிக்கும் காலத்தை அறுதிட்டு கூற முடியாது.காரணம் எல்லோரும் ஹஜ் செய்வதில்லை அதேப்போல ஒருசிலர் ஒன்றிற்கு மேற்பட்டும் ஹஜ் செய்கிறார்கள்.ஆக தோரயமாக எல்லா இறை ஏற்பாளர்களும் வாழ் நாளில் ஒரு முறை ஹஜ் செய்வதாக கொள்வோம்.,

    ஆக இந்த கடமைக்காக ஒருவர் மேற்கொள்ளும் பயணத்திற்காகவும், திரட்டும் நிதிக்காகவும் உடலியல் உழைப்புக்காகவும் சராசரியாக இரண்டு வருடங்களை செலவழிக்கிறார் என கொள்வோம்
ஆக வாழ் நாளில் ஹஜ் எனும் கடமைக்காக இரண்டு வருடங்கள் செலவழிக்கிறார்.

    இதுவே முக்கியமாக மற்றும் முதன்மையாக ஒரு இறை ஏற்பாளன் வாழ் நாளில் செயல்ரீதியாக இறைவனுக்கு செலவிடும் காலங்கள் ஆகும். மேலும் சுன்னதான தொழுகை, நோன்பு மற்றும் இதர உபரியான வணக்கங்களுக்கு மேலும் ஒரு வருடத்தை செலவழிப்பாக வைத்துக்கொள்வோம்
ஆக உபரியான வணங்களுக்காக ஒரு வருடம் செலவழிக்கிறார்.

  • தொழுகைக்காக =                ஒரு வருடம்
  • நோன்பிற்காக =                    5 வருடங்கள்
  • ஹஜ்ஜூக்காக =                      2  வருடங்கள்
  • உபரி வணக்கத்திற்காக =  ஒரு வருடம்


    இது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்
ஆக வாழ் நாளில் இறைவனை வழிப்படுவதற்காக செயல்ரீதியான சிரமத்தின் அடிப்படையில் சராசரியாக ஒன்பது ஆண்டுகளை செலவழிக்கிறார்

  60 : 9 
எனில் இதை
100 % வாழ்வாக கொள்ளும் போது
100 / 60 X 9 = 15


    ஆக ஒரு இறை நிராகரிப்பாளரை விட இறை ஏற்பாளர் இறைப்பணிக்காக தமது மொத்த வாழ்வில் 15 % இழக்கிறார். (ஆக 100-15 = 85 %  வாழ்வியல் இலாபம்)

மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையென்றால்

  • இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = 100 %
  • இறை ஏற்பாளர் அடையும் பயன் =            85 %

. . .  
         சரி., இப்போது மறுமை வாழ்வு உண்மையென்ற கோணத்தில் அணுகுவோம்.


   இறை உண்டென நம்பி அவனை வணங்குவதில் தம் வாழ் நாளில் செயல்ரீதியாக ஓரு பகுதியை கழித்தால் அதற்கு பகரமாக சொர்க்கம் பெறுவார்.
ஆக இறை ஏற்பாளர் அடையும் வாழ்வியல் பயன்பாடு = 100 %

     மாறாக வாழும் காலம் முழுவதும் இறை வழிக்காடுதலின் படி அவனது வழிமுறைகளை பின்பற்றாது இறை நிராகரிப்பாளர் வாழ்ந்ததால் அவருக்கு சொர்க்கம் இல்லை.  சொர்க்கம் மட்டும் இல்லையென்பதோடு மட்டும் வரையறை செய்யப்பட்டிருந்தால்
அவர் வாழ்வியல் பயன்பாடு = 0 சதவீகிதமாக மட்டும் இருக்கும். ஆனால் இறையை வணங்காது வாழ்ந்ததால் நரகம் கிடைக்கும் என்கிறது. ( + >> 0 >> - )
ஆக அவரது வாழ்வியல் பயன்பாடு = -100%


மறுமை வாழ்வு உண்டென்றால்

  • இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = -100 %
  • இறை ஏற்பாளர் அடையும் பயன் =           100 %
. . .  
இவ்விரு நிலைகளின் படி இரு சாராரும் அடைந்த பயன்கள்

மறுமை இல்லை
இறை நிராகரிப்பாளர் = 100 % 
இறை ஏற்பாளர் =            85 %

 மறுமை உண்டு
இறை நிராகரிப்பாளர் =  - 100 % 
இறை ஏற்பாளர் =             100 %

ஆக மறுமை என்ற ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருசாரார் அடையும் பயன்பாடு

இறை மறுப்பாளர்:

     100 + (-100)
  ------------------   = 0  %
         2      

இறை ஏற்பாளர்

85 + 100
--------------    =  92.50 %
     2 

அல்ஹம்துலில்லாஹ்!  அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மறுமைக்கோட்பாடு இறை நம்பிக்கையாளர்களுக்கே சாதகமான நிலையில் அமைந்திருக்கிறது ஆக,

 \
  • அதீத கற்பனையால் , 
  • தவறான புரிந்துணர்வால், 
  • முரண்பாடான அறிவியல் அணுகுமுறையால், 
  • தான் தோன்றித்தனமான விளக்கத்தால், 
  • வீம்பான (பிடி)வாதத்தால், 
  • பொறுப்பற்ற வெறுப்புணர்ச்சியால்

இறைக்குறித்து விமர்சிக்கும் நாத்திக
  "வாழ்வை பூஜ்யமாக்கும் மறுமைக்கோட்பாடு"                
                               என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.,  

குறிப்பு
மேற்கண்ட விளக்கமெல்லாம் இரண்டாம் (நிலைக்)காரணம் தான். 
மறைவான வற்றின் மீதும் நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளின் கீழ் தான் மறுமையை நம்புவது வருகிறது.ஆக மறுமையே ஏற்பதற்கு இதுவே இறை நம்பிக்கையாளர்களுக்கு முதன்மைக்காரணம். 

                                     அல்லாஹ் நன்கு அறிந்தவன்

read more "'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு."

Friday, September 23, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                       ஓரிறையின் நற்பெயரால்.,
           தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???
    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?



அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...?
(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
   
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?
 
ஆக,
     1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
     2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
  நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல,
பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!


சார்ட்டா சொல்லணும்னா...
   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???


இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!"

Tuesday, June 28, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு


                                         ஓரிறையின் நற்பெயரால்

        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 

      குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்.,
      ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,

அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.


  இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,

      ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,

   மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

  • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
  • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.

  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    

         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,


   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம்.
     சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!

    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 


    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.,
   அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு"

Monday, December 27, 2010

பரிணாமத்தில் மனிதன்..?

                                                ஓரிறையின் நற்பெயரால்...
        
    பொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.      
 
      ஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.
   ஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும்.

        எந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,

        சங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்?

உதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்


நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன 

போன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே.,

     ஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் "பறப்பன" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன்? ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது,

      மனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....

இதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு..

     மனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம்.

     அஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்... ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் "வெட்கம்" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்..? பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்கள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.


 ஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை 
வேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி?

    இன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை.

   ஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது... எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது?
  
அத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...?

     ஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு! இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)
                                            
                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "பரிணாமத்தில் மனிதன்..?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்