"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, April 14, 2020

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -5


உள்ளூர் ஊறுகாய் வியாபாரி முதல் உலக வர்த்த மையம் வரை எல்லோரிடமும் பொது வாழ்வில் சமத்துவம் பேண சொல்லும் எவரும், அதை தம் வாழ்வில் கடைப்பிடித்தார்களா என்பது பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 
ஆண்டான்- அடிமை இல்லை. இச்சமூகத்தின் முன் அனைவரும் சமம் என தன்மானத்திற்கு பொதுவில் தனித்துவம் கொடுக்கும் எவரும், தனக்கென சபைகளில் கிடைக்கும் மரியாதையும், புகழையும் ஏனோ நிராகரிக்க மனமில்லாமல் ஏற்றுக்கொள்வதை தான் எங்கும் காண்கிறோம். 


21 ம் நூற்றாண்டின் விளிம்பில் நின்றுக்கொண்டு சமத்துவம் பேசும் நம்மில் சிலர் கூட தம் பேச்சுக்கும், செயலுக்கும் பிறர் மத்தியில் பாராட்டு, புகழ் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற சராசரி மன நிலையில் சிந்திக்கும் போது,

காலில் விழும் கலாச்சாரத்தை இந்த சமூகத்தின் குறியீடாக மாற்றிக்கொண்டிருந்த அறியாமைக்காலம். பகட்டும், பெருமையும் மட்டுமே அன்றைய அரசவையின் பேசுப் பொருள். இருப் பெரும் வல்லரசுகளான ரோமபுரியும்- பாரசீகமும் தன்னை அதில் முதன்மைப்படுத்திடவே முயன்றன. அதற்கான முயற்சிகளும் அங்காங்கே முளைத்தன.

அதே களத்தில்- அரேபிய தீபகற்பத்தில் முழு ஆன்மிக பலத்துடன் ஒரு அரசாட்சியும் வலம் வந்தது. ஆம்! முஹம்மத் (ஸல்) என்ற மனிதக்குல முன்மாதிரியால்...
ஆடம்பரம், ஆணவம், அரியாசனம், அடிமைத்தனம் அற்ற ஆட்சி அது! ஆயிரமாயிரம் சீர்த்திருத்தவாதிகளுக்கும் அண்ணலுக்கும் இங்கு தான் ஒரு இமாலய இடைவெளி...
பொன், பொருளில் மயங்காதவர் கூட புகழ் என வரும் போது தன் இயலாமையை இனம் காட்ட தான் செய்தனர். இறந்த பின்னரும் சிலையாய் நிற்பவர்கள் அதற்கு ஒரு மௌன சாட்சி!.

மா நபி முஹம்மத்திற்கோ எங்கும் சிலை இல்லா நிலை பார்த்து உலகம் வியக்கிறது. காரணம்..? வாழ்வு முழுக்க இரைந்து கிடக்கிறது அதை இன்னும் எளிதாய் விளக்க வரலாற்றின் பக்கத்திற்கு ஓர் வாய்ப்பு கொடுப்போம்.

ஒரு நாள்...
ஒரு நபர்...
அரியணை அற்ற
அந்த அரசரை நோக்கி...

"முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்"
(அஹமத் 12141)

சுயநலமற்ற ஆன்மீகம் தந்து, பொது நலத்தின் அடையாளமாக தம் ஆயுளையே ஈந்து இந்த மனித சமூகத்தில் 'வாழ்நாள் புகழுக்குரியவர்' என பாராட்ட அனைத்து தகுதிகளும் கொண்ட அந்த மாமனிதரிடம் இப்படி சொல்லிய போதும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

அத்தோடு நபி முஹம்மத் முடித்திருந்தால் வரலாறு தம் பக்கத்தை இத்தோடு மூடி இருக்கும். ஆனால் பாருங்கள் பொதுவில் ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், அதை பொதுவிலேயே கண்டிக்கவும் செய்கிறார். மனிதன் தோற்கும் இடங்களில் மனிதத்தை நிலை நாட்டினார்கள்.

என்ன ஒரு நேர்பட பேச்சு.. !
புகழெனும் புழுதி தம்மீது கறையாய் படிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமூகத்தில், புகழின் நிழல் கூட தம் மீது விழ அனுமதிக்கவில்லை தூயவனின் தூதர்...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்

No comments:

Post a Comment

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்