நற்போதனைகளோ, பொன்மொழிகளோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அவை தனி வாழ்வில் பின்பற்ற ஏதுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை சொல்லப்பட்டதன் நோக்கம் நிறையுறும். சமத்துவமும்- சகோதரத்துவமும் மனித வாழ்வில் பிரதிபலிக்க சமூகத்தில் பாடுபட்டவர்கள் பலர். சமத்துவத்தை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ்த்தி காட்டியவர்கள் மத்தியில் முஹம்மத் நபி சாதித்த சகோதரத்துவம் 14 நூற்றாண்டுகள் கடந்தும் சாட்சி பகிர்கின்றன.
அனல் பறக்கும் மணல் கிடக்கும் அரபு பூமியில் குறைஷிக்குல உமரும், கருப்பின அடிமை பிலாலும் சகோதர வீதியில் கைக்கோர்த்து நடக்க சமத்துவ விதை விதைத்தவர். தனிமனித நலனில் அஹமது நபியவர்கள் கொண்ட அக்கறை தனித்துவம் பெற்றது. தன்மானத்திற்கு தனி இடம் கொடுத்த அவர்களின் வாழ்வு பொதுவிலும் பேணப்பட்டது.- பேணப்படவும் வேண்டியது.
இன்று எந்த ஒரு விசயமானாலும் நமக்கும் நம் சுற்றாருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஏனைய மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சில நேரங்களில் சகோதரத்துவம் உடைக்கப்பட்டு சக மனிதனாக கூட அடுத்தவர் மதிக்கப்படுவதில்லை. மாற்றார்களுக்கு மத்தியில் மூன்றாம் தரத்தில் நடத்தப்படும் தருணங்கள் மிக மோசமானவை மட்டுமல்ல அதிகப்படியான மன உளைச்சலையும் ஒருவருக்கு ஏற்படுத்தக்கூடியவை!
"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " என்றார்கள் நபியவர்கள்.
தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பதையும் தாண்டி உளவியல் பூர்வமாய் எத்தனை அழுத்தம் மேற்கண்ட வரிகளில்! பொதுவில் ஒருவரை விட்டு இருவர் ரகசியம் பேசுவது மூன்றாம் நபருக்கு மனதளவில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். இப்படி மனித நுண்ணறிவில் ஏற்படும் பாதிப்பை கூட தவிர்க்க ஒருவர் சொல்வாரென்றால் அவர் வெறும் ஆன்மீகவாதிவாக மட்டும் இருந்திருக்க முடியாது.
ஏனெனில் வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபி (ஸல்) இருந்திருந்தால் வணக்க, வழிபாடுகள் மட்டும் சொல்லி போயிருக்கலாம். ஆனால் ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி, தனிமனித வாழ்வு வரையிலும் மக்கள் மக்களாகவே பார்க்கப்பட வேண்டும் என்ற கோணமே மேற்கண்ட நபிமொழியிலும் வெளிப்படுகிறது.
செயலால் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் எவரும், தம் சொல்லால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பை பெரிதாய் கொள்வதில்லை. மனித எண்ணங்களின் இயலாமையே கூட கவனமாய் கணக்கில் எடுத்துக்கொண்டவர்கள் முஹம்மது ஸல்
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...!
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!