ஆணவமும், அறியாமையும் அரசாட்சி செய்துக்கொண்டிருந்த சமூக சூழல்...
ஏழ்மையும், இயலாமையும் சதா சண்டையிட்டுக்கொண்டிருக்கும் பொல்லா பொருளாதார நிலை...
கோபத்தின் முன்பு பணிவு அம்மணமாய் அலைந்த அறிவற்ற அரசியல் களம்...
சுருங்கச் சொன்னால் மன்னிப்பும், சகிப்புத்தன்மையும் மானுட அகராதியில் தொலைக்கப்பட்டிருந்த கால கட்டம். அது!
அப்படியான ஒரு சூழலில் தான்
இப்படியாய் ஒரு அறிவிப்பு
'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்!
அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.
மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள். இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அங்கும் இவ்வாறே கூறினார்கள்.
முஸ்னத் அபீ யஃலா 6824
இங்கே பேசுவது ஒரு சர்வசாதாரண மனிதர் அல்ல., ஒரு சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி. இஸ்லாமெனும் கட்டி முடிக்கப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவல் புரிய எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. அதுவும் அச்சமூகம் அஃறிணை பொருட்களென எண்ணி அன்னியப்படுத்திய மக்கள் அனைவர் முன்பாகவும்...
இறுதித்தூதரின் வார்த்தைகளில் தான்
எவ்வளவு உறுதி
அந்த வார்த்தைகளை இன்றைய அரசியல் களத்தோடு ஒப்பிடுவது யதார்த்த மீறலாக தான் அமையும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் கூட தம்மீது உறுதிச்செய்யப்பட்ட பழிச்சொல்லுக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து விழா எடுக்கும் காலக்கட்டம் இது. ஆனால் வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியதோடு மட்டுமல்லாமல் நியாயமான காரணங்கள் நிரம்ப இருந்தும் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் உலகிற்காய் கழித்த அந்த மாமனிதர், மக்கள் மன்றத்தின் முன் நின்று தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்..!?
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!