"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, April 14, 2020

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர்!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்து ஹூ
இப்பதிவை படிக்கும் உங்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக

இச்சமூகத்தின் தலைவர்களை ஒருவர் விரும்பினால் அவரது கொள்கைகள், கோட்பாடுகளை பொது வாழ்வில் பின்பற்ற முனைவது யதார்த்தமான ஒன்று!

அதிலும் அத்தலைவர் தமக்கு ரொம்ப பிடித்தவரென்றால் அவரது சில செயல்பாடுகளை தம் தனிப்பட்ட வாழ்வில் கொண்டுவரவும் முயற்சிப்போம். அதுவும் ஒரு குறிப்பிட்ட இடத்திலோ, காலத்திலோ வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே பெரும்பாலும் பொருந்தும்

ஆனால்... எந்த ஒரு தலைவரின் வாழ்வையும் அவரது காலத்தை தாண்டி நூறு சதவீகிதம் பின்பற்ற இவ்வுலகில் எவரும் முயற்சியெடுப்பதும் இல்லை. அதை பெரிதும் விரும்புவதும் இல்லை. இது தான் இந்த உலகியலின் பொது நியதி.

இதிலும் ஒரு தெளிவான விதிவிலக்கு இச்சமூகத்திற்கு உண்டு.
ஆம்! அவர் தாம் முஹம்மது நபி (இறைவன் அவர்களை பொருந்திக்கொள்வானாக)...

பொதுவாக முஸ்லிமல்லாதவர்களுக்கு அவர்கள் குறித்து ஒரு எண்ணம் உண்டு. அரேபியாவில் 1400 வருடங்களுக்கு முன்னர் இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியவர் என்பதே அது... மேலும் அவர் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற எண்ணமும் உண்டு. இவை முற்றிலும் தவறான புரிதலாகும் சகோஸ்...

ஏனெனில் கடவுளை நம்புவோர் நிச்சயம் முஹம்மது நபிக்குறித்து அறிந்துக்கொள்ளல் மிக இன்றியமையாதது. அவரது வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்.. வாய்ப்பிருப்போர் நிச்சயம் சில நேரங்களை ஒதுக்கி படியுங்கள்., நடு நிலையோடு படிக்க தொடங்கினால் முடிவில் ஒன்று, அவர் முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல உலக மாந்தர்களுக்கெல்லாம் தலைவர் என்பதை உணர்ந்துக்கொள்வீர்கள். இரண்டு அந்த மகத்தானவரின் வாழ்வை கண்டு வியப்பீர்கள்..

ஏனெனில் தன்னை இறைவனின் தூதுவராக அரேபிய பாலையில் பிரகடனம் செய்தபோது... தனது நம்பகதன்மையை நிருபிக்க அவர்கள் சொன்ன வார்த்தை "உங்களுக்கு மத்தியில் நான் வாழ்ந்த எனது நாற்பது வருட வாழ்வை பாருங்கள்" என்பதே... எந்த தலைவனாலும் இச்சமூகத்திற்கு மத்தியில் தங்கள் கடந்த கால வரலாற்றை முன்வைத்து தம்மை ஆதாரிக்க சொல்ல முடியாது.

ஆண்டுகள் ஆயிரம் கடந்தாலும் தனிப்பட்ட வாழ்வில் தொடங்கி ஒட்டுமொத்த சமூகமே ஒரு மனிதரை அணுஅணுவாக பின்பற்ற முனைகிறதென்றால், அதுவும் தம் இனம், மொழி, நிறம், காலம் கடந்து தம் சுய விருப்பு வெறுப்புகளை விடுத்து அவரது பேச்சையும், செயலையும் தாங்கி பிடிக்கிறார்களென்றால் அந்த மனிதரின் வாழ்வு எத்தனை எத்தனை தாக்கத்தை தங்கள் மனதில் ஏற்படுத்தி இருக்கிறதென்று நடுநிலை பேணுவோர் அவசியம் ஆராய வேண்டும்.

பெண்ணோ, ஆணோ யாராக இருந்தாலும் தங்கள் கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகளை விட ஏன் தங்கள் உயிரையும் விட அந்த மனிதரை நேசிக்கிறார்களென்றால் அவர் எப்படியானவர் என்பதையும், அவர் இந்த சமூகத்திற்கு சொன்னது என்னவென்பதையும் நீங்கள் ஒரு கணம் யோசிக்க கடமைப்பட்டிருக்கீறிர்கள் சகோஸ்...

உண்மையை அறியும் ஆர்வமும், நன்மையின் பக்கம் விரையும் ஆசையும் உங்களுக்கு உண்மையாகவே இருந்தால் வாழ்வில் ஒருமுறையேனும் அவர்களது வரலாற்றை காய்தல் உவர்த்தலின்றி படித்து பாருங்கள் வியப்பில் உங்கள் விழிகள் உயர்வதை விவரிக்க இயலாது.

அவர்களின் வாழ்வில் மனித படிப்பினைக்கு உகந்த குடும்பவியல்- பொருளியில்- அரசியல் மற்றும் சமுகம் சார்ந்த ஏராள செய்திகள் உண்டு. அதனை நானறிந்த வரையில் எல்லோரும் படித்திட ஏதுவாக சில ஆக்கங்களை கீழே கொடுத்திருக்கின்றேன். படியுங்கள் இறைவனின் நாடினால் தொடர்வோம் .

(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)


உங்கள் சகோதரன்
குலாம்


முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர்!"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -10


Muhammad in Islam - Wikipedia

இன்றும் தலைவர் வர காத்திருக்கும் கூட்டம்,அமர கையசைக்கும் வரை அயராது நிற்கும்;ஆனால் அண்ணலோ தான் வரும்பொழுது தமக்காக எவரும் எழக்கூடாது என அன்றே உரக்கக் சொல்லிய உண்மை தலைவர், உலக தலைவர்.


பள்ளியில் பாடம் பயிலா அந்த உம்மி நபி உலகமெங்கேணும் ஒரு உருவ படத்தை கூட வடித்திட வாய்ப்பளிக்காத வாய்மையாளர். கல்லில் கடவுளை காண்பவன் முட்டாள் என கூறியோர்களையே மறைவுக்கு பின் கல்லாய் சமைத்து, அவர்களுக்கு மாலைகளும்,அணிகலங்களும் வித்திடும் இன்றைய உலகம் கடவுள் ஒருவனே என ஒரிறைக் கொள்கையே ஓங்கி எழ செய்த அந்த முழு மனிதருக்கு இன்றவும் எங்கும் சிலையில்லா நிலை பார்த்து வியக்கிறது.

மக்கமா நகரத்தின் அரசரான அந்த இறுதித்தூது விட்டுச்சென்ற மொத்த சொத்தின் மதிப்பு கேளுங்கள்...

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் மரணத்தின்போது திர்ஹமையோ, தீனாரையோ, (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ) அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, வேறு எதையுமோ விட்டுச் செல்லவில்லை. தம் வெள்ளைக் கோவேறுக் கழுதையையும், தம் ஆயுதங்களையும், தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.

-அறிவிப்பவர், அன்னை ஜூவைரிய்யா பின்த்து ஹாரிஸ்(ரலி)
புகாரி| ஹதீஸ் எண்: 2739

ஆன்மீகம், அரசியல் என இரு பலம் கொண்ட சாம்ராஜ்யத்தின் தலைவர் ஒருவரின் இறுதி சொத்துக்கள் தான் இவை என்றால் நடு நிலையாளர்களுக்கு வியப்பை தவிர வேறு எதை ஏற்படுத்தும்? அவர்களது தூய வாழ்வு...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -10"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -9


Muhammad Sallallahu Alaihi Wasallam Calligraphy - Clip Art Library

"உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!”

வைரம் பதிக்கப்பட்ட ஏட்டில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய மேற்கண்ட வார்த்தைகளை இங்கே முன்மொழிந்தது 21ம் நூற்றாண்டில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் ஒரு முற்போக்கு சிந்தனையாரளோ, பெண்ணியம் குறித்து பெருமை பேசும் சமூக ஆர்வலரோ அல்லர்.


தம்மை தவிர மற்ற மனிதர்களை மாக்களாக கருதிக்கொண்டிருந்த மக்கள் மத்தியில், வாழ்ந்த ஒரு மனிதர் சொல்லி இருக்கிறார் என்றால் நம்மால் ஆச்சரியத்தின் விளிம்பிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை...

உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஆனால் பொதுவெளியில் சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே...

இங்கு நபி முஹம்மத் அவர்களோ, ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவியிடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை.

கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!

மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அந்த மாமனிதர்!

தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனித மனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது, வலிமையானது என்பதை நேர்பட சிந்திக்கும் எவராலும் புரிந்துக்கொள்ள முடியும்

எப்பொழுதாவது, தான் சொன்னதை செய்த தலைவர்களுக்கு மத்தியில் எப்பொழுதும் தான் சொன்னதை மட்டுமே செய்து வாழ்ந்தவர்கள் மாநபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்

அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -9"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -8ஆணவமும், அறியாமையும் அரசாட்சி செய்துக்கொண்டிருந்த சமூக சூழல்...
ஏழ்மையும், இயலாமையும் சதா சண்டையிட்டுக்கொண்டிருக்கும் பொல்லா பொருளாதார நிலை...
கோபத்தின் முன்பு பணிவு அம்மணமாய் அலைந்த அறிவற்ற அரசியல் களம்...
சுருங்கச் சொன்னால் மன்னிப்பும், சகிப்புத்தன்மையும் மானுட அகராதியில் தொலைக்கப்பட்டிருந்த கால கட்டம். அது!

Aishah Qadri on Twitter: "Listen #CharlieHebdo My name is Aishah ...அப்படியான ஒரு சூழலில் தான்
இப்படியாய் ஒரு அறிவிப்பு

'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்!

அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள். இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அங்கும் இவ்வாறே கூறினார்கள்.
முஸ்னத் அபீ யஃலா 6824 


இங்கே பேசுவது ஒரு சர்வசாதாரண மனிதர் அல்ல., ஒரு சாம்ராஜியத்தின் சக்கரவர்த்தி. இஸ்லாமெனும் கட்டி முடிக்கப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவல் புரிய எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. அதுவும் அச்சமூகம் அஃறிணை பொருட்களென எண்ணி அன்னியப்படுத்திய மக்கள் அனைவர் முன்பாகவும்...

இறுதித்தூதரின் வார்த்தைகளில் தான்
எவ்வளவு உறுதி

அந்த வார்த்தைகளை இன்றைய அரசியல் களத்தோடு ஒப்பிடுவது யதார்த்த மீறலாக தான் அமையும். மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் கூட தம்மீது உறுதிச்செய்யப்பட்ட பழிச்சொல்லுக்கு போஸ்டர் அடித்து நன்றி தெரிவித்து விழா எடுக்கும் காலக்கட்டம் இது. ஆனால் வாளேந்திய சமுகத்தை வாய்மையால் செதுக்கியதோடு மட்டுமல்லாமல் நியாயமான காரணங்கள் நிரம்ப இருந்தும் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் உலகிற்காய் கழித்த அந்த மாமனிதர், மக்கள் மன்றத்தின் முன் நின்று தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்..!?

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -8"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -7


Islamic Tshirts and accessories, Wear, Flash, Store, Crown, Carry ...

நடந்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தால் கூட அதை அவமானமாக கருதி எங்கே, அடுத்தவர் நம்மை பார்த்து விட போகிறார்கள் என்ற அச்ச உணர்வோடு அடிபட்ட வலிக்கூட அறியாமல் வேகமாக எழுந்து பொதுஜன சமுத்திரத்தில் கலப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறோம் நாம்!


ஆம்! சக மனிதன் நிலை தடுமாறும் தருணங்களை கூட கேலி என்றும், வேடிக்கை என்றும் தான் இச்சமுகத்தின் பொதுப்புத்தி பதிவு செய்து வைத்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ உண்மையாய் உரத்து சொல்லப்பட வேண்டிய விசயங்கள் இந்த சமூகம் காட்டும் தாக்கத்தில் நம் ஆழ் மன அடியிலே மண்டியிட்டு கிடக்கின்றன. பிறர் என்ன எண்ணுவார்களோ என்ற எண்ணத்திலே நாம் சொல்ல மறந்த செய்திகளும், சொல்ல மறுக்கும் செய்திகளும் அனேகம். அந்த போலி எண்ணத்தை சிறையிலிட இந்த வரலாற்று வார்த்தைகள் உதவலாம்.

"ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் 'அப்படியே நில்லுங்கள்' எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள்."
புஹாரி 275, 639 & 640

இது ஒரு சாதரண செயலாக தெரிந்தாலும் உளவியல் ரீதியாய் எவ்வளவு பெரிய பாடம் போலி கெளரவம் பார்ப்பவர்களுக்கு.!
யோசித்து பாருங்கள்., குளிக்கவில்லையென்பது அல்லாஹ்வின் தூதர் தவிர அச்சபையில் யாருக்கும் தெரியாது. அப்படி தொழுதிருந்தாலும் அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பையும் கேட்டிருக்கலாம். அதை விட முக்கிய செய்தி. தம்மை ஈருலக தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் முன்னிலையில் இப்படியான நிலையை வாய்விட்டு சொன்னால் தம்மைக்குறித்து அவர்கள் என்ன எண்ணுவார்களோ என்ற உள்ளுணர்வு கூட அவர்களை அசைத்து விடவில்லை.

உள்ளதையும், உள்ளத்தையும் அறிந்தவன் அல்லாஹ்., அவனது திருப்பொருத்தத்தை தவிர வேறு எதைப்பற்றியும் பொதுவெளியில் கவலைப்படாத மனிதரால் மட்டுமே எல்லா நிலையிலும் இறைவனை சார்ந்து முடிவெடுக்க முடியும். அல்லாஹ்வின் தூதர் தாம் சந்தித்த அனைத்து புள்ளிகளையும் அல்லாஹ்விற்காக மட்டுமே பூரணப்படுத்தினார்கள் என்பதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.

சாதரண மனிதர்கள் தயக்கம் காட்டும் இடங்களும், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டும் இடங்களும் கூட அல்லாஹ்வின் தூதரிடத்தில் அங்கிகாரம் பெற்றன என்பது வரலாறு உணரும் பாடம். உண்மை என்ற பிம்பம் மட்டுமே தம்மீது விழ எக்காலமும் அனுமதித்த அவர்கள் எப்போதும் மனிதத்தின் முன்மாதிரி கண்ணாடியாய் இவ்வுலகத்திற்கு காட்சி தந்தார்கள்.

அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -7"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் - 6


20 Muhammad Calligraphy. on Behance

"ஸாரி ரொம்ப பிஸி...."

இந்த ஏழெழுத்து வார்த்தை - எல்லா பிரச்சனைகளுக்கும் தலைவாசலாக இருப்பதை நம்மில் பலர் அவ்வபோது மறந்து தான் தொலை(க்)கிறோம். பேசவேண்டியவர்களிடம் பேசாமல் இருப்பது, பேச வேண்டியதை அந்நேரத்தில் பேசாமல் இருப்பது. இரண்டுமே ஒருவர் உறவில் விரிசலை ஏற்படுத்த போதுமான ஆயுதம்.


கணவன், மனைவியோடு, மனைவி கணவனோடு, இருவரும் சேர்ந்து பிள்ளைகளோடு பேசுவதற்கு கூட டைம் டேபிள் போட்டு வைத்திருக்கும் காலக்கட்டம். அதிலும் குடும்பத்தோடு சேர்ந்து ஒன்றாய் வெளியே போகவேண்டுமென்றால்... சொல்லவே வேணாம் அது வருடத்திற்கு ஒருமுறை வரும் பண்டிகையாக தான் இருக்கும்.

இப்படி இல்லற வாழ்வில் கூட இடைவெளி விட்டு தான் இயலாமையை நிரப்பிக்கொண்டிருக்கிறோம். அண்டை வீட்டுகாரர் பெயர் கூட அறியாதவர்கள் நம்மில் பலர். அட..! அடுத்த வீட்டின் டோர் எண் கூட நமக்கு தெரிவதில்லை என்பது ஆச்சரியமான வருத்தம். தெருவை கடக்கும் பொழுதுகள் கூட கவனமாய் யாரிடமும் பேசாமல் செல்வதை வழக்கமாக்கி கொண்டிருக்கிறோம். பிஸி என்ற ஒற்றை வார்த்தையில் மகிழ்ச்சியின் பாதியை இழந்துக்கொண்டிருக்கிறோம்

இப்படி மனித உறவுகளை மறந்துக்கொண்டிருப்பதற்கு கூட ரெடிமேடு காரணம் நம்மிடம் ரெடியாக தான் இருக்கிறது.! யாருங்க பிஸி... கொஞ்சம் வரலாற்றை புரட்டி பாருங்க... ...

மதினாவின் மன்னர்!
இறைவனின் இறுதித்தூதர்!!
இருப்பெரும் இன்றியமையாத பொறுப்பு!

மக்களை எப்படி வழி நடத்துவது? இறைவனை எப்போது தியானிப்பது? யோசிக்க மறக்க கூட நேரங்கள் இல்லை அவர்களிடம். கடிகாரம் இல்லா காலத்தே நேரங்களை கடன் வாங்க கூடிய நேரமது. இருப்பீனும் அவரவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகள் அனைத்தையும் நேர்பட செய்தவர் மாநபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம். அவர்களை விடவாக நீங்களும், நானும் பிஸி .?

அந்த மாமனிதர் வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள். (நூல் : புகாரி 6247)
வீதியில் செல்லும் மனிதர்களிடம் நின்று அரை நிமிடம் பேசுவதென்பது கின்னஸில் இடம்பெற செய்யும் காரியம் நம்மைப்பொருத்தவரை. அதிலும் சிறுவர்களுக்கு முந்திக்கொண்டு சலாம் உரைப்பதென்றால்...? இவ்விடத்தில் கேள்விக்குறிகளை மட்டும் தான் அதிகப்படுத்திட முடியும்.

இன்னும் பாருங்கள்., ஒரு சிறு வயது சஹாபி கொடுக்கும் ஸ்டேட்மெண்ட் இது, "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம் 'உனது குருவி என்ன ஆனது?' என்று விசாரிப்பார்கள்." (நூல் : புகாரி 6129)

இரத்த பந்தங்களுக்கு கூட வாரத்திற்கு ஒரு முறை மிஸ்டு கால் கொடுத்து தவணை முறை பாசத்தை இன் கம்மீங் காலில் தான் வழங்கிக்கொண்டிருக்கின்றோம். ஈருலக தலைவர் வீதியில் விளையாடும் சிறுவர்களுக்கு சலாம் உரைக்கிறார், அவர் வளர்க்கும் குருவியின் நிலைக்குறித்து நலம் கேட்கிறார் என்றால்...
யோசித்து பாருங்கள்...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் - 6"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -5


உள்ளூர் ஊறுகாய் வியாபாரி முதல் உலக வர்த்த மையம் வரை எல்லோரிடமும் பொது வாழ்வில் சமத்துவம் பேண சொல்லும் எவரும், அதை தம் வாழ்வில் கடைப்பிடித்தார்களா என்பது பதிவு செய்யப்படாத பக்கங்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. 
ஆண்டான்- அடிமை இல்லை. இச்சமூகத்தின் முன் அனைவரும் சமம் என தன்மானத்திற்கு பொதுவில் தனித்துவம் கொடுக்கும் எவரும், தனக்கென சபைகளில் கிடைக்கும் மரியாதையும், புகழையும் ஏனோ நிராகரிக்க மனமில்லாமல் ஏற்றுக்கொள்வதை தான் எங்கும் காண்கிறோம். 


21 ம் நூற்றாண்டின் விளிம்பில் நின்றுக்கொண்டு சமத்துவம் பேசும் நம்மில் சிலர் கூட தம் பேச்சுக்கும், செயலுக்கும் பிறர் மத்தியில் பாராட்டு, புகழ் என்ற அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற சராசரி மன நிலையில் சிந்திக்கும் போது,

காலில் விழும் கலாச்சாரத்தை இந்த சமூகத்தின் குறியீடாக மாற்றிக்கொண்டிருந்த அறியாமைக்காலம். பகட்டும், பெருமையும் மட்டுமே அன்றைய அரசவையின் பேசுப் பொருள். இருப் பெரும் வல்லரசுகளான ரோமபுரியும்- பாரசீகமும் தன்னை அதில் முதன்மைப்படுத்திடவே முயன்றன. அதற்கான முயற்சிகளும் அங்காங்கே முளைத்தன.

அதே களத்தில்- அரேபிய தீபகற்பத்தில் முழு ஆன்மிக பலத்துடன் ஒரு அரசாட்சியும் வலம் வந்தது. ஆம்! முஹம்மத் (ஸல்) என்ற மனிதக்குல முன்மாதிரியால்...
ஆடம்பரம், ஆணவம், அரியாசனம், அடிமைத்தனம் அற்ற ஆட்சி அது! ஆயிரமாயிரம் சீர்த்திருத்தவாதிகளுக்கும் அண்ணலுக்கும் இங்கு தான் ஒரு இமாலய இடைவெளி...
பொன், பொருளில் மயங்காதவர் கூட புகழ் என வரும் போது தன் இயலாமையை இனம் காட்ட தான் செய்தனர். இறந்த பின்னரும் சிலையாய் நிற்பவர்கள் அதற்கு ஒரு மௌன சாட்சி!.

மா நபி முஹம்மத்திற்கோ எங்கும் சிலை இல்லா நிலை பார்த்து உலகம் வியக்கிறது. காரணம்..? வாழ்வு முழுக்க இரைந்து கிடக்கிறது அதை இன்னும் எளிதாய் விளக்க வரலாற்றின் பக்கத்திற்கு ஓர் வாய்ப்பு கொடுப்போம்.

ஒரு நாள்...
ஒரு நபர்...
அரியணை அற்ற
அந்த அரசரை நோக்கி...

"முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்"
(அஹமத் 12141)

சுயநலமற்ற ஆன்மீகம் தந்து, பொது நலத்தின் அடையாளமாக தம் ஆயுளையே ஈந்து இந்த மனித சமூகத்தில் 'வாழ்நாள் புகழுக்குரியவர்' என பாராட்ட அனைத்து தகுதிகளும் கொண்ட அந்த மாமனிதரிடம் இப்படி சொல்லிய போதும் அதை அவர்கள் ஏற்கவில்லை.

அத்தோடு நபி முஹம்மத் முடித்திருந்தால் வரலாறு தம் பக்கத்தை இத்தோடு மூடி இருக்கும். ஆனால் பாருங்கள் பொதுவில் ஏற்க மறுத்தது மட்டுமல்லாமல், அதை பொதுவிலேயே கண்டிக்கவும் செய்கிறார். மனிதன் தோற்கும் இடங்களில் மனிதத்தை நிலை நாட்டினார்கள்.

என்ன ஒரு நேர்பட பேச்சு.. !
புகழெனும் புழுதி தம்மீது கறையாய் படிய காத்திருக்கும் பெருங்கூட்ட சமூகத்தில், புகழின் நிழல் கூட தம் மீது விழ அனுமதிக்கவில்லை தூயவனின் தூதர்...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -5"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -4


Pin di Kaligrafiler

சாதாரண மனிதனாக வாழ்ந்து மரித்தவனை சில பொழுதுகளிலே இவ்வுலகம் மறப்பதும் உண்டு, தலைவராக இருந்து இறந்தவருக்கு வருடந்தோறும் பிறந்த நாள் காணும் 'பகுத்தறிவு'க்கு ஒவ்வாத செயலையும் கண்டு வியப்பதும் உண்டு.

முரண்பட்ட இரு மரண பின்புலங்களையும் இந்த மனித வர்க்கம் இன்னும் சரிக்கண்டு தான் கொண்டிருக்கிறது. ஏழாம் நூற்றாண்டு இதிலும்  தம் பார்வையை வித்தியாசப்படுத்தி காட்டியது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

உயிருடன் இருக்கும் எவருக்காகவும் எழுந்து நின்று தன் சுய மரியாதையே இழக்ககூடாதென பிரகடனப்படுத்தி முதன்முறையாக மனிதம் என்பதற்கு புது இலக்கணம் வகுத்தது இஸ்லாம். அதை செயல்படுத்தி காட்டியது இறுதித்தூது.

"ஏகத்துவ கொள்கையில்" எந்த சமூகத்துடன் எந்த சமரசமும் செய்திடாத ஏந்தல் நபியவர்கள், எந்த தலைவனாலும் ,எச்சபையானாலும் பிறருக்காக எழவும் இல்லை- தனக்காக எழ சொல்லவும் இல்லை. கொண்ட கொள்கையில் நின்ற பிடிப்பைக்கண்டு சாயம் போன சரித்திர பக்கங்கள் தம் முகத்தில் வர்ண புன்னகை பூசிக்கொண்ட காலம் அது..!

மரியாதை என்பதன் பொதுவிதியை இவ்வுலகிற்கு மீண்டுமொருமுறை மாற்றியமைத்தார்கள். உயிர் வாழும் காலத்தே எவ்வளவு பெரிய தலைவனாக இருந்தாலும் அவனுக்கான துதிப்பாடலை முற்றிலும் தவிர்க்க சொன்ன நபி (ஸல்) மரித்த உயிர் சாமானியனுடையதாக இருந்தாலும் அதற்கு மதிப்பு உண்டென்றார்கள். அதற்கு ஒரு ஆதார நிகழ்வை பாருங்கள்.

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்தோம். 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா' என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: புகாரி 1311, 1313

அல்லாஹ்வை வணங்காதவர்களுக்கு ஈடேற்றம் இல்லையென மொழிந்து மாற்று சமயத்தவரின் கொள்கைக்கு நூறு சதவீகிதம் மாறுக்கொண்டாலும் அவர்களது மரணித்த உடல் தம்மை கடக்கும் போது அதற்காக எழ சொல்கிறார்கள்- எழுந்தும் நிற்கிறார்கள். ஒரே ஊரில் அருகருகே வசிப்போருக்கு கூட இரட்டை டம்ளர் முறையிலிருந்து இப்போ இரட்டை சுடுகாடு வரைக்கும் ஏற்படுத்தியாச்சி.. இதுல பிரேதம் வரும் போது எழுந்து நிற்பதென்பது .....


வாழ்ந்த பின் மனிதனை இழக்கிறோம் நாம் - ஆனால் அந்த மாமனிதரோ வாழ்ந்த பின்னும் மனிதத்தை காக்க சொல்கிறார்கள். ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையில் மட்டும் அமைந்திட்ட நிகழ்வு அல்ல அது.

"உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து நில்லுங்கள்"
(அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)’ நூல்: புகாரி 1308
என திண்ணமாக , இந்த மானுட சமூகத்தின் இறுதி மனிதர் இருக்கும் வரை / இறக்கும் வரை அதை செயல்படுத்த பிரகடனமும் படுத்துக்கிறார்கள்...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -4"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -3


Q-ID0019] What was the faith of Sayyidah Halimah whilst nursing ...மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது தொன்றுத்தொட்ட மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் மட்டுமே என்பது வரலாறு பதிவு செய்த பாடம். 


தம் அவையின் சக மனிதர்களை ஒரு போதும் தம் தொண்டர்களாக பாவித்ததில்லை. தோழர்களே என உரிமையோடு அழைத்து பழகியவர்கள் அவர்கள்..
தங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, தனி இருக்கை, பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள்.

ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய முதன்மை பொறுப்பு + இறைவனின் இறைத்தூதர் என்ற இறுதிப்பொறுப்பு ஒருசேர இரண்டும் கொண்ட நபி (ஸல்) அவர்கள் வாழ்வில் ஒரு சம்பவம் பாருங்கள்!

ஒரு நபித்தோழர் குறிப்பிடுகிறார்...
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன்.
மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள்.
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

எதார்த்தங்களை உடைக்கிறது இந்த உலகியல் சம்பவம். தலைவனாக ஒருவன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ரீதியாக விளக்கி அதை பொதுவில் செயல்படுத்தி காட்டுவது கடினமான ஒன்ற நிலையும் மாற்றி தம் முன் வலிய வரும் புகழையும், பெருமையையும் புறமுதுகிட்டு ஓட செய்கிறார்...

அதனால் தான்
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -3"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -2


Muhammad Png & Free Muhammad.png Transparent Images #73594 - PNGio

    நற்போதனைகளோ, பொன்மொழிகளோ யார் வேண்டுமானாலும் சொல்லலாம். அவை தனி வாழ்வில் பின்பற்ற ஏதுவாக இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவை சொல்லப்பட்டதன் நோக்கம் நிறையுறும். சமத்துவமும்- சகோதரத்துவமும் மனித வாழ்வில் பிரதிபலிக்க சமூகத்தில் பாடுபட்டவர்கள் பலர். சமத்துவத்தை நிகழ்காலத்தில் மட்டுமே நிகழ்த்தி காட்டியவர்கள் மத்தியில் முஹம்மத் நபி சாதித்த சகோதரத்துவம் 14 நூற்றாண்டுகள் கடந்தும் சாட்சி பகிர்கின்றன.


    அனல் பறக்கும் மணல் கிடக்கும் அரபு பூமியில் குறைஷிக்குல உமரும், கருப்பின அடிமை பிலாலும் சகோதர வீதியில் கைக்கோர்த்து நடக்க சமத்துவ விதை விதைத்தவர். தனிமனித நலனில் அஹமது நபியவர்கள் கொண்ட அக்கறை தனித்துவம் பெற்றது. தன்மானத்திற்கு தனி இடம் கொடுத்த அவர்களின் வாழ்வு பொதுவிலும் பேணப்பட்டது.- பேணப்படவும் வேண்டியது.


   இன்று எந்த ஒரு விசயமானாலும் நமக்கும் நம் சுற்றாருக்கும் கொடுக்கும் முக்கியத்துவம் ஏனைய மனிதர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. இன்னும் சில நேரங்களில் சகோதரத்துவம் உடைக்கப்பட்டு சக மனிதனாக கூட அடுத்தவர் மதிக்கப்படுவதில்லை. மாற்றார்களுக்கு மத்தியில் மூன்றாம் தரத்தில் நடத்தப்படும் தருணங்கள் மிக மோசமானவை மட்டுமல்ல அதிகப்படியான மன உளைச்சலையும் ஒருவருக்கு ஏற்படுத்தக்கூடியவை!

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " என்றார்கள் நபியவர்கள்.

தனிமனித உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பதையும் தாண்டி உளவியல் பூர்வமாய் எத்தனை அழுத்தம் மேற்கண்ட வரிகளில்! பொதுவில் ஒருவரை விட்டு இருவர் ரகசியம் பேசுவது மூன்றாம் நபருக்கு மனதளவில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். இப்படி மனித நுண்ணறிவில் ஏற்படும் பாதிப்பை கூட தவிர்க்க ஒருவர் சொல்வாரென்றால் அவர் வெறும் ஆன்மீகவாதிவாக மட்டும் இருந்திருக்க முடியாது.

ஏனெனில் வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபி (ஸல்) இருந்திருந்தால் வணக்க, வழிபாடுகள் மட்டும் சொல்லி போயிருக்கலாம். ஆனால் ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி, தனிமனித வாழ்வு வரையிலும் மக்கள் மக்களாகவே பார்க்கப்பட வேண்டும் என்ற கோணமே மேற்கண்ட நபிமொழியிலும் வெளிப்படுகிறது.

செயலால் ஒருவருக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கும் எவரும், தம் சொல்லால் அடுத்தவருக்கு ஏற்படும் பாதிப்பை பெரிதாய் கொள்வதில்லை. மனித எண்ணங்களின் இயலாமையே கூட கவனமாய் கணக்கில் எடுத்துக்கொண்டவர்கள் முஹம்மது ஸல்

அதனால் தான் 
அகிலத்தின் 
அருட்கொடை
அவர்கள்...!


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -2"

முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -1


Vector design Mawlid An Nabi - birthday of the prophet Muhammad. The arabic script means ''the birthday of Muhammed the prophet'' Based on Morocco background. Stock Vector - 90757100  பொய் சொல்லுவியாடா... -ஏதோ போலி காரணம் சொல்லி காலையில் ஸ்கூலுக்கு போக மறுத்த மகனை அடித்து பொய்க்கு எதிரான சீர்திருத்தத்தை தொடங்கும் நாம். அப்பா வீட்டுல இல்லேன்னு சொல்லு கண்ணு... மொபைலில் கடன்காரனிடம் சொல்லப்பணிக்கும் மாலை பொழுகளில் ஏனோ மறக்க தான் செய்கிறோம்...


இன்று பொய் பேசுபவர்கள் யாரும் இல்லை என்பதை விட பொய் பேசாதவர்கள் நம்மில் யாரும் இல்லையென்றே சொல்லலாம். விளையாட்டிற்காகவோ, பிறர் சிரிக்க வேண்டுமென்பதற்காகவே சொல்லும் பொய்யானது இந்த சமூகத்தின் பார்வையில் ஒரு பொழுதுப்போக்காகவே பேசப்படுகிறது. அதைவிட ஆச்சரியமான விசயம் பொய் என்பது ஒரு சமூகத்தீமையாக கூட கணக்கில் எடுத்துக்கொள்ள படுவதில்லை.உணவகங்களில், வர்த்த நிறுவனங்களில், தெருவோர கடைகளில், மக்கள் கூடும் வியாபார தளங்களில் இயல்பாகவே மக்கள் பொய் பேசும் நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதே உண்மை. பொய் பேசுவது என்பது வேலை பெற நமது கூடுதல் தகுதியுடன் இன்று சேர்க்கப்பட்டிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இன்று பலரும் பிறர் மத்தியில் தமது ஹூரோயிஸம் பேசப்பட வேண்டும் என்பதற்காக பொய் பேசுவதை ஒரு ஆயுதமாக வைத்திருக்கிறோம். தீமையென்று உணரமாலே இந்த சமூகத்திற்கு எதிராய் ஒன்றை நாம் செய்துக்கொண்டிருக்கிறோமென்றால் அது 'பொய்'. என்று சொல்வதில் பொய்யில்லை.!

இப்படி தனி மனித ஒழுக்கத்திற்கும், பிறர் நலனுக்கும் கேடுவிளைவிக்கும் இத்தகைய செயலை விட்டொழிக்க தெளிவான எச்சரிக்கையை நபி (ஸல்) அவர்கள் மனிதக்குலம் முழுமைக்கும் மிக கவனமாக பிரகனப்படுத்தினார்கள்.

ஒருமுறை நபித்தோழர்களில் ஒருவர்.,
'நம்பிக்கையாளர் கோழையாக இருக்க இயலுமா?' என நபிகளாரிடம் வினவப்பட்ட போது, அதற்கு 'ஆம்' என்றனர். 'கஞ்சனாக இருக்க இயலுமா?' என்றபோது அதற்கும் 'ஆம்' என்று பதிலளித்தனர். 'பொய்யனாக இருக்க இயலுமா?' என்று கேட்டபோது அதற்கு அவர்கள், 'இல்லை (இருக்க இயலாது)' என்று பதிலளித்தார்கள்.

இறைவனுக்கு இணைவைத்தல் இஸ்லாத்தில் மன்னிக்க முடியாத குற்றமாக இருக்கிறது. அத்தகைய இணை வைத்தல் எனும் முதன்மை பாவப் பட்டியலில் பொய் பேசுவதையும் இணைத்தார்களென்றால் பொய் தவிர்க்க பட வேண்டிய ஒன்று என்பதை, இதை விட ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு எளிதாக அழுத்தமாக புரிய வைத்திட முடியாது.

வாழ்வில் மோட்சம் அடைய இறைவனை வழிப்பட்டால் போதுமானது என ஆன்மிகவாதிகள் உபதேசித்துக்கொண்டிருக்க
இறை நம்பிக்கையாளர் ஒருக்காலும் பொய் சொல்வராக இருக்க முடியாதென்பதை மிக தெளிவாக கோடிட்டு அப்படி பொய் சொல்பவராக இருந்தால் அவரது இறை நம்பிக்கையானது அர்த்தமற்றது என ஆன்மிகத்திற்கு புது இலக்கணம் வகுத்தவர்கள் முஹம்மது ஸல்...

அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...


-இன்ஷா அல்லாஹ் வளரும்
read more "முஹம்மது (ஸல்) எனும் முழுமனிதர் பாகம் -1"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்