
நடந்துக்கொண்டிருக்கும் போது கால் தடுக்கி கீழே விழுந்தால் கூட அதை அவமானமாக கருதி எங்கே, அடுத்தவர் நம்மை பார்த்து விட போகிறார்கள் என்ற அச்ச உணர்வோடு அடிபட்ட வலிக்கூட அறியாமல் வேகமாக எழுந்து பொதுஜன சமுத்திரத்தில் கலப்பதை வழக்கமாக்கி வைத்திருக்கிறோம் நாம்!
ஆம்! சக மனிதன் நிலை தடுமாறும் தருணங்களை கூட கேலி என்றும், வேடிக்கை என்றும் தான் இச்சமுகத்தின் பொதுப்புத்தி பதிவு செய்து வைத்திருக்கிறது. அதனால்தானோ என்னவோ உண்மையாய் உரத்து சொல்லப்பட வேண்டிய விசயங்கள் இந்த சமூகம் காட்டும் தாக்கத்தில் நம் ஆழ் மன அடியிலே மண்டியிட்டு கிடக்கின்றன. பிறர் என்ன எண்ணுவார்களோ என்ற எண்ணத்திலே நாம் சொல்ல மறந்த செய்திகளும், சொல்ல மறுக்கும் செய்திகளும் அனேகம். அந்த போலி எண்ணத்தை சிறையிலிட இந்த வரலாற்று வார்த்தைகள் உதவலாம்.
"ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம் 'அப்படியே நில்லுங்கள்' எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள்."
புஹாரி 275, 639 & 640
இது ஒரு சாதரண செயலாக தெரிந்தாலும் உளவியல் ரீதியாய் எவ்வளவு பெரிய பாடம் போலி கெளரவம் பார்ப்பவர்களுக்கு.!
யோசித்து பாருங்கள்., குளிக்கவில்லையென்பது அல்லாஹ்வின் தூதர் தவிர அச்சபையில் யாருக்கும் தெரியாது. அப்படி தொழுதிருந்தாலும் அதற்காக படைத்தவனிடம் மன்னிப்பையும் கேட்டிருக்கலாம். அதை விட முக்கிய செய்தி. தம்மை ஈருலக தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் முன்னிலையில் இப்படியான நிலையை வாய்விட்டு சொன்னால் தம்மைக்குறித்து அவர்கள் என்ன எண்ணுவார்களோ என்ற உள்ளுணர்வு கூட அவர்களை அசைத்து விடவில்லை.
உள்ளதையும், உள்ளத்தையும் அறிந்தவன் அல்லாஹ்., அவனது திருப்பொருத்தத்தை தவிர வேறு எதைப்பற்றியும் பொதுவெளியில் கவலைப்படாத மனிதரால் மட்டுமே எல்லா நிலையிலும் இறைவனை சார்ந்து முடிவெடுக்க முடியும். அல்லாஹ்வின் தூதர் தாம் சந்தித்த அனைத்து புள்ளிகளையும் அல்லாஹ்விற்காக மட்டுமே பூரணப்படுத்தினார்கள் என்பதற்கு மேற்கண்ட நிகழ்வும் ஒரு எடுத்துக்காட்டு.
சாதரண மனிதர்கள் தயக்கம் காட்டும் இடங்களும், ஆட்சியாளர்கள் அலட்சியம் காட்டும் இடங்களும் கூட அல்லாஹ்வின் தூதரிடத்தில் அங்கிகாரம் பெற்றன என்பது வரலாறு உணரும் பாடம். உண்மை என்ற பிம்பம் மட்டுமே தம்மீது விழ எக்காலமும் அனுமதித்த அவர்கள் எப்போதும் மனிதத்தின் முன்மாதிரி கண்ணாடியாய் இவ்வுலகத்திற்கு காட்சி தந்தார்கள்.
அதனால் தான்
அகிலத்தின்
அருட்கொடை
அவர்கள்...
-இன்ஷா அல்லாஹ் வளரும்
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!