"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, September 20, 2013

வாக்களிப்பட்ட நன்மைகள்..!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...

மனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.

இஸ்லாம் மட்டுமே இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். (5:3) இப்படி முன்மொழிந்தாலும் தம்மை பின்பற்றுதல் குறித்து இரண்டு வாய்ப்புகளை இந்த மனித சமூதாயத்திற்கு வழங்குகிறது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (2:256) ஆக ஒருவர் விரும்பாவிட்டால் இந்த மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கலாம். ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208) என சந்தர்ப்ப வாத காலங்களில் மட்டும் ஒருவன் மார்க்கத்தை பின்பற்றாமல் ல்லா தருணங்களிலும், ஏன் இறுதி வரை தம்மை பின்பற்றியே ஆக வேண்டும் என பணிக்கிறது.

இஸ்லாம் கூறும் விசயங்களில் நூறு சதவீகிதம் உடன்பட்டால் மட்டுமே முழு முஸ்லிமாக ஒருவன் ஆக முடியும் எனும் நிலையில் இஸ்லாத்தின் மீதான கொள்கை உறுதிப்பாட்டில் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அலசவே இக்கட்டுரை.

பொதுவாக மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்திருக்கும் பொழுதுகளில் இஸ்லாத்தின் மீதானப்பிடிப்பு நமக்கு குறைவதில்லை. மாறாக துன்பமோ, இழப்போ நமக்கு ஏற்படுமாயின் இறைவன் மீதான அதிருப்தி இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்லாம் குறித்த போதிய அறிவின்மை. அல்லது பெயரளவிற்கே நாம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம்- இதுதான் ஆச்சரியமான உண்மையும் கூட! இவ்வுலகில் ஒருவர் நல்லவராகவோ தீயவராகவோ இருப்பீனும் இறைவனின் கருணை பொதுவாக உண்டு. அதே நேரத்தில் இஸ்லாத்தை ஒருவர் நன்முறையில் பின்பற்றினால் அவருக்கு நன்மை உண்டு என கூறும் இஸ்லாம் அவருக்கு தீமையை ஏற்படாது என கூறவில்லை.

 ஏனெனில் நமது அமல்களுக்கு தகுந்தார்ப்போல் வெகுமதி இவ்வுலகில் தரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஐவேளை தொழுகிறேன், கடமையான, உபரியான நோன்புகளை நோற்கிறேன். சதாகவும், ஜக்காத்தும் கொடுக்கிறேன். ஹஜ்ஜூம் செய்கிறேன், ஹலால்-ஹராம் பேணுகிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இருந்தாலும் எனக்கு இப்படி ஆகி விட்டதே, வேண்டியது கிடைக்கவில்லையே .. என மனவேதனைக்கு ஆட்பட்டு நமது இழப்பியல் தாரசில் இறைவனின் கருணையை எடை போடுகிறோம்.இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவு தூயவராக இருப்பீனும் இறைவனின் சோதனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதனை மறைமொழி இப்படி இயம்புகிறது.

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? " ( 29 | 2)
சுஃப்ஹானல்லாஹ்..! இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை படிப்பினை.


ஒரு மனிதனின் உறுதிப்பாடு எப்போது குறையுமென்றால் வேதனைகளும்- சோதனைகளும் தொடரும் போதே... ஆனால் ஒரு முஸ்லிம் கொள்கையில் பிடிப்போடு இருந்தால் அவனுக்கான சோதனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் வெற்றியடைய நன்மையான காரியங்கள் செய்தால் மட்டும் போதாது. தீமையான காரியங்களிலிருந்தும் தவீர்ந்திருக்க வேண்டும். நமக்கு எதிராய் சோதனைகள் நிறையும் போதே அதை சரிக்கட்ட தீமையான காரியங்கள் செய்ய இயல்பாகவே மனித மனம் நாடும். அதையும் தாண்டி அவற்றிலிருந்து விலகி நிற்கிறோமா? என்பதை உணர தான் நமது கொள்கையில் உறுதி அவசியம்!

எந்த அளவிற்கு நாம் கொள்கையில் பிடிப்புடன் இருக்கின்றமோ அந்த அளவிற்கே சோதனையின் தாக்கமும் இருக்கும். உதாரணமாக மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. இருந்தும் சைத்தானின் தூண்டுதலால் ஒருவர் குடிப்பாரேயானால் இறை சோதனையில் அவர் அப்போதே தோல்வியை தழுவுகிறார். முதல் கட்டத்திலே தோல்வியை தழுவும் போது அடுத்தக்கட்ட சோதனைக்கு செல்ல அவருக்கு தகுதியும், அவசியமும் இல்லை. மாறாக அதிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் பிறரோடு தொடர்பு, பழக்க வழக்கங்கள், பணம், சொத்து, குடும்பம், வர்த்தகம், சமூகம் இப்படி அடுத்தடுத்த பங்களிப்பில் சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுவார். அனைத்திலும் வெற்றியடையும் போதே இறைவனின் அருட்கொடை அவர் மீது நிரப்பமாய் அருளப்படும்.  

கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலே இறைவனின் அருட்கொடை மூலம்..

இப்ராஹீம் நபியை நெருப்பு கரிக்கவில்லை
மூஸா நபியை கடல் மூழ்கடிக்கவில்லை
இஸ்மாயில் நபியை கத்தி அறுக்கவில்லை..


இன்னும் இதைப்போன்ற அற்புத சம்பவங்கள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை...

அந்த உறுதிப்பாட்டை நிதர்சனமாய் உணர்ந்ததாலோ என்னவோ., பெருமானாரின் பயிற்சி பாசறையில் பாடம் பயின்ற சஹாபா பெருமக்களின் கொள்கையில் தான் எவ்வளவு பிடிப்பு. வெறும் ஆறு, ஏழு வசனங்கள் இறங்கிய காலத்தின் போதே கொண்ட கொள்கைக்காக தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயீர் ஈந்தவரும் உண்டு, தனது இயலாமையால் சுடுமணலில் கிடத்தப்பட்டு பாறாங்கற்களை நெஞ்சில் சுமந்தவரும் உண்டு. 

கழுமரங்களும்,, கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளும் அந்த மக்களுக்கு சிறிதும் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. எதற்காகவும். யாருக்காகவும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித தளர்வோ, சமரசமோ செய்ய முன்வரவில்லை தங்களின் கொள்கையில் நிலைத்திருக்க தம் இன்னுயிரையும் பகரமாக்கிக்கொண்டார்கள் அந்த மேன்மக்கள்..

 ஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு எந்தவித இன்னலும் இடைஞ்சலும் இல்லா எளிய முறையில் நம்மிடம் வந்த பிறகும் நமது கொள்கைப்பிடிப்பு எந்தளவிற்கு இருக்கிறது? ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா..? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும். 

தினம் ஐவேளை என்ற நிலை போய் வாரம் இரண்டு ரக்அத் மட்டுமே தொழுகையை கடமையாக்கிக்கொண்டோர் நம்மில் பலர், ஆறு நாட்கள் வளர்ந்திருக்கும் சின்னஞ்சிறிய தாடியையும் ஏழாம் நாள் ஸ்பெஷல் சேவிங் செய்து சுன்னத்துக்கு அங்கே ஒரு நாள் விடுப்பு அளிக்கிறோம். எவ்வித நிர்பந்தமும் இல்லாமலே நாம் பர்ளையும், சுன்னத்தையும் புறக்கணிக்கிறோமென்றால் வரும் காலங்களில் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கு ஏதும் எதிர்ப்பு வந்தால் அப்போது நம் நிலை...

எண்ணிக்கையில் இருக்கின்றோம் முஸ்லிகளாக.. எண்ணத்தில் வாழ்கின்றோமா.. ? நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது! சகோஸ்

ஏசி காற்றில் கால்மேல் கால் போட்டு குஷன் நாற்காலியில் அமர்ந்து நம் வீட்டு வரவேற்பறைக்கே நொடிப்பொழுதில் மார்க்கம் குறித்து அனைத்து விசயங்களையும் வர செய்தும் அதை அடுத்தவருக்கு சொல்ல மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எழுதுவதால், படிப்பதால் அடுத்தவருக்கு பரப்புவதால் ஏற்படும் நன்மைகளை விட மார்க்கத்தை செயல் ரீதியில் பின்பற்றும் போதே நாம் எதிர்ப்பார்த்த பலனை அடைந்துக்கொள்ள முடியும்.

.ஏனெனில்...
இறைவனால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம்
முஸ்லிமாக பிறப்பதால் மட்டும் ஒருவருக்கு தீர்மானிக்கப்படுவதில்லை..
முஸ்லிமாக இறப்பவர்க்கே தீர்மானிக்கப்படுகிறது.
முஸ்லிமாக இறக்க வேண்டுமென்றால்
முஸ்லிமாக வாழ வேண்டும்...
அது கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!

                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "வாக்களிப்பட்ட நன்மைகள்..!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்