"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, February 29, 2012

எதை தீர்மானிக்க வேண்டும்- "நாம்" ?

                                         ஓரிறையின் நற்பெயரால்

பிறர் செய்யும் செயல்கள் அங்கீகாரம் பெறும் போது பாராட்டும் நாம் அந்த செயலை தொடர்வதற்கு சற்று யோசிக்கதான் செய்கிறோம்.

இந்த சமூகம் நம்மை எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவு அல்லது பார்த்துக்கொண்டிருப்பதாக ஓர் உணர்வு நம் உள்ளத்தில் ஆழ பதிந்திருப்பதே ஒருசெயலை செய்வதற்கும் அல்லது செய்ய மறுப்பதற்கும் பொதுவான காரணமாக இருக்கிறது.

 அட! நமது விருப்பு-வெறுப்புகளை தீர்மானிப்பதில் கூட அடுத்தவரின் விமர்சனமும் முக்கிய நிலையில் இருப்பது தான் ஆச்சரியமான உண்மை.
இதற்கு பெரிய உதாரணமெல்லாம் தேவையில்லை.

கடைக்கு போயி ஒரு சட்டை எடுப்பதாக இருந்தால் கூட அது நம் உடலுக்கு பொருத்தமாக இருக்கிறதா... நமக்கு பிடித்த கலரில் இருக்கிறதா என்று பார்ப்பதை விட நாளை அதை உடுத்தும் போது எதாவது ஒரு காரணம் சொல்லி பிறர் நம்மை கேலி பேசி விட கூடாது என்ற எண்ணத்திலே பெரும்பாலும் தேர்ந்தேடுக்கிறோம்.

பாருங்கள்... சாதாரண ஒரு சட்டையை தீர்மானிப்பதில் கூட நமது எண்ணங்கள் வசதிகளை விட இந்த உலகத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கிறோமென்றால் ஏனைய முக்கிய விசயங்கள் குறித்து என்ன சொல்வது..?

இப்படியான நம் மன நிலைக்கு என்ன காரணம்?
எந்த சந்தர்பத்திலும் நமது தீர்மானிப்பு பிறரால் தவறு என சொல்லப்பட்டு விடக்கூடாது என்ற அச்ச உணர்வும், நாம் எடுக்கும் முடிவுகள் எப்போதும் வெற்றி பெற்றதாக இருக்க வேண்டும் என்ற ஒரு வறட்டு எண்ணமும் எப்போதும் நம்மை ஆட்கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட எண்ணங்களால் நமக்கு நிலையாக எந்த பயனும் இல்லை
முதலில், எப்போதும் வெற்றி என்ற எண்ணம் தேவையை இல்லாதது. வெற்றி என்பதும் தோல்வி என்பதும் நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் ஒன்றல்ல. எப்போதும் வெற்றியாய் தேர்ந்தெடுத்துக்கொள்ள!

 மாறாக இந்த சமூகத்தால் நமக்கு வழங்கப்படும் ஒன்று. சென்ற முறை வெற்றி என்ற சமூகம் இந்த முறை தோல்வி என்கிறது. அதே சமூகம் அடுத்த முறை வெற்றி அல்லது தோல்வியை கொடுக்கும்.

நம்மை பொருத்தவரை இவை மாறி மாறி வரும் ஒரு செய்தி அவ்வளவே! நம்மால் முடிந்தவரை எதையும் செய்வது போதுமானது. ஏனெனில் இறுதி வரை நம்மால் வெற்றியை மட்டுமே தக்க வைத்துக்கொள்ளவும் முடியாது. அப்படி வைத்திருந்தால் வெற்றி என்பதன் சுவையை முழுதாய் உணரவும் முடியாது. இதை தெளிவாய் உணர்ந்தால் போலியான அச்ச உணர்வு நம்மை விட்டு அகன்று போகும்



அடுத்தாய் விமர்சனம்.,
பிறர் விமர்சனத்திற்கு பயந்தே நம்மில் பெரும்பாலானோர் எதையும் செய்வதில் முனைப்பு காட்டுவதில்லை.

இதை செய்தால் பிறர் நம்மை விமர்சிப்பார்களோ... என்றெண்ணி
"நமக்கு ஏன்டா இந்த தேவையில்லாத வேலையினு.." ஒதுங்கியும் அப்படியே அச்செயல் குறித்து பிறரிடம் கேட்டாலும் "உனக்கு ஏன்டா இந்த வேண்டாத வேலையினு..!"  சொல்லும் அந்த ஏளனமும் எந்த ஒன்றையும் செயல்படுத்த நமக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. (நல்ல முறையில் ஆலோசனை வழங்கி நம்மை ஊக்கப்படுத்தும் சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது வேறு விசயம்)

அப்படீனா விமர்சனமே வேண்டாமா... ?
வேண்டும்! விமர்சனம் என்பது நமது நிலைகளை மாற்றியமைக்கும் ஒரு ஆரோக்கியமான விசயம் தான். ஆனால் அந்த விமர்சனம் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும். விமர்சிக்கும் எதுவும் உண்மையாக இருக்க வேண்டும், ஊகத்தின் அடிப்படையில் இருக்ககூடாது. நேர்மையானதாக இருக்கவேண்டும். பிழைகள் -தவறுகள் குறித்து தெளிவாக சுட்டிக்காட்டவேண்டும்.

அதனால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்.

"ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு கண்ணாடி..!" என்றார்கள்.

அறிவிப்பாளர் :அபூ ஹூரைரா (ரலி) அவர்கள்
நூல் :அபுதாவூது

முகம் பார்க்கும் கண்ணாடியின் மிக முக்கிய சிறப்பம்சம், தன் முன் நிற்பவரிடம் என்ன உண்டோ அதை மட்டும் தான் காட்டும்.. பொய்யாகவோ, போலியாகவோ எதையும் காட்டாது. அது சுட்டிக்காட்டும் குறைகளை திருத்திக்கொள்ள தான் முயற்சிப்போமே தவிர அதன் மீது கோபம் கொள்ள மாட்டோம்.

அது மட்டுமல்ல. கண்ணாடியானது நம்மிடம் மட்டுமே எதையும் சொல்லும். நாம் சென்ற பிறகு நம் முகத்தில் உள்ள குறைகளை அடுத்து வருபவருக்கு காட்டாது!

இந்த கண்ணாடியை போல...

எதை சொல்ல வேண்டுமோ
எப்படி சொல்லவேண்டுமோ
யாரிடம் மட்டும் சொல்லவேண்டுமோ -
அப்படி சொல்லப்படவேண்டும் உண்மையான விமர்சனம்!

அப்படியான விமர்சனத்தை எதிர் நோக்குங்கள் . முடிந்தால் விளக்கம் கொடுங்கள். தவறேன்றால் திருத்திக்கொள்ளுங்கள்! அஃதில்லாத தேவையற்ற சாடல் விமர்சனத்தை சட்டை செய்யாதீர்கள்!

பிறர் அதை சொல்வார்களோ இதை சொல்வார்களோ என்ற எண்ணத்தில் நமக்கு அனுமதிக்கப்பட்ட ஒரு செயலை நாம் ஏன் செய்யாமல் விட வேண்டும்? நமக்கு விலக்கப்பட்ட ஒன்றை ஏன் அடுத்தவருக்காக பிடித்ததுப்போல் காட்ட வேண்டும்.?

எதையும் செய்வதற்கு தூதரின் வழிக்காடுதல்கள் தெளிவாய் இருக்க அதன் வழி நமது விருப்பமானதை பின்பற்றி போவதில், தேவையற்றதை தவிர்ந்துக் கொள்வதில் நிலையாய் இருங்கள்.

எதை தீர்மானிக்க வேண்டும் நாம்? என்பதை விட எதையும் தீர்மானிக்க வேண்டும் நாம்!

                                                  அல்லாஹ் நன்கு அறிந்தவன்

read more "எதை தீர்மானிக்க வேண்டும்- "நாம்" ?"

Tuesday, February 14, 2012

கி.மு வில் கடவுள்!

                                  ஓரிறையின் நற்பெயரால்


"ஆரம்பத்தில் பல தெய்வ கொள்கையில் விற்றிருந்த மனித சமூகம் பின்னாளிலே ஓரிறையின் பக்கம் ஈர்க்கப்பட்டது." 
இப்படிதான் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை கடவுளுக்கும் மனித சமூகத்திற்கும் உள்ள உறவுக்குறித்து கருத்து பொதுவாக இவ்வுலகத்தில் நிலவி வந்தது.

ஆனால் இந்த நூற்றாண்டில் மனித இனம் (ANTHROPOLOGY) தொடர்பான ஆய்வுகளும், அகழ்வராய்ச்சி (ARCHAEOLOGY) குறித்தும் மிகதுல்லியமாக நிகழ்த்தப்பட்ட ஆய்வுகள் மேற்கண்ட கருத்தியலுக்கு மாற்றமாய் ஒரு முடிவை சொன்னது.
 அதாவது,  மனித சமூகங்கள் மண்ணில் தோற்றுவிக்கப்பட்ட காலத்திலிருந்தே ஓரிறைக்கொள்கை வலம் வர தொடங்கிவிட்டது. இதை உறுதிப்படுத்தும் விதமாக.,
"மனித இன இயலின் ஆதாரப்படி பூர்விக இனங்களின் ஆதிமதம் உண்மையிலேயே ஏக இறைக்கொள்கையாகவே இருந்தது"  - என அகழ்வராய்ச்சித் துறையின் பிரபல பேராசிரியர் சர். சார்லஸ் மார்ஸ்டனும் (SIR. CHARLES MARSTON)
 " ... ஆதி மனிதனின் ஆரம்பக்கால வரலாற்றின் படி, மத நம்பிக்கை ஏக தெய்வ வணக்கத்திலிருந்து பல தெய்வ வணக்கத்தின் பால் சரிந்தது என்பதும் ,  ... ஆதி மனிதன் இறப்பிற்கு பின்னால் ஒரு வாழ்வு உண்டென்பதிலும் நம்பிக்கை வைத்திருந்தான் - என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைகழக பேராசிரியர் டாக்டர். லாங்க்டன் கூறுகிறார்.
இந்த ஆய்வுகளை வைத்து மட்டுமின்றி தர்க்கரீதியாகவும் மனிதமூலங்களின் ஆரம்பம் ஓரிறைக்கொள்கை என்பதை நிருபிக்கலாம்.

இன்று பல தெய்வ கொள்கைகள் மற்றும் கடவுள் மறுப்புகள் இருக்கிறதென்றால். அவை இவற்றிற்கு எதிரான மூலத்திலிருந்து தான் பெறப்பட்டிருக்க வேண்டும். அதாவது இவை இரண்டுக்கும் எதிராக பின்பற்றப்படும் ஒருக்கொள்கை இருந்தால் மட்டுமே இவை இரண்டும் இப்போது பின்பற்றப்பட சாத்தியம். ஆக கடவுள் மறுப்புக்கு எதிராக கடவுள் ஏற்பும், அதே நேரத்தில் பல தெய்வ கொள்கைகளுக்கு எதிராக ஒருக்கொள்கையும் இருக்கவேண்டுமானால் அது ஓரிறைக்கொள்கையாக தான் இருத்தல் வேண்டும்.

     நாத்திகத்தின் பொதுவான சித்தாந்தம் பரிணாமம் மூலமே மனித உயிர்களின் உற்பத்தி தொடங்கியது என்பதே! சரி ஒரு வாதத்திற்கு அதை ஏற்றுக் கொண்டாலும் உயிர் வாழ சிறிதும் தொடர்பே இல்லாத இறை நம்பிக்கை என்ற ஒன்று ஏன் ஆதிமனிதனுக்கு ஏற்பட வேண்டும்..?

 அன்றைய கட்டத்தில் உயிர்வாழ காற்றே பிரதான ஆகாரமாக இருக்க "அக்ஸிஜன் குறித்து அறியவேண்டிய ஆரம்பகால மக்கள் கடவுள் குறித்து அறிந்து வைத்திருப்பது எப்படி?   


இயற்கையே எல்லாவற்றிற்கும் போதுமானதென்றால் ,

  • இல்லாத கடவுள் குறித்து அவர்களுக்கு ஏன் தெரிய வேண்டும்.? 
  • கடவுள் என்ற ஒன்று இருப்பதை அறிந்திடாத அந்த சமூகத்திற்கு கடவுள்  குறித்து யாரால் விளக்க முடியும்...? 
  • அதை விட முக்கிய கேள்வி ஏன் விளக்க வேண்டும்..? - 

தேவையில்லாத ஒன்றை தேவையில்லாத நிலையில் தேவையில்லாமல்...  தெளிவாய் முன்மொழியப்பட வேண்டிய அவசியம் என்ன?

  இதெற்கெல்லாம் ஒற்றை வரியில் பதில் தருவதாக இருந்தால் ஆதிமனிதர்கள் இயற்கையே உயிர் உருவாக்கியாக ஏற்காமல் இயல்பாகவே கடவுளைக்குறித்து அறிந்து வைத்திருந்தார்கள் .எனினும் அவர்களுக்கு பின்பற்ற வேண்டியவைகள் குறித்து விளக்கி கூற அவர்களிலிருந்தே ஒருவர் கடவுளால் தேர்ந்தேடுக்கப்பட்டு அந்தந்த சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டிருப்பது தான் உண்மை.

இதை அல்லாஹ் தன் மறையில் 


(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்... (02:213) 
என தெளிவாக ஆதி மனித நிலைக்குறித்து கூறுகிறான்

ஆக ஓரிறையின் பால் மக்களை அழைக்கும் செயலானது முஹம்மது நபி அவர்களால் புதிதாக தொடங்கப்பட்டதல்ல. மாறாக ஆதி மனிதரிலிருந்து தொடங்கி நபி மூஸா, நபி ஈஸா வரையிலுமே பின்பற்றப்பட்டது - பின்பற்றும்படி மக்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி முஹம்மது நபி அவர்களின் வருகையோடு முற்றுப்பெற்றது.

ஆக எல்லா இறைத்தூதர்களுமே அல்லாஹ் என்ற ஓரிறையை ஏற்க சொல்வதற்கே மனித சமூகத்திற்கு அனுப்பப்பட்டனர். மாறாக அல்லாஹ்வை வணங்குமாறு முஹம்மது நபிகள் மட்டும் புதிதாய் இஸ்லாத்தை போதிக்கவில்லை. இதற்கு ஒரு எளிய உதாரணம் பாருங்கள்.

இஸ்லாத்தை விமர்சிப்போருக்கும் தெரியும் முஹம்மது நபிகளின் தந்தை பெயர் அப்துல்லாஹ் (அப்து (அடிமை) + அல்லாஹ்) என்று . இதற்கு பொருள் அல்லாஹ்வின் அடிமை. முஹம்மது நபிகளின் வருகைக்கு பிறகே அல்லாஹ் என்ற கடவுளை வணங்க வேண்டிய கொள்கை போதிக்கப்பட்டிருந்தால் அவரது தந்தையின் பெயரை அப்துல்லாஹ் என யார் வைத்தது...?


முஹம்மது நபியா....?!

அல்லாஹ் என்ற பதம் முஹம்மது நபியால் அறிமுகப்படுத்தப்பட்டது என்போர் இதற்கு பதில் தரட்டும்.

. . . 
 உண்டு என்பதற்கு பிறகே இல்லையென்ற ஒரு நிலை உண்டாக வேண்டும்! ஆக அல்லாஹ் என்ற ஓரிறைக்கொள்கையை மட்டுமே வணங்கும் பழக்கும் தொடக்க காலத்திலிருந்த பின்பற்றப்பட்ட ஒன்றாகும்.

   எனினும் மனிதனின் சிந்தனையோட்டத்தில் ஏடுக்கும் தவறான முடிவுகள் அவர்களை பல தெய்வ கொள்கைக்கு வழிவகுத்தது. அதிலும் சொற்ப பிரிவு மக்கள் கடவுள் மறுப்புக்கு செல்ல நேரிட்டது. ஆக பல தெய்வ கோட்பாடுகள் தெளிவற்ற முறையிலே உள்ளதால் அவற்றை விமர்சிக்க நாத்திகம் பெருமுயற்சி எடுப்பதில்லை. ஆனால் இஸ்லாம் தன் கோட்பாடுகளை இன்றளவும் தெளிவாக வைத்திருப்பதால் அவை இஸ்லாத்திற்கு எதிராக செயல்பட எத்தனிக்கின்றன.

 ஏனெனில் இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் நாத்திகர்கள் எவரும் சொல்லும் வார்த்தை "நான் முன்னாள் முஸ்லிம்" இவ்வார்த்தையை கேட்கும் நடு நிலையாளர்கள் கூட இஸ்லாத்திலும் குறைப்பாடுகள் இருப்பதாக தான் உணர்வார்கள். ஆனால் பாருங்கள் அவர்களில் எவரும் வானம் மற்றும் பூமியின் அமைப்புகளை பார்த்தோ, சந்திர சூரிய இயக்கங்களை அறிந்தோ அல்லது பால்வெளி மாற்றங்களை ஆராய்ந்தோ அவை இறைவனால் படைக்கப்பட வாய்ப்பில்லையென இஸ்லாத்தை விட்டு வெளியே வருவதில்லை.

மாறாக தனக்கு சொல்லிதரப்பட்டவைகளையும் -அறிமுகம் செய்து வைக்கப்பட்டவைகளுமே இஸ்லாமாக உணர்ந்து அதை ஏற்கின்றனர்.அவர்கள் தவறாய் கற்ற இஸ்லாத்தை பின்னாளில் ஆய்வறிவோடு ஓப்பிடும் போது அது இஸ்லாத்தையே தவறாக காட்டுகிறது. ஆக இஸ்லாத்திலிருந்து வெளியேறுகிறார்கள். இஸ்லாத்திற்கு எதிராகவும் விமர்சிக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்தை பார்க்கும் போதே இதை நம்மால் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகிறது.

ஆனால் எதையும் தர்க்கரீதியாகவும் ஆய்வுரீதியாகவும் ஆராய்ந்து பின்பற்றும் நாத்திகர்கள் பலர் இஸ்லாம் நோக்கி வருகிறார்கள் இதற்கு என்ன காரணம்...? 

வெற்று ஊகங்களையோ, போதிக்கப்பட்டவைகளை மட்டுமோ ஏற்று இஸ்லாத்தை நோக்கி வருவதில்லை. மாறாக ஆய்வுரீதியான சிந்தித்து அதன் விளைவால் இஸ்லாத்தை நோக்கி வருகிறார்கள்..
 
எது எப்படி நமக்கு அறிமுகப்படுத்த படுகிறதோ அதை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கு பெயர் தான் நம்பிக்கை! -ஆனால்
அது சரியா அல்லது தவறா என ஆராய்ந்து முடிவெடுத்து அதை ஏற்பதே அறிவு.

ஊகங்களை வைத்து இஸ்லாதை விட்டு வெளியேறுவதும்...
ஆய்ந்தறிந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதும் -
எது மேலானது..?

பதில் தரும் பொறுப்பு உங்களிடமே!

குறிப்பு:
 (ஆக்கம் தொடர்பாக விவாதிக்கும் போது மேற்கண்ட இரண்டு மேற்கோள்களும் எனக்கு நம்பக தன்மை வாய்ந்த சகோதர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் ஆதார மூலங்களோடு அவைக்குறித்த மேலதிக செய்திகள் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் தெரியப்படுத்தவும்). 

                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "கி.மு வில் கடவுள்!"

Thursday, February 09, 2012

மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..!

 ஓரிறையின் நற்பெயரால்


நீங்க மத்ஹபுகளை பின்பற்றுறீங்களா.?

ஆமாங்க...

பின்பற்ற என்ன காரணம்..?

............................................

(கொஞ்ச நேரம் யோசனைக்கு பிறகு)

நாங்கள் பாரம்பரியமா இந்த மத்ஹபுகளை தான் பின்பற்றுகிறோம் ..
அப்புறம்..... 
நபிகளின் வழிமுறையை இலகுவாக்கி இமாம்கள் பின்பற்ற சொல்றாங்க. பின்பற்றுகிறோம்.  இதில் என்ன தவறு..?
என்பதோடு மட்டுமே முடித்துக்கொள்வார்கள்...

  •  உண்மையாக மத்ஹபுகள் என்ன சொல்லுகிறது., ?
  • இமாம்கள் பெயரில் மத்ஹபுகள் உருவானது எப்படி?
  • இமாம்கள் உண்மையாக என்ன சொன்னார்கள்.. - என்று அலசவே இக்கட்டுரை


    மத்ஹபுகள் என்றால் வழிமுறை என்ற பொதுவான அர்த்தத்தில் கையாளப்பட்டாலும். இவ்வார்த்தை 'தஹப' என்ற வேர்ச்சொல்லிருந்து உண்டானது. இதற்கு போக்கு அல்லது கருத்து என பொருள்படும்.

      அக்காலகட்டத்தில் தான் முன்னிருத்தும் கேள்விகளுக்கு இமாம்களிடமிருந்து பெறப்படும் பதில்களை பொதுவில் வைத்து பிறரிடம் உரையாடும் போது அக்கருத்தை மையப்படுத்த இது இன்னாரின் கருத்து (உம்: இது ஷாஃபி இமாமின் கருத்து) என கூறுவதற்கு இவ்வார்த்தையை பயன்படுத்துவர். பின்னாளில் இது மாற்றமடைந்து மத்ஹபு என்று நிலைப்பெற்றது.

பெரும்பான்மையானவர்களிடம் கேட்டால் மத்ஹபுகள் நான்கு என்றே சொல்லுவர். அது தவறு. மத்ஹபுகள் 1. சைதி மத்ஹபு 2. அவ்சாயி மத்ஹபு 3. ழாஹிரி மத்ஹபு 4. லைதி மத்ஹபு 5. தவ்ரி மத்ஹபு 6. ஜரீரி மத்ஹபு போன்றவைகளும் மத்ஹபுகளுக்குள் அடக்கம். எனினும் இவை காலப்போக்கில் தங்களை நிலை நிறுத்திக்கொள்ளாமைக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் மூன்று அடிப்படை காரணங்கள் பிரதானப்படுத்த படுகிறது அவை

1. இம்மத்ஹபுகளைப் பின்பற்றியோர் எண்ணிக்கையில் குறைவாக இருந்தமை.
2. இம்மத்ஹபை பின்பற்றியோர் அதில் உறுதியாக இல்லாமல் இருந்தது அல்லது பெயரளவில் மட்டும் அதை பின்பற்றியது - மற்றும்
3. மக்களுக்கு எடுத்துச் சொல்வதில் அதிக ஈடுபாடு செலுத்தாமை.

இதுவே இம்மத்ஹபுகள் இன்று பெயரளவிற்கு மட்டும் நினைவில் இருக்க காரணங்கள். அதுவல்லாமல் ஹனபி, ஷாஃபி, மாலிக் மற்றும் ஹன்பல் (ஹம்பலி) ஆகிய நான்கு மத்ஹபுகளே அதிக அளவில் பின்பற்றப்படுகிறது(?) இவைகள் குறித்த இமாம்களின் நிலை என்னவென்பதை பார்ப்போம்.

முதலில் இமாம்கள் வாழ்ந்த வருடங்கள் குறித்த காலக்குறிப்பை காண்போம்


மேற்கண்ட கணக்கீட்டில் ஹனபி இமாமே ஆரம்பமானவர் என்பதை அறிய முடிகிறது. தமிழகத்தில் ஏனைய மத்ஹபுகளை விட ஹனபி மத்ஹபுகளை பின்பற்றுவோரே அதிகம். அதாவது மத்ஹபுகளை பின்பற்றுவோரில் நான்கில் ஒருவர் ஹனபி மத்ஹபை சார்ந்தவராவர்.

ஹனபி மத்ஹபின் இமாமாக கூறப்படும் அபூஹனீபா(ரஹ்) அவர்களின் இயற்பெயர் அந்-நூமான் பின் தாபித்(ரஹ்). திருக்குர்-ஆனில் ஆழ்ந்த ஞானமும், புலமையும் பெற்றிருந்த இமாமவர்கள் அந்நாளில் குழப்பங்களின் கூடாரமான கூஃபாவில் வாழ்ந்ததால் பொய்யான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தரம் பிரித்து தேர்ந்தெடுப்பதில் மிக கவனமாகவும் இருந்தார்கள். 

அதற்காகவே வாழ் நாளை செலவழித்தார்கள். இதில் கவனிக்கப்படவேண்டிய ஒரு விசயம் இமாம் அபூஹனீபா(ரஹ்) அவர்கள் தனது வாழ்நாளில் எந்த ஒரு மார்க்க நூலையும் எழுதி வைக்கவே இல்லை.

ஆனால் இன்று ஹனபி மத்ஹபின் ஆதார நூல்களாக முன்மொழியப்படும் நூற்களெல்லாம் இமாமவர்களின் மறைவிற்கு பின்னரே தொகுக்கப்பட்டன. அதாவது

  •  குத்ரி எனும் நூல் 300 வருடங்களுக்குப் பிறகும்,  
  • ஹிதாயா மற்றும் காஜிகான் எனும் நூல்கள் சுமார் 400 வருடங்களுக்குப் பிறகும், கன்னியா சுமார் 500 வருடங்களுக்குப் பிறகும், 
  • தஹாவி, ஷரஹ் விகாயா, நிகாயா ,கன்ஜ் மற்றும் ஜாமிஉல்ருமூஸ் போன்ற நூற்கள் சுமார் 600 வருடங்களுக்குப் பிறகும், 
  • ஃபதாவே பஜாஸியா, பதாஉல் கதீர் மற்றும் குலாஸத் கைதானி போன்ற நூற்கள் சுமார் 700 வருடங்களுக்குப் பிறகும்,  
  • சல்பீ, தன்வீர் அப்ஸார்,  பஹ்ரு ராயின் மற்றும் தகீரா போன்ற நூற்கள் சுமார் 800 வருடங்களுக்குப் பிறகும், 
  • துர்ருல் முக்தார் சுமார் 900 வருடங்களுக்குப் பிறகும் இறுதியாக 
  • .ஃபதாவா ஆலம்கீரி இமாமவர்கள் மரணித்து 1000 வருடங்களுக்குப் பின்னரே தொகுப்பட்டவைகளாகும்.
     ஆக இமாமின் மறைவுக்கு பின்னர் சுமார் மூன்னூறு ஆண்டுகளுக்கு பிறகே ஏனைய எல்லா நூற்களும் தொகுக்கப்பட்டன. எந்த நூலிலும் இமாமிடமிருந்து எப்படி செய்திகள் சேகரிக்கப்பட்டன என்ற விபரமும் அவற்றை அறிவித்தவர் வரிசை குறித்த தகவலும் இல்லவே இல்லை. 

 மேலும், ஹனபி மத்ஹபின் மிக முக்கிய பிக்ஹு சட்ட நூல்களாக குறிப்பிடப்படும் துர்ருல் முக்தார் மற்றும் ஃபதாவா ஆலம்கீரி ஆகிய இரண்டு நூற்களுக்கும் இமாமின் வாழ்வுக்கும் இடைப்பட்ட கால அளவு சுமார் ஒரு நூற்றாண்டுகள் என்பது மிக முக்கியமான ஒன்று. அதிலும் ஃபதாவா ஆலம்கீரி எனும் நூல் மார்க்க ரீதியான தொடர்பற்று மெகலாய மன்னர் ஓளரங்கஷீப் காலத்தில் தொகுக்கப்பட்ட ஒன்றாகும். 

 ஆக தமது கருத்துக்கள் சமூகத்திற்கு அவசியமென கருதியிருந்தால் தங்களது  காலத்திலே தமது நூல்களை எழுதி இருப்பார்கள். அல்லது குறைந்த பட்சம் பிறரையாவது எழுத செய்திருப்பார்கள். ஆனால் இமாம் அபூஹனிபா (ரஹ்) அவர்கள் வரலாற்றில் எங்கேயும் தாமே எழுதியதற்கோ அல்லது பிறரை எழுத பணித்ததற்கோ ஆதாரங்கள் இல்லவே இல்லை. 


மேலும் இமாம் ஷாஃபி அவர்கள், மாலிக் இமாமின் மாணவர் ஆவார். அதுபோலவே, ஷாஃபி இமாமின் மாணவரே ஹன்பல் இமாம் அவர்கள்.இவர்களுள் யாரும் தமது ஆசிரியர்களைப் பின்பற்றவுமில்லை. எந்த ஆசிரியரும் தமது மாணவர்களை தங்களைப் பின்பற்றுமாறு வற்புறுத்தவுமில்லை. ஏனெனில் அவர்களுக்கான தெரிதல்கள் யாவற்றிற்கும் இறைவேதத்தையும் - தூதர் மொழியையும் சார்ந்திருந்தார்கள். 

எனினும் மத்ஹபு உருவாக்கங்கள் பிற்கால உலமாக்களால் ஏற்படுத்தபட்ட வழிமுறை என்பதற்கு இன்னொரு சான்று பாருங்கள்.
  
இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்களின் மறைவிற்கு பிறகே அவர்களது மாணவர்களால் அவர்களின் மீது கொண்ட அதீத பிரியம் காரணமாக பின்னாளில் நூற்களாக தொகுக்கப்பட்டன. இன்று ஷாபிஈ மத்ஹபில் மார்க்கத்தீர்ப்பு  வழங்கக்கூடிய (பத்வா) நூல்களான

1.நூல் அல்மஜ்மூ ஷரஹுல் முஹத்தப்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 427 வருடங்கள்

2.நூல் பத்ஹுல் முயுன்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் சுமார் 7 நூற்றாண்டுகள்

3.நூல் இஆனதுத் தாலிபின்
இமாமவர்களுக்கும் இன்நூல் ஆசிரியருக்கும் இடைப்பட்ட காலம் 1062 வருடங்கள்

இடைப்பட்ட காலங்களை கவனிக்கும் போதே இந்நூல்களின் நன்பகத்தன்மைக்குறித்து அதிகம் விளக்க தேவையில்லையென நினைக்கிறேன்...!

இதே நிலை தான் ஏனைய இமாம்களின் பெயரில் நிறுவப்பட்ட மத்ஹபுகளிலும். 

ஆக நான்கு இமாம்களுக்கும் அவர்கள் பெயரால் இன்று சமூகத்தில் நிலவும் மத்ஹபுகளுக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஏனெனில் மேற்கண்ட நூற்களை நன்கு ஆராய்ந்தால் முன்னுக்குப்பின் முரண், அல்லாஹ்வும் அவனது தூதரின் சொல்லுக்கும் மாறுபாடு, பகுத்தறிவிற்கு பொருந்தாத வாதங்கள். 

"இமாமுல் அஃலம்! "  தலை சிறந்த இமாம் (கள்) என அனைவராலும் இந்த சமூகத்தில் அறியப்பட்டவர்கள் எப்படி இப்படிப்பட்ட தவறான கருத்துக்களை தருவார்கள்...?

சரி மத்ஹப் பற்றினால் அக்கருத்துக்கள் எல்லாம் எங்களுக்கு ஏற்புடையவைகள் தான் என சொன்னாலும் அதே இமாம்கள் கூறிய செய்திகளையும் கீழே பாருங்கள். நாற்பெரும் இமாம்கள் தங்களது சொல் / செயல் குறித்து என்ன சொல்கிறார்கள் பாருங்கள்.,

இமாம் அபூஹனீபா (ரஹ்) அவர்கள்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஹலால் இல்லை
(நூல்: ஹாஷியா இப்னுல் ஆபிதீன் பாகம் 6, பக்கம் 293)

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள்:
நான் (சில நேரங்களில்) சரியாகவும் (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன்;. எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள்! அவற்றில் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் பொருத்தமில்லாதவற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: உஸுலுல் அஹ்காம் பக்கம்:294 பாகம்:6)

இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் 
எனது நூலில் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு மாற்றமானதைக் கண்டால், நபி (ஸல்) அவர்களின் வழி முறையையே (மக்களிடம்) கூறுங்கள்;, என் கூற்றை விட்டு விடுங்கள்.
(நூல்: அல்மஜ்மூஃ பாகம் – 1 பக்கம் – 63) 
இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள் 
இமாம் அபூஹனீஃபா, இமாம் மாலிக், இமாம் அவ்ஸாயீ ஆகியோரின் கருத்துக்கள் அவர்களின் அபிப்பிரயாமே. என்னிடத்தில் அவையனைத்தும் சமமே! உண்மையான ஆதாரமோ நபித்தோழர்களிடம் (உள்ள ஹதீஸ்களில்) தான் உள்ளது.   (நூல்: ஜாமிஉ இப்னு அப்தில்பர் பக்கம் 149 பாகம் 2)

 எதற்கெடுத்தாலும் மத்ஹபுகளை முன்னிருத்துவோர் மேற்கண்ட வரிகளை மீண்டுமொருமுறை ஆய்தறிவது அவசியமானது. இமாம்களின் சொற்கள் இதுவென்று வரையறையின்றி தெளிவில்லாதவற்றை நமக்கிடையில் வைத்திருக்கும் போது அந்த இமாம்களே அவை பின்பற்ற உகந்ததல்ல என்று தெளிவாய் சான்று பகீர்கிறார்கள். 

உண்மையாக மேற்கண்ட இமாம்களின் மீது மதிப்பு வைத்திருந்தால் அவர்களின் கூற்றுப்படி பின்பற்றுதல்கள் அனைத்தும் அல்லாஹ்வின் வார்த்தையிலும் அண்ணாலாரின் வாழ்விலுமே சாத்தியம் என்பதை உணர்ந்து அந்த தூய இமாம்கள் எதை பின்பற்றினார்களோ அந்த நபிவழி மத்ஹபை நாமும் பின்பற்றலாம் வாங்க....!

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Our Sincere Thanks to:
Bro. Nashid Ahmed
Bro. shaik Dawood.

REFERENCES:
export.writer.zoho.com

read more "மத்ஹபுகளை பின்பற்றலாம் வாங்க..!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்