இஸ்லாம் ஏனைய மதங்களைப் போலல்லாமல் சகோதரத்துவத்தை அதிகமாக வலியுறுத்துகின்றது. அதற்கென இருக்கின்ற வழிகாட்டல்களை தெளிவாக விளக்குகின்றது. சகோதரத்துவத்திதை இல்லாமல் ஆக்குகின்ற அல்லது அதற்கு களங்கம் ஏற்படுத்துகின்ற அனைத்து வழிகளையும் முற்றாக தடை செய்திருப்பதோடு அதை மீறி செயல்படுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் உண்டு எனவும் எச்சரிக்கைச் செய்கின்றது. இதன் மூலம் பலம் வாய்ந்த ஒரு சமுதாயத்தையும், ஈமானிய சமுதாயத்தையும் ஒற்றுமையை வளர்ப்பதுவுமே இதன் குறிக்கோளாகும். இது இஸ்லாத்தின் தனிச்சிறப்புகளில் ஒன்றாகும்.
இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது இதன் உண்மை நிலையை அறிந்துக் கொள்ளலாம். நபி (ஸ்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன்னிருந்த அக்கால அரேபியர்கள் எந்த முறையில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்? புனிதமான அந்நகரில் அவர்களுக்கு மத்தியில் கோத்திர வெறி தலைவிரித்தாடியது! கோத்திரங்களுக்கிடையில் வருடக்கணக்காக சண்டைப் போட்டுக் கொண்டிருந்தார்கள்! வாழையடி வாழையாக அதனைத் தொடர்ந்து செய்துகொண்டே வந்தார்கள். அடிமை, எஜமான் என்ற பாகுபாடு அதிகமாக காணப்பட்டன! எஜமானர்களோ தங்களது அடிமைகளை தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு நடத்தினார்கள். நாட்டுக்கு நாடு, இடத்துக்கு இடம், மொழிக்கு மொழி, கோத்திரத்திற்கு கோத்திரம், இனத்திற்கு இனம், நிறத்திற்கு நிறம் என்றெல்லாம் பலவிதமான பாகுபாடுகளுடன் வாழ்ந்து வந்தார்கள்.
நபி (ஸல்) அவர்களுக்கு நபித்துவம் அருளப்பட்ட பிறகு இஸ்லாம் இவை அனைத்திற்குமே முற்றுப்புள்ளி வைத்தது. அல்-குர்ஆன் அருளப்பட்டது! ஈமானிய ஒளி பிரகாசித்தது! நபி (ஸல்) அவர்கள் இதன் மூலம் அச்சமுதாய மக்களின் உள்ளத்துக்கு தெளிவுபடுத்தினார்கள். அவர்களுக்கு சிறந்த அறிவைக்கொண்டு நேர்வழியை அடைவதற்குரிய வழிமுறையைக் காட்டினார்கள். இதனால் அவர்களது உள்ளங்கள் அமைதி பெற்றன. இறைவிசுவாசம் என்ற ஒரே கோட்பாட்டின் கீழ் அவர்கள் ஒன்றினைந்தார்கள். அனைத்து வேற்றுமைகளில் இருந்தும் நீங்கிக்கொண்டார்கள். கோத்திர வெறி மற்றும் உலக ஆசைகள் இவைபோன்ற அனைத்துப் பிரச்சனைகளுக்கும் பகரமாக ஈமானிய சகோதரத்துவத்தை உருவாக்கினார்கள். அதே கோட்பாட்டின் கீழ் அனைவருமே ஒன்றினைந்து செயற்பட்டார்கள்! இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வல்லரசை ஏற்படுத்துகின்ற அளிவிற்கு மிகப்பெரும் வெற்றியையும் பெற்றார்கள்!
இஸ்லாத்தில் சகோதரத்துவத்தின் முக்கியத்துவம்!
(1) இஸ்லாம் சகோதரத்துவத்தை இறைவிசுவாசத்துடன் இணைத்துக் கூறுகின்றது. இரண்டு சகோதரர்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்பட்டால் அதனைத் தீர்த்து வைக்கவும் கட்டளையிடுகின்றது (அல்-குர்ஆன் 49:10).
(2) ஒரு முஃமின் இன்னொரு முஃமினை நேசிப்பதற்கும் இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘ஒரு முஃமின் தான் விரும்புவதை இன்னொரு முஃமினுக்கு விரும்பாதவரை அவன் உண்மையான விசுவாசியாக மாட்டான்’ (ஆதாரம் : முஸ்லிம்).
நமது முஸ்லிம் சமூகத்தில் தற்போது நிலவுகின்ற ஒற்றுமை இன்மைக்கும் அதனால் நமது சமூகம் பல பிரிவுகளாகப் பிரிந்து சின்னாபின்னமாகப் போயிருப்பதற்கும் தற்காலத்தில் மிக முக்கிய காரணமாக அமைவது இந்த நபிமொழியில் அடங்கியிருக்கின்ற மிகக்கடுமையான எச்சரிக்கையை அலட்சியம் செய்து அதற்கு மாற்றமாக நடப்பதுவேயாகும் என்றால் அது மிகையாகாது!
ஒருவன் தனது வாழ்வில் முன்னேறிச் செல்கின்றபோது இன்னொருவன் அதனைப் பார்த்துப் பொறாமைக் கொள்ளக் கூடியவனாகவும் அவனது முன்னேற்றத்தை தடைச் செய்வதற்கும் முயற்சிக்கின்றான். இதனால், மேற்கண்ட நபிமொழியில் கூறப்பட்ட, இஸ்லாம் கூறும் சகோதரத்துவத்தை பின்பற்றாததால், தான் விரும்பக்கூடிய, ‘வாழ்க்கையில் முன்னேறுவதை’ இன்னொரு சகோதரனும் அடைவதை விரும்பாததால், அவன் துன்பப்படுவதைக் கண்டு இவன் இன்பமடைவதால் அங்கு பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன. இதனால் தான் ஒரு பிரச்சனையின் ஆரம்பத்தையே இஸ்லாம் தடுத்து சகோதரத்துவத்தை விரும்பக்கூடிய விசயங்களை ஊக்குவிக்கின்றது.
(3) எப்படிப்பட்ட விசயங்களுக்காக சகோதரத்துவ நட்பு வைக்க வேண்டும் என்பதையும் இஸ்லாம் கற்றுத்தருகின்றது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்காகவே ஒருவனை வெறுத்து நடங்கள்’ (ஆதாரம் : அஹ்மத்)
அல்லாஹ்வுக்காகவே நட்புக்கொள்வதென்றால், நேசிப்பதென்றால் என்ன?
(4) இஸ்லாம் இனம், நாடு, நிறம், சாதி, மொழி ஆகியவற்றுக்கிடையே எவ்வித பாகுபாடும் காட்டுவதில்லை! மாறாக ஏக இறைவனை ஏற்றுக்கொண்ட இவர்கள் அனைவரையும் ‘முஸ்லிம்கள்’ என்றே பார்க்கின்றது. இவற்றை நபி (ஸல்) அவர்களது காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்களது வாழ்க்கை வரலாற்றின் மூலம் அறியலாம். பிலால் (ரலி) அவர்களைப் பொருத்தவரையில் ஒரு மிகப்பெரும் குரைசிக்குலத் தலைவனுக்கு அடிமையாக வாழ்ந்தவர். மேலும் அவர் கருமை நிறமுடையவராக இருப்பதோடு எத்தியோப்பியாவைச் சேர்ந்தவரும் ஆவார். நபி (ஸல்) அவர்களோ அல்லது நபித்தோழர்களோ அவரை ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை! மாறாக முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சகோதரர்கள் என்றகையில் அக்கால நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை இருந்தது. இதனால் இவர் அபூபக்கர் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்டார்கள். உலகிலேயே இரண்டாவது தரத்தில் இருக்கின்ற அல்-மஸ்ஜிதுல் நபவியில் முஅத்தினாக இருந்தார். மக்கா வெற்றியின் போது பெரும் பெரும் நபித்தோழர்கள் மக்காவிலே இருக்கின்ற சந்தர்ப்பத்திலே யாரை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்கு அழைத்துச் செல்வார் என்று எpதிர்ப்பார்த்திருந்தபோது ஆரம்பத்திலே அடிமையாகவும், நிறத்திலே கருமையாகவும் இருந்த பிலால் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கஃபாவுக்குள்ளே அழைத்துச் சென்றார்கள். இவைகள் அனைத்துமே, இஸ்லாம் சகோதரத்துவத்திற்கு பாகுபாடு காட்டுவதில்லை என்பதையே உணர்த்துகின்றது. இதே போன்று ஏராளமான நிகழ்வுகள் நடந்திருப்பதையும் இஸ்லாமிய வரலாற்றைப் படிக்கின்ற போது விளங்கிக்கொள்ளலாம்.
மக்களுக்கு மத்தியில் இருக்கும் குலங்களும் கோத்திரங்களும் அவர்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் அறிந்துக்கொள்வதற்காகவே என்று இஸ்லாம் அறிவுரை கூறுகின்றது. அவர்களுக்கு மத்தியில் எவ்வித உயர்வு தாழ்வு கிடையாது என்றும் இஸ்லாம் கூறுகின்றது.
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்” (அல்-குர்ஆன் 49:13)
இந்த அல்-குர்ஆன் வசனம், அல்லாஹ் மனிதனை ஒரே ஆண் ஒரே பெண்ணிலிருந்து படைத்தான் என்பதன் மூலம் அனைத்துப் பாகுபாடுகளையும் ஆரம்பத்திலேயே தடுக்கின்றது. வசனத்தின் இறுதியில் அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர் யார் என்பதற்கு ஒரு அளவு கோலையும் தருகின்றது. அவர்களே அல்லாஹ்விடத்தில் கண்ணியமிக்கவர்! அவர்கள் தான் இறையச்சமுடையவர்கள். தற்போது உலகில் பெரும் பிரச்சனையாக கருப்பர், வெள்ளையர் பிரச்சனை இருப்பதை தொலைத் தொடர்பு சாதனங்கள் மூலம் அறியலாம். அதே போன்று சாதிப்பிரச்சனைகள் இந்தியாவில் பல இயங்களிலும் இது ஊடுருவி இருப்பதை பார்க்கலாம். இவைகள் அனைத்துக்கும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
‘அரபிக்கும் அஜமிக்கும், அஜமிக்கும் அரபிக்கும் மத்தியிலும் கருப்பனுக்கும் வெள்ளையனுக்கும் வெள்ளையனுக்கும் கருப்பனுக்கும் மத்தியிலும் வித்தியாசங்கள் கிடையாது. அனைவருமே ஆதமில் இருந்து வந்தவர்கள்; ஆதமோ மண்ணால் படைக்கப்பட்டவர்’ (ஆதாரம் : அஹ்மத்)
இவ்வாறாக இன, நிற, இட, தேச, மொழி என்றெல்லாம் பாகுபாடு காட்டாமல் இஸ்லாம் சகோதரத்துவத்தை முக்கியப்படுத்தி வலியுறுத்துவதை அறியலாம்.
-மௌலவி அர்ஸத் ஸாலிஹ் மதனி (suvanathendral.com)
Tweet | |||||
No comments:
Post a Comment
ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!