"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Tuesday, January 31, 2012

என்னத்தான் இருக்கிறது நபிமொழியில்..?

                                                                 ஓரிறையின் நற்பெயரால்

"மூன்றுப்பேர் இருக்கும் இடத்தில் ஒருவரை விட்டு இருவர் மட்டும் தனியே ரகசியம் பேசாதீர்கள்..! " (1)

இப்படி தனிமனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு மட்டுமின்றி அத்தகைய செயல் அந்த மூன்றாம் நபருக்கு மனரீதியாக உளைச்சலை ஏற்படுத்தும் என்பதை தெளிவாக அறிந்து இந்த செயலை தவீர்க்க சொன்னது யாரென்று உங்களால் ஊகிக்க முடிகிறதா...?

. . . 

  முஸ்லிமல்லாதவர்களுக்கு பெரும்பாலும் இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. குறைந்தபட்ச முஸ்லிம்களுக்கே அதிலும் மார்க்க சூழலில் வளர்ந்த முஸ்லிம்களுக்கே இவை நபிமொழிகள் என அறிய வாய்ப்புகள் இருக்கிறது.

இதற்கு யார் காரணம்...? எது காரணம்..?

  தாடி வைப்பதும் , தொப்பி அணிவதும், வார நாட்களில் மற்றும் குறிப்பிட்ட தினங்களில் நோன்பு வைப்பதும், உபரியான தொழுகைகள் நிறைவேற்றுவதும் மட்டுமே நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வழிமுறை (சுன்னத்) என பொதுவாக இச்சமூகத்தில் முஸ்லிம்களால் புரிய வைக்கப்பட்டு முஸ்லிமல்லாதவர்களால் புரிந்துக்கொள்ளப் படுகிறது.

வெறும் ஆன்மிகத்தை மட்டுமே போதிக்க வந்தவர்களாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் இருந்தால் அவர்களை அல்லாஹ் குர்-ஆனில் அகிலத்தாருக்கு அழகிய முன்மாதிரி - என கூற வேண்டிய அவசியமில்லை. ஆக ஆன்மிகம் மட்டுமில்லாது., அரசியல் தொடங்கி அனைத்துத்துறைகளிலும் மக்களுக்கு உரித்தான பாடங்கள் அவர்கள் வாழ்க்கையிலிருந்து கிடைக்கபெற வேண்டும் என்பதைதான் மேற்கண்ட இறைவசனம் பறைச்சாற்றுகிறது.


  பொன்மொழிகள் எனபன மனித வாழ்க்கைக்கு தேவையான விசயங்களை அறிவுரீதியாகவும், அனுபவரீதியாகவும் விளக்கிக்கூறுவதே. ஒருவர் கூறும் பொன்மொழிகளை அவரது வாழ் நாள் முழுவதும் பின்பற்றி நடந்திருப்பார் என்பதற்கு எந்த வித ஆதாரமும் தெளிவாக இல்லை!

ஆனால் நபிமொழிகள் எனபன அப்படியல்ல., நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் தம் வாழ்வில் செயல்படுத்தியது.  பிறரை செயல்படுத்த தூண்டியது மற்றும் செயல்படுத்தியதற்கு அங்கீகாரம் கொடுத்தது. இவை முழுவதும் தொகுக்கப்பட்டவையே நபிமொழிகள் என அழைக்கப்படுகிறது.


சரி அப்படி அவர்கள் எதைத்தான் சொன்னார்கள்...? 

கடை நிலை பாமரன் கூட நம் வாழ் நாளில் ஒன்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதத்தில் அவர்கள் முன்மொழிந்த வார்த்தைகள் இருப்பது தான் கூடுதல் அழகு. ஆன்மிகத்தை அன்றாட வாழ்வியலோடு இணைத்த பெருமை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களுக்கு மட்டுமே உண்டு என்றால் அது மிகையாகாது. மக்களின் அன்றாடச்செயல்களுக்கு ஆர்வமூட்டும் வகையில் அதை தம் வழிமுறையாக்கினார்கள் - இறைவனிடத்தில் அவை நன்மை பயக்கும் என்றார்கள்.  ஒருவர் இயல்பாக அதை தொடர்ந்து செய்ய ஆர்வமூட்டினார்கள். அவர்களின் கூற்றில் சிலவற்றை பார்ப்போம்.

உனது மனைவிக்கு ஒரு வாய் உணவு கவளத்தை ஆசையோடு ஊட்டுவதற்கும் இறைவனிடத்தில் நன்மை உண்டு (2) என்றார்கள். அதுமட்டுமா...

ஒருமுறை தம் தோழர்கள் மத்தியில் உரையாடியபோது
"உங்கள் மனைவியோடு வீடுக்கூடுவதற்கும் இறைவனிடத்தில் வெகுமதி உண்டென்றார்கள் - (3)
அறிவு மிகுதிபெற்ற அண்ணலாரின் தோழர்களில் ஒருவர்
" நாயகமே! எங்களது இச்சைகளை தவிர்த்துக்கொள்வதற்காக செய்யும் இச்செயல் எப்படி இறைவனிடத்தில் வெகுமதி பெற்றுதரும் என்றார்.

  அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம், மனைவியோடு கூடாமல் மாற்றரோடு கூடினால் "விபச்சாரமென" அதற்கு இறைவனிடத்தில் தண்டனையுண்டல்லவா...? இறைவனுக்காக அதை தவிர்த்து ஆகுமானவற்றோடு வாழ்வதற்கே அந்த வெகுமதியென்றார்கள்.

 சர்வசாதரணமாக இல்லங்களில் நாம் செய்யும் சராசரி செயலுக்குக்கூட இறைவனிடத்தில் அங்கீகாரம் உண்டு என்று இல்லறவியலுக்கு புதுவிலக்கணம் வகுத்தார்கள்.

 சமூகத்தில் எல்லோரிடமும் நம்மால் நற்பெயர் பெற முடியும். அல்லது அஃது பெறுவதற்கு அவர்களுக்கு முன்னால் நம்மால் போலியாய் கூட நடிக்க முடியும். ஏன், நமது தாய்,  தந்தை,  சகோதரங்கள்,  மகன் என எல்லோரிடமும் அஃது நம்மால் நற்பெயர் எடுக்க முடியும்.

  ஆனால் உண்மையற்ற நிலையில் மனைவியிடத்தில் மட்டும் நற்பெயர் பெற முடியாது. ஏனெனில் இந்த உலகத்தார் அனைவரிலும் நம் அந்தரங்கங்களை அதிகம் அறிந்தவள் நம் மனைவி மட்டுமே. ஆக அவளை போலியாக நடித்து ஏமாற்றுவது என்பது எல்லா காலத்திலும் சாத்தியமில்லை. ஆதலால் தான்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம்
"மனைவியரிடத்தில் சிறந்தவரே மக்களில் சிறந்தவர்..!"-  (4) என்றார்கள்.
 மக்களில் சிறந்தவர் என்ற பெயரோடு நாளை இறைவனிடத்தில் செல்வதற்கு இன்று மனைவியிடத்தில் உண்மையாக நடந்துக்கொள்ள வேண்டியது கட்டாய கடமையாகிறது.

"உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் வரவேற்பதும் ஓர் நற்செயலாகும்." (5)
பெரும்பாலான குடும்ப பிரச்சனைகளுக்கு மையக்காரணம் சரியான உபசரிப்பிமின்மையே... குறைந்த பட்சம் வாங்க!.. என்று சொல்வதில் கூட ஏற்ற இறக்க உச்சரிப்புதான்!

இவை கூடாதென்று சொல்லி அதை தவிர்க்க சொல்வதோடு உரிய முறையில் அவர்களை நோக்குவதே... இறைவனிடத்தில் நன்மையை பெற்று தரும் செயல்களில் ஒன்றாக மாற்றினார்கள். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள்.

இப்படி குடும்பவியல் செயல்களை இறை நேசத்திற்கு உரித்தான செயலாக மாற்றமடைய வழிச்சொன்ன நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் பொருளியலிலும் சமூக மத்தியிலும் அதே நிலையே தான் கையாண்டார்கள்.

வட்டியே தடை செய்து வியாபாரத்தை ஊக்குவித்த நபிகள்
ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. (6) என்று ஒருவர் தம் சொந்த கால்களில் நிற்பதற்கு தன்னார்வத்தை ஏற்படுத்தினார்கள். மேலும் தேவை ஏற்படும் நிமித்தமாக பொருட்களை பதுக்கி வைத்து வியாபாரம் செய்வதையும் சபித்தார்கள்.

அண்டை வீட்டுக்காரன் பசித்திருக்க நான் மட்டும் வயிறார உண்பவன் உண்மை இறை விசுவாசியல்ல!" (7) என்று ஏனையவர்களின் மீதும் நமக்குள்ள கடமையே சுட்டிக்காட்டினார்கள். அதை செயல்படுத்தியும் காட்டினார்கள்.

இறைவழியில் உயிரை தியாகம் செய்தவராக இருந்தாலும் அவரது பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படும். ஆனால் அவர் பெற்ற கடனை தவிர. (8)என கொடுக்கபட்ட கடனும், கொடுத்தவரின் நிலையும் இறைவனிடத்தில் எவ்வளவு மதிப்புடையது என்பதை தெளிவுறுத்தினார்கள்.

மக்கள் நடக்கும் நடைபாதைகளில் குறுக்கே அமர்ந்து அவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்துவதையும், நிலக்குறிகள் மற்றும் நீர் நிலைகளுக்கு சேதம் ஏற்படுத்துவதையும் தடை செய்த (9) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவை இறைவனின் கோபத்திற்கு ஆளாக்கும் இழிசெயல் என்றும் எடுத்துரைத்தார்கள்.

அனாதைகளின் பொருட்களை அபகரிப்பது நெருப்பை விழுங்குவதற்கு சமமானது (10) என அநியாய செயலை விளக்கி அஃது செயல்படுவோர் அதே நிலையில் இறைவன் முன் கொண்டுவரப்படுவார்கள் என்றும் எச்சரித்தார்கள்.
மேலும் அனாதைகளை பற்றிக்கூறும் போது, "அவர்களை நல்ல முறையில் பராமரிப்பவர்களும் நானும் மறுமையில் இப்படி (நெருக்கமாக) இருப்போம் என தனது ஆட்காட்டி விரலையும், நடுவிரலையும் ஒன்றிணைத்து காட்டினார்கள். (11)

 பாதிக்கப்பட்டவன் மன்னிக்காதவரை என்ன தான் மிகப்பெரிய வணக்கசாலியாக இருந்தாலும் அவனை இறைவன் மன்னிப்பதில்லை.  (12) என்ற நபிமொழியில் தனிமனித உரிமைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்பதை உணரலாம்!

இன்னும் பார்த்தால்....  தெருக்களில் கிடக்கும் சிறு முள்ளை அகற்றுவதையும் ஈமான் எனும் உயர் இறையச்சத்தோடு உள்ளடக்கிய ஒரு பகுதியாக (13) நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் கூறுவதிலிருந்தே தனி மனித மற்றும் சமூகத்திற்கு பயன்படும் அனைத்துமே அவர்களது கூற்றில் அடங்கிருப்பதை சிந்தனை ரீதியாக உணரும் எவருக்கும் நிரூபணம்!

  சில உதாரணங்கள் தான் இவை. இன்னும் அனேக நபிமொழிகள் இருக்கின்றன, ஆனால் அவை இந்த மனித மத்தியில் தெளிவாக வழிமொழியப்படாமல், பொன்மொழிகள் என்ற அளவிலே வைத்து பார்க்கப்படுவதால் நாம் நடைமுறைப்படுத்தும் அண்ணலாரின் வழிமுறைகள் இன்று சமூகத்தின் கவனத்திற்கு வருவதில்லை.

மேற்சொன்ன செயல்கள் மட்டுமல்ல. நாம் புது ஆடை அணிவதிலிருந்து, மரணித்தப்பின் நமக்கு வெள்ளாடை தரிக்கும் வரையிலான நிகழ்வுகளின் வழிக்காட்டுதல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்களின் வாழ்வியலிருந்தே பெறப்படுதல் சாத்தியம் என்பதை இச்சமூகத்திற்கு உணர்த்த வேண்டும். அது எல்லோராலும் எளிதாகவும் பேணப்படவும் முடியும் என்பதையும் தெளிவுறுத்த வேண்டும்.

 நபிகளாரின் செய்கைகளை நினைவூட்டுவதற்காக வருடத்திற்கு ஒரு முறை அவர்கள் மீது புகழ்பாக்களாக படிப்பதால் அதை உணர்த்த முடியாது! அதற்கு அவர்களின் வழிமுறைகளில் ஒவ்வொன்றையும் முடிந்த அளவிற்கு பின்பற்றி வாழ்வதே பொருத்தமானது! 

ஏனெனில் நாம் இச் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு நற்கருமங்களும் அவர்களின் வாழ்வியல் வழிமுறை என்பதை விளக்க வேண்டும் அப்போது அவர்கள் மீது நாம் கொண்ட நேசத்தை உண்மைப்படுத்துவதாக பொருள். மாறாக அவர்களை மிகைப்படுத்தி புகழ்வதில் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள்:
 முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் முஸ்லிம்களுக்கு மட்டுமே உரித்தான தலைவர் என்ற மாயை எண்ணத்தை அகற்றுங்கள். ஏனெனில் அதற்காக மட்டும் தான் அவர்களின் வருகை இருந்திருந்தால் தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் போன்ற மார்க்க கடமைகளை விவரிப்பதோடு அவர்களின் பணி முடிவுற்று இருக்கும்.

ஆனால் அவர்களின் இறுதி பேரூரையில்
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை.....

இப்படி -வர்த்தக ரீதியாக பிரிக்கப்பட்டிருக்கும் மக்களின் எதார்த்த வாழ்வை மையப்படுத்தி கூறினார்கள். அரேபியர்களுக்கோ ஒரு இனத்திற்கோ தனிப்பட்ட முறையில் அவர்களின் வரவு அமைந்திருந்தால் இப்படி சொல்லவேண்டிய அவசியமே இல்லை. யாராக இருப்பினும் இறைவன் முன் அனைவரும் சமம் என்றே பிரகடனம் படுத்தினார்கள். ஆக குர்-ஆன் எப்படி மானிட சமூகத்திற்கு பொதுவான நூலோ அதுப்போலவே நபிகளும் இந்த மனித சமுதாய முழுமைக்குமான தலைவர்!

                                                        அல்லாஹ் நன்கு அறிந்தவன் .


நீல நிறத்தில் இருப்பவைகள் அனைத்தும் சஹீஹான ஹதிஸ்களே. எளிதாக புரிந்துக்கொள்வதற்காக இயல்பு தமிழில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


ஹதிஸ் விபரம்:
01.அறிவிப்பவர் :  இப்னு மஸ்ஊத் (ரலி) நூல் : புகாரி
02. அறிவிப்பவர் : ஸஅது பின் அபீவக்காஸ் (ரலி) நூல் : புகாரி 56
03.
04. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)  நூல் : திர்மிதி எண்: 1082
05. அறிவிப்பாளர்கள்: அபூதர் (ரலி)  நூல் : திர்மிதி 2022, 2037)
06.  நூல் :  புஹாரி,எண் 2072 
07. அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல் : மிஷ்காத் 
08. அறிவிப்பாளர்: சலமா பின் அக்வஃ (ரலி) நூல் புகாரி: 2289
09. அறிவிப்பவர்: அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி).  நூல் :   புஹாரி.
10.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி (2766) முஸ்லிம்.
11. அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம், திர்மிதி (1983)
12. அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : புகாரி 2448
13.




Thanks to
Imam Nazir Ali M.A (Masjid India@ Kuala Lumpur) 
கையளவு உலகம் Ayusha Begum.




Reference:
சித்தார்க்கோட்டை.காம் 
மனிதக்குல வழிக்காட்டி நபிகள் நாயகம் (ஸல்) - PJ
பெருமானாரின் பொன்மொழிப்பேழை - Abdur Rahim
பொற்புதையல் - Altaf hussain
read more "என்னத்தான் இருக்கிறது நபிமொழியில்..?"

Tuesday, January 17, 2012

இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?


                                                ஓரிறையின் நற்பெயரால்


 மதங்கள் மக்களை நல்வழிப்படுத்த உருவானவையாக இருப்பினும் அதனைப் பின்பற்றுவோர் அனைவரும் நல்லவர்களாக இல்லையே...? -அப்படியென்றால் மதங்களின் ஊடான கடவுளின் ஆளுமை மக்கள் மீது இல்லையா...? தவறு செய்யும் மதம் சார்ந்த நபர்களை பார்க்கும்போது...

கடவுள் ஏன் அவர்களை தண்டிக்கவில்லை அப்படி
கண்டிக்காத கடவுள் நமக்கு ஏன் இருக்க வேண்டும் ?

இப்படி ஒரு பொது நிலை கேள்வி எல்லோர் மனதிலும் உதிப்பது இயல்பே...
பொதுவாக மதங்களை நோக்கி இக்கேள்வி முன்வைக்கப்பட்டாலும் இஸ்லாம் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறது என பார்ப்போம்!

இஸ்லாத்தை பொருத்தவரை ஒரு செயலை முன்னிருத்தி அதை எப்படி நன்மையாக மேற்கொள்வது என்ற வழிமுறையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. அத்தோடு அச்செயலுக்கு மாறாய் உண்டாகும் எதிர்விளைவையும் விளக்கி அதற்குண்டான பிரதிபலன்களையும் தெளிவாய் மக்கள் முன்னிலையில் பிரகனப்படுத்துகிறது.

ஆக எந்த ஒரு செயலையும் மிக தெளிவாக மனித சமூகத்திற்கு விளக்கி பின்னரே அவற்றை செய்யவோ, தவிர்க்கவோ பணிக்கிறது.


 அவ்வாறு மேற்கொள்ளும் அனைத்து செயல்களிலும் இறைவனின் வழிக்காட்டுதலை மையமாக வைத்து தங்களின் சுய அறிவை பயன்படுத்த சொல்கிறது.,


 ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும் என்ற வழியும் அச்செயலை செய்வதால் எற்படும் சாதகம் /பாதகம் குறித்த அறிவும் மிக தெளிவாய் நமக்கு உணர்த்தப்பட்டிருக்கிறது.

இவற்றை வைத்து எந்த செயலையும் ஏற்று செய்வதாக இருப்பீனும் விட்டு விலகுவதாக இருப்பீனும் கடவுளின் போதனைகளை அடிப்படையாக வைத்து நாம் சிந்தனைரீதியான முடிவுகளை எடுக்க முடியும்.

ஆக ஒரு செயலுக்கு முழுமுதற் காரணகர்த்தா கடவுளாயினும் மேற்கொள்ளும் செயல்கள் குறித்த முடிவுகள் நமது சிந்தனையிலே விடப்படுவதால் அவற்றிற்கு முழுப்பொறுப்பு நாம் தாம் என்பது தெளிவாகிறது. 

அவ்வாறு இருக்கும் போது மனிதன் சிந்தையில் ஏற்படும் தீமையான எண்ணங்களால் எடுக்கும் தவறான முடிவுகளுக்கு அவனே காரணம். மாறாக கடவுளல்ல...! (விதி என்ற நிலைப்பாட்டை குறித்து இங்கு சொல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்க) 


அதாவது கடவுளோ....

கொலை செய்யாதே
விபச்சாரம் புரியாதே
வட்டி வாங்காதே
பிறரை ஏமாற்றதே...
ஒழுக்கமாய் இரு... 
 என தம்மை வணங்கி வழிபடும் மக்களுக்கு போதனைகளை வழங்கினால்...

கொலை செய்து
விபச்சாரம் புரிந்து
வட்டி வாங்கி
பிறரை ஏமாற்றி 
ஒழுங்கின்றி அலையும் 
மக்களாக இருந்தால்... அவர்கள் செய்யும் தவறுகளுக்கு எப்படி கடவுள் பொறுப்பாவார்?

கடவுளோ மேற்கண்டவற்றை செய்யாதே என்று சொல்வதோடு அஃது செய்பவன் முறையாய் இறையை பின்பற்றுபவன் அல்ல என்றே பணிக்கிறார். ஒரு கொள்கையே ஏற்பதென்பது அதனை தமது நடைமுறை வாழ்வில் பின்பற்ற தகுந்த தருணங்கள் அனைத்திலும் செயல்படுத்துவதே.

 அவ்வாறு இருக்கும் போது கடவுளை ஏற்பதாவோ அல்லது அவனது போதனைப்படி வாழ்வதாகவோ இருந்தால் அவனது சொல்லுக்கு மாறு செய்யா வாழ்வை வாழ வேண்டும். ஆனால் தங்களின் சுய நலத்திற்காக கடவுளின் சொல்லை புறக்கணித்து சமூகத்திற்கு தீமை ஏற்படுத்தினால் அவன் கொண்ட கொள்கைக்கே மாற்றமானதாக அவன் நிலை இருக்கும். அதாவது

கடவுளை ஏற்காதவர் எப்படி இறை நம்பிக்கையாளர் என்று அழைக்கப்பட மாட்டானோ அதைப்போல கடவுளை ஏற்று அவனது போதனைகளின் படி வாழ்வை அமைக்காத அல்லது அவனது போதனைகளுக்கு மாறு செய்து வாழ்பவன் எப்படி கடவுளை ஏற்பவன் என்ற வட்டத்திற்குள் வைத்து பார்க்க முடியும்.? அவனை ஒரு முழுமைப்பெற்ற இறை நம்பிக்கையாளனாக ஏற்க முடியாது. 

 ஏனையவர்களை விட மதரீதியான குறியீடுகளால் ஒருவன் சமூகத்தில் அடையாளப்படுத்தப்படும்போது அவன் செய்யும் தவறுகள் திரிபு அடைந்து கடவுளின் நீததன்மையின் மேல் பழிப்போட வழிவகுக்கிகிறது! கடவுளின் கூற்றுக்கு மாறு செய்யும் எவரையும் கடவுளை பின்பற்றுவோராக இனியும் இச்சமூகத்தில் முன்மொழியக்கூடாது மாறாக இறைச் சொல்லுக்கு மாறுசெய்வோர் இறை நிராகரிப்பாளர் என்றே அடையாளப்படுத்தப்படவேண்டும்!

அப்படினா.... கடவுள் இவ்வாறு கொலை, கொள்ளை &Etc தவறுகள் செய்யும் மனிதர்களை ஏன் ஒண்ணும் செய்வதில்லை....? 

 நல்ல கேள்வி!

 இதற்கு இஸ்லாம் கூறும் இறை வழிக் கோட்பாடுகள் என்ன பதில் வைத்திருக்கிறது என முதலில் பார்க்கவேண்டும். பின்னே நமது நிலைப்பாட்டை அதில் பொருத்த வேண்டும். ஆனால் இக்கேள்வியே கேட்கும் பலரும்.. அதற்கான பதிலை தாங்களே வைத்திப்பதுப்போல...

 நானே இவ்வளவு நாள் கடவுளை கன்னாபின்னாவென்று திட்டிக் கொண்டிருக்கிறேன். இதுவரை என்னையே ஒண்ணும் செய்யவில்லையே உங்கள் கடவுள்...?


  மனிதனின் சுய நிலை எண்ணங்களின் வாயிலாக ஒரு செயலின் முடிவை தீர்மானிக்கும் வாய்ப்பு வழங்கப் பட்டிருப்பதால்  அவசரத்திலோ, ஆத்திரத்திலோ தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பிருக்கிறது. கடவுள் உடனுக்குடன் அவர்களுக்கு தண்டனை வழங்கினால் பின்னாளில் அவர்களின் தவறுகளுக்கு திருத்திக்கொள்ள வாய்ப்பும் இருக்காது.

மேலும் மக்களில் சிலர் வேண்டுமென்ற தவறுகள் செய்த போதிலும் அவர்களுக்கும் சிறு அவகாசம் கொடுக்கப்படுதற்காகவே காலம் தாழ்த்தப்படுகிறது. இதை தன் மறையில் இறைவன்

மனிதர்கள் செய்யும் அக்கிரமங்களுக்காக அல்லாஹ் அவர்களை உடனுக்குடன் பிடி(த்துத் தண்டி)ப்பதாக இருந்தால் உயிர்ப்பிராணிகளில் ஒன்றையுமே பூமியில் விட்டு வைக்க மாட்டான்; ஆனால், ஒரு குறிப்பிட்ட தவணை வரை அவர்களை(ப் பிடிக்காது) பிற்படுத்துகிறான் - அவர்களுடைய தவணை வந்து விட்டாலோ ஒரு கணமேனும் (தண்டனை பெறுவதில்) அவர்கள் பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். ((16:61))

என தெளிவாக பிரகனப்படுத்துகிறான். மாறாக உடனே தண்டிக்கவில்லை என்பதற்காக இறைவன் இல்லையென்றாகி விடாது. ஏனெனில் மனித தவறுகளுக்கு உடனுக்குடன் தண்டனை வழங்கினால் மட்டும் தான் கடவுள் இருப்பது உண்மையென்றால் அதற்கு பகரமாக தவறுகள் செய்யா நிலையிலேயே மனிதர்களை இயல்பாகவே கடவுள் படைத்திருக்கலாம். அதுவும் அனைவரையும் முஸ்லிம்களாகவே!

இறைவனை வணங்கி குற்றமிழைக்காத மக்கள் மட்டுமே இப்பூவியில் இருப்பர். அப்படி நன்மை செய்பவர்களை மட்டுமே வைத்துக்கொண்டு தீமையை தவீர்த்து வாழ சொல்வதில் எந்த அர்த்தமுமில்லை.

 தீமையும் -நன்மையும் கலந்த வாழ்வில் தனக்கு பாதகமாக இருப்பீனும் அத்தகைய சூழ்நிலையிலும் நன்மையே மட்டுமே மேற்கொண்டு ஒரு மனிதன் வாழ்கிறானா என சோதிக்கப்படுவதற்கே இவ்வுலக வாழ்க்கை!

                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "இறை வழிக்காட்டுதலும், மனித பின்பற்றுதலும் -எங்கே தவறு?"

Thursday, January 05, 2012

நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!


                                                     ஓரிறையின் நற்பெயரால்


இணைய வாசிப்பை தாண்டி., இணையத்தில் தம் வசிப்பை உறுதியாக்கும் நோக்குடனே பதிவுலகில் கரம் பதிந்தவர்கள் நம்மில் அதிகம்! நாம் சார்ந்த ஒரு கொள்கை கோட்பாடுகளை முன்னிருத்தியோ அதுவல்லாத மக்கள் பயன்பெறும் ஆக்கங்களையோ குறைந்தபட்சம் வெறும் பொழுதுப்போக்கான செய்திகளை வெளியிட்டோ நமது இருப்பை இணைய வாழ் உள்ளங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

குறிப்பாக சமூகம் பயனடைய வேண்டும் என்ற நோக்கில் தங்கள் வலைத்தளங்களை பலர் தொடங்கினாலும் இஸ்லாம் பணிக்கும் நன்மையை ஏவி தீமையை தடுக்கும் விசயங்களில் முஸ்லிம் பதிவர்கள் அவ்வாறு செயல்படுவதில்லை என்பதே பொதுவான பிற சமயம் சார்ந்த/சாரா பதிவர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு.! அதன் உண்மை நிலையை அசைப்போடுவதற்காகவே இப்பதிவு...  

முஸ்லிம் பதிவர்கள் குறித்து பரவலாக சொல்லப்படும் இரு குற்றச்சாட்டுகள்,

(1) அவர்கள் கொண்ட மதமான இஸ்லாத்தை பெரிதுப்படுத்தியும் அவர்களின் கடவுளான அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தியும் எந்த ஒரு சின்ன விசயமானாலும் சொல்கிறார்கள்.

(2) அவர்களில் சிலர், தீமை ஏற்படுத்தும் விசயங்களையும் பதிவிடுகிறார்கள்

  • ஒன்று., முஸ்லிம் பதிவர்களின் மீது தவறு
  • மற்றொன்று முஸ்லிம் பதிவர்களின் தவறு

அதற்கு முன்பாக...

நாம் பின்பற்றும் ஒரு கொள்கையானது அது எல்லா நிலையிலும், எல்லா காலங்களிலும் நமது வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்றாக இருக்கவேண்டும். அஃதில்லாமல் சில நேரங்களில் மட்டுமே அக்கொள்கையின் நிலைப்பாடுகளை பின்பற்றி ஏனைய காலங்களில் நமது எண்ணத்தின் படி நமது வாழ்வை அமைத்துக்கொள்ளலாம் என இருந்தால் நாம் பின்பற்றும் அந்த கொள்கை முழுமையானதல்ல என்று தான் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விதிமுறை, கொள்கைகளை அடிப்படையாக கொண்டு வாழ எத்தனிக்கும் எல்லா மதங்களுக்கும், மதம் சாரா இயக்கங்களுக்கும் பொருந்தும். மதங்களோ அல்லது வேறு கோட்பாடுகளோ மனித வாழ்வை சீர் செய்யவே உருவானதாக கூறினால் அதன் தலையீடு மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பிரதிபலிக்க வேண்டும்.

நம் வாழ்வில் எல்லா நிலைக்கும் வழிகாட்டுதலை நாம் பின்பற்றும் கொள்கை வகுக்கவில்லையென்றால் அதை எப்படி முழுமைப்பெற்ற ஒரு கோட்பாடாக சொல்ல முடியும்...?

முழுமைப்பெற்ற தொகுப்பாக இஸ்லாம் இருப்பதால் ஒரு முஸ்லிமின் எல்லா செயல்களிலும் அதன் தாக்கம் பிரதிபலிக்கிறது. காலையில் எழுந்து கழிவறை செல்வதிலிருந்து உண்டு, உழைத்து, உறங்க செல்லும் வரை இறைவனின் நெறிமுறைகள் அவன் தூதரின் வழிமுறையில் ஒரு முஸ்லிமீன் வாழ்வில் எல்லா நிலைகளிலும் அங்கம் வகிக்கிறது.

அப்படியிருக்க உலகத்தில் எங்கிருந்தாலும் வாழும் நிலைக்கு தோதான வாழ்வியல் நெறிகளை பின்பற்றும் இஸ்லாத்தையும், ஏற்படுத்தி தந்த அல்லாஹ்வையும் எந்த இடத்திலும் நினைவு கூற என்ன தயக்கம்? அதற்கு இணையம் மட்டுமென்ன விதிவிலக்கா?

நீங்க பின்பற்றுவதோட இருக்க வேண்டியது தானே.. மற்றவர்களையும் ஏன் இங்கே வா இங்கே வானு கூப்பிடுறீங்க? - படிக்கும் உங்களில் ஒருசிலர் இப்படி கேட்கலாம்.

அழைக்கிறோம் சரிதான்..

எதற்கு?

இங்கே வந்தா நாலு பொண்டாட்டி கட்டிகிட்டு ஜாலியா வாழ்க்கைய நடத்தலாம் அப்படின்னா.? 

  • ஏனைய மதங்கள் இப்படி வாழுங்கள் என்று சொல்லும் போது இஸ்லாம் மட்டுமே எப்படி வாழக்கூடாதென்றும் சொன்னது.
  • ஏனைய கோட்பாடுகள் உழையுங்கள் என்று சொன்னபோது போது இஸ்லாம் மட்டுமே வட்டி வாங்கி உண்ணாதீர்கள் என்றது.

அதுமட்டுமா...

  • இந்த சமூகம் முறையற்ற உறவுக்கு பாதுக்காப்பு அவசியம் என்று விளம்பரப்படுத்திக்கொண்டிருக்கும்போது விபச்சாரத்தின் பக்கமே நெருங்காதீர்கள் என்று எச்சரிக்கை விடுக்கிறது.
  • அங்கீகரிக்கப்பட்ட கடைகளில் மட்டுமே வாங்கி அருந்துங்கள் என்ற போது அல்கஹாலுடனான இறை வணக்கத்தால் எந்த பயனும் இல்லையென்று அறைகூவலிடுகிறது.

அரேபிய பாலையில் தொடரப்பட்ட அந்த இஸ்லாம் இங்குள்ள பாமர மக்களிலும் வாழ்விலும் படர என்ன காரணம்?
சிந்திக்க வேண்டும் சகோ..!

இனத்தால் அடையாளப்படுத்தினால்...
பிறிதொரு நிலப்பரப்பில் வேற்றினம் நாம்

மொழியால் அடையாளப்படுத்தினால்...
பிராந்திய மொழிகளுக்கு வேற்றாள் நாம்

எல்லைகளால் அடையாளப்படுத்தினால்
அயல் நாட்டிற்கு அந்நியம் நாம்

இப்படி எங்காவது ஒரு இடத்தில் முற்றுகையிடப்படும் அடையாளங்களை வைத்துக்கொண்டு எப்படி உலகளாவிய சகோதரத்துவத்தை அடைய முடியும்???

இப்படி இனம், மொழி, எல்லை கடந்து அனைவரையும் ஒரே அணியில் மட்டுமே நிற்க செய்யும் அந்த தூய மார்க்கத்தின்பால் மக்களை அழைப்பதில் என்ன தவறை கண்டு வீட்டீர்கள் சகோ..?

உங்கள் மீதும் உண்மையில் சாந்தியும் சமாதானமும் ஏற்படவேண்டும் என்பதற்காக அழைக்கும் அந்த அழைப்பை தவறென்று சொல்கிறீர்களா...? உங்கள் பார்வையில் இது தவறென்றால் நிச்சயமாக அதே தவறுகள் இனியும் தொடரத்தான் செய்யும் .....
* * * 
                                       

முஸ்லிம் பதிவர்களுக்கு இந்நேரத்தில் ஒரு ...

  • கோரிக்கை - 
  • அறிவிப்பு
  • வேண்டுகோள் - அல்லது
  • எச்சரிக்கை

(படித்த பிறகு உங்கள் மன நிலைக்கு தகுந்த ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள்)

தனிமனித ஒழுக்கம் மற்றும் பிறர் நலன் போன்றவற்றை மையமாகக்கொண்டு இங்கு எத்தனையோ முஸ்லிம் பதிவர்கள் ஆக்கத்தை ஒருபுறம் எழுதி வந்தாலும் மறுபுறம் அனேக அபத்தங்கள் நிறைந்த ஆக்கங்கள் வலம் வரத்தான் செய்கின்றன இஸ்லாமிய பதிவர்கள் சிலரின் பெயர்களில்...

ஏனைய பதிவர்கள் தேவையற்ற அருவறுக்கதக்க பதிவிடும் போது வரும் எதிர்மறை பின்னூட்டத்தை விட இஸ்லாமிய பதிவர்கள் வெளியிடும் அத்தகைய நெருடல் பதிவுகளுக்கு வரும் கண்டனங்கள் மிக அதிகம். இது தான் இச்சமூகம் இஸ்லாம் மீது வைத்திருக்கும் கண்ணியத்தின் அடையாளம்.

வீண், கொச்சை பதிவுகளை பதிவிடுவதால் ஒருவேளை மக்களில் ஒரு பகுதினரிடம் வேண்டுமானால் பிரபலம் அடையலாம். ஆனால் நடுநிலை மக்களின் பார்வையில் தங்களின் தரம் தாழ்ந்து போவதோடு இஸ்லாம் மீதான அதிருப்தியையும் அத்தகைய பதிவுகள் ஏற்படுத்தும்.

ஏனெனில் இஸ்லாம் அங்கீகரிக்காத செயல்களை இஸ்லாமிய பெயர்தாங்கிகளாக பதிவிடும் போது அங்கு நமது பெயர் மறையப்பட்டு முதல் நிலையில் வைத்து இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது. அடுத்தவர் இஸ்லாம் குறித்து வசைப்பாடும் போது அதை விளக்கி பதிவிட முடியாவிட்டால் கூட பரவாயில்லை. மட்டமான, ஆபாசமான செய்திகளை பதிவிட்டு இஸ்லாத்தை கேவலப்படுத்தாதீர்கள்!

நம் எழுத்துகளால் ஆயிரம் பேர்கள் நன்மையை நோக்கி வராவிட்டால் கூட நமக்கு ஒரு பாதகமும் இல்லை. மாறாக ஒருவர் தீமை நோக்கி செல்ல நமது எழுத்துக்கள் காரணமாகின் நிச்சயமாக அதற்கு இறைவனிடத்தில் நாம் பதில் சொல்லியாக வேண்டும்!

மஸ்ஜிதுகளின் வாசலோடு மார்க்கத்தை நிறுத்திவிட்டு மாற்று எண்ணங்களோடு எதையும் செய்வதற்கு இஸ்லாத்தில் இடமில்லை. அது இணையமாக இருந்தாலும் சரியே! ஏனையவைகளை போல இறைவன் நமக்களித்த அமானிதம் இணையம். அத்தகைய அமானிதம் குறித்தும் நாளை நாம் வினவப்படுவோம் என்பதை மறந்து விட வேண்டாம்!

டிஸ்கி: இது எதிர்ப்பதிவு / உள்குத்து பதிவோ அல்ல.. இணையத்தில் முஸ்லிம் பதிவர்கள் குறித்த என் பார்வையும், ஏனையவர்கள் குறித்த முஸ்லிம் பதிவர்கள் பார்வையின் விளைவே இவ்வாக்கம். 

பிற சேர்க்கை: இஸ்லாமிய பதிவர் வட்டம் எனும்போது அதில் நானும் அடக்கம். மேற்சொன்ன விசயங்கள் முதலில் எனக்கே பொருந்தும். பின்னரே ஏனைய பதிவர்களுக்கு சொல்கிறேன். இத்தளத்தில் மார்க்கத்திற்கு முரணாக விசயங்கள் இருப்பீன் சுட்டிக்காட்டுங்கள் இன்ஷா அல்லாஹ் நீக்கி விடுகிறேன்.

அப்புறம் ஒரு விசயம்
மைனஸ் வோட்டு போடுவதாக இருந்தால் ஒருவரியில் காரணத்தை சொல்லிவிட்டு தாரளமாக போட்டுக்கொள்ளவும்.
  

                                                          அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more "நிறம் மா(ற்)றும் பதிவுலகம்!"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்