"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, September 29, 2011

'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு.


                                          ஓரிறையின் நற்பெயரால்
     கடவுளின் இருப்பே தெரியவில்லை. இதில் அவர் கூறும் சொர்க்கம், நரகம் எனும் மறு உலகக் கோட்பாடு இருப்பது உண்மைதானா....?

  அடிப்படை மற்றும் ஆரம்பமாக இன்று வரை நாத்திகர்கள் முன்வைக்கும் கேள்வி இதுதான்... உண்மையாகவே இவை சிந்தனை ரீதியாக உயர்ந்த கேள்விகள் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை., கவனிக்க., இவை கேள்விதான் ஒழியே வரையறுக்கப்பட்ட முடிவுகளல்ல
(ஏற்கனவே கடவுள் குறித்த ஆக்கங்கள் இத்தளத்தில் காணக்கிடைப்பதால் மறுமைக்குறித்து இங்கு காண்போம்)
   
   இப்பிரபஞ்சத்தில் செயல்படும் எந்த ஒரு மூலத்தின் செயல்பாடுகளும் இருப்பெரும் தலைப்பின் கீழ் தான் வந்தாக வேண்டும்,


1.கருத்தியல் கோட்பாடு (Ideological theory) 
2.இயங்கியல் கோட்பாடு (Dialectical theory)

   இவற்றின் அடிப்படையில் நாம் ஒப்பு நோக்கும் ஒரு செய்கை கருத்தாகவோ அல்லது பொருளாகவோ இவற்றில் ஒரு வாதத்தை மையப்படுத்தி இருக்கவேண்டும். இதைத்தாண்டி மூன்றாம் நிலையில் ஒன்று இருந்தால் அது நம்பிக்கைச்சார்ந்த -விளக்கமுடியாத வெற்று ஊகங்களில் அமைந்ததாக அறிவியல் உலகம் கொள்ளும்.

    இவ்விதிகளே இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களுக்கும் அளவுகோல்., ஆக, இவற்றை அடிப்படையாக வைத்தே எந்த ஒன்றின் மூலத்தின் நம்பக தன்மையும் அறிய அதற்குரிய இலக்கணத்தோடு நிருபணமான ஆய்வு முடிவுகளை ஒப்பு நோக்க வேண்டும். அதன் வடிவிலக்கணம் ஒப்பிடும் அல்லது சோதிக்கும் அவ்வாய்வோடு நேர்கோணத்தில் அமைய பெற்றால் அந்த மூலம் நம்பக தன்மை வாய்ந்தது. அப்படி இல்லாது அவ்வாய்விற்கு நேர் எதிராக முரண்பட்டால் அச்செய்கை பிழையானது அல்லது பொய்யானது என முடிவு செய்யலாம்.
. . .  


  சரி இப்போது பதிவிற்கு செல்வோம்.,
   ஒரு செய்கைக்குறித்து இரு வேறுக்கருத்துக்கள் நிலவினால் அதன் உண்மை நிலையறிய அச்செய்கையின் வரைவிலக்கணத்தோடு மாறுபடும் அக்கருத்துக்களை ஒப்பு நோக்கவேண்டும். பின்பு எந்த கருத்துக்களோடு வரையறை செய்யப்பட்ட அதன் மூலம் பொருந்தி வருகிறதோ அக்கருத்து முன்மொழிவதே உண்மை.

    உதாரணத்திற்கு ஒரு திட அல்லது திரவ பொருளின் இருப்புக்குறித்து இருக்கருத்துக்கள் நிலவினால் இல்லையென்பதை விட இருக்கிறது என்பதை உண்மைப்படுத்தவே அதிக நிரூபணம் வேண்டும். இல்லையென வாதிடுவோர் அப்பொருளை தம் கண்ணால் காணவில்லையென்று பதில் தருவாரானால் அப்பொருள் அவர் முன் அல்லது அவரது கண்ணுக்கு தெரியாமல் இருப்பதே போதுமான சான்று. ஆக கண்ணுக்கு தெரியவில்லை என்ற ஒரு சதவீகித வாதமே அவரது உண்மை நிலைக்கு போதுமானதாகும்., மாறாக கண்ணுக்கு தெரியாத ஆனால் கண்ணுக்கு புலப்படக்கூடிய அத்திட, திரவப்பொருள் உண்டென்று வாதிடும் ஒருவர் அதை நிருபிக்க 99 சதவீகித சான்று தர வேண்டும் .

   ஏனெனில் நாம் எல்லோருக்கும் நன்றாய் தெரியும் எந்த ஒரு திட திரவ பொருளும் கண்களால் பார்த்து அறியக்கூடியதே மேலும், இப்பிரபஞ்சத்தில் உள்ள எந்த ஒரு பொருளுக்கான இலக்கணமும் மிக சரியாக தெளிவாக நம்மிடம் இருக்கிறது. ஆக எந்த ஒன்றை ஏற்பதையும் மறுப்பதையும் விஞ்ஞானரீதியில் உண்மைப்படுத்தலாம்.,

 இச்சோதனை முறையோடு மறுமைக்கோட்பாட்டை ஒப்பு நோக்குவோம்
   ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலால் மட்டுமே நூறு சதவீகித உண்மையாகும் மறுமைக்குறித்த கேள்விக்கு மிக சரியாக இரண்டுக்கும் 50 சதவீகித வாய்ப்பு இருக்கிறது. ஆக மறுமை உண்டென்பதை நிருபிக்க இருக்கும் 50 சதவீகிதம் போலவே இல்லையென்பதை நிருபிக்கவும் 50 சதவீகிதம் வாய்ப்பிருக்கிறது.,

   ஆனால் பொதுவாக சாத்தியக்கூறுகள் விதிப்படி இல்லை என்பதை விட இருக்கிறது என்பதை நிருபிக்கவே அதிக சிரத்தை எடுக்க வேண்டும் என்பதை மேற்கண்ட உதாரணம் வாயிலாக அறிந்தோம். ஆனால் மறுமைக் கோட்பாட்டின் மூலம் (Origin) அறிவியல் வரையறுத்த பண்பில் அடங்கும் பொருளாகவோ அல்லது கருத்தாகவோ இருந்தால் நிருபிக்க வழியின்றி இச்சோதனையில் மறுமைக்கோட்பாடு முரணான பதிலை தான் தரும்.,அதை மறுக்கும் நாத்திகம் நூறு சதவீகித வெற்றி காணும்.

  ஆனால் அறிவியலோடு ஒப்பு நோக்கி அதை தவறு என்று பொய்பிக்க முதலில் மறுமைக்கோட்பாடின் இலக்கணம் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்
 மறுமை எனும் கோட்பாட்டை குறித்து இங்கு நீங்களும் நானும் பேசுகிறோம் என்றால் அதற்கான மூலம் குர்-ஆனிலிருந்தே பெறப்படுகிறது. மாறாக இதுவல்லாத வேறு ஒன்றின் வழியாக அறியப்படவில்லை.

    ஆக மறுமையெனும் மூலத்தின் வரையறையை குர்-ஆன் கூற்றை அடிப்படையாக வைத்தே எதனுடனும் ஒப்பு நோக்க வேண்டும். ஆனால் குர்-ஆனோ மறுமையென்பது இப்பேரண்ட விதிகளை தாண்டி உருவாக்ககப்பட்டதாக கூறும் போது இருப்பெரும் (கருத்து அல்லது பொருள் எனும்) பிரிவுகள் கீழ் நிறுத்தி மறுமைக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியாக எப்படி பொய்பிக்க முடியும்?

   மேலும் எந்த வழிகளிலும் அறிவியல் வரையறுக்கும் வடிவிலக்கணங்களில் மறுமையை சுட்ட முடியாது என்பதை மிக தெளிவாக விவரிக்கும் போது மனித உருவாக்க சாதனங்களால் மறுமைக்கோட்பாட்டை சோதித்து அறிய முடியும்? அல்லது சோதித்தல் என்பது எப்படி பொருந்தும்?

  ஆக அறிவியல் ரீதியாக இப்பிரபஞ்ச விதிகளுக்குள் வரையறை செய்யப்படாத மறுமையை உணடு என வாதிடுவோர் அறிவியல் ரீதியாக நிருபிக்க ஒரு சதவீகிதம் கூட நிருபணம் தர தேவையில்லை.ஆனால் அறிவியல் வரையறுக்கும் பண்புகளில் பொருந்தாத ஒன்றை விஞ்ஞான ரீதியில் இல்லையென்று நிரூபிப்பதாக இருந்தால் நூறு சதவீகித மேற்கண்ட இரு பிரிவுகளை தாண்டி மூன்றாம் நிலை காரணத்தை தேட வேண்டும். 
     
   ஆக இங்கு மறுமை உண்டு என்பதை அறிவியல் ரீதியாக நிருபிக்க அவசியமில்லை. என்பதை விட மறுமை என்ற ஒன்று இல்லை என்பதை நிருபிக்க அறிவியலுக்கு வழியே இல்லை.

சரி, தர்க்கரீதியாக மறுமையை மறுப்பதால் நாத்திகத்திற்கு பயனுண்டா... என்றால் வழக்கம்ப்போல் அதுவும் இல்லை... 

   இஸ்லாம் கூறும் மறுமைக் கோட்பாட்டை ஏற்பதால் தனி மனித ஒழுக்கமும் பிறர் நலன் பேணுதலுமே இச்சமுகத்திற்கு அதிகம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. காரணம் இறப்பிற்கு பின்னுண்டான வாழ்வில் தமது செய்கை குறித்து வினவப்படுவோம் என்ற இறையச்ச உணர்வே பாவமாக காரியங்களில் ஈடுபடும் எண்ணத்தை குறைக்கும்.

    மாறாக தன் மன இச்சைகளை பின்பற்றி தான் எடுக்கும் முடிவுகளின் படி வாழ்வை மேற்கொள்வதால் எல்லா தருணங்களிலும் நூறு சதவீகித நன்மையான மற்றும் பிறருக்கு தீங்கு தராத முடிவுகளை நாம் மேற்கொள்ள முடியாது.,-


சரி இப்போது முரண்பாட்டின் அடிப்படையில் ஒரு சோதனைக்கு தயாராவோம்..!

இவ்வுலகில் இறப்பிற்கு பிறகு ஒரு மறுமை வாழ்வு என்றொன்று இல்லை., நாம் அனைவரும் மண்ணோடு மண்ணாக மக்கி போய்விடுவோம் என வைத்துக்கொள்வோம். 


  இதனால் கடவுளை ஏற்றவர்- நிராகரித்தவர் அடையும் பயன்பாடு என்ன என்பதையும் காண்போம்.

      சராசரியாக மனிதர்களின் ஆயூட்காலம் அறுபது என வைத்து இரு தரப்பினரின் வாழ்வியல் நிலைக்குறித்த கணக்கீட்டை காண்போம்

   கடவுள் இல்லையென்று எண்ணத்துடன் வாழ்ந்து கடவுளுக்கு செய்யவேண்டிய செயல்ரீதியான வழிப்பாடு பணிகளையும் செய்யாமல் தம் வாழ்வின் எல்லா தருணங்களையும் கழித்து கடவுளுக்காக எப்பணிகளையும் மேற்கொள்ளாமல் சிரமமின்றி வாழ்ந்ததால் அவருக்கு எந்த நஷ்டமும் ஏற்பட போவதில்லை.,

  அறுபது வருட வாழ்வு முழுவதும் இலாபம்

  • ஆக அவர் வாழ்வின் பெற்ற இழப்பு =        0 %
  • மாறாக பெற்ற வாழ்வியல் பயன்பாடு = 100 %

      மாறாக கடவுள் உண்டு என நம்பி அவனுக்காக வணங்குதல் மற்றும் இதர கடமைகளை மேற்கொண்டவரின் வாழ்வியல் பயன் மற்றும் இழப்பை கணக்கிட்டால்.,
 பொதுவாக இஸ்லாம் எல்லா தருணங்களிலும் இறையை நினைக்க சொன்னாலும் அஃது இது உணர்வுரீதியான கணக்கீட்டில் வருமே தவிர செயல்ரீதியான கணக்கீட்டில் சேராது ஆக செயல்ரீதியாக தொழுகை, நோன்பு , ஹஜ் போன்றவற்றிற்காக ஒரு இறை ஏற்பாளன் அடைந்த இழப்பை காண்போம்

முதலில் தொழுகை
  ஒரு நாளைக்கு கண்டிப்பாக ஐந்து நேர தொழுகைக்காக சராசரியாக பதினைந்து நிமிடங்களை ஒருவர் எடுத்துக்கொள்கிறார் எனில் அவர் ஒரு நாளைக்கு எழுபத்தைந்து நிமிடங்களை இறைவனுக்காக செலவழிக்கிறார். அதாவது
5 x 15 = 75 
ஒரு நாளைய எழுபந்தைந்து நிமிடத்தை ஆண்டிற்கான எண்ணிக்கைக்கு உட்படுத்தினால் 
0.000142694  ஒரு ஆண்டிற்கு வரும்
இதை அவரது ஆயுள் சராசரியோடு சமன்படுத்தினால் 
0.000142694  X  60 
ஆக வாழ் நாள் முழுவதும் அவர் தொழுகைக்காக செலவழித்த ஆண்டுகள் 
0.00856164 வருடம்

  ஆயுளில் ஒரு வருடத்திற்கும் குறைவான நேரத்தையை ஒரு சராசரி இறை ஏற்பாளன் தொழுகைக்காக பயன்படுத்துகிறார்.எனினும் குறைந்தபட்சமாக ஆண்டு கணக்கீட்டில் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்.
ஆக தொழுகைக்காக தம் வாழ் நாளில் ஒரு வருடம் செலவழிக்கிறார்


அடுத்து நோன்பு
             ஒரு வருடத்திற்கு ஒரு முறை ரமலான் மாதம் முழுவதும் கண்டிப்பாக நோன்பு நேற்பது கடமையாக பணிப்பதால் வருடத்திற்கு ஒரு மாதத்தை நோன்பிற்காக செலவழிக்கிறார். ஆக அவரது ஆயூளின் சராசரியோடு அவர் நோன்பிற்காக செலவழித்த மாத்த்தை கணக்கிட்டால்
1 X 60 = 60 ÷ 12 = 5
ஆக நோன்பிற்காக தம் வாழ் நாளில் ஐந்து வருடம் செலவழிக்கிறார்

இறுதியாக ஹஜ்
          மற்ற இரண்டைப்போல கட்டாய கடமையல்லாமல் வாய்ப்புள்ளோருக்கு மட்டுமே இக்கடமை பணிக்கப்பட்டதாக இருப்பதால் இதற்கான ஒருவர் செலவழிக்கும் காலத்தை அறுதிட்டு கூற முடியாது.காரணம் எல்லோரும் ஹஜ் செய்வதில்லை அதேப்போல ஒருசிலர் ஒன்றிற்கு மேற்பட்டும் ஹஜ் செய்கிறார்கள்.ஆக தோரயமாக எல்லா இறை ஏற்பாளர்களும் வாழ் நாளில் ஒரு முறை ஹஜ் செய்வதாக கொள்வோம்.,

    ஆக இந்த கடமைக்காக ஒருவர் மேற்கொள்ளும் பயணத்திற்காகவும், திரட்டும் நிதிக்காகவும் உடலியல் உழைப்புக்காகவும் சராசரியாக இரண்டு வருடங்களை செலவழிக்கிறார் என கொள்வோம்
ஆக வாழ் நாளில் ஹஜ் எனும் கடமைக்காக இரண்டு வருடங்கள் செலவழிக்கிறார்.

    இதுவே முக்கியமாக மற்றும் முதன்மையாக ஒரு இறை ஏற்பாளன் வாழ் நாளில் செயல்ரீதியாக இறைவனுக்கு செலவிடும் காலங்கள் ஆகும். மேலும் சுன்னதான தொழுகை, நோன்பு மற்றும் இதர உபரியான வணக்கங்களுக்கு மேலும் ஒரு வருடத்தை செலவழிப்பாக வைத்துக்கொள்வோம்
ஆக உபரியான வணங்களுக்காக ஒரு வருடம் செலவழிக்கிறார்.

  • தொழுகைக்காக =                ஒரு வருடம்
  • நோன்பிற்காக =                    5 வருடங்கள்
  • ஹஜ்ஜூக்காக =                      2  வருடங்கள்
  • உபரி வணக்கத்திற்காக =  ஒரு வருடம்


    இது தவிர்த்த ஏனைய வாழ்வியல் நடத்தைகளில் உண்ணுதல், உறங்குல், குடும்பம், அரசியல் மேலும் பல பொதுவான செய்கைகளில் இறை மறுப்பாளர்களைப்போலவே காலத்தை கழிக்கிறார்
ஆக வாழ் நாளில் இறைவனை வழிப்படுவதற்காக செயல்ரீதியான சிரமத்தின் அடிப்படையில் சராசரியாக ஒன்பது ஆண்டுகளை செலவழிக்கிறார்

  60 : 9 
எனில் இதை
100 % வாழ்வாக கொள்ளும் போது
100 / 60 X 9 = 15


    ஆக ஒரு இறை நிராகரிப்பாளரை விட இறை ஏற்பாளர் இறைப்பணிக்காக தமது மொத்த வாழ்வில் 15 % இழக்கிறார். (ஆக 100-15 = 85 %  வாழ்வியல் இலாபம்)

மறுமை வாழ்வு என்ற ஒன்று இல்லையென்றால்

  • இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = 100 %
  • இறை ஏற்பாளர் அடையும் பயன் =            85 %

. . .  
         சரி., இப்போது மறுமை வாழ்வு உண்மையென்ற கோணத்தில் அணுகுவோம்.


   இறை உண்டென நம்பி அவனை வணங்குவதில் தம் வாழ் நாளில் செயல்ரீதியாக ஓரு பகுதியை கழித்தால் அதற்கு பகரமாக சொர்க்கம் பெறுவார்.
ஆக இறை ஏற்பாளர் அடையும் வாழ்வியல் பயன்பாடு = 100 %

     மாறாக வாழும் காலம் முழுவதும் இறை வழிக்காடுதலின் படி அவனது வழிமுறைகளை பின்பற்றாது இறை நிராகரிப்பாளர் வாழ்ந்ததால் அவருக்கு சொர்க்கம் இல்லை.  சொர்க்கம் மட்டும் இல்லையென்பதோடு மட்டும் வரையறை செய்யப்பட்டிருந்தால்
அவர் வாழ்வியல் பயன்பாடு = 0 சதவீகிதமாக மட்டும் இருக்கும். ஆனால் இறையை வணங்காது வாழ்ந்ததால் நரகம் கிடைக்கும் என்கிறது. ( + >> 0 >> - )
ஆக அவரது வாழ்வியல் பயன்பாடு = -100%


மறுமை வாழ்வு உண்டென்றால்

  • இறை நிராகரிப்பாளர் அடையும் பயன் = -100 %
  • இறை ஏற்பாளர் அடையும் பயன் =           100 %
. . .  
இவ்விரு நிலைகளின் படி இரு சாராரும் அடைந்த பயன்கள்

மறுமை இல்லை
இறை நிராகரிப்பாளர் = 100 % 
இறை ஏற்பாளர் =            85 %

 மறுமை உண்டு
இறை நிராகரிப்பாளர் =  - 100 % 
இறை ஏற்பாளர் =             100 %

ஆக மறுமை என்ற ஒன்று இருந்தாலும் இல்லாவிட்டாலும் இருசாரார் அடையும் பயன்பாடு

இறை மறுப்பாளர்:

     100 + (-100)
  ------------------   = 0  %
         2      

இறை ஏற்பாளர்

85 + 100
--------------    =  92.50 %
     2 

அல்ஹம்துலில்லாஹ்!  அறிவியல் ரீதியாகவும் தர்க்கரீதியாகவும் மறுமைக்கோட்பாடு இறை நம்பிக்கையாளர்களுக்கே சாதகமான நிலையில் அமைந்திருக்கிறது ஆக,

 \
  • அதீத கற்பனையால் , 
  • தவறான புரிந்துணர்வால், 
  • முரண்பாடான அறிவியல் அணுகுமுறையால், 
  • தான் தோன்றித்தனமான விளக்கத்தால், 
  • வீம்பான (பிடி)வாதத்தால், 
  • பொறுப்பற்ற வெறுப்புணர்ச்சியால்

இறைக்குறித்து விமர்சிக்கும் நாத்திக
  "வாழ்வை பூஜ்யமாக்கும் மறுமைக்கோட்பாடு"                
                               என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.,  

குறிப்பு
மேற்கண்ட விளக்கமெல்லாம் இரண்டாம் (நிலைக்)காரணம் தான். 
மறைவான வற்றின் மீதும் நம்பிக்கை வைத்தல் என்ற இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளின் கீழ் தான் மறுமையை நம்புவது வருகிறது.ஆக மறுமையே ஏற்பதற்கு இதுவே இறை நம்பிக்கையாளர்களுக்கு முதன்மைக்காரணம். 

                                     அல்லாஹ் நன்கு அறிந்தவன்

read more "'வாழ்வை பூஜ்யமாக்கும்' மறுமைக்கோட்பாடு."

Friday, September 23, 2011

நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                       ஓரிறையின் நற்பெயரால்.,
           தம் கொள்கைப்படி வாழ மக்களை பின்பற்ற அழைக்கும் ஒரு மதமோ அல்லது மதம் சாரா இயக்கங்களோ தங்களுக்கென ஒரு கோட்பாட்டை ஒரு வரையறை செய்திருக்க வேண்டியது அவசியம். அக்கோட்பாடு சரியானதா அல்லது தவறானதா என்பது அதுக்குறித்து விவாதிக்க படும்போது அறிந்துக்கொள்ளலாம். 

       ஆனால் கடவுளை ஏற்றுக்கொள்ளாமல் அதை எதிர்க்கும் நாத்திகம் என்ற ஒரு கொள்கை(?) கடவுள் மறுப்பு அல்லது எதிர்ப்பு என்ற பிரதான ஒரு காரணத்தை மட்டுமே முன்னிருத்தி இச்சமுகத்தில் தன்னை ஒரு இயக்கமாக நிறுவ முயல்கிறது, கம்யூனிஷ மற்றும் திராவிட இயக்க சாயல் இவற்றில் இருந்தாலும் உலகம் தழுவிய அளவில் ஒரே கொள்கை கோட்பாடுகளை கொண்ட ஒரு பேரியக்கமாக நாத்திகம் இல்லை., கொள்கைரீதியில் தனக்கென வரையறை கொள்ளாவிட்டாலும் வாழ்வியல் முறையிலாவது தனக்கென தனிச்சட்டங்கள் ஏற்படுத்தி இருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை.,  

        மதங்கள் முன்னிறுத்தும் சடங்கு சம்பிரதாயங்கள் போலியானது என புறந்தள்ளி வாழ்க்கைக்கும் வாதத்திற்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் எந்த ஒரு செய்கையும் நடைமுறை வாழ்க்கையில் செயல்படுத்துபவர்களே நாத்திகர்கள் என இச்சமுகத்தில் அவர்களுக்கு ஒரு குறீயிடு உண்டு. ஆனால் எதை மதங்கள் மேற்கொள்வதாக விமர்சித்து அதை விடுத்தார்களோ அத்தகைய செயலை பகுத்தறிவு போர்வையில் தமது அன்றாட நடைமுறை வாழ்வில் அவர்கள் மேற்கொள்வது தான் அபத்தமானது... ஏன் அறிவுக்கு பொருந்தாததும் கூட., அவற்றில் ஓரிரண்டு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

 வணக்கம்???
    பொதுவாக மதங்களின் அடிப்படை கொள்கை "இறையை வணங்குதல்" ஆகும். ஆக வணங்குதல் அவசியமற்ற ஒன்று என்று அசெய்கையே எதிர்க்கும் நாத்திகர்கள்., அச்செயலுக்கு சொல் வடிவம் கொடுத்து ஏற்பது தான் நடை முறை வாழ்க்கையில் நாத்திகம் கொள்ளும் நூறு சதவீகித தெளிவான முரண்பாடு.

         இஸ்லாம் தவிர்த்த ஏனைய மதங்களை பின்பற்றுவோர் சர்வசாதாரணமாக ஒருவரை ஒருவர் சந்திக்கின்ற போது பெரும்பாலும் "வணக்கம்" என்ற வார்த்தையையே உபயோகப்படுத்துகிறார்கள். இது அறிமுகப்படுத்தும்போது வாழ்த்துச்செய்தியாக கொண்டாலும் இது இறைவனுக்கு மட்டுமே உரித்தாக வேண்டிய ஒரு செயல் வடிவ வார்த்தை.

   சரி மதங்களை பின்பற்றோர் தான் தவறாக இறைவனுக்கு மட்டுமே கொடுக்கவேண்டிய கண்ணியத்தை சக மனிதர்கள் மத்தியில் சொல்கிறார்களென்றால் பகுத்தறிவில் செயல்படும் நாத்திகர்களும் அதே வார்த்தையே சொல்வது தான் ஏற்றுக்கொள்ள முடியாதது.

        ஏனெனில் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொள்ளும் போது உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டும் என்று சொல்வதே ஏற்புடைய வார்த்தையாக இருக்கும் ஏனெனில் எந்த ஒரு மனிதருக்கும் அமைதி மற்றும் சமாதானம் என்பது எல்லா காலங்களிலும் தேவையான ஒன்று. மேலும் இவ்வாக்கியத்தை ஒருவரை சந்திக்கும் எல்லா தருணங்களிலும் உபயோகப்படுத்தலாம். ஆக மேற்கண்ட வரிகளே மனித அறிமுக பொழுதுகளில் சொல்வது ஏற்புடையதும் பிறிதொருவர் மேல் கொண்ட அக்கறைக்கு உரித்தான வார்த்தையாக இருக்கும்.,

  எனினும் அவ்வார்த்தை ஒரு மார்க்க/ மத ரீதியான அடையாளத்தை ஏற்படுத்தும் என குறை சொன்னாலும் பரவாயில்லை., உடன்பாட்டு முறையில் அதை ஏற்றுக்கொள்வோம்., மேற்கண்ட வார்த்தைகள் சொல்வது வேண்டாம் என்ற போதிலும் குறைந்த பட்சம் நீங்கள் நலமாக இருக்கிறீர்களா? என்று கேட்பதே ஏற்புடைய வார்த்தையாகும்.

             வணக்கம் என்ற வார்த்தையின் விளக்கம் குறித்து சற்று ஆராய்ந்தால் இவ்வார்த்தை தமிழ் மொழியில் இருவேறு அர்த்ததில் கையாளப்படவில்லை., மேலும் இதற்கு வேறு மறைமுக பொருளும் இல்லை., இவ்வார்த்தை வணங்குதல் அல்லது வணங்கப்படுதலை மட்டுமே மையப்படுத்திய ஒரு  இணைப்பு வார்த்தையாகும்-  தமிழ் பொருளகராதியில் இவ்வார்த்தையின் பொருள் குறித்து பார்த்தாலும் வணக்கம் என்ற தனிச்சொல்லுக்கு எந்தவித அர்த்தமும் கிடையாது வேறு வினை/பெயர்ச்சொல்லுடன் சேரும் போதே பொருள்கொள்ளப்படுகிறது. உதாரணமாக வணக்கம் தெரிவிக்கிறேன்., உன்னையே வணங்குகிறேன்.. இப்படி.,

    ஆக எதிரில் நிற்கும் ஒருவரை சுட்டி "வணக்கம் என்ற சொல்லை உபயோகித்தால் அச்சொல் அர்த்தம் பெற்று அவர் வணக்கத்திற்குரியவராக பொருள்படும். எதையும் அறிவுரீதியாக அணுகி சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகம், அடிபணிதலுக்குறிய பிரத்தியேகமான சொல்லாடல் வார்த்தையை பயன்படுத்துவது ஏன்? அதுவும் அவர்களின் அடிப்படைக்கு கூற்றுக்கு எதிராக அவ்வார்த்தை இருந்தும்..?

   இல்லை...இல்லை வணக்கம் என்ற வார்த்தையை வணங்குதல் என்ற பொருளில் பயன்படுத்த வில்லை மாறாக ஒருவரின் அறிமுக துவக்கத்தில் வெறும் வழக்கு சொல்லாக தான் பயன்படுத்துகிறோம் என்றால்., மேற்குறிப்பிட்ட அற்புத முகமனோடு அனேக வார்த்தைகள் அழகிய தமிழில் அணிவத்திருக்க வெறுமனே வாய் உச்சரிப்பிற்காக பொருளற்ற வெற்று வார்த்தையே பயன்படுத்த வேண்டிய அவசியமென்னே?



அடுத்து, பிறந்த நாள் கொண்டாட்டம்.

      மதம் தவிர்த்தும் ஏனைய இயக்கம் சாந்தவர்களாலும் பிறந்த நாள் கொண்டாடுவதை நாம் அன்றாடம் வாழ்வில் பார்த்து தான் வருகிறோம்., அதிலும் இறந்த தலைவர்களுக்கு மாலை அணிவித்து அவர்களின் பிறந்த நாளை கொண்டாடும் வழக்கம் தேவையா இல்லையா என்பதை விட முதலில் அது அறிவுக்கு பொருத்தமானதா...?
(( இங்கு எல்லோரையும் குறித்து பேசவில்லை, பகுத்தறிவு பேசும் நாத்திகர்களை குறித்தே ))

      ஏனெனில் ஒருவர் இறந்தவுடனேயே அவரது வாழ் நாள் வரையறுக்கப்பட்டு அவரது ஆயூட்காலமும் கணக்கிடப்பட்டு அவரது செய்கைகள் முடிவுறுகின்றன. அப்படியிருக்கும் போது இறந்த மனிதர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதென்பது எப்படி சாத்தியமாகும்..? வருடா வருடம் பிறந்த நாள் என்ற பெயரில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கும் சடங்கு தமிழகத்தில் திராவிட கழக பெயரில் நாத்திகர்கள் நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

   உயிருள்ளவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவது தேவையில்லையென்ற போதிலும் அது அவர்களுக்கு மன மகிழ்ச்சியளிக்கும் என்ற விதத்திலாவது அச்செய்கையை நியாயப்படுத்தலாம்., ஆனால் இறந்தவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதற்கு பெயர் தானா.. பகுத்தறிவு???

      இச்செயலை நியாயப்படுத்த, நாங்கள் பெரியார் புரிந்த சேவைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்கும் முகமே அவர் சிலைக்கு மாலை அணிவிக்கிறோம் என சமாதானம் சொல்கின்றனர்., ஆனால் ஒரு மனிதர் மேற்கொண்ட சேவைக்கு கொடுக்கும் கண்ணியத்தின் வழிமுறை அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவிப்பதிலா இருக்கிறது..? அதுவும் எதை வணங்கும் பொருளாக ஆக்க வேண்டாம் என்று மறுத்தாரோ அத்தகைய கல்லிலே அவரை வடித்து மரியாதை எனும் பெயரில் வருடத்திற்கு ஒரு முறை மாலை அணிவிப்பதை சடங்காக செய்து வருவதுதான் உச்சக்கட்ட கொடுமை.,

     ஆக இறந்த ஒருவரை கண்ணியப்படுத்துதல் என்பது அவரது எண்ணத்தை பூர்த்தி செய்வது , அல்லது அவரது சொல்லுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கிறது., இன்னும் அதிகப்பட்சமாக அவர் பெயரில் பொது மக்களின் நலத்திற்கு தேவையானவற்றை ஏற்படுத்துவது மற்றும் உருவாக்குவது அவர் கொணர்ந்த கொள்கைக்கு மதிப்பு கொடுக்கும் விதமாக அமையும். மாறாக "மாலை அணிவிப்பதில் மாற்றமடைய போவதில்லை மரித்தவரின் மரியாதை.!"
   
          இச்செயலை நாடு தழுவிய அளவில் உள்ள அனைத்து நாத்திகர்களும் செய்யவில்லை மாறாக சில "இயக்க தோழர்கள்" மட்டுமே செய்வதாக சொன்னாலும் .இஃது அறிவுக்கு பொருந்தாத இச்செயலை ஏன் ஏனைய நாத்திகர்கள் எதிர்க்கவில்லை... குறைந்த பட்சம் விமர்சிக்கக்கூட வில்லை?
 
ஆக,
     1. இறந்தவருக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும்
     2. ஒருவரை கண்ணியப்படுத்த அவரது உருவப்படத்திற்கு அல்லது சிலைக்கு மாலை அணிவிப்பதும்
  நடைமுறை வாழ்வில் நாத்திகம் சந்திக்கும் இரண்டாவது தெளிவான முரண்பாடு.  

எங்கள் தலையின் மீது பாரமாகக் கட்டி வைத்த இழிவை இறக்கத் தான் நாங்கள் பிரச்சாரத்தைச் செய்து வருகிறோமே தவிர, கடவுளையும் மதத்தையும் பற்றி கடுமையாகப் பேசி மக்களின் மனதைப் புண்படுத்த வேண்டும் என்பதற்காக அல்லவே!
-தந்தைபெரியார் - "விடுதலை" 15-2-1973
(This quote taken from tamil oviya blogspot)

அதுப்போல,
பெரியாரின் போதனைகளை பின்பற்றுவோரை குறித்து இங்கு நான் விமர்சிக்க வில்லை மாறாக அவரது பெயரை வைத்து பகுத்தறிவுக்கு பொருத்தமில்லாத செய்கைகளின் ஈடுபடும் நாத்திகர்களை குறித்தே இங்கு விமர்சனம்.!


சார்ட்டா சொல்லணும்னா...
   மதங்களின் போலி சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மறுக்கும் நாத்திகர்கள் அதே, மதம் சார்ந்த நபர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஏன்? அதுவும் பகுத்தறிவிற்கு பொருத்தமில்லாத வகையில் இருந்தும் கூட???


இதுவே அல்லாஹ்வின் நேர்வழியாகும் - இதன் மூலம், தான் நாடியவர்களை அவன் நேர்வழியில் செலுத்துகிறான். ஆனால், எவனை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறானோ, அவனை நேர்வழியில் நடத்துவோர் எவருமில்லை. (39:23)
                                                                             அல்லாஹ் நன்கு அறிந்தவன்.

read more "நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!"

Thursday, September 08, 2011

மரணம்:- பொய்க்கும் நாத்திகம்


                             ஒரிறையின் நற்பெயரால்
  •   நேத்து வரைக்கும் நல்லாதானே இருந்தாரு... இன்னைக்கு பொசுக்குனு போய்ட்டாரு....
  • அட! காலையிலே தானே பாத்தேன்....அடடா...அதுகுள்ள என்னாச்சி அவருக்கு...
  • நைட் நல்லாதாங்க படுக்க போனாரு...காலையிலே பாத்தா... 

     சராசரி மனிதர்கள் வாயில் அன்றாடம் வலம் வரும் வார்த்தைகள் தான் இவை., சாதாரணமாக தெரியும் இவ்வெளிய வார்த்தைகளுக்குள் நாத்திகம் பதில் தர மறக்கும் / மறுக்கும் அனேக உண்மைகள் உறங்கி கொண்டிருக்கிறது... தட்டியெழுப்ப டிரை பண்ணுவோம்.

மரணம் -
 
  நாம் விரும்பினாலும்-விரும்பாவிட்டாலும் நம்மை வந்தடைவது உறுதி என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அப்படிப்பட்ட மரணம் மனிதன் உட்பட எல்லா உயிர்க்கும் பொதுவாக நிகழ்ந்தாலும் அஃது ஒரே மாதிரி நிகழ்வதில்லை...  என்பது தான் இவ்வாக்கத்தின் மையக்கருத்து.


அதற்கு முன்பாக,

இறப்பு என்பது உயிரினங்களின் இயக்கங்களை  வரையறுக்கும் உயிரியற் செயற்பாடுகள் நிரந்தரமாக நின்றுவிடுவதைக் குறிக்கும். நவீன அறிவியலின்படி இந் நிகழ்வு அவ்வுயிரினத்தின் முடிவு ஆகும். -விக்கிப்பீடியா

இவ்வாறு விளக்கம் தருகிறது.,

  உடலின் இயக்கத்திற்கு தேவையான உயிரியல் செயல்பாட்டுக்கூறுகள் முழுவதும் ஒரே நேரத்தில் செயலிழக்கும் போது இறப்பு ஏற்படுகிறது அதாவது.,

" தொடர்ந்து சுத்திகிட்டு இருக்கும் ஒரு காத்தாடி பவர் போனா... அதன் சுழற்சியை கொஞ்ச கொஞ்சமா ஸ்டாப் பண்ணி அதன் கட்டுப்பாட்டை முழவதும் இழந்து வெறுமனே நிக்கும் பாத்திங்களா அதுப்போல.,

   இவ்வாறு மரணம் குறித்து அறிவியல்ரீதியான விளக்கம் சொல்லப்பட்ட போதிலும் ஏற்படும் மரணத்திற்கு தான் காரணங்கள் கூறப்படுகிறதே தவிர மரணம் ஏன் ஏற்பட வேண்டும் என்பது குறித்து அறிவியலும் ஆழ்ந்த குழப்பத்தில் தான் இருக்கிறது

     அதாவது அறிவியல் வரையறை தரும் மரணத்தை நாத்திக சிந்தனை மேற்சொன்ன இலக்கணப்படி ஏற்றுக்கொண்டாலும், உலகில் ஏற்படும் அனைத்து மரணங்களுக்கும் ஒரே மாதிரி வரையறையை நாத்திகம் ஏற்படுத்தவில்லை.  -இது தான் நாத்திகம் சந்திக்கும் பிரச்சனை
 
    எதையும் காரண காரியத்தோடு அலசி ஆராய்ந்து அறிவுக்கு பொருந்தமாக இருந்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும் நாத்திகம். மரணம் ஏற்படுவது குறித்தும் அஃது ஏன் ஏற்படுகிறது என்பது குறித்தும் தெளிவான காரணிகளை வைத்திருக்க வேண்டும், முதலில்.,
 மரணங்கள் ஏற்படும் விதம் குறித்து காண்போம்.

        எந்த ஒரு செயல் நடைபெறுவதற்கும் காரணங்கள் இருக்கவேண்டும் என்பதே நாத்திகர்களின் மையக்கருத்து,
   அதனடிப்படையில் மரணம் என்பது உயிரியல் செயற்பாடுகளோடு தொடர்புடையதால் ஒரு மரணம் நிகழ அறிவியல் ரீதியான காரணம் வேண்டும். அதாவது ஒவ்வொருவரின் இறப்புக்கு பின்னரும் நமக்கு அறிவுக்கு பொருந்தக்கூடிய காரணம் இருக்க வேண்டும்.
  அப்படியிருந்தால் மட்டுமே நாத்திகம் அச்செயல் உண்மையென நம்பும். அதனடிப்படையில் இன்று உலகில் பல்வேறு வகையில் உயிரிழப்புகள் நிகழ்கிறது.

  • மாரடைப்பு ஏற்பட்டு,
  • சீறுநிரகம் பழுதுப்பட்டு
  • வெள்ளம், தீ, கட்டிட இடிபாடுகள் போன்ற இயற்கை சீற்றங்களில் சிக்குண்டு
  • வெடிகுண்டு தாக்குதலில்
  • விபத்துகளில்
  • தற்கொலை

        இதைப்போன்ற கண்முன் காணும் உயிரிழப்பு சம்பவங்களுக்கு
பிறகு ஒருவரின் உயிர் போவதற்கான காரணத்தை ஆராய்ந்தால் அதிக இரத்த அழுத்தம்,  இரத்த ஓட்டமின்மை, கழிவு நீர் அகற்றும் உறுப்புகள் செயலிழத்தல், மூச்சுவிட முடியா அளவிற்கு ஆக்ஸிஜன் இல்லாமை, நெருப்பின் அதிக உஷ்ணம் உறுப்புகளை கருக்குதல்,

    நிமிட நேரத்தில் உறுப்புகள் ஒவ்வொன்றும் சிதறிடிக்கப்படுதல்,  அதிகப்படியான இரத்த வெளியேற்றம், இதயத்திற்கும் சுவாசக்குழாய்க்கும் இடையில் உள்ள தொடர்பு துண்டிப்பு, -இப்படி ஒவ்வொரு மரணமும் நிகழ ஒவ்வொரு வகையான காரணங்கள்.

   நன்று., இஃது ஏற்படும் மரணத்திற்கு உரித்தான காரணங்கள் நம் கண்முண்ணே விரிந்து கிடப்பதால் இத்தகைய மரண நிகழ்வுகளை அறிவுப்பூர்வமாக ஏற்று கொள்வதில் எந்த பிரச்சனையுமில்லை, இவ்வாறு  நிகழும் மரணத்திற்கு நாத்திகம் மேலதிக விளக்கம் தர தேவையுமில்லை.  ஆனால் மரண வகைகள் மேற்கண்ட வழிகளில் மட்டுமே ஏற்படுவதாக இருந்தால் நாத்திகப்பார்வை சரியென கூறலாம்.

ஆனால்.,



இவ்வாக்கத்தின் முதல் மூன்று வரிகளை மீண்டும் படியுங்கள்., 

இன்னும் சற்று தெளிவாக சொன்னால்

  • நேற்று வரை நலமுடன் இருந்தவர் எவ்வித காரணமுமின்றி இன்று இறக்கிறார்.
  • காலையில் சக மனிதர்களுடன் உரையாடி சென்றவர் இன்நேரத்தில் உயிரோடில்லை.
  • இரவு உறக்கத்தை இனிதே கழித்தவர் காலையாகியும் எழவே இல்லை.

              இது மட்டுமல்ல, இத்தகைய மரணங்கள் நிகழ அறிவியல் ரீதியான எந்த ஒரு அறிகுறீயும் இல்லையென்பதோடு - நிகழ்ந்த மரணத்திற்கு அறிவுப்பூர்வமான பதிலும் இல்லை.
அதுப்போலவே,

" உயரமான இடத்திலிருந்து அல்லது கட்டிடத்திலிருந்து வேண்டுமென்றே கீழே குதித்தவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பிக்கிறார்.
சாதாரணமாக நடக்கும் போது கால் தவறி தரையில் விழும் மனிதர் மரணிக்கிறார் ."


-இதுவும் நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிப்பதுண்டு

  ஆக மேற்சொன்னவைகளை தற்செயல் (எதெச்சையான செயல்) என்றோ திடீரென்று ஏற்படும் சம்பவமாகவோ ஏனைய மதரீதியான உலகம் பார்க்கிறது., .,
  ஆனால் நிகழ்வுகளுக்கான சரியான காரணத்தை அறிவியல்ரீதியாக முன்னிருத்தினால் மட்டுமே ஏற்கும் நாத்திக அகராதியில் தற்செயல் என்பதோ அல்லது திடீரென்று நடைபெறும் சம்பவங்களோ இருக்க முடியாது.

    மேற்சொன்ன வகையில் மரணிப்பதற்கும் - உயிர் பிழைப்பதற்கும் அறிவியல் ரீதியான காரணத்தை வேண்டினால் நாத்திகம் அதன் வரையறைக்கே முரண்பட்டு பொருளற்ற பொருளைத்தான் தரும்.
    மேலும் தர்க்கரீதியாகவும் இச்சம்பங்களை நாத்திகத்தால் வரையறை செய்ய முடியாது. ஏனெனில் மேற்கண்ட நிகழ்வுகள் எப்போதாவது நிகழ்வதில்லை மாறாக.,


   உலகில் நிகழும் மரணங்களில் அறிவியல் ரீதியில் காரணம் என்னவென்ற விளங்க /விளக்க முடியா நிலையில் மேற்சொன்ன அடிப்படையிலேயே அனேக மரணங்கள் நிகழத்தான் செய்கின்றன.

  ஆக தற்செயல் / தீடீர் என ஏற்படுவதாக சொல்லும் பேச்சுக்கே நாத்திகத்தில் இடமில்லை.
. . .
     இல்லை...இல்லை மேற்கண்ட இயல்பு நிலைக்கு மாற்றமான ஏற்படும் மரணங்களுக்கும் மறைமுக அறிவியல் காரணங்கள் உண்டு என சொன்னாலும் நோ ப்ராப்ளம்., இப்போது நாத்திகம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் முன்பைவிட அதிகம்.  இச்செய்கை உண்மையென்று நாத்திகம் வாதித்தால் உலகில் ஏற்படும் அனைத்துவிதமான மரணங்களுக்கும் அறிவியல்ரீதியான காரணங்கள் கிடைத்துவிடும். கிடைக்கும் காரணங்களை வைத்து

  1. ஏற்படும் மரணத்திலிருந்து தப்பிக்க அல்லது 
  2. மரணம் நிரந்தரமாக ஏற்படாமல் இருக்க அல்லது
  3. ஒவ்வொரு உயிருக்கும் மரணம் ஏன் நிகழ வேண்டும்.?

      -என்பதற்காவது நாத்திக அறிவியல் ஒரு வழிவகை செய்திருக்க வேண்டும். அப்படி மரணத்தை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் மரணம் ஏற்படுவதற்கான அறிவியல் ரீதியான காரணம் தெரிந்திருப்பதால் எல்லோர் மரணத்திற்கும் உண்டான காலக்கெடுவை நாத்திக அறிவு மிக துல்லியமாக வரையறுத்திருக்க வேண்டும்.

டிஸ்கி: 
(இது தாங்க நம்ம முதல் டிஸ்கி )


     சமகாலங்களில் கூட பிராணிகளில் உண்டு, உறங்கி, உடலுறவு கொள்ளல் என சில குறிப்பிட்ட நோக்கத்திற்காக மட்டுமே தம் வாழ்நாளை கழிக்கும் சிலவகை ஆமை முதலை போன்ற உயிரிகளின் ஆயூட்காலம் சராசரியாக நூற்றைம்பது ஆண்டுகளை தாண்டி தொடரும்போது,

    அனைத்துத்தேவைக்காகவும் தம் வாழ்நாளை கழிக்கும் அறிவார்ந்த மனித உயிரின் ஆயூட் சராசரி 50 க்கும் 60க்கும் மத்தியில் தொங்கி கொண்டிருப்பது ஏன்..?

  ஏனெனில் ஏனைய உயிரினங்களுக்கு மத்தியில் அறிவார்ந்து செயல்படும் ஒரு உயிரினாலே ஆயூட்காலம் மட்டுமில்லாது வாழ்வியலுக்கு தேவையான அனைத்து சிறப்பியல்க்கூறுகளையும் ஏனைய உயிரினங்களை விட அதிகம் பெற்று வாழ முடியும்.

  ஆனால் பரிணாமம் உருவாக்கிய மனிதப்படைப்பு ஒரு கொசுவை காட்டிலும் அதிக பலகீனங்களை தன்னுள் கொண்டு வாழ்ந்து -மரணிப்பது விந்தையுலும் விந்தையே..!


உணர்ந்துக்கொள்வதற்கு முன் உணர்வுகளை நிறுத்தும் மரணத்திற்கான காரணங்களை இனியாவது மெய்படுத்துமா நாத்திகம்??

அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனேமரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான். (22:66)
   
                                                      அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


read more "மரணம்:- பொய்க்கும் நாத்திகம்"

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்