"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, December 07, 2012

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"


                                        ஓரிறையின் நற்பெயரால்..

விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.

இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர! இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.

இறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி? என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.

ஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்

இப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.

ஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

இறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.

ஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல.,  நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும்! அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.

இணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.

இங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.

கட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.

யாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு!
ஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more " "நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!" "

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்