"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, November 21, 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

                                          ஓரிறையின் நற்பெயரால்

     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் \
இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.


 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்


1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்


நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

    இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது
 
   (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
     
   இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?


   * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.


  அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)
 
  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.

 அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.


"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

  * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,

     உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.

  எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

      அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

       இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.


மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 

மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.
  ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

   சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

                                  அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
read more "இறைவனின் எதிரியா -இப்லிஸ்?"

Friday, November 12, 2010

மனித வாழ்வில் மனசாட்சி!

                                                      ஓரிறையின் நற்பெயரால்

"மனசாட்சிக்கு பயந்து நடந்துக்கோ...."
"மனசாட்சி இருந்தா இப்படி செய்வியா..?"


      இதைப்போன்ற வாசகங்கள் பாமர மக்கள் முதல் படித்த அறிவார்ந்த மனிதர்கள் வரை அன்றாட வாழ்வில் அதிகமாக பயன்படுத்துவதை காண்கிறோம். ஆக இவ்வாக்கியங்கள் மனசாட்சிக்கு பயந்தால் மட்டுமே போதுமானது எல்லா செயல்களிலும் நீதமாக இருக்க முடியும் என்பது போல் தோன்றுகிறது... உண்மையாக மனசாட்சி மட்டும் மனித வாழ்வின் எல்லா நிலைகளிலும் நீதி செலுத்த போதுமானதா - கண்டிப்பாக முடியாது ...ஏன்?
        
 ஒரு செயலை செய்வதால் ஏற்படும் விளைவு நன்மையா? தீமையா என பகுத்து அஃது தீமையே தவிர்த்து நன்மையே செய்ய தீர்மானிப்பதே மனசாட்சியின் பிரதான வேலை.பொதுவாக மனசாட்சி என்பது பெரும்பாலும் நன்மை செய்வதை அடிப்படையாக கொண்டிருந்தாலும் இரண்டு அடிப்படை காரணங்கள் மனசாட்சியின் செயல் போக்கை மாற்றுகிறது 


(1) நிலையற்ற மனித எண்ணங்கள் 


(2) மனிதர்கள் வாழும் சூழல்,சமுகம் இவ்விரு நிலைகளும் மனசாட்சியின் செயல் திறத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதை பார்ப்போம்.


    மனசாட்சியின் அடிப்படை செயல் நிர்வாகத்திற்கு மிக முக்கிய காரணியாக அமைவது மனித எண்ணங்கள் ஆகும்.சாதரணமாக அனைத்து நிலைகளிலும் நன்மை தீமைகளே தரம் பிரித்து செயல்படுத்தினாலும் சாதாரண நிலை கடந்த அதாவது ஆசை, கோபம், விரக்தி, வேகம் மற்றும் தேவை போன்றவை மிகைக்கும் போது மனசாட்சியால் நன்மையை மட்டும் மேற்கொள்ள முடியாது. 


  மாறாக அந்நேரங்களில் ஏற்படும் மனித எண்ணங்களுக்கே மனசாட்சி முக்கியத்துவம் கொடுக்கும். உதாரணமாக மனிதனுக்கு கோபம் வரும் வரை இயல்பாக பேசக்கூடியவன் அஃது கோபம் மிகுதியால் தவறான வார்த்தை பிரயோகமும் ஏன் கொலை செய்யக்கூடிய அளவிற்கு கூட அவனை தள்ளும் நிலைக்கு காண்கிறோம். 
  
    அதுப்போலவே., அடுத்தவர் செய்யும் ஒரு தவறை கண்டிக்கும் மனசாட்சி அதே தவறை தமது மனம் உட்பட்டு செய்யும் போதும் நியாயம் கற்பிக்கவே முயலும் மது அருந்துவது இதற்கு நல்ல உதாரணம் பொதுவாக மது அருந்துவதை வன்மையாக கண்டித்தாலும் ஏதாவது ஒரு காரணத்தை முன்னிருத்தி தாம் மது அருந்த செய்வதை மனசாட்சி தவறென்று சொல்லாது.


      மேலும் பாதிப்பும் -தீங்கும் மனசாட்சி செயல் போக்கை முற்றிலும் மாற்றக்கூடியவை., நாம் பிறருக்கு தீங்கோ பாதிப்போ ஏற்படுத்தாமல் இருந்தும் நமக்கு பிறரால் மிக பெரிய பாதிப்போ தீங்கோ ஏற்படுத்தப்பட்டால் பழிக்குப்பழி வாங்குவதை தான் முதலில் நமது மனசாட்சி ஊக்குவிக்கும். ஆக பிறர் நமக்கு தந்தது தீது என்று உணர்ந்தும் அதே தீமையே தான் நாம் அவருக்கு வழங்க வேண்டும் என மனசாட்சி வலியுறுத்தும் போது அதன் நீதத்தன்மை பூஜ்யமாக்கப்படுகிறது. 


     மனதளவில் பாதிக்கப்பட்டவர், சிறுவர், வயோதிகர் போன்ற சிலரின் மனங்களே பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து மாற்று தீர்வை எதிர்பார்க்கிறது.           மேலும் ஆசையும் மனசாட்சியை நன்மை செய்வதை விட்டு திசை திருப்பவே செய்கிறது. விபச்சாரம் தவறு என்பது இயல்பாக நம் மனசாட்சி ஏற்றுக்கொண்டு அஃது விபச்சாரத்தின் பக்கம் நம் மனதை நாட விடுவதில்லை.


       ஆனால் ஆணோ பெண்ணோ தம் மனம் உடன்பட்டு விபச்சாரம் புரிவதாக இருந்தால் அதற்கு மனசாட்சி ஆசையின் மிகுதியால் அதை குற்றம் காண்பதில்லை. மேலும் இதை சமுக குற்றமாக பார்க்காமல் இருவரும் உடன்பட்டு தானே செய்கிறோம் என ஆறுதல் கூறி மேலும் இத்தகாத செயலை மனசாட்சி நியாயப்படுத்தவே செய்கிறது.

  ஆக சிந்தனை மாறுபாடும் சுயநலமிக்க எண்ண வெளிபாடும் மனசாட்சி அதன் உண்மை நிலைக்கு புறம்பாக அல்லது எதிராக முடிவெடுப்பதை தவறாக காணாது.
   
      கொலை, கொள்ளை மற்றும் வன்முறை போன்றவைகள் யாவும் பொதுவாக எல்லோராலும் சமுக சீர்கேடுகளாக கருதப்பட்டாலும் அச்செயல்கள் தவறென்று மிக நன்றாக தெரிந்தும் அத்தகைய தீய செயல்களை செய்யக்கூடியவர்கள்., அவர்களின் மனசாட்சிக்கு உடன்பட்டு தான் செய்கிறார்கள் என்பது தெளிவு. அஃது அவர்களின் மனநிலையும் இச்செயல்பாடுகளுக்கு அவர்கள் இயங்கும் சமுக பிண்ணனியே குற்றம் சாற்றி தமது தவறான போக்கிற்கு நியாயத்தை கற்பிக்கிறது. 


   ஆக அங்கு மனசாட்சியின் நடு நிலை செயல்பாடு பொய்தே போய்விடுகிறது. 
  சுய தேவையின் அடிப்படையில் மாற்றமடையும் தற்காலிக எண்ணங்களும் சமுக சூழ்நிலைகளின் குறுக்கீடும் மனசாட்சியின் செயல் திறத்தை மாற்றவல்ல ஆயுதமாகும். 
     
      எனவே மனசாட்சியால் நன்மையான காரியங்களை மட்டுமோ அல்லது உண்மையை அடிப்படையாக செயல்களை மட்டுமோ எல்லா நிலையிலும் செய்ய முடியாது. ஆக மனசாட்சிக்கு மட்டுமே கட்டுப்பட்டு 100 சதவீகித உண்மையான வாழ்வை எவராலும் மேற்கொள்ள முடியாது.

      அப்படியானால் நமது எண்ணத்திற்கு -தேவைக்கு -நேரத்திற்கு தகுந்தாற்போல் மாற்றமடையாத, எல்லா சமுக சூழலிலும் ஒரே நிலையில் செயல்பட, மனிதர்களுக்கு மனிதர் மாறுபடாத நீதமாக இருக்க மனசாட்சியை விட உயரிய சக்தி இருக்கிறதா....? உங்களுக்குள்ளேயே வினா எழுப்புங்கள் விடை தெரிந்தால் அதுவே நேர்வழிக்கு அழைத்து செல்லும் பாதையாகும்.

      
    உங்களுக்குள்ளேயும் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன, (அவற்றை) நீங்கள் உற்று நோக்க வேண்டாமா ?   (51:21)

                                    
                                         அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "மனித வாழ்வில் மனசாட்சி!"

Thursday, November 04, 2010

குர்-ஆன் கூறும் பூமி...

                                           ஒரிறையின் நற்பெயரால்

      விஞ்ஞான கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் குர்-ஆனில் அதிகமாக இடம்பெற்றாலும் அவ்வனைத்து வசனங்களிலும் அல்லாஹ்வுடைய வல்லமையை பறைச்சாற்றறுவதே பிரதான நோக்கமே தவிர அறிவியல் புத்தகமாக தன்னை காட்டிக்கொள்வதற்காக அல்ல.

    எனினும் குர்-ஆன் மீது அவதூறு கற்பிக்கும் நோக்கோடு களமிறங்கிய பரிணாமம் மூலம் பகுத்தறிவு பெற்றவர்கள் அவ்வபோது குர்-ஆன் கூறும் பொருளை வழக்கம்போல் தவறாக புரிந்து அதன் அடிப்படையில் கேள்விகளை எழுப்புவது வழக்கம்.

     அதன் அடிப்படையில் சில வசனங்களை மேற்கோள் காட்டி பூமி தட்டை என குர்-ஆன் கூறுவதாக சொல்ல முயற்சிக்கிறார்கள்.


அவர்கள் சுட்டிக்காட்டும் வசனங்கள் தான் இவை
  • அல்பகரா(2) வசனம்:22 , 
  • அர்-ராத்(13) வசனம்:3 , 
  • அல்-ஹிஜ்ர்(15) வசனம்:19 , 
  • தாஹா(20) வசனம்:53 , 
  • அல்-ஸூக்ருஃப்(43) வசனம்:10 ,
  • காஃப்(50) வசனம்:7 , 
  • அத்தாரியாத்(51) வசனம்:48 , 
  • அர்-ரஹ்மான்(55) வசனம்10 , 
  • நூஹ்(71) வசனம்:19 , 
  • அந்நபவு(78) வசனம்:6; 
  • அந்நாஸிஆத்(79) வசனம்:30; 
  • அல்-இன்ஷிகாக்(84) வசனம்:3 .
      குர்-ஆனில் மேற்கண்ட வசனங்களில் பூமி குறித்து கூறும்போது பூமியை விரிப்பாக அமைத்தாகவே வருகிறது. இவ்வசனங்கள் அறிவியலுக்கு முரண்படுகிறதா? ஏன் அல்லாஹ் அவ்வாறு கூறுகிறான்.

    முதலாவதாக,பொதுவாக ஏனைய வசனங்கள் போலவே இவ்வசனங்களிலும் அல்லாஹ் தன் வல்லமையே குறிப்பிடுவதற்காகவும் அவனின் அத்தாட்சிக்காவும் இவ்வாக்கிய அமைப்புக்கள் பயன்படுத்தப்படுகின்றன.

  ஏனெனில் மேற்கண்ட வசனங்களில்...

 உங்களுக்காக பூமியை விரிப்பாகவும், வானத்தை விதானமாகவும் அமைத்து, வானத்தினின்றும் மழை பொழியச்செய்து, அதனின்று உங்கள் உணவிற்காகக் கனி வர்க்கங்களை வெளிவரச் செய்கிறான்; (இந்த உண்மைகளையெல்லாம்) நீங்கள் அறிந்து கொண்டே இருக்கும் நிலையில் அல்லாஹ்வுக்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள்.  (2:22)


அவனே பூமியை விரித்து...-நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.  (13:3)


பூமியை நாம் விரித்து அதில் உறுதியான, (அசையா) மலைகளை நிலைப் படுத்தினோம்; ஒவ்வொரு பொருளையும் அதற்குரிய அளிவின் படி அதில் நாம் முளைப்பித்தோம்.  (15:19)


இன்னும், பூமியை - நாம் அதனை விரித்தோம்; எனவே, இவ்வாறு விரிப்பவர்களில் நாமே மேம்பாடுடையோம்.  (51:48)
    
  மேற்கண்ட வசனங்களிலெல்லாம் இறுதியாக அவனது வல்லமையின் வெளிப்பாட்டு வாக்கியம் அமைந்திருப்பதை காணலாம்.
  
 அடுத்து பயன்பாட்டிற்காக ., 
         மனிதர்களுக்கும்-ஏனைய படைப்பினங்களும் பயனடைய வேண்டும் என்பதற்காகவே இப்பூமியை விரிப்பாக்கி வைத்திருப்பதாக சொல்கிறான். அதாவது பயணம் செய்வதற்கு இலகுவாக பயணிப்போருக்கு வசதியாக பாதைகள் இருக்க பூமியை ஒரு விரிப்புப்போல அமைத்திருக்கிறான்


   இன்னும், பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான்.  (55:10)


"(அவனே) உங்களுக்காக இப்பூமியை ஒரு விரிப்பாக அமைத்தான்; இன்னும் அதில் உங்களுக்குப் பாதைகளை இலேசாக்கினான்; (20:53)


அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாக ஆக்கி, அதில் நீங்கள் (விரும்பி இடத்திற்குச்) செல்லும் பொருட்டு வழிகளையும் ஆக்கினான்.  (43:10)
"அன்றியும், அல்லாஹ், உங்களுக்காக பூமியை விரிப்பாக ஆக்கினான்.  (71:19)
"அதில் நீங்கள் செல்வதற்காக விசாலமான பாதைகளையும் அமைத்தான்" (71:20)


...அவனே பூமியை விரித்தான்.  (79:30)


அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.  (79:31)

       ஆக இங்கு பூமி குறித்த வசனங்கள் யாவும் அதன் வடிவம் குறித்து முன்னிருத்தி பேசபடவில்லை. மாறாக அப்பூமியின் மூலம் மனிதர்களும்- ஏனைய உயிரனங்களும் அடையும் பயன்பாட்டை குறித்து தான் பேசுகிறது.  இங்கு பூமி விரிப்புபோல் இருக்கிறது என்று ஒரு பயன்பாட்டு பொருளாக தான் (Materiel) உருவகப்படுத்தப்படுகிறதே தவிர தட்டையாகவோ அல்லது வேறு எந்த வடிவிலோ இருப்பதாக வடிவத்தை (Shape) முன்னிருத்தி கூறவில்லை.
 
     ஏனெனில் வடிவம் குறித்து இவ்வாசக அமைப்புகள் அமைக்கப்பெற்றிருந்தால் பூமியை - படைப்பினங்களுக்காக அவனே விரித்தமைத்தான். என்று பூமி விரிக்கப்பட்டதன் பயன்பாட்டு நோக்கத்தை இங்கு குறிப்பிடவேண்டிய அவசியமில்லை.மாறாக அதன் வடிவத்தை மட்டும் மேற்கோள் காட்டி சொல்லியிருக்கலாம்.

    ஆக,விரிப்புப்போல் இருக்கிறது என்பது தட்டை வடிவம் என்பதோடு பொருந்தாது எனவே மேற்குறிய வசனங்கள் மட்டுமல்ல குர்-ஆனில் பூமி குறித்து சுமார் 457 வசனங்களில் 483 முறை சொல்லப்பட்டிருக்கிறது. அவை அனைத்திலும் அறிவியலுக்கு முரணாக தட்டை வடிவத்தை முன்னிறுத்தி எந்த வசனமும் இல்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது.

 அந்நாளில் சில முகங்கள் இழிவுபட்டிருக்கும்.  (88:2)

அவை (தவறான காரியங்களை நல்லவை என கருதி) செயல்பட்டவையும் (அதிலேயே) உறுதியாக நின்றவையுமாகும்.  (88:3)


                                                         அல்லாஹ் நன்கறிந்தவன்
read more "குர்-ஆன் கூறும் பூமி..."

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்