"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Thursday, July 15, 2010

குர்-ஆன் முஹம்மது நபியால் உருவாக்கப்பட்டதா?

                                                                   ஓரிறையின் நற்பெயரால்...
        குர்-ஆன் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களின் 40 வயதில் ஹிரா குகையில் ரமலான் மாத கடைசி பத்து இரவுகளில் ஓரிரவு இறை புறத்திலிருந்து வானவர் தலைவர் ஜீப்ரஹில் மூலமாக அருளப்பட தொடங்கியது.பின் சிறுகச்சிறுக அன்னாரின் வாழ்வு முழுவதும் 23 ஆண்டுகளில் சுழலுக்கேற்ப மக்கள் மேற்க்கொள்ளும் நடைமுறை செயல் பாடுகளால் உண்டாகும் நன்மைகளையும்,தீமைகளையும் பிரித்தறிவிக்கும் நோக்குடன் இறக்கியருளப்பட்ட வேதம் தான்  அல்குர்-ஆன்

          இன்று, இஸ்லாத்தில் உள்ள குறைகளை  விமர்ச்சிக்கிறோம் என கிளம்பிய சிந்தனைச்சிற்பிகளில் சிலர் இஸ்லாத்தையும்,முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களையும் தரம் தாழ்த்தி தமிழ் எழுத்தும் வெட்கி  தலை குனியும் அளவிற்கு காழ்ப்புணர்ச்சியின் மொத்த வடிவத்தையும் யுனிக்கோட்டில் எழுத்துருவாய் மாற்றி உலக வலையில் உலவ விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் வார்த்தை யுத்ததில் சுற்றி வளைக்கப்பட்ட அப்பாவி வாசகம் தான் நான் மேலே குறிப்பிட்ட இக்கட்டுரையின் தலைப்பு.
 குர்-ஆனை உருவாக்கியது முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) என்று கூறுவோர்  மூன்று வாதங்களை அதற்கு காரணமாக  முன் வைக்கின்றனர்.

1.சமுகத்தில் தன் அந்தஸ்தை உயர்த்திக்கொள்வதற்காக      
2.தன் சுயநலத்திற்கு  தகுந்தாற்போல் சில வாசகங்கள் அமைத்துக்கொண்டார்கள்.மற்றும்
3.விஞ்ஞான,வரலாற்று செய்திகளை ஏனைய கிரகந்தகங்களிருந்து பெற்றார்கள்.


    *முதல் மற்றும் முதன்மை காரணமாக சொல்லப்படும் சமுக அந்தஸ்து பெறுவதற்காக குர்-ஆனை முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  உருவாக்கினார்கள் என்பது சரியா?


 அரபுக்குலங்களிலேயே குரைஷி என்னும் உயர்க்குடியில் பிறந்தவர்கள் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  என்பது அரேபிய வரலாறு அறியா மக்கள் கூட அறிந்திருக்கும் மறுக்க இயலா உண்மை.ஆக பிறப்பிலேயே குல அடிப்படையில்(அவர்களால் இஸ்லாம் தொடரப்படுவதற்கு முன்பு) சமுகத்தில் உயர் அந்தஸ்து பெற்றவர்கள்,

மேலும் அவர்களின் நேர்மை,ஒழுக்கம், நம்பக தன்மை, வாக்குறுதி மாறமை, நீதி செலுத்தல் போன்ற உயரிய பண்புகளால் சம காலத்திய மக்களால் வாய்மையாளர், உண்மையாளர் எனப்பொருள்படும் "அல்-அமீன்,அல்-சாதிக்" என போற்றப்பட்டார்கள்.எனவே தன்னின் தனிப்பட்ட சமுக அந்தஸ்து மேம்பட வேண்டும் என்பதற்காகவே  இறைவனின் பெயரால் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் பொய்யுரைக்க வேண்டிய அவசியமில்லை,

சொல்லப் போனால் தன்னை இறைவனின் தூதுவர் என பிரகடன படுத்திய பின்னர் தான் அவர்கள் பொருள் மற்றும் செல்வ நிலை சேதப்படுத்தப்பட்டத்தோடு அவர்களின் தேகமும் சொல்லோண்ண கொடுமைகளை சந்தித்தது.

(நபியே!) இவர்கள் (இழிவாகப்) பேசுவது உம் நெஞ்சத்தை எப்படி நெருக்குகிறது என்பதை நாம் அறிவோம். (15:97)மேலும் பார்க்க:9:61, 96:9-19


            ஆக தனது பெயர் சமுகத்தில் உயர வேண்டும் என்ற நோக்கிற்காக குர்-ஆனை அவர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது சாத்தியமே இல்லை. மாறாக குர்-ஆன் இறைவனுடைய வார்த்தைகள் என்று சொல்வதால் அவர்கள் சந்தித்த துன்பங்கள் குறித்து மேற்கண்ட வசனங்களில் காணலாம்.

 *இரண்டாம் காரணம், குர்-ஆனில் நபிகளாரை பெருமை(கண்ணிய)ப்படுத்தும் வசனங்கள் ஏராளமாக உள்ளது உண்மைதான்.அதற்காக வேண்டி அவர்கள் தான் குர்-ஆனை உருவாக்கியவர்கள் என சொல்வது ஏற்புடையதா?


(நபியே!) நாம் உம்மை அகிலத்தாருக்கு எல்லாம் ரஹ்மத்தாக - ஓர் அருட் கொடையாகவேயன்றி அனுப்பவில்லை. (21:107)

   உம் இறைவன் மேல் சத்தியமாக, அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாக, ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில், அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள். (4:65)


இந்த நபி முஃமின்களுக்கு அவர்களுடைய உயிர்களைவிட மேலானவராக இருக்கின்றார் இன்னும், அவருடைய மனைவியர் அவர்களுடைய தாய்மார்களாக இருக்கின்றனர்.(33:6 ன் சுருக்கம்)


அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குறித்து மேலும் பார்க்க:36:69, 69:41, 69:42, 38:4, 2:143, 4:41, 22:78, 33:45, 73:15,5:19, 3:159, 9:61,128, 7:184, 15:89, 36:6, 53:56, 33:47, 33:40)

 
   மேற்கூறப்பட்ட வசனங்களில் நபியவர்களின் நிலைக்குறித்து உயர்வாக சொல்லப்பட்டாலும், அதற்கு காரணம் அவர்களின் முறையான கிழ்படிதல், பொறுமை,அவர்களின் நேர்மை, அனாதைகள் மற்றும் அமானிதங்களை பராமரித்தல், வாய்மை, இரக்கக்குணம் ஆகியவையே..

சுருங்கக்குறின் அல்லாஹ்வின் ஆணைப்படி அவனது ஏவல்,விலக்கல்களை முன்னிருத்தி  தங்களது வாழ்வை அவர்கள் அமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே ஆகும்.இதனை அவர்கள் வரலாறு வழி நெடுக்கிலும் காணலாம்.
சரி., முரண்பாட்டு அடிப்படையில் உடன்பட்டு நபிகள் தான் தன்னை உயர்வு படுத்த இவ்வாக்கியங்களை குர்-ஆனில் உருவாக்கினார்கள் என வைத்துக் கொள்வோம்.,

கிழ்காணும் வாசகங்களும் குர்-ஆனில் தான் உள்ளது


(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் எதற்கு அசவரப்படுகின்றீர்களோ அது என் அதிகாரத்தில் இருந்திருக்குமானால், உங்களுக்கும் எனக்குமிடையேயுள்ள விவகாரம் உடனே தீர்க்கப்பட்டேயிருக்கும்; மேலும், அல்லாஹ் அநியாயம் செய்வோரை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்." (6:58)    

   அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்-அவரிடம் அந்த அந்தகர் வந்தபோது,-(நபியே! உம்மிடம் வந்த அவர்) அவர் தூய்மையாகி விடக்கூடும் என்பதை நீர் அறிவீரா?-அல்லது அவர் (உம் உபதேசத்தை) நினைவு படுத்திக்கொள்வதன் மூலம், (உம்முடைய) உபதேசம் அவருக்குப் பலனளித்திருக்கலாம்.-(உம் உபதேசத்தின்) தேவையை எவன் அலட்சியம் செய்கிறானோ-நீர் அவன்பாலே முன்னோக்குகின்றீர்.-ஆயினும் (இஸ்லாத்தை யேற்று) அவன் தூய்மையடையாமல் போனால், உம் மீது (அதனால் குற்றம்) இல்லை.-ஆனால், எவர் உம்மிடம் விரைந்து வந்தாரோ,-அல்லாஹ்வுக்கு அஞ்சியவராக-அவரை விட்டும் பராமுகமாய் இருக்கின்றீர்.-அவ்வாறல்ல! ஏனெனில் (இத்திருக் குர்ஆன் நினைவூட்டும்) நல்லுபதேசமாகும்.-எனவே, எவர் விரும்புகிறாரோ அவர் அதை நினைவு கொள்வார். (80:1 -12)

  (நபியே!) நீர் கூறும்; "அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நம்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது - நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை."(7:188)

     அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:15)

   நபியே! உம் மனைவியரின் திருப்தியை நாடி, அல்லாஹ் உமக்கு அனுமதித்துள்ளதை ஏன் விலக்கிக் கொண்டீர்? மேலும் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன், மிக்க கிருபையுடையவன்.(66:01)

      அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக. (07:187)


 மேலும் பார்க்க:06:50,52, 75:16,109, 10:16, 33:52,59, 52:31, 3:144, 6:56,57&68)           
           
        மேற்கண்ட வசனங்களில் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்களை கண்டிப்பது போலவும்,இறைவன்  ஆட்சியிலும்,அதிகாரத்திலும் உள்ள செயல்கள் குறித்து தனது மனதின் படி அவர்கள் சொல்ல அனுமதி இல்லை என்றும்,மறைவான ஞானம் குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது, நன்மையோ,தீமையோ தனது சுய நாட்டப்படி தான் மேற்கொள்ள முடியாது என்றும்- விளக்கமாக கூறப்படுகிறது.

     பொதுவாக தானே இயற்றிய நூலாக இருந்தால் ஒருவேளை அவர் தன்னைப்பற்றி புகழ்ந்து கூறாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் தன்னை ஒருவர் கண்டித்தைப்பற்றியோ, அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறியது பற்றியோ  நூலில் குறிப்பிட மாட்டார். அதே அடிப்படையில் ஒப்பிடும்பொழுது

  குர்-ஆன் முஹம்மது நபிகள் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் உருவாக்கப்பட்டதாக இருந்தால் மேற்குறிப்பிடப்பட்ட வசனங்கள் குர்-ஆனில் இடம் பெற வேண்டிய அவசியமென்ன...? தன் நரகல் நடை எழுத்துக்கு நாகரிக வர்ணம் பூசுவோர் சொல்வார்களா?


     குர்-ஆனில் விஞ்ஞானம் குறித்து மிக தெளிவாக செய்முறை விளக்கத்தோடு எந்த ஒரு தகவலும் சொல்லப்படவில்லை.ஏனெனில் அதன் தலையாய பணி மனித சமுதாய முழுமைக்குமான நேர் வழிக்காட்டுவதே ஆகும். அஃதில்லாத விஞ்ஞான விவரிப்புகள் இரண்டாம் பட்சமே (மேலும் அறிவியல் தொடர்பான விபரங்களுக்கு  குர்-ஆனும்-விஞ்ஞானமும் என்ற இடுகை காண்க)
  
 *குர்-ஆனில் கூறப்படும் விஞ்ஞான உண்மைகள்,வரலாற்று நிகழ்வுகள் யாவும் முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் முந்திய சமுகத்திலிருந்து ஒன்று திரட்டி அதை தொகுத்து குர்-ஆனாக வடித்தார் என்ற வாதம் குறித்துப்பார்ப்போம்.


 இறுதியாக, எறும்புகள் நிறைந்த இடத்திற்கு அவர்கள் வந்த போது ஓர் எறும்பு (மற்ற எறும்புகளை நோக்கி) "எறும்புகளே! நீங்கள் உங்கள் புற்றுகளுக்குள் நுழைந்து கொள்ளுங்கள்; ஸுலைமானும் அவருடைய சேனைகளும், அவர்கள் அறியாதிருக்கும் நிலையில் உங்களை நசுக்கி விடாதிருக்கும் பொருட்டு (அவ்வாறு செய்யுங்கள்)" என்று கூறிற்று. (27:18)

"அல்லாஹ் - அவனையன்றி வணக்கத்திற்குரிய நாயன் (வேறு) இல்லை. (அவன்) மகத்தான அர்ஷுக்கு உரிய இறைவன்" (என்று ஹுது ஹுது பறவை கூறிற்று).27:26


    மேற்கூறிய வசனத்தில் சுலைமான் நபி அவர்கள் குறித்தும் அவர்களின் படை குறித்தும் கூறப்படுகிறது. ஒரு உதாரணத்திற்கு சுலைமான் நபி குறித்த பார்வை முந்தைய வேதங்களிலிருந்து திரட்ட பட்டது என வைத்துக்கொண்டாலும்  இங்கு பறவையும், எறும்பும் பேசியது குறித்த மூலத்தை எங்கிருந்து  நபியவர்கள் எடுத்தார்கள்...?

ஏனெனில் எறும்பும், பறவையும்  பேசுவதென்பது  சாதாரண செயலல்ல.. அதுவும் தெளிவாக காரணங்களோடு அது ஒரு விஞ்ஞான உண்மையும் கூட,அந்த அறிவியல் உண்மை அவர்களுக்கு எப்படி தெரிந்தது?

தோரயமாக சொல்லிருப்பார்கள் என சமாளிப்பதற்காக சொல்வார்களேயானால் அன்றைய நேரத்தில் அந்த சம்பவத்தை சொல்ல வேண்டிய அத்தியாவசியம் என்ன...?

மேலும் ஒரு சம கால உதாரணம்


    *அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்
அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள் 111:1-5)



    மேற்குறிப்பிடப்பட்ட வசனம் ஒரு தனிப்பட்ட மனிதனை குறித்து பேசுகிறது. நபி முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்களால் தொடரப்பட்ட இஸ்லாத்தின் ஆரம்ப காலகட்டத்தில் நபியவர்களுக்கும் ஏனைய இஸ்லாத்தை தழுவியோருக்கும் பெறும் தீங்கை விளைவித்தவன் தான் இவ்வசனம் குறிப்பிடும் அபுலஹப்.

அவன்  மேற்கொண்ட அட்டுழியங்களின் விளைவாக அவன் இஸ்லாமை ஏற்க மாட்டான்.மேலும் அவன் நரகமே செல்வான் எனவும் இவ்வசனம் கூறுகிறது. இவ்வசனம் அபுலஹப் உயிரோடிருக்கும் பொழுதே  அவனை குறித்து விளிக்கிறது. என்பதுதான் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய செய்தி .

முஹம்மது நபிகள்(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  தன் கோப வெளிபாடாக இவ்வார்த்தையை சொன்னதாக கொண்டால்., அவன் (அபுலஹப்) நினைத்தால் குர்-ஆனை பொய்யாக்க வேண்டும் என்ற நோக்கில் நான் இஸ்லாத்தை ஏற்று கொண்டேன் என்ற ஒற்றை வாக்கியத்தை உதட்டளவில் சொல்லி பெருமானாரின் கரம் பிடித்திருந்தால்  போதும், இஸ்லாம் குறித்து இக்கட்டுரையே இங்கு தேவையிருக்காது,

ஏனெனில்... இஸ்லாமே அங்கு இருந்திருக்காது. ஏன் அவ்வாறு சொல்லவில்லை...? அதுமட்டுமா அவனது மனைவியேயும் சேர்த்தே இந்த வசனம் அவ்வாறு குறிப்பிடுகிறது... அவளாவது சொன்னாளா..? என்றால் அதுவும் இல்லை.. வரலாற்று ஆவணங்களை புரட்டி பார்த்து புட்டு புட்டு வைக்கும் புத்தக(நச்சு)ப்புழுக்கள் அவர்கள் வாய் பொத்திய வரலாறு சொல்வார்களா...?
 
  *இயேசுவை (ஈஸா அலை)கடவுளாக கருதிய சமயத்தில், வந்துதித்த முஹம்மது நபி(ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்)  அவர்கள் இயேசு (ஈஸா அலை) சிலுவையில் அறையப்பட வில்லை என கிறித்துவர்களின்(?) அடிப்படை க்கொள்கைகளை தகர்த்தெறிந்து அன்னாரை   வணங்குவோருக்கு நரகம் தான் என வேதகாரர்கள் சமுகத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் புரிய காரணமென்ன...?


இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை. (4:157)


    தம் கடவுட்கொள்கையின் பக்கம் அவர்களை வசப்படுத்த இவ்வாக்கியங்கள் அவர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததாக ஒருவேளை கூறினால் ... இயேசு (ஈஸா அலை) அவர்களும் தம்மைப் போன்றே இறைவனின் ஒரு தூதர் என சொல்ல வேண்டிய அவசியமென்ன...?


... அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்; (04:171 ன் சுருக்கம்) 
    மேலும் பார்க்க:04:172, 05:75, 19:30)

     *கீழ்காணும் வசனம் மனிதர்களை போல் ஜின்கள் என்ற படைப்பு குறித்து கூறுகிறது


 இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.(51:56) 
மேலும் ஜின்கள் குறித்து பார்க்க:(6:100, 15:27, 17:88, 27:17,39, 34:12,14,41, 46:29, 55:15,38, 72:1-15, 114:6)  
   
     முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹிவஸ்ஸல்லம்) அவர்கள் குர்-ஆனை இயற்றியதாக இருந்தால் ஜின்கள் குறித்த மூலங்களை எங்கிருந்து பெற்றார்கள்...? சாதாரணமாக நீதி போதனைகளை சொல்லுவதோடு நிறுத்திக் கொள்ளலாமே...ஜின்கள் குறித்து மக்கள் மத்தியில் சொல்லுவதற்கான அவசியமோ,அத்தியாவசியமோ ஏன் வந்தது...?


*அது போலவே மலக்குகள் என்ற படைப்பு குறித்தும்.,
எவன் அல்லாஹ்வுக்கும், அவனுடைய மலக்குகளுக்கும், அவனுடைய தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீக்காயிலுக்கும் பகைவனாக இருக்கிறானோ, நிச்சயமாக (அவ்வாறு நிராகரிக்கும்) காஃபிர்களுக்கு அல்லாஹ் பகைவனாகவே இருக்கிறான்.2:98


       எந்த மனிதரும் மலக்குகள் குறித்து அறியாதிருக்கும் பொழுது அவர்களின் தன்மை குறித்து மக்கள் மத்தியில் கூற காரணமென்ன...? கற்பனையாக (ஒரு வடிவம் கொடுத்து) தான் அவர்கள் கூறினார்கள் என்றால் அவ்வாறு கூற காரணம் என்ன...?அவ்வாறு சொன்னதால் அவர்கள் பெற்ற பொருளாதார பயன்பாடு என்ன...?   
               
 மேலுள்ள கட்டுரையில் எத்தனை கேள்விக்குறிகள் பல வாக்கிய முடிவுகளில் காழ்ப்புணர்ச்சியே கரைத்து குடித்தவர்களுக்கு அவை அனைத்தும் ஆச்சரியக்குறியை ஏற்படுத்தா விட்டாலும் பரவாயில்லை.அவர்கள் விமர்சிக்க முற்படும் இஸ்லாத்தில் அபாய குறிகளை ஆங்காங்கே ஏற்படுத்த வேண்டாம்.

         வெறுப்பில் வார்த்த சந்தேக சாவிக்கொண்டு  திறக்க முயற்சிக்காதீர்கள்: ஏனெனில் காற்றில் கட்டப்பட்ட கற்பனை கோட்டையல்ல, விமர்சன காற்று தினம் வந்து போக திறந்தே இருக்கும் உங்கள் எதிரில் உள்ள ஒற்றை மாடி வீடுதான்  இஸ்லாம்         

    இப்போது மீண்டும்  ஒருமுறை தலைப்பை உற்று நோக்குங்கள்...

          இன்னும்; "(இறந்து பட்டு) எலும்புகளாகவும், உக்கிப்போனவைகளாகவும் நாங்கள் ஆகிவிட்ட பிறகு, நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்களாக?" என்றும் அவர்கள் கேட்கிறார்கள்.
(நபியே!) நீர் கூறும்; "நீங்கள் கல்லாகவோ, இரும்பாகவோ ஆகுங்கள்.
"அல்லது மிகப் பெரிதென உங்கள் நெஞ்சங்களில் தோன்றும் வேறொரு படைப்பாய் ஆகுங்கள்;" (எப்படியானாலும் நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்). "எங்களை எவன் (மறுமுறையும் உயிர் கொடுத்து) மீட்டுவான்?" என்று அவர்கள் கேட்பார்கள். "உங்களை எவன் முதலில் படைத்தானோ, அவன் தான்!" என்று (நபியே!) நீர் கூறும்; அப்போது அவர்கள் தங்களுடைய சிரசுகளை உம் பக்கம் சாய்த்து, (பரிகாசமாக) அது எப்போது (நிகழும்)? என்று கேட்பார்கள். "அது வெகு சீக்கிரத்திலும் ஏற்படலாம்" என்று கூறுவீராக! (17:49,50&51)

                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்

1 comment:

  1. \\என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (10:15)//பொதுவாக தானே இயற்றிய நூலாக இருந்தால் ஒருவேளை அவர் தன்னைப்பற்றி புகழ்ந்து கூறாமல் வேண்டுமானால் இருக்கலாம்.ஆனால் தன்னை ஒருவர் கண்டித்தைப்பற்றியோ, அதிகாரத்தில் பங்கு இல்லை என்று கூறியது பற்றியோ நூலில் குறிப்பிட மாட்டார்...........இங்கு சொல்லப்பட்ட செய்தி அறிவுக்கு
    உணர்த்தக்கூடியதா
    கவும் இருக்கிறது.....நன்றி @gulam

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்