"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Sunday, November 21, 2010

இறைவனின் எதிரியா -இப்லிஸ்?

                                          ஓரிறையின் நற்பெயரால்

     குர்-ஆனையும் இஸ்லாம் கூறும் கோட்பாடுகளையும் சரிவர புரிந்துக்கொள்ளாமல் குறை காணும் நோக்கிலோ அல்லது காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையிலோ அணுகும் பலரின் அறிவின் மிகுதி உருவாக்கிய  வாதம் தான் \
இப்லிஸ் இறைவனுக்கு எதிரி  ,இப்லிஸ் இறைவனுக்கு எதிரியாக இருக்கிறான் எனும்போது அனைத்தும் முடியுமென்று சொல்லும் கடவுளுக்கே எதிரியா...? பார்த்தீர்களா இங்கு கடவுளுக்கே எதிரி இருக்கும் போது நம்மை எவ்வாறு காப்பாற்றுவார்  என்று தங்களது திரிபுத்துவ வாதத்தை நிறுவ முயல்கின்றன சில நாத்திக சிந்தனைகள்

  உண்மையாக இப்லிஸ் இறைவனின் எதிரியா? அவன் குறித்த குர்-ஆன் வசனங்கள் என்ன சொல்கிறது ... பார்ப்போம்.


 இறைவனின் படைப்பினங்களை மூன்று பெரும் பிரிவாக பிரிக்கலாம்


1. மலக்குகள் (வானவர்கள்)
2. ஜின்கள்                
3. மனிதர்கள்       
       

இப்லிஸ் குறித்து இப்னு கஸீர் இவ்வாறு விளக்கமளிக்கிறது

  சைத்தான்களின் தந்தையின் பெயர்.ஜின் இனத்தைச் சேர்ந்தவனான இவனுக்குச் சந்ததிகளும் சேனைகளும் உண்டு. மறைவாக இருந்துக்கொண்டு மனிதர்களை வழி கெடுப்பதே இவர்களின் தலையாய பணியாகும்.

     இப்லிஸ் என்ற பதம் ஜின்னினத்தின் மூல பிதாவை குறிக்கப் பயன்படுத்த பயன்படுத்தப்பட்டாலும் பொதுவாக தீய செயல் புரிய தூண்டும் ஜின்களுக்கு இப்பெயர் பொருந்தும்.மேலும்


நெருப்புக் கொழுந்திலிருந்து அவன் ஜின்களைப் படைத்தான். (55:15)

  இறை படைப்பில் இரண்டாம் நிலை படைப்பான ஜின்கள் நெருப்பிலிருந்து படைக்கப்பட்டதாக குர்-ஆன் இயம்புகிறது. இத்தகைய படைப்பான இப்லிஸ் மீது இறைவன் கோபமுற காரணமென்ன?

    இறைவன் மலக்குகளையும், ஜின்களையும் படைத்தபிறகு மூன்றாம் படைப்பான மனித படைப்பின் முதல் மனிதராக ஆதம் (அலை) அவர்களை படைத்த போது அந்த முதல் மனிதருக்கு மலக்குகள் மற்றும் ஜின்களின் தலைவனாக இப்லிஸை சிரம் பணிய பணித்தான். மலக்குகள் சிரம் பணிந்தார்கள் இப்லிஸோ சிரம் பணிய மறுத்தான் அந் நிகழ்வை குர்-ஆன் சூரா அல்-ஹிஜ்ரில் பின்வருமாறு எடுத்துரைக்கிறது
 
   (நபியே!) உம்முடைய இறைவன் மலக்குகளிடம்; "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, மனிதனை நிச்சயமாக நான் படைக்கப்போகிறேன்" என்றும்,
அவரை நான் செவ்வையாக உருவாக்கி, அவரில் என் ஆவியிலிருந்து ஊதியதும், "அவருக்கு சிரம் பணியுங்கள்" என்றும் கூறியதை (நினைவு கூர்வீராக)!
அவ்வாறே மலக்குகள் - அவர்கள் எல்லோரும் - சிரம் பணிந்தார்கள்.
இப்லீஸைத்தவிர - அவன் சிரம் பணிந்தவர்களுடன் இருப்பதை விட்டும் விலகிக்கொண்டான்.
"இப்லீஸே! சிரம் பணிந்தவர்களுடனே நீயும் சேராமல் (விலகி) இருந்ததற்குக் காரணம் என்ன?" என்று (இறைவன்) கேட்டான்.
அதற்கு இப்லீஸ், "ஓசை தரும் கருப்பான களிமண்ணிலிருந்து, நீ படைத்துள்ள (ஒரு) மனிதனுக்கு நான் சிரம் பணிவதற்கில்லை!" என்று கூறினான்.
"அவ்வாறாயின், நீ இங்கிருந்து வெளியேறிவிடு நிச்சயமாக நீ விரட்டப்பட்டவனாக இருக்கிறாய்."
"மேலும், நிச்சயமாக நியாயத் தீர்ப்பு நாள் வரை உன் மீது சாபம் உண்டாவதாக!" என்று (இறைவனும்) கூறினான். (15:28 லிருந்து 35 வரை)
     
   இப்லிஸ் இங்கு இறைவன் புறத்திலிருந்து கோபமுற காரணம் அவனை வணங்கவில்லையென்பதற்காக அல்ல மாறாக தன்னை விட தாழ்ந்த படைப்பாக மனிதப் படைப்பை கருதி ஆதமுக்கு சிரம் பணிய மறுத்தால் தான். ஆக அவனது ஏவலுக்கு கட்டுபடாததே இங்கு இறைவனின் சாபம் அவன் மீது உண்டாக பிரதான காரணம் (பார்க்க குர்-ஆன் 07:12)

இவ்விடத்தில் இரு முக்கிய கேள்வி தோன்றலாம்

(1) மலக்குகள் போல் ஏன் இப்லிஸ் சிரம் பணியவில்லை?
(2)இறைவன் நாட்டப்படிதான் எல்லாம் நடக்கிறது என்றால் இங்கு இப்லிஸ்  அஃது சிரம் பணியாமல் இருந்தற்கு இறைவன் தானே காரணம்?


   * மலக்குகள் இறைவனின் சொல்லுக்கு சிறிதும் மாறு செய்யாத நிலையுடனே இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்பாகும். இறைவன் ஏவியவற்றை செய்வார்கள்.அவன் தடுத்தவற்றை விட்டு விலகி கொள்வார்கள்.


  அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள். (66:06 ன் சுருக்கம்)
 
  அஃதில்லாமல் ஜின்கள் மலக்குகள் போலன்றி மனிதன் போன்று எதையும் சிந்தித்து செயல்படுத்தும் முறையில் இறைவனால் சிந்தனையுடன் படைக்கப்பட்ட படைப்பு. எனவே தான் மலக்குகள் இறை சொல்லுகிணங்க ஆதம்(அலைக்கு) சிரம் பணிய இப்லிஸோ (ஜின்) இறைவன் சொல்கிறான் என்றும் பாராமல் தன்னைவிட கீழ் நிலை படைப்புக்கு சிரம் தாழ்த்துவதா என இருமார்பு கொண்டான்.

 அவனது சிந்தனை இறைவன் சொல்லுக்கு மாறு செய்ய தூண்டியது.


"நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?" என்று அல்லாஹ் கேட்டான்; "நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்" என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (7:12)

  * அடுத்து இறை நாட்டப்படி தான் எல்லாம் நடக்கிறது.,என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இறைவன் நன்மை -தீமைகளை ஆராய்ந்து உணரும்  பொருட்டு  சில சோதனைகளை ஜின் -மனித  மனங்கள் மத்தியில் ஏற்படுத்துகிறான். ஏனெனில் நாம் அவற்றை பகுத்து ஆய்ந்து இது சரியானதா? அல்லது தவறானதா? என்று அறிந்து அதை செயலாற்றுவதற்காக.,

     உதாரணத்திற்கு இப்போதும் நாம் காண்கிறோம் சிலர் இறை மறுப்பாளானாக இருக்கிறார்கள். அதற்கு காரணம் அவர்களின் செயல்களும் அவர்கள் சரியென்று காணும் அவர்களின் எண்ணமுமே தான் காரணமே தவிர இறைவன் அல்ல ஏனெனில் இறைவனின் ஏவல்களும் -விலக்கல்களும் மிக தெளிவாக நம்மை வந்தடைந்துவிட்டது மேலும் எவர்களுக்கும் எந்த ஒரு செயல் குறித்தும் சுயமாய் முடிவுகளை எடுக்கும் உரிமைகளையும் இறைவன் கொடுத்திருக்கிறான்.

  எனவே தமது அறிவுக்கு உட்பட்டே இது நல்லது இது கெட்டது என நம்மால் முடிவெடுக்கும் நிலை இருக்கிறது இதே நிலையே தான் இறைவன் அங்கு இப்லிஸுக்கும் கொடுத்தான். தனது சிற்றறிவால் படைத்தவன் கூற்றை ஏற்க தயங்கினான்

      அவ்வாறு இறைவனின் கோபத்திற்கு ஆளான இப்லிஸ் அடுத்து இறைவனிடம் கேட்டது குறித்து குர்-ஆன் கூறுகிறது.ஆதி மனிதருக்கு சிரம் தாழ்த்த மறுத்ததால் தன்னை சபித்த இறைவனிடம் இப்லிஸ் அவகாசம் கேட்கிறான் எதற்கு? இறுதி நாள் வரை வருகின்ற மனிதர்கள் யாவரையும் வழிகெடுத்து இறைவனுக்கு மாறு செய்வதற்காகவே... அதற்கு இறைவனும் ஒப்புதல் அளிக்கிறான்.

     "என்னுடைய இறைவனே! இறந்தவர்கள் எழுப்பப்படும் நாள்வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக!" என்று இப்லீஸ் கூறினான். (15:36)
"நிச்சயமாக, நீ அவகாசம் அளிக்கப்பட்டோரில் ஒருவானாவாய்;" (15:37)  
(அதற்கு இப்லீஸ்,) "என் இறைவனே! என்னை நீ வழிகேட்டில் விட்டுவிட்டதால், நான் இவ்வுலகில் (வழி கேட்டைத்தரும் அனைத்தையும்) அவர்களுக்கு அழகாகத் தோன்றும்படி செய்து (அதன் மூலமாக) அவர்கள் அனைவரையும் வழிகெடுத்தும் விடுவேன். (15:39)

       இங்கு ஒரு விசயம், இப்லிஸூக்கென்று எந்த ஒரு பிரத்தியேக சக்தியும் இல்லை. மாறாக இறைவனிடத்தில் வேண்டி இறைவன் அவனுக்கு அத்தகைய அவகாசத்தை தருகிறான். எனவே இங்கு ஆற்றல் இறைவனால் தான் இப்லிஸூக்கு வழங்கப்படுகிறது என்பது தெளிவு!.அவ்வாறு இப்லிஸூக்கு அத்தகைய ஆற்றல் வழங்கப்பட்ட போதிலும் அவன் குறித்தும் அவனது செயல்களின் விளைவு குறித்தும் மனித சமுதாயத்திற்கு மிக தெளிவாக எச்சரிக்கை செய்கிறான்.


மனிதர்களே! பூமியிலுள்ள பொருட்களில், அனுமதிக்கப்பட்டவற்றையும், பரிசுத்தமானவற்றையும் உண்ணுங்கள்;. ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள் - நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (2:168) 

மேலும் பார்க்க:2:208, 5:91, 6:142, 7:27, 7:200, 16:36, 19:44)

    இவ்வாறு மிக தெளிவாக வழிகெடுக்கும் ஜின்கள் குறித்து மனிதர்களுக்கு எச்சரிக்கை செய்து அவனது சூழ்ச்சிக்கு இரையாகாமல் உங்களை காத்துக்கொள்ள்ளுங்கள் என்றே  கட்டளை பிறப்பிக்கிறான்., காவல் நிலையத்தில் இருக்கும் அதிகாரிகள் திருட்டு குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எவ்வாறு எச்சரிக்கையாக இருக்க சொல்வார்களோ அதுப்போல.
  ஏனெனில் திருடன் காவல் நிலையத்தில் திருட முனைவதில்லை மாறாக ஊர் மக்களின் வீடுகளில் தான் திருடுவான். (இது ஒரு அளவுகோல் அல்ல ஒரு உதாரணமே) ஆக,இங்கு மனிதர்களுக்கும் -தீய செயல் புரிய தூண்டும் இப்லிஸூக்கும் (ஜின்களுக்கும்) தான் பிரச்சனையே ஒழிய இறைவனுக்கும் இப்லிஸுக்குமல்ல...

   சுமார் நூறு வசனங்களுக்கு மேலாக குர்-ஆனில் இப்லிஸ் (ஜின்கள்) குறித்து இறைவன் மனிதர்களுக்கு தான் எச்சரிக்கை விடுக்கிறானே தவிர தன்னின் இயலாமையால் உருவான எதிரியாக எங்கேணும் இப்லிஸ் கூறப்படவே இல்லை.

                                  அல்லாஹ் மிக்க அறிந்தவன் 

2 comments:

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்