"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Saturday, April 28, 2012

வரலாறு கற்றுக்கொண்ட பாடம்!

                                           ஓரிறையின் நற்பெயரால்


இஸ்லாம் என்ற விஷம் அரேபியாவில் மிக வேகமாகப் பரவி வருகின்றது இந்த விஷத்தை முறியடிக்க வேண்டுமானால் அது வெளிவரும் வாசலை அடைத்தாக வேண்டும் அதற்கு ஒரே வழி நபி முஹம்மதை கொல்ல வேண்டும்...

ஓரிறைக்கொள்கையின் வெளிச்சப்புள்ளிகள் மக்காவை ஆக்ரமிக்க தொடங்கிய போது குறைஷியர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் இது. தீர்மானத்தை நிறைவேற்ற மனமுகந்து முன்வந்தார் ஒரு திடகாத்திரமான இளைஞர்!

ஓட்டகங்களை மேய்ப்பதிலே தம் இளவயதை கழித்ததன் விளைவாக இயல்பாகவே நல்ல வலிமையும் கம்பீரமான உடல்வாகும் கொண்டிருந்த அவருக்கு மிக எளிதாய் ஏற்படும் கோபமும், துணிவும் வெளிப்படையாய் முஸ்லிம்கள் பலருக்கு இன்னல் தருவதற்கு ஏதுவாய் இருந்தது.

தம் மூதாதையர்கள் வணங்கி வழிப்பட்ட உருவச்சிலைகளை கடவுள்களல்ல அவையாவும் மனித கரங்களின் கற்பனையே.. என்ற விமர்சனம் செய்து, பிறக்கும் பெண் பிள்ளைகளை கொல்லும் பழக்கமுடைய தம் சமூகத்தில் ஆணும் பெண்ணும் இறைவன் முன் சமம் என்ற சமத்துவமும், ஆண்டான் அடிமை இல்லை அனைவரும் இறைவனின் அடிமைகள் என தம் மேற்குடி குலத்தாரோடு கறுப்பின மக்களை கைக்கோர்க்க முற்பட்டதும் முஹம்மத (ஸல்) அவர்களை கொல்ல நியாயமான காரணமாக தெரிந்தது அந்த வாலிபருக்கு.

குலங்களாலும் கோத்திரங்களாலும் சச்சரவுக்குழிகளில் மண்டிக்கிடக்கும் அந்த அரேபிய பாலையில் முஹம்மதும் (ஸல்) ஓர் உயர் குறைஷிக்குலத்தை சார்ந்தவர் என்பதால் வெளிப்படையாக அவரை எதிர்த்தால் ஏனைய கிளை கோத்திரங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என பயந்து காலம் தள்ளிய அந்த குறைஷிக்கூட்டத்திற்கு இந்த இளையவரின் கர்ஜனை பெரும் ஊக்கத்தை கொடுத்தது. எப்படி கொல்வது வழித்தேடியவர்களின் விழிக்களுக்கு முன்னமே தம் வாளை உயர்த்தி தம் வஞ்சனையே தீர்க்க அந்த பாலை பெருவெளியில்

கோபத்தின் தடங்களை மட்டுமே வழிக்காட்டியாக கொண்டு முஹம்மத் (ஸல்) அவர்களை கொல்ல விரைகிறார் அந்த வாலிபர்...


கி.பி 634  ஆம் ஆண்டு.

இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா மதினாவில் ஆட்சிப்பொறுப்பை ஏற்கிறார்.
பொறுப்பை ஏற்றவுடன் தம் மக்கள் மத்தியில் இப்படி பிரகடனம் செய்கிறார்:
"மக்களே, என் மீது உங்களுக்கு சில உரிமைகள் உள்ளன. அதனை நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் கோரலாம். அதில் ஒன்று, உங்களில் ஒருவர் கோரிக்கையுடன் வரும்போது, அது சரியான முறையில் தீர்க்கப்பட்டு அவர் திருப்திகரமாக திரும்பி செல்வதாகும். மற்றொரு உரிமை என்னவென்றால், நாட்டின் வருவாயை நான் தவறான முறையில் பயன்படுத்தியிருந்தால் அதனை நீங்கள் தட்டி கேட்பதாகும். நாட்டின் எல்லைகளை பலப்படுத்தி உங்களை ஆபத்திலிருந்து காப்பதும் என்னுடைய பொறுப்புகளில் ஒன்றாகும். அதுபோல, நீங்கள் போருக்கு செல்லும்போது, உங்கள் குடும்பத்தை ஒரு தந்தையின் பொறுப்பில் இருந்து நான் கவனிக்க வேண்டும் என்பதும் உங்களின் உரிமைகளில் ஒன்றாகும்.
மக்களே, இறைவனை நினைவுக்கூர்ந்து கொண்டே இருங்கள், என்னுடைய தவறுகளை மன்னியுங்கள், எனக்கு ஒத்துழையுங்கள். நல்லதை அமல்படுத்தி தீயதை தடுக்க எனக்கு உதவி புரியுங்கள். இறைவன் என் மீது விதித்துள்ள கடமைகளை நிறைவேற்ற எனக்கு ஆலோசனை கூறுங்கள். 
சொற்பொழிவுகளில் மட்டும் இப்படியான வாசகங்களை படித்து செல்லாமல் தம் வாழ்நாள் முழுவதும் அதன்படி செயல்படுத்தியது கலிபாவின் அரசியல் வாழ்வு. தம் மக்களின் வாழ்வியலை நிதர்சனமாக அறிய இரவு நேரங்களில் நகர்வலம் வருவதுண்டு அப்படி ஒரு நாள் வலம் வரும்போது...

ஒரு குடிசையின் உள்ளிருந்து விளக்கின் மெல்லிய வெளிச்சமும் அதை விட கூடுதலாக குழந்தைகளின் அழுகுரலும் வெளியே வரக் கண்டார்கள்.
கலிஃபா அவர்கள் அந்தக் குடிசையை நெருங்கிய போது, அங்கே ஒரு பெண்மணி அடுப்பில் ஒரு சட்டியில் ஏதோ சமைத்துக் கொண்டிருப்பதையும் அவருக்கருகில் அழுது கொண்டிருந்த குழந்தைகளையும் கண்டார்கள். அப்பெண்மணிக்கு சலாம் சொல்லி அவரது அனுமதி பெற்று உள்ளே சென்றதும் அவர்களின் முகம் அறியா வகையில் இருந்ததால் உண்மையே அறிய ஏதுவாக அந்நிலையில்...

கலிபா: “குழந்தைகள் ஏன் அழுது கொண்டிருக்கின்றன?”
பெண்மணி: “அவர்கள் பசியோடிருக்கின்றார்கள். அதனால்தான் அழுகிறார்கள்”
கலிபா: “அடுப்பில் என்ன இருக்கிறது?”
பெண்மணி: “அது வெறும் சுடுநீரும் சில கற்களும்தான். அவர்களின் பசியைப் போக்க நான் ஏதோ சமைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற எதிர்பார்ப்பிலேயே அவர்கள் தூங்கி விடுவார்கள். அதற்காகத்தான் இப்படிச் செய்து கொண்டிருக்கிறேன். இந்தத் துன்பமான நேரத்தில் எங்களுக்கு ஒரு உதவியையும் செய்யாத இந்த நாட்டின் கலிபா அவர்களுக்கும் எனக்குமிடையில் இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ்தான் ஒரு நல்ல தீர்ப்பை வழங்குவான்”.

அப்பெண்மணியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு பதறிப்போன கலிஃபா அவர்கள் கண்களில் நீர் வழிந்தோட, “அல்லாஹ் உம் மீது கிருபை செய்வானாக! உமது துன்பமான நிலைமையை கலிபா எப்படி அறிவார்?” என்று வினவினார்.
“முஸ்லிம்களின் தலைவராக இருக்கும் அவர் எங்கள் நிலைமையை அறிந்திருக்க வேண்டாமா? என்றார் அந்தப் பெண்மணி.

கலிஃபா அவர்கள் விரைந்து பைத்துல் மாலுக்குச் சென்றார்கள். ஒரு சாக்குப்பையில் மாவு, நெய், பேரீத்தம் பழங்கள் போன்ற உணவுப் பொருட்களும் துணிமணிகளும், கொஞ்சம் பணமும் எடுத்துக் கொண்டார்கள்.சாக்குப்பை நிரம்பியதும் தமது உதவியாளரை அழைத்து, அதைத் தூக்கி தமது முதுகில் வைக்கும்படி சொன்னார்கள்.

உதவியாளர் பதறியவாறு, “இந்த மூட்டையை நானே தூக்கி வருகிறேனே அமீருல் முஃமினீன் அவர்களே!” என்றார். கலிஃபாவோ அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.“என்ன? நியாயத் தீர்ப்பு நாளன்று எனது சுமையை உம்மால் சுமக்க முடியுமா? மறுமையில் அந்தப் பெண்மணி பற்றி கேள்வி கேட்கப்படப் போவது நான் தான் நீர் அல்ல... அதனால் இந்தச் சுமையையும் நானே சுமக்க வேண்டும்!”

தயங்கியபடி அந்த மூட்டையைத் தூக்கி கலிஃபா அவர்களின் முதுகின் மேல் வைத்தார். அதனைத் தூக்கிக் கொண்டு ஓட்டமும் நடையுமாக அப்பெண்மணியின் குடிசையை நோக்கி விரைந்தார்கள் அந்த நாட்டின் கலிஃபா அவர்கள். உதவியாளரும் அவரை பின்தொடர... குடிசையை அடைந்த கலிபா மூட்டையிலிருந்து மாவு, நெய், பேரீத்தம் பழங்களை எடுத்து அவற்றை பிசைந்து, அடுப்பிலிருந்த சட்டியிலிட்டு கிளறினார்கள்.

அருகிலிருந்த ஊதுகுழலை எடுத்து ஊதி அடுப்புத் தீயை தூண்டி எரியச் செய்தார்கள். அந்த மங்கலான வெளிச்சத்திலும் அவர்களின் அடர்ந்த தாடிக்குள் புகை படர்ந்தது தெளிவாய் தெரிந்தது.

பிறகு உணவு தயாரானதும் கலிஃபா அவர்களே அந்த உணவை அப்பெண்மணிக்கும் அவரது குழந்தைகளுக்கும் பரிமாறினார்கள். மீதம் இருந்த உணவுப் பொருட்களை அவர்களின் அடுத்த வேளை உணவிற்காக வைத்துக் கொள்ளும்படி கொடுத்தார்கள். வயிறு நிரம்ப உண்ட குழந்தைகள் மகிழ்ச்சியாக சிரித்து விளையாடத் தொடங்கினார்கள். அதைப் பார்த்த கலிபா அவர்களின் முகமும் மலர்ந்தது.

சாந்தமான அப்பெண்மணியிடம் ‘ இக்குடும்பத்தை பராமரிப்பவர் யாரும் இல்லையா’ என வினவ. தம் கணவர் இறக்க தமக்குஆதரவளிக்க வேறு யாரும் இல்லை எனவும் அப்பெண்மணி தெரிவித்தார். வீட்டிலிருந்த உணவுப் பொருட்களெல்லாம் தீர்ந்துப் போய் மூன்று நாட்களாக பட்டினியாக இருந்த நிலையில் அறிமுகமில்லாத அந்த மனிதர் செய்த உதவிக்கு நன்றி தெரிவித்த அந்தப் பெண்மணி சொன்னார், “உங்களின் இந்த கருணைச் செயலுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக! உண்மையில் கலிஃபா பதவிக்கு அவரை விட நீங்களே மிகப் பொருத்தமானவர்”.

அவருக்கு எதிரில் அமர்ந்திருப்பது கலிஃபா என்பதை அம்மாது அப்போதும் அறிந்து கொள்ளவில்லை! கொஞ்ச நேரம் அங்கேயே அமர்ந்திருந்து குழந்தைகள் விளையாடுவதை பார்த்துக் கொண்டிருந்த கலிபா அவர்கள் அதன் பின்னர் தம்மிடம் நோக்கி திரும்ப ஆரம்பித்தார்கள்.

பிறர் நலனில் கொள்ளும் அக்கறை ஒரு ஆட்சியாளர் என்ற நிலையும் தாணடி இன்னும் பல நூறு செயல்கள் கலிபாவின் ஆட்சி முழுவதும் காணப்படுகிறது. உதாரணத்திற்கு தான் இங்கொன்று. தன் ஒவ்வொரு செயலுக்கும் நாளை இறைவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என எதுவொன்றையும் சீர்தூக்கி பார்த்து அதை சரியாக செய்வதற்கே தன் வாழ்வை அற்பணித்த இஸ்லாமிய வரலாற்றின் இரண்டாம் கலிபா.

மேற்கண்ட இரு நிகழ்வுகளில் நூறு சதவீகிதம் மாறுப்பட்ட சிந்தனையுடன் செயல்பட்ட இருவரும் ஒருவர் என்றால்...
. . . 
ஆனால் உண்மை அது தான் இருவரும் ஒருவரே -அவர்தான். . .
உமர் பின் கத்தாப் ரலியல்லாஹூ அன்ஹூ

இஸ்லாம் ஒரு மனிதனின் உள்ளத்தில் எந்தளவிற்கு மாற்றத்தை ஏற்படுத்தவல்லது என்பதற்கு உமர் (ரலி)யின் வாழ்வு மிகப்பெரிய சான்றாக உள்ளது. முஹம்மத் (ஸல்) அவர்களின் உயிரை எடுப்பதற்கு புறப்பட்ட இவர் தம் உயிரை விடவும் மேலாக முஹம்மத் (ஸல்) அவர்களை நேசிக்க தொடங்கியது தான் இஸ்லாம் என்ன செய்தது என்று யோசிக்க வேண்டிய ஒன்று...

வெறும் ஓட்டங்களை மேய்க்கும் இடையராக இளம் வயதை துவங்கிய உமர் (ரலி) அவர்கள் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை பத்தாண்டுகள் சர்வ வல்லமையுடன் ஆட்சி புரிந்தது இன்றைய ஆட்சியாளர்களுக்கு இவரிடத்தில் படிப்பினை மட்டும் அல்ல., பல்கலைகழகங்களில் வைக்கும் அளவிற்கு பல பாடங்கள் இருக்கிறது என்பதை பறைச்சாற்றுகிறது.

இன்றைய நாட்களில் சமூக சேவை, பொது நலம், மக்களுக்கான உழைப்பது என்பதையெல்லாம் 50% தள்ளுபடி விலையில் விற்பனை செய்த பிறகே ஆட்சி அதிகாரத்தில் அமர்கிறார்கள். மீதம் இருக்கும் பொதுமக்களுக்காக செயல்திட்டங்களும் அவர்கள் மீது நாளோரு மேனியும் பொழுதொரு வண்ணமும் போடப்படும் வழக்குகளில் சீரழிந்து போகிறது.

மக்களின் வரிபணத்தில் வாழ்வை பெருக்கும் அரசியல்வாதிகள் இந்த வாய்மையாளரின் செயல் திட்டங்களை அறிந்துக்கொள்வது காலத்தின் அவசியமாகிறது.

தொலைத்தொடர்ப்பில்லாத அத்தகைய காலக்கட்டத்தில் அந்த ஆட்சித்தலைவர் தம் ஆளுகைக்கு கீழுள்ள அனைத்து பகுதிகளுக்கு இடையே ஒரு சீரான தொடர்பை ஏற்படுத்தினார். எந்த பகுதியில் எந்த செயல்கள் நடந்தாலும் அது முறையாக அவரிடம் சேரும் பொருட்டு அதற்காக அனைத்து வழிமுறைகளையும் செய்தார்.

அதனால் தான் அன்றைய பைஸாந்திய பேரரசு வரை நீண்டிருந்த அவருடைய பல இலட்ச மைல்கள் கொண்ட நிலப்பரப்பை மதினாவின் பள்ளிவாயிலின் முற்றத்திலிருந்தே அவரால் கண்காணிக்க முடிந்தது.

மக்களோடு மக்களாக அவர்களின் நேரடி தொடர்பை எப்போதும் வைத்திருந்தார்கள். தம் குடும்பத்திற்கு தேவையானதை அரசாங்கத்தில் இருந்து பெறாமல் தம் கைகாலே உழைத்து சம்பாதித்து உண்டார்கள், அரசாங்க விளக்குகளை கூட அவர் வீட்டு முற்றத்திற்கு வெளிச்சம் தர அனுமதிக்கவில்லை அவர். ஆட்சி முழுவதும் யாருக்கும் பாரபட்ச நீதி வழங்கப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழவே இல்லை. ஆனால் இன்றைய ஆட்சியாளர்களோ, அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் எழாவிட்டால்தான் ஆச்சரியம்.

ஒருமுறை, பைத்துல் முகத்தஸ் வெற்றிப்பெற்றதை காண்பதற்காக தனது பணியாளுடன் ஒரு ஓட்டகத்தில் பயணப்படுகிறார் கலிபா உமர்(ரலி). முடிவில் பணியாள் அமர்ந்திருக்க ஒட்டகையின் கயிற்றை பிடித்தவண்ணம் பாலஸ்தீன மண்ணில் நுழைகிறார் கலிபா. ஆச்சரியமுற்றது அம்மக்கள் மட்டுமல்ல., பல வரலாற்று ஆய்வாளர்களும் தான்.

தனக்காக மட்டும் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு அரசியல் ஆதாயம் பெற தேர்தல் நேரத்தில் மட்டும் ஏழைகளை கட்டியணைத்து போஸ் கொடுக்கும் போலி அரசியல்வாதிகள் போலல்ல அவர்களது வாழ்வு. நபிகள் நாயகம் எனும் பாடசாலையில் தாம் நிதர்சனமாக பயின்ற வாழ்க்கை பாடப்புத்தகத்தின் அனைத்து பக்கங்களையும் தம் அரசியல் தேர்வில் எழுத்தாக்கினார்.

எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.

தேசதந்தை மீண்டும் உயிர்பெற்று வந்து சொல்ல போவதில்லை அந்த உமரின் ஆட்சி தான் இனியும் வேண்டுமென்று. ஆனால் அந்த உமரின் (ரலி) ஆட்சியை நம்மால் நிதர்சனமாய் கொண்டு வரமுடியும். ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...

                                         அல்லாஹ் நன்கு அறிந்தவன்.


Reference :

http://ta.wikipedia.org/wiki/omar(rali)
http://azeezbaqavi.blogspot.com/
http://www.tamililquran.com
http://peacetrain1.blogspot.com/
http://www.islamforlife.co.uk/khalifa_umar_bin_al.htm
Gibbon - In The Decline and Fall of the Roman Empire
Washington Irving - In his book Mahomet and His Successors



24 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..

    அறியாமல் கண்ணீர் பெருக்கெடுத்த மிக நெகிழ்ச்சியான பதிவு. ஜசாக்கல்லாஹ்...

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கு நன்றி

      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  2. அஸ்ஸலாமு அலைக்கும் மச்சான் அருமையான பதிவு

    உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று.

    வரலாற்றின் பல பக்கங்களை இன்னும் தொடர்ச்சியாக சொல்லுங்கள் மச்சான்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == உமர் ரலி அவர்கள் சொன்னார்கள் என் ஆட்சிப் பகுதியில் ஓர் ஆடு காணமல் போனலும் மறுமையில் நான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமே என்று பயப்படுகிறேன் என்று. ==

      நம் ஆட்சியாளர்களெல்லாம் கொஞ்சம் யோசிக்க வேண்டும் இந்த வரிகளை

      இன்னும் தொடர துஆ செய்யுங்கள் மச்சான்
      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..
    //ஆட்சியாளர் ஒவ்வொருவரும் உளப்பூர்வமாக தம்மை அந்த உமராக நினைத்தால் மட்டும்...// இன்றைய அரசியலின் நிலைமையை சாடிட்டு கூறும் நல்ல பதிவு...... இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்...

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == இன்ஷா அல்லாஹ் எல்லா ஆட்சியாளர்களும் உமர் களாக இருக்க அல்லாஹ்வே போதுமானவன்.. ==

      நாமும் துஆ செய்வோம் சகோ

      வருகைக்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு..


    மாசா அல்லாஹ்! நெகிழ வைக்கும் பதிவு.

    வஸ்ஸலாம்..

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      வருகைக்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  5. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ குலாம்..

    படிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...

    இது போன்ற இன்னொரு சம்பவமும் உண்டு,ஒரு பெண்ணின் பிரசவ கால இரவும்,உமர் (ரலி) அவர்கள் செய்த உபசரிப்பும்...நம்மை மெய்சிலிர்க்க வைத்துவிடும்....

    மாஷா அல்லாஹ்...அருமையான பதிவு,,

    அன்புடன்
    ரஜின்

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      = = அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது... = =

      உண்மைதான் சகோ அவர்கள் வாழ்வு முழுக்க இறைவனின் வழிக்காட்டுதலும் இறைத்தூதரின் முன்மாதிரியுமே அமைந்திருந்தால் அவர்களின் வாழ்க்கையில் உலகத்தாருக்கே படிப்பினை இருக்கிறதென்றால் அது மிகையாகாது.

      வாசிப்பிற்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  6. உமர் (ரலி ) அவர்கள்களின் வீரம் ஒரு புறம் .. ..கலிமா

    சொல்லி இஸ்லாத்தில் தன்னை இணைத்து கொண்ட பின்பு

    பொறுமையின் சிகரமான முஹம்மது நபி (ஸல் )அவர்களிடம்

    நற்பன்பினை கற்ற பின்பு ..வீரம் .,ஆட்சி அதிகாரம் இருந்தும்

    பணிவாக .அந்த ஏழை பெண்மணியின் துயர் துடைத்த விதத்தை

    அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் ...,\

    .இஸ்லாத்தின் தூய தன்மையை

    அழகாக எடுத்துரைத்த தங்களின் தூய்மையான பணி

    மேமேலும் வளர வாழ்த்துகிறேன்

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

      வரலாறு உமர் (ரலி) போல் ஒரு வீரரை சந்தித்து இருக்குமா என்பது கேள்விக்குறியான ஒரு விசயம். அப்படி சந்தித்து இருந்தாலும் அவர் கலிபா பொறுப்பேற்றவுடன் இருந்த பொறுமையும், தம் மக்களின் மீது கொண்ட கனிவும் நிச்சயம் எந்த ஒரு ஆட்சியாளருக்கும் இருக்க வாய்ப்பே இல்லை. அதை கலிபா அவர்களின் வரலாறு முழுக்க காணலாம்.

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  7. அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)

    அருமையான வரலாற்று ஆக்கம் சகோ. மாஷா அல்லாஹ்..

    //எந்நிலையிலும் இறைவனை மட்டுமே அஞ்சி அனைத்து மக்களுக்கும் நீதமான தீர்ப்பை வழங்கினார்கள். வரலாறு படிப்பினைகள் பல பேர்களுக்கு கற்றுக்கொடுத்தது. ஆனால் ஹஜ்ரத் உமரோ (ரலி) வரலாற்றுக்கே பல படிப்பினைகள் கற்றுக்கொடுத்தவர்கள். அவர்களின் சீர்பட்ட வாழ்வுக்கு அடிப்படைக்காரணம் அவர்கள் கொண்ட இறை நம்பிக்கை மட்டுமே.//

    நிச்சயமாக சகோ. ஒவ்வொரு உண்மையான இறைநம்பிக்கையாளரின் வாழ்வும் அதற்கோர் எடுத்துக்காட்டு, இறை நம்பிக்கைக்கு முன்பு நமது வாழ்வு எப்படி இருந்தது, இறைநம்பிக்கைக்குப் பின்பு நம் வாழ்வு எப்படி உள்ளது என்பதை ஒரு கணம் சிந்தித்தாலே எளிதில் விளங்கும்.

    இது ஒரு அற்ப வாழ்வு, நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்னும் யதார்த்தம் நம் அரசியல்வாதிகளுக்குப் புரிந்தாலே போதும், நல்ல ஒரு ஆட்சி மலரும். ஆனால், அப்படி ஒரு எண்ணம் தோன்றுவதற்குண்டான அறிகுறிகள் புலப்படாதது நம் துரதிர்ஷ்டம்.

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == இது ஒரு அற்ப வாழ்வு, நாம் இந்த உலகை விட்டுச் செல்லும் பொழுது எதையும் கொண்டு செல்லப் போவதில்லை என்னும் யதார்த்தம் ==

      இதை தெளிவாக புரிந்துக்கொண்டதால் தான் சகோ அந்த ஆட்சியாளர் அரசாண்ட பத்து வருட காலம் முழுவதும் நீதி வழுவாமல் சிறக்க செய்தது.

      நம்மை ஆள்பவர்களும் இந்த நிதர்சன உண்மையே புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதே எம் ஆவல்

      வருகைக்கும் கருத்திற்கும்
      ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

      Delete
  8. இந்த பதிவிற்கு மைனஸ் வாக்களித்த சகோ சர்வாகனின் நேர்மைக்கு (ஓட்டளித்ததில் மட்டும்) என் பாராட்டுக்கள்!

    சகோ @சார்வாகன் உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக!

    எதிர்வாக்களித்தோடு அதற்கான காரணத்தையும் இங்கே பின்னூட்டமாய் சில வரிகளில் விளக்கியிருந்தால் உங்கள் உண்மையின் நிலைப்பாட்டை என்னைப்போல ஏனையவர்களும் அறிந்துக்கொள்ள வாய்ப்பிருக்குமே சகோ!

    கலிபா உமரின் (ரலி) இரு பக்கமுமான வாழ்வை வரலாற்றுப்பக்கங்களிலிருந்து ஆக்கமாக இங்கே வைத்திருக்கிறேன்.
    நம் தேச தந்தைக்கு இவர் என்ன தாய்வழி மூதாதையரா..? பிறகு ஏன் இவரது ஆட்சிபோல் தான் இந்த தேசத்தில் இனி அமைய வேண்டும் என கூறினார்.? அவரை வெறும் இஸ்லாமிய தலைவராக பார்க்கமால் தேசத்திற்கும் தேச மக்களின் பாதுக்காப்பிற்கும் இவரது ஆட்சிப்போல் அமைந்தால் மட்டுமே அது சாத்தியமானது என்பதை விருப்புவெறுப்பின்றி ஆராய்ந்ததன் விளைவே... இப்படி சொல்ல காரணம். சரி விடுங்கள் அவர் சொன்னதற்காக எல்லாம் நான் உமர் (ரலி) ஆட்சியே சிலாகித்து கூறவில்லை.

    நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் கலிபா அவர்களின் ஆட்சியில் என்ன தவறு இருப்பதாக எண்ணுகிறீர்கள். அவர் மக்களின் உரிமைகளை பேணிக்காத்தது தவறு என்கிறீர்களா? இல்லை எல்லோரும் இறைவன் முன்சமம் என்ற சமத்துவத்தை நிலை நாட்டினாரே அது தவறு என்கிறீர்களா? இன்னும் ஒரு நிகழ்வு அவர் வாழ்வில் கேளுங்கள்.,
    ஒருமுறை தொலைந்து போன ஒட்டகத்தை கூட தம் வேலையாளை அனுப்பாமல் அவரே தேடி சொல்கிறார். கேட்டால் தொலைந்தது தம் கவனக்குறைவே என்கிறார். யார் சொல்வது இது., பல லட்ச மைல்களை அரசாண்ட ஒரு சக்ரவர்த்தி சொல்கிறார். இவரது ஆட்சியா இங்கே வேண்டாம் என்கிறீர்கள்?
    ஆனால் பாருங்கள்
    உலகின் மிகப்பெரிய ஏழை நாடான நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கும் மேற்பட்டவர்கள் கணக்கு காட்டிய கோடீஸ்வரர்கள். மீதிப்பேர் கணக்கு காட்டாத கோடீஸ்வர்ர்கள். சாமானிய மனிதர்கள் அவர்களில் பத்து பேர் இருந்தால் அது ஆச்சரியமே!

    நூற்றுப் பத்து கோடிக்கும் மேற்பட்ட நடுத்தர ஏழைகளை கொண்ட நாட்டில் வறுமையே போக்க வேண்டுமானால் எப்படிப்பட்ட ஆட்சியாளர் நமக்கு வேண்டும்... நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.
    இந்த உமர் (ரலி) முஸ்லிம் ஆட்சியாளர் என்ற ஒரே காரணத்திற்காக இவரது ஆட்சி போன்று வேண்டாமென சொன்னால்... இந்த சமூகத்தின் மீது நீங்கள் கொண்ட அக்கறையே என்னவென்பது...?

    உங்கள் சகோதரன்
    குலாம்.

    ReplyDelete
  9. சலாம் சகோ குலாம்,

    நெகிழ்ச்சியான பதிவு. மாஷா அல்லாஹ்..உமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....
    நேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ....

    ReplyDelete
    Replies
    1. வ அலைக்கும் சலாம் வரஹ்

      == நேரம் கிடக்கையில் ஒவ்வொரு சம்பவமாக சொல்ல முயற்சி செய்யுங்கள் சகோ.... ==

      உமர் ரலி யின் வீரத்தையும், ஆட்சி முறையையும் சொல்ல ஆயிரம் பதிவுகள் கூட பத்தாது....
      இன்ஷா அல்லாஹ் முயற்சிக்கிறேன் சகோ

      கருத்திற்கு நன்றி
      ஜஸாகல்லாஹ் கைரன்

      Delete
  10. "கடவுளால் தான் எல்லாம் முடியும் என்றும் கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்ல வருகிறேன்.."

    ReplyDelete
  11. naan oru hindhu aanalum yenakku raliyai pedikkum

    ReplyDelete
    Replies
    1. கருத்திற்கு நன்றி சகோ!

      Delete
  12. படிக்கும்போதே கண்கள் குளமாவதை தவிர்க்க முடியவில்லை...அவர்கள் அனைவரிடமுமே நமக்கு படிப்பினை இருக்கிறது...

    ReplyDelete
  13. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    வருகைக்கு நன்றி
    ஜஸாகல்லாஹ் கைரன் சகோ

    ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்