"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, September 01, 2010

ஏன் இஸ்லாம்...?

                                                 ஓரிறையின் நற்பெயரால்


"இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/ சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் ?

 இஸ்லாம் இந்த மனித சமுகத்திற்கு அளித்தது என்ன? மனித சமுகத்திலிருந்து அழித்தது என்ன? என்று அலசுவதே இக்கட்டுரையின் நோக்கம்.

 முதலில் யாவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்., இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல.,

    மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.
 
 இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது., எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.

     ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.

    ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.அதிலும் இணையத்தில் விமர்சிப்போர்  தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர்.

    இஸ்லாமிய (?) பயங்கரவாதத்தை வேரறுக்கிறோம் என கூறி எழுத்து பயங்கரவாதத்தை அமோகமாக இணையத்தில் அறுவடை செய்கிறார்கள்.அவர்களிடம் நாம் கேட்டு கொள்வது எல்லாம் ஒன்று தான் "இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம் இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதை குறித்து விமர்சனம் செய்யுங்கள்
  
    இவ்வாறு கேட்ட மாத்திரத்தில் "உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? என்பதே ஏனையோரின் எதிர்கேள்வியாக இருக்கும். உங்களோடு சேர்ந்து நாங்களும் கேட்கிறோம்...உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லது இஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும் தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுக குழுக்களா...?

    எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல! ஏனெனில் எந்த காரணமுமின்றி ஒருவனை கொலை செய்தவன் சமுகம் முழுவதையும் கொலை செய்தவன் போலாவான் என்ற நபிவழியில் வார்ர்த்தெடுக்கப்பட்டவர்கள் தான் உண்மை முஸ்லிம்கள்.

       ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நானறியேன்)  உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?
 
     அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...? சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள்    இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி.,

    உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.

   இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம் எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதே அதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும் மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன் கட்டாய படுத்துகிறீர்கள்? இக்கேள்விக்கு முன் இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்து குடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,.

   இஸ்லாம் முன் மொழியும் பர்தா (அது பெண்களுக்கு மட்டுமானது அல்ல பார்க்க :அல்குர்ஆன்-24:30)  இந்த சமுக பெண்களுக்கு எத்தகைய கேடுகளை விளைவித்தது? பர்தா அணிந்த பெண்களை நெருப்பில் விழுந்த விட்டில்களாக வர்ணிக்க முற்படுவோர் இஸ்லாம் ஏன் பெண்களுக்கு அவ்வாறு கூறுகிறது என்ற உண்மையே அறிந்துக்கொண்டே மறுக்காதீர்கள்.(பர்தா குறித்து மேலும் அறிய)

    அதுப்போலவே பலதார மணமும்.,
   பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு  விளம்பர விலாசம் தரப்படுகிறது.

   மேலும் சீன்ன வீடு என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதை பலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவா இஸ்லாத்தின் மீது கோபம்? இதை எதிர்ப்போர் முதலில் "இன்று உலகில் நடைபெறும் விபச்சாரம் முழுவதையும் சின்ன வீட்டு பிரச்சனைகளையும் முற்றாக ஒழியுங்கள்

  பின்பு நாமும் ஒத்துக்கொள்கிறோம் பலதார மணம் வேண்டாம் என்று. இங்கு தடுப்பது ஒரு விசயமல்ல ஒழிப்பது தான் முக்கியம்.அதை தான் இஸ்லாம் சொன்னது, செய்யவும் சொன்னது. இஸ்லாமியனாக பிறக்கும் எல்லா முஸ்லிம்களும் நான்கு மனைவிகள் கட்டிக்கொள்ள வேண்டும் என்பது மார்க்கம் வலியுறுத்தும் கட்டாய கடமையல்ல...அது ஒரு சலுகை மட்டுமே...அதற்கு உங்கள் வீடுகளுக்கு அருகாமையில் வாழும் முஸ்லிம்களே சாட்சி!

   இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம். இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்

   அல்ஹம்துலில்லாஹ்! தனக்கு அறவே பிடிக்காது என்று சொல்வனவற்றோடு தான் தங்கள் அன்றாட வாழ்வை கழிக்கிறார்கள்.இது தான் இஸ்லாம் மனித மனங்களில் ஏற்படுத்தும் தாக்கம்.நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி

 ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"

குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே!   
    
   எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)

                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன்

11 comments:

 1. //"இஸ்லாம் " என்ற இந்த ஒற்றை வார்த்தையே கேட்ட மாத்திரத்தில் தெரிந்தோ தெரியாமலோ மதம் சார்ந்த/ சாரா கொள்கையுடையவர்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. ஏன் ?// அந்த ஒற்றை வார்த்தை தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பயங்கரத்தால்.

  // இஸ்லாம் சுமார் 1400 வருடங்களுக்கு முன்பாக அரேபிய பாலையில் முஹம்மது நபியால் தொடங்கப்பட்ட மதமல்ல.,// முகமதுவிற்கு முன்பு இஸ்லாம் என்ற மதம் இருந்ததற்கான எந்த தடயமும் இல்லை.

  // மாறாக முஹம்மது நபி அவர்களால் முழுமைப்படுத்தப்பட்ட மார்க்கமே இஸ்லாம்.ஏனெனில் மனித மூலத்தின் ஆதி பிதா மண்ணில் படைக்கப்பட்டதிலிருந்தே இஸ்லாம் மனித மனங்களில் உலாவர துவங்கிய மார்க்கம்.// யூத, கிறிஸ்தவ, அராபிய பாகனிஸ மதங்களிலிருந்து திருடப்பட்ட கருத்துகளையும் பழக்கவழக்கங்களையும் முகமதுவின் கற்பனையையும் சேர்த்து உருவாக்கப்பட்டதுதான் இஸ்லாம்.

  //இத்தெரிவை ஆயிரம் முறை உலகுக்கு அறிவுறுத்தியும் ஆயிரத்தொருமுறை இவ்வுலகு அதனை தவறாக புரிந்துக்கொண்டது அல்லது இவ்வுலகிற்கு தவறாக புரிய வைக்கப்பட்டது.,// எத்தனை முறை ஒரு பொய்யை சொன்னாலும் பொய் உண்மையாக முடியாது.

  //எனவே தான் இஸ்லாம் குறித்து "மிக மிக தவறாக புரிந்துக்கொள்ளப்பட்ட அழகான மார்க்கம்" என பெர்னார்ட் ஷா கூறினார்.// அவர் ஹதீசுகளை ஒழுங்காக படித்திருக்கமாட்டார்.

  ReplyDelete
 2. // ஏனைய மதங்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை ஒரு வரையறுத்தலின்றியே வைத்திருக்கும் இக்காலக்கட்டத்தில் இஸ்லாம் மட்டுமே மனித மூலங்கள் மண்ணில் படைக்கப்படுவதற்கு முன்னமே அதன் கொள்கை கோட்பாடுகளை முன்மொழிந்து அது எக்காலத்திற்கும் எதற்காகவும் யாருக்காகவும் நெகிழ்வடையாது என உரக்கக்கூறிய மார்க்கம்.// உரக்கக் கூறுவதால்மட்டும் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது.

  //ஆனால் இன்று நேரடியாகவோ மறைமுகமாகவோ இஸ்லாத்திற்கு எதிராக நடுநிலை சிந்தனை தவிர்த்த ஏனையோரால் அநாகரிகத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றி விமர்சனம் என்ற பெயரில் தன்னின் மட்டரக எண்ணங்களுக்கு நாகரிக ஆடை கட்டி நாடெங்கிலும் நடமாட விட்டு மகிழ்கின்றனர்.// இஸ்லாத்தை நன்கு படித்து புரிந்து கொண்டவர்கள் அதன் அபாயத்தை பற்றி எச்சரிக்கிறார்கள்.

  //அதிலும் இணையத்தில் விமர்சிப்போர் தங்கள் வார்த்தை வாகனத்தில் வன்முறை எழுத்துக்களையே வறுத்தமின்றி சுமந்து வருகின்றனர்.// இதை இஸ்லாமியப் பதிவர்களும் செய்கிறார்கள்.

  //"இஸ்லாம் முன் மொழியும் எந்த ஒரு நடைமுறை சட்டம் இன்று மனித சமுகத்திற்கு பொருந்தாது? என்பதை குறித்து விமர்சனம் செய்யுங்கள்// பல உதாரணங்களை சொல்ல முடியும். உதாரணமாக ஒரு பெண் கற்பழிக்கப்பட்டால் நான்கு சாட்சிகள் வேண்டும் என்பது.

  //.உலகமெங்கிலும் நடைபெறும் பயங்கரவாதத்திற்கு யார் காரணம்..? இஸ்லாமும் அது கூறும் வழி முறைகளுமா...? அல்லது இஸ்லாமிய பெயரில் அறியாமையால் செய்யும் தனிமனித அல்லது சுயநலம் விரும்பும் சமுக குழுக்களா...?// உலகமெங்கிலும் நடைபெறும் பெரும்பாலான பயங்கரவாத செயல்களுக்கு இஸ்லாமிய பெயரில் இஸ்லாத்தை பற்றி நன்கு அறிந்தவர்களால் இயக்கப்படும் குழுக்களே காரணம்.
  // எங்கோ உயிர்க்கொலைகள் -முகவரியில்லா முஸ்லிம் முகங்கள் செய்வதாக கூறப்படுபவை உண்மையல்ல.அஃது அது உண்மையென்றால் அவன் உண்மை முஸ்லிம் அல்ல!// தந்திரமாக தட்டிக் கழிக்கிறீர்கள்.

  ReplyDelete
 3. //ஆப்கானிய தாலிபான்களையும், எங்கோ இருக்கும் அல் கொய்தாவையும் விடுங்கள் (அவர்கள் செய்வதை நானறியேன்)// எங்கோ இருப்பவர்கள் அல்ல எங்கும் இருப்பவர்கள் அவர்கள். அவர்கள் செய்வதை அறியேன் என்று நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வேறு கிரகத்திலிருந்து வந்திருப்பீர்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

  //உங்கள் வீடுகளுக்கு அருகில் இருக்கும் முஸ்லிம்கள் எத்தனை முறை உங்களை வாளெடுத்து வெட்ட வந்திருக்கிறார்கள்? தாங்கள் இல்லாத பொழுது எத்தனை முறை உங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளை தாக்க முற்பட்டிருக்கிறார்கள்...?// எங்கள் வீட்டிற்கும் அருகில் இருக்கும் முஸ்லிம்கள் இஸ்லாத்தைப் பற்றி அறியாதவர்கள். அதனால் மற்ற மனிதர்களைப் போல நாகரீகமாக வாழ்கிறார்கள். ஆனால் இஸ்லாத்தைப் பற்றி நன்கு கற்ற முஸ்லிம்கள்தான் ஆபத்தானவர்கள். சமீபத்தில் பக்கத்து மாநிலமான கேரளாவில் ஒரு பேராசிரியர் கையை வெட்டினார்கள்.

  //அல்லது யாரும் இல்லாதபோது உங்கள் வீடுகள் குண்டு வைத்து எத்தனை முறை தகர்க்க பட இருந்தது...? சற்று நடு நிலையோடு சிந்தித்து சொல்லுங்கள் // இந்த கேள்வியை மும்பையில் இஸ்லாமிய வெறியர்களால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்களிடம் கேட்டால் பதில் சொல்வார்கள்.

  //இஸ்லாமல்லாத இணைய சகோதர்களே மேற்கத்திய ஊடகங்களின் பயங்கரவாத சாட்சியாக சித்தரிக்கபடும் முஸ்லிம்கள் ஆளுயர ஆடையும், அதைவிட பெரிதாக ஆயுதமும் கொண்டு காட்சியளிக்கும் நிலை மாற்றி.,

  உங்கள் தெரு கோடியில் டீ கடை வைத்திருக்கும் அப்துல் ரஹ்மானும்,உங்கள் கண்ணெதிரே ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வும் முஸ்லிம்கள் தான் என்பதை உணருங்கள்.// இதுவும் தந்திரமான பேச்சுதான். டீக்கடை அப்துல் ரஹ்மானுக்கும் ஐஸ்கிரிம் வண்டி தள்ளும் அப்துல்லாஹ்வுக்கும் இஸ்லாத்தைப் பற்றி என்ன தெரியும்?

  //இஸ்லாமின் ஏனைய ஆக்கங்கள் குறித்து விமர்சனம் எழுதுவதை விட பர்தா குறித்து எழுவதே அதிகம்,அனைத்திற்கும் பதில் அளித்தாலும் மீண்டு(ம்) அவர்களிடம் முளைக்கும் கேள்வி ஏன் கட்டாய படுத்துகிறீர்கள்? இக்கேள்விக்கு முன் இம்மார்க்கத்தில் எந்த வித நிர்பந்தமும் இல்லை என்பதன் அர்த்தம் அறிவார்களா குர்-ஆனை கரைத்து குடித்த இந்த அரைகுறை அறிவு ஜீவிகள்,.// தினமும் நாம் பார்க்கும் இந்த பரிதாபத்திற்குரிய ஜீவன்களைப் பற்றி எழுவது ஒரு மனிதாபிமானத்திலேதான். இஸ்லாத்தில் நிர்பந்தம் இல்லை என்றால் விஜய் டி.வி.யில் பர்தா குறித்தான விவாதத்தை தடுத்து நிறுத்தியது ஏன்?

  ReplyDelete
 4. //அதுப்போலவே பலதார மணமும்.,
  பலதார மணத்தை எதிர்ப்போர் வாழும் நாட்டில் தான் பாதுகாப்பான உடலுறவிற்கு ஆணுறை அணியுங்கள் என விபச்சாரத்தின் வாசலுக்கு விளம்பர விலாசம் தரப்படுகிறது.//
  பலதார மனத்தை ஆதரிப்போர் வாழும் நாட்டில் பணிப்பெண்கள் கற்பழிக்கப் படுவது தொடர்ந்து நடை பெறுகிறதே அது ஏன்?

  // மேலும் சீன்ன வீடு என்றும் வைப்பாட்டிகள் என்றும் பெண்களுக்கு உயர் அந்தஸ்து(?) வழங்கவதை பலதார மணம் முற்றாக தவிர்க்கிறதே அதற்காகவா இஸ்லாத்தின் மீது கோபம்?// தற்காலிக மனைவிகள் வைப்பதை இஸ்லாம் ஆதரிக்கிறதே, இது கேவலம் இல்லையா?

  // இணைய சகோதரர்களே தாங்கள் தாராளமாக இஸ்லாத்தின் மீது ஆதாரத்தோடு குற்றச்சாட்டை முன் வையுங்கள்.உங்களுக்காக பதில் தர இஸ்லாம் காத்திருக்கிறது உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம். இன்று இஸ்லாமியர்களை விட அஃதில்லாதோர் தான் இஸ்லாத்தில் குறை கண்டுபிடிக்கும் நோக்கில் இஸ்லாமிய நூல்களை அதிகமாக பார்வையிடுகிறார்கள்// ஆனால் நீங்கள் மட்டும் தவறான தகவல்களை ஆதாரமில்லாமல் வெளியிடுவீர்கள். இஸ்லாமியர்கள் இல்லாதோர் இஸ்லாமிய நூல்களை படிப்பதற்கு காரணம் நீங்கள் சொல்லும் தகவல்கள் உண்மையா என்பதை தெரிந்து கொள்ளவே. என்னைப் போன்றோர் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி தெரிந்து கொண்டதே சில இஸ்லாமியப் பதிவர்கள் அளவுக்கதிகமாக இஸ்லாத்தை புகழ்ந்து மற்ற மதங்களை இகழ்ந்ததால்தான்.

  //நீங்கள் இஸ்லாத்தை நேசிக்க வேண்டாம் உங்கள் எண்ணங்கள் உண்மையே சுவாசிக்கட்டும் ஏனெனில் இஸ்லாம் பற்றி அறிய அதுவே முதற்படி// உண்மையை விரும்புபவர்கள் இஸ்லாத்தை நேசிக்கமாட்டார்கள்.

  //ஏன் இஸ்லாம் என இஸ்லாத்தில் குறை காண புறப்பட்டவர்களின் தேடுதல் நடுநிலையோடு இருந்ததனால் தான் மால்கம்X ,பிலால் பிலிப்ஸ் போன்றோர்கள் முதல் இன்று பெரியார்தாசன் வரை சொல்லிக்கொள்கிறார்கள் "என் இஸ்லாம்"// இதைப் போல இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு அதிலிருந்து விளைகிய இஸ்லாமியர்களும் அநேகம் பேர் உண்டு. வேண்டுமென்றால் ஆதாரம் தருகிறேன்.

  //குறிப்பு:இன்று நீங்களோ, நானோ இஸ்லாத்திற்கு வருவதாலோ, வெளியேருவதாலோ இஸ்லாத்திற்கு எந்த உயர்வும், தாழ்வும் இல்லை மாறாக நன்மையும் தீமையும் நமக்கே! // இஸ்லாத்திலிருந்து வெளியில் வருவாதால் நன்மையையும் இஸ்லாத்திற்கு வருவதால் தீமையும் உண்டாகும்.

  //எவர்களுக்கு நாம் வேதங்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவார்கள்;. ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர். (இறுதி வேதம் 2:146)// உண்மையை மறைப்பவர்கள் இஸ்லாமியர்களே.

  ReplyDelete
 5. அன்பு சகோ Robin .,
  உங்கள் மீது ஏகனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக.,

  உங்கள் பிரச்சனை புரிகிறது., எனக்கு வேலை பளு அதிகமாக இருப்பதால் இறை நாடினால் நாளை பதிலளிக்கிறேன்.,

  ReplyDelete
 6. அன்பு சகோ Robin .,
  இயேசுவுக்கு வழங்கப்பட்ட சாந்தியும் சமாதானமும் நம் மீதும் நிலவட்டுமாக!
  ஆக்கத்தின் ஒவ்வொரு வாக்கியத்தையும் பிரித்து எதுகை மோனையோடு வினா தொடுத்து இருக்கீறீர்கள்... எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் போது, இஸ்லாமிய பெயர்களில் புரியும் தவறுகளை இஸ்லாமிய தவறாக நிறுவ முயற்சிக்கிறீர்கள் -
  சகோ உங்கள் பிரச்சனை இது தான்., எந்த ஒன்று நமக்கு பிடிக்கவில்லையென தோன்றுகிறதோ அதற்கான காரணத்தை தேட தொடங்குகிறோம்., கிடைக்கவில்லையெனில் இறுதியாக கிடைக்காத காரணமாக அதன் மீது ஏற்பட்ட வெறுப்பே நமக்கு பிடிக்காத ஒன்றிற்கு காரணமாக்கி கொள்கிறோம் அப்படி தான் உங்களுக்கு இஸ்லாம் மீதான வெறுப்பு இஸ்லாமியர்கள் பெயரில் செய்யும் தவறான செய்கையால் ஏற்பட்டதென எண்ண தோன்றுகிறது.,

  சகோ நாம் எந்த ஒன்றைக்குறித்து விமர்சித்தாலும் அதன் மூலத்தை அறிந்து ஆதார தரவுகளோடு தான் அதன் மெய்யற்ற தன்மையே நிறுவ வேண்டும் மாறாக நம் கண் முன் தெரியும் அல்லது நமக்கு அறிவிக்கப்படும் காரியங்களை மூலமாக கொண்டு ஒன்றை விமர்சிப்பது வாதத்திற்கு அழகல்ல...
  ஆக இஸ்லாத்தை குறித்து விமர்சிப்பதாக இருந்தால் குர்-ஆன் சுன்னாவின் அடிப்படையில் தான் ஒன்றை விமர்சிக்க வேண்டும்., மாறாக உலகில் சிலர் வேண்டுமென்ற அல்லது அறியாமையால் அல்லது தவறான புரிந்துணர்வால் இஸ்லாத்திற்கு புறம்பான காரியங்களில் ஈடுபடுவது எப்படி இஸ்லாம் அங்கீகரிக்கும் தவறாக கொள்ள முடியும்..?
  அதன் அடிப்படையில் தான் நீங்கள் குறிப்பிடும் பயங்கரவாதம் -தற்கொலைப்படை தாக்குதல் -தனிமனித உரிமை பறிப்பு -போன்றவை.,

  ReplyDelete
 7. அன்பு சகோ Robin .,
  இயேசுவுக்கு வழங்கப்பட்ட சாந்தியும் சமாதானமும் நம் மீதும் நிலவட்டுமாக !!
  ஆக்கத்தை பிரித்து ஒவ்வொரு வாக்கியமாக மேற்கோள் காட்டி எதுகை மோனையுடன் விமர்சித்து இருக்கீறீர்கள் நன்று., உங்கள் விமர்சனங்களை ஒரு சேர பார்க்கும் போது இஸ்லாமிய பெயர்களில் காணும் தவறுகளை இஸ்லாமிய தவறாக நிறுவ முயல்கிறீர்கள்.,

  சகோ எந்த ஒன்றை குறித்து விமரிப்பதாக இருந்தாலும் அதன் மூலங்களின் அடிப்படையாக வைத்து அதன் மெய்யற்ற நிலையே நிருபிக்க வேண்டும். மாறாக நம் கண் முன் தெரியும் காட்சிகளை வைத்தோ அல்லது அறிய செய்யப்படும் செய்கைகளை வைத்தோ ஒன்றை விமர்சிப்பது வாத முறையல்ல., ஆக இஸ்லாத்தை விமர்சிப்பதாக இருந்தால் குர்-ஆன்,ஹதிஸ் தொகுப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து உங்கள் விமர்சனம் / ஐயங்களை கேள்விகளாக எழுப்புங்கள் இன்ஷா அல்லாஹ் பதில் தர முயற்சிக்கிறேன். அதுவல்லாமல் இஸ்லாமிய பெயர்களில் அரங்கேற்றப்படும் மனிதர்கள் செய்யும் செயலை இஸ்லாமாக்க முயலாதீர்கள்

  ReplyDelete
 8. மேலும் மேற்கத்திய ஊடங்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பயங்கரவாத மார்க்கமாக நிறுவ இஸ்லாமிய பெயரில் சிலர் முன்னிருத்தும் பயங்கரவாதம் -தனிமனித தாக்குதல்- பிறர் உரிமை பறிக்கபடுதல் - போன்றவற்றை வெளி உலகுக்கு உணர்த்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருப்பது நிதர்சனமான உண்மை., மேலும் இஸ்லாம் குறித்த தவறான புரிந்துணர்வு, சுய நலத்திற்காக மார்க்க பெயரை பயன்படுத்திக்கொள்ளல் போன்ற போலி இஸ்லாமியர்களின் செய்கைகளுக்கு எப்படி இஸ்லாம் பொறுப்பாகும்...? ஏனெனில் இதை தவறை வேறு இயக்க கொள்கை மற்றும் கொள்கை சாரா மக்களும் செய்கிறார்கள் அங்கேல்லாம் அவர்கள் சார்ந்த சமுக குறீயீடு முன்னிருத்த படுவதில்லை அது ஏன்..?

  இதைப்போல பாதிரியார்களின் கற்பழிப்பு, மிஷ்னரிகளின் கயமைத்தனம் -கிறித்துவ பெயரில் அரங்கேற்றப்படும் போலி செயல்கள் பலவற்றின் தரவுகளையும் என்னாலும் மேற்கோள் காட்ட முடியும்., அது எனக்கு தேவையோ அல்லது அவசியமோ இல்லை., ஏனெனில் எந்த ஒன்றின் எதிர்வினையும் அதைவிட அதிகமாக வெளிபடவேண்டும் என்பதை விட அழகிய முறையில் வெளிபட வேண்டுமென நினைப்பவன் நான்., ஆக நீங்கள் மேற்கோள் காட்டியது மட்டுமல்ல கூக்ளியிட்டு பாருங்கள் அனேக இஸ்லாமிய பெயர் தாங்கிகளின் தவறுகள் இஸ்லாமிய பெயரில் முன்னிருத்தப்படும்.

  இருந்தாலும் அத்தகைய தவறுகள் அங்காங்கே சுட்டிக்காட்டப்பட்டு களையப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆக ஆக்கத்தின் மையப்பொருளை விட்டு நிழலாக தோன்றும் விசயங்கள் பிடித்து விமர்சித்து கொண்டிருக்கிறீர்கள் அதுவும் தவறான வாத முறைமையுடன்.,
  .

  ReplyDelete
 9. ஆக ஆக்கத்தின் மையக்கரு இதுதான்

  இஸ்லாம் முஹம்மது நபியால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு வரலாற்று ரீதியான சான்றுகள் ?

  பயங்கரவாதத்திற்கும் -இஸ்லாத்திற்கும் தொடர்பு இருப்பதாக நிறுவ முயலும் குற்றச்சாட்டிற்காக காரணங்கள்?

  பர்தா முறை பெண்களை அடிமைப்படுத்துகிறதென்றால் பெண்களின் பாதுக்காப்பிற்கு அதை விட அழகிய பாதுக்காப்பு முறைமை...?

  பலதார மணம் வேண்டாமென்றால் விபச்சாரம் சின்ன வீட்டு பிரச்சனைகளை இல்லாமல் ஆக்க வேண்டுவதற்கான நடைமுறை ரீதியான செய்கைகள் என்னென்ன?

  பெர்னாட்ஷா ஹதிஸ் படிச்சாரா இல்லையானு எனக்கு தெரியாது நீங்கள் ஹதிஸ் நிரம்ப படித்தவர் ஆக ., இக்கேள்விகளுக்கான பதில்களோடு வாருங்கள் கிறித்துவம் -பைபிள் குறித்த கேள்விகளோடு இறை நாடினால் காத்திருக்கின்றேன்.

  மாற்றுக்கருத்து இருப்பீன் மற்றவை பிற
  .

  ReplyDelete
 10. அஸ்ஸலாமு அலைக்கும்!
  இப்பொழுது தான் தங்களின் பதிவுகளை முதன்முறையாக படிக்கிறேன்
  மிகத்தெளிவான உங்கள் கட்டுரைக்கு என் வாழ்த்துக்கள்!


  //உங்களது எண்ணங்களை சந்தேகமாக வையுங்கள் ஆனால் காழ்ப்புணர்ச்சியில் மட்டும் வேண்டாம்.//இதனை புரிந்துகொள்ளாமல், மீண்டும் அவருடைய (ராபின்) தனது பாசிச முகத்தை காட்டுகிறார்.

  ReplyDelete
 11. வ அலைக்கும் சலாம் வரஹ்
  சகோ @M.Thameem Ansari

  ஜஸாகல்லாஹ் கைரன்
  நன்றி சகோ

  ReplyDelete

ஆக்கத்தில் தவறிருப்பதாக நினைத்தால் சுட்டிகாட்டுங்கள். ஏனெனில் நேர்மறை பின்னூட்டத்தை விட எதிர்மறை பின்னூட்டத்திற்கே உண்மையை விளங்க - விளக்க வாய்ப்பு அதிகம்..!

Categories

அமல்கள் அல்லாஹ் அவதாரம் அறியாமை அறிவியல் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் உஜைர் நபி எதிரி ஏற்றத்தாழ்வு ஏன் இஸ்லாம் ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தண்டனை தஜ்ஜால் தாய் திருமணங்கள் தேவை நபிமொழி நரகம் நன்மைகள் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மரணம் மறுமை மனசாட்சி மனம் மனிதர்கள் மனிதன் மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வாழ்க்கை வானவர்கள் விதி விமர்சனம். விளக்கம் ஹராம்