"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Wednesday, July 20, 2011

பகுத்தறிவாளர்களின் கடவுள்..!

                                    ஓரிறையின் நற்பெயரால்.,
                 தான் (மட்டும்) ஏற்கும் அல்லது மறுக்கும் நம்பிக்கை சார்ந்த ஒரு விசயத்தை அறிவு ரீதியாக பிறருக்கு விளக்க வேண்டிய அவசியமில்லை. அத்தகைய நிகழ்வை பிறர் விரும்பினால் உண்மையென ஏற்கவும் அல்லது பொய்யென மறுக்கவும் செய்யலாம்.,


         "கடவுள்" - என்ற நிலையை இஸ்லாம் அல்லாத மற்ற மதங்கள் யாவும் மேற்கண்ட நிலைப்பாட்டிலேயே வைத்து காண்கிறது.,ஆகவேதான் கடவுள் குறித்த விமர்சனங்களுக்கு அங்கு பதில் தருவதில்லை என்பதைவிட பதில் இல்லையென அறிந்து கடவுள் மறுப்புக்கு பலர் ஆளாகின்றனர். ஆக கடவுள் மறுப்புக்கு இஸ்லாம் அல்லாத ஏனைய மதங்களின் தவறான கடவுள் சார்ந்த கோட்பாடே பிரதான காரணம் என்றால் அது மிகையாகாது.ஆக இஸ்லாம் கூறும் கடவுள் குறித்த வரைவிலக்கணம் பகுத்தறிவிற்கு பொருத்தமானதா? என்பதை பார்க்கும் முன் கடவுளை மறுக்கும் நாத்திக சிந்தனை பகுத்தறிவிற்கு உகந்ததா... பார்ப்போம்.


  நாத்திகம் -
        பொதுவாக ஒருவரின் நாத்திக சிந்தனைக்கு அடிப்படைக்காரணம் தேடுதலில் விருப்பங்கொண்ட அவரின் சுய அறிவு. அது பாராட்டத்தக்கதே..! எனினும்., அவ்வறிவால் தம்மை சுற்றி நடைபெறும் கடவுள் பெயரால் அரங்கேறும் போலி வழிபாடுகளும், அனாச்சாரங்களும், அறிவிற்கு பொருந்தாத மூட பழக்க வழக்கங்களும், மிக முக்கியமாக கடவுள் பெயரால் நடைபெறும் சமூக புறக்கணிப்பும் தான் ஒருவரது கடவுள் மறுப்புகொள்கைக்கு மிக முக்கிய காரணியாகிறது.. இன்னும் சற்று ஆழமாக அதன் வெளிபாட்டை இஸ்லாத்திலும் காண்பிக்க குர்-ஆன் மற்றும் ஹதிஸ்களுக்கு தவறான புரிதலோடு தங்களின் சுய விளக்கத்தை அளித்து கடவுள் மறுப்புக்கு மேலும் மெருகேற்றுகிறார்கள் எனினும் அதற்கு நமது (இணைய) சகோதரங்கள் பலரால் தெளிவாக மறுப்பும் விளக்கமும் தரப்படுகிறது அல்ஹம்துலில்லாஹ்..!


       இங்கு கவனிக்கத்தக்க ஒரு விசயம் .. கடவுளை மறுக்க கடவுள் பெயரால் ஏற்படும் தவறுகளை முன்னிருத்தி மட்டுமே கடவுள் மறுப்புக்கு சான்று தரப்படுகிறது. மாறாக நேரடியாக கடவுள் இல்லையென மறுக்க தெளிவான காரணம் இல்லை.,


   "பரிணாமம்" அறிவியல் ரீதியாக கடவுள் மறுப்புக்கு மாபெரும் ஆயுதமாக கொண்டாலும் அஃது அதுவும் பயனற்று தான் போகும். ஏனெனில் இதுவரை நிகழ்வுற்ற பரிணாம கோட்பாடுகளை ஒருவேளை உண்மையென நம்பினாலும் (?) கூட "ஏற்பட்ட உயிரின மாற்றத்தை பற்றித்தான் பரிணாமம் பேசுகிறதே தவிர அஃது உயிரினங்கள் ஏன் மாற்றமடைந்தன என்பதற்கு தகுந்த சான்றின்றி இன்னும் கேள்விக்குறியோடு தான் ஆய்வை தொடர்வதாக அறிவியலார் பதில் தருகின்றனர்.


        ஆக அறிவியல் ரீதியான கடவுளை மறுக்க பரிணாமம் துணைக்கு வராது., சுருங்கக்கூறினால் "எதுவுமல்லாத சூன்யத்திலுருந்து ஒரு உயிரை அறிவியலார் உண்டாக்கினால் மட்டுமே விஞ்ஞானத்தால் கடவுள் இல்லை என்பதை ஆணித்தரமாக மறுக்க முடியும். அதுவரை கடவுளை மறுக்க தர்க்கரீதியான வழிகளை தான் தேட வேண்டும். எனினும் பகுத்தறிவு பார்வையில் அதுவும் சாத்தியமா என்றால்... இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..


 எந்த ஒன்றை மறுப்பதும், ஏற்பதும் அவரவர் உரிமை., அதே நேரத்தில் பொதுவில் அறுதியிட்டு கூறும் தம் வாதத்தை மெய்பிப்பதாக இருந்தால் அதற்கான சான்றுகளை தருவது அவரது கடமையாகும்., இதுவே ஒரு செயல், ஒரு தன்மை அல்லது ஒரு நிகழ்வை உண்மைப்படுத்தலின் வரைவிலக்கணம் ஆகும்.


     இதனடிப்படையில் கடவுள் குறித்த நிகழ்வை பொதுவில் நிறுத்தி ஏற்பதாக இருந்தாலும் அல்லது மறுப்பதாக இருந்தாலும் அதற்கான வரைவிலக்கணம் தெளிவாக முன்னிருத்தப்பட வேண்டும். அஃதில்லாமல் கூறும் வாதங்கள் நம்பிக்கை சார்ந்த அளவில் மட்டுமே பார்க்கப்படும். இந்நேரத்தில் கடவுள் குறித்த வரைவிலக்கணம் குறித்துப்பார்க்கும்போது சகோ ஜாகிர் நாயக் அவர்களின் அழகிய எளிய உதாரணத்தையும் இங்கு குறிப்பிடுவது அவசியம் என நினைக்கிறேன்.,


    என் கையில் ஒரு பேனாவை வைத்துக்கொண்டு இது ஒரு புத்தகம் என்று நான் கூறினால் இதனை மறுப்பதாக இருந்தால் கண்டிப்பாக அவருக்கு பேனாவை பற்றி அறிந்திருக்க வேண்டும் அஃது பேனாவை பற்றி தெரியாவிட்டாலும் புத்தகத்தைப்பற்றி கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும்.அப்போது தான் நான் கையில் வைத்திருப்பது புத்தகம் இல்லை என கூற இயலும்., என அவர் கூறினார்.,


    மேற்கண்ட கேள்வி எதிர் மறையாக இருப்பதால் விடைக்கான இருப்பொருட்களில் ஒன்றை மட்டும் நாம் அறிந்திருந்தாலே போதுமானது மற்றொரு பொருள் குறித்து அறியாமாலிருந்தாலும் நமது நிலைப்பாட்டை உண்மையாக்கலாம். இப்படிதான் மேற்கண்ட நாத்திக சிந்தனை கடவுளுக்கான கேள்விக்கு எதிர்மறை விளக்கத்தை கையாளுகிறது.


   ஆனால் இதே கேள்வி நேர்மறையாக கேட்கப்பட்டால்..!
             என் கையில் ஒரு பொருளை வைத்து கொண்டு. அதை பிறர் முன்னிலையில் காட்டி இது பேனா என்கிறேன். இதை மறுப்பதாக ஒருவர் இருந்தால் மற்ற எல்லா பொருட்களின் வரைவிலக்கணம் குறித்து தெரிந்திருந்தாலும் அஃது இக்கேள்விக்கு பதில் அவரால் சொல்ல முடியாது. மாறாக பேனாவின் வரைவிலக்கணம் தெரிந்திருந்தால் மட்டுமே உண்மையான பதில் தருவது சாத்தியம். 


     ஆக இந்த உதாரணத்தை மேற்கோளாக கொண்டு கடவுள் குறித்த வரைவிலக்கணத்தோடு ஒப்புநோக்கும் போது கடவுளை ஏற்பதாகவோ அல்லது மறுப்பதாகவோ இருந்தால் அவருக்கு கடவுள் குறித்த வரைவிலக்கணம் கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும் அப்போது மட்டுமே இக்கேள்விக்கு உண்மையான பதில் தர இயலும்.


 மிக தெளிவாக - எளிதாக இஸ்லாம் 
  • (நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.  (112:1)
  • அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.  (112:2)
  • அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை.  (112:3)
  • அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.  (112:4)
         
              இப்படி குர்-ஆனில் கடவுளுக்கு வரைவிலக்கணம் தருகிறது. இவ்வரிகளை நம்பிக்கை என்ற அளவுகோலையும் தாண்டி மனித அறிவு ஏற்றுக்கொள்ளும் வாதமாகவும், அதே நேரத்தில் மனித எண்ணங்களால் வரையறுக்க இயலாத ஓர் உயரிய சக்திக்கு பொருந்தும் படியான முறையான செய்கைகளும் இருப்பதால் மேற்கண்ட வரைவிலக்கணத்தை ஏற்றுக்கொள்வதில் பகுத்தறிவாளர்களுக்கு எந்த வித ஆட்சபனையுமில்லை.,
           
          ஆக கடவுளுக்கான ஓர் உயரிய வரைவிலக்கணத்தை முன்னிருத்த்தி இது உண்மையானது என குர்-ஆன் கூறும் போது அஃது மேற்கண்ட கோட்பாட்டை பொய்யென மறுப்பதாக இருந்தால் அவ்வாறு தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்மையான வரைவிலக்கணம் நாத்திக சிந்தனையாளர்கள் தர வேண்டும். ஆனால் இன்று வரை தாங்கள் மறுக்கும் கடவுளுக்கு உண்டான வரைவிலக்கணத்தை நாத்திக சிந்தனை தரவே இல்லை. இது ஆச்சரியமான விஷயமும் கூட...


           ஏனெனில் கடவுள் குறித்த நிலைப்பாட்டை ஏனைய மதங்கள் நம்பிக்கைச்சார்ந்த விசயமாக அணுகி கொண்டிருக்க... இஸ்லாம் மட்டுமே எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்க முடியும் அல்லது இருக்க வேண்டும் என கடவுள் குறித்து ஒரு தெளிவான வரைவிலக்கணம் ஏற்படுத்தி தந்திருக்கிறது எனும்போது எதையும் நம்பிக்கை கடந்து பகுத்தறிவு கண் கொண்டு ஆராயும் நாத்திகம் கடவுள் இல்லை என்பதை நிருபிக்க எப்படிப்பட்டவர் கடவுளாக இருக்கமுடியாது அஃது ஏன் கடவுளாக இருக்க முடியாது என்பதற்கு ஒரு வரைவிலக்கணம் நாத்திகம் உண்டான நாள் முதலே இயற்றி இருக்கவேண்டுமல்லவா..? இதுவரைக்கும் அஃது வரைவிலக்கணம் ஏற்படுத்தாதது மிகப்பெரிய கேள்விக்குறியே..! அஃது இனி ஏற்படுத்த முனைந்தாலும் மதங்கள் வணங்கும் போலி கடவுளர்களை தான் இவர்கள் இனங்காட்ட முடியும்


       அஃது அத்தகைய போலி கடவுளர்களை மறுப்பதற்கு பெயர் தான் நாத்திக சிந்தனையென்றால்... நாங்களும் அத்தகைய போலி கடவுளர்களை இல்லை என்று தான் சொல்வோம்.


       பகுத்தறிவு விதையில் மலர்ந்தது நாத்திகப்பூவென்றால் இனிமேலாவது நாத்திகம் மறுக்கும் கடவுளுக்கு ஒரு வரைவிலக்கணம் தரட்டும். அதுவரை கடவுள் மறுப்பாளர்கள் என தங்களை சொல்ல வேண்டாம் வேண்டுமானால் கடவுள் எதிர்ப்பாளர்கள் என்று- அதுவும் மதங்கள் சமைத்த போலி கடவுள்களின் எதிர்ப்பாளர்கள் என்று தங்களை சமூகங்களில் அடையாளப்படுத்தட்டும்.,. உங்களின் அறிவு சிந்தனைக்கு ஆணவ திரையிட வேண்டாம் என்பதே இப்பதிவின் நோக்கம் நாத்திக சகோதரங்களே...


                                                               அல்லாஹ் மிக்க அறிந்தவன் 
read more "பகுத்தறிவாளர்களின் கடவுள்..!"

Tuesday, June 28, 2011

அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு


                                         ஓரிறையின் நற்பெயரால்

        இப்பதிவிற்கு செல்லும் முன் முஸ்லிம் சமுகத்திற்கு ஓர் வேண்டுகோள்., 

      குர்-ஆன் விஞ்ஞான நூலல்ல... விஞ்ஞானத்தையும் உள்ளடக்கிய நூல்!, ஆக குர்-ஆனை விஞ்ஞான நூலாக நிறுவ சிரத்தையெடுத்து ஏற்படும் அறிவியல் விளைவையெல்லாம் குர்-ஆனோடு பொருத்த வேண்டாம்.,
      ஏனெனில் விஞ்ஞானம் எச்செயலை எதன் மூலம் செய்ய வேண்டும் என விளக்கும்., குர்-ஆன் அச்செயலை எப்படி (ஹலாலாக) செய்ய வேண்டும் என விளக்கம் தரும்.,ஆக நவீன அறிவியலுக்கும் மேலான மதிக்க மற்றும் அணுக வேண்டிய படிப்பினை வாய்ந்த நூல் தான் குர்-ஆன்.,
இப்போது பதிவிற்கு வருவோம்.,

அல்லாஹ் குர்-ஆன் அத்தியாயம் அந்நம்ல் (27) வசனம் (82) ல்
 அவர்கள் மீது (வேதனையுடைய) வாக்கு நெருங்கும் போது, அவர்களுக்காக ஒரு பிராணியை பூமியிலிருந்து நாம் வெளியாக்குவோம்; அது, நிச்சயமாக மனிதர்கள் (யார், யார்) நம் வசனங்களின் மீது உறுதி கொள்ளவில்லையென்று அவர்களுக்குச் சொல்லிக் காண்பிக்கும்.


  இது DIVINE ISLAM இணையம் மொழிபெயர்த்த QURA'N VIEWER VERSION 2.910ன் தமிழாக்க வசனம்.,
ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி (ரஹ்) மொழிபெயர்த்த (தாருல் ஹூதா வெளியீடு) குர்-ஆன் தமிழாக்கத்தில் பிராணி என்ற வார்த்தைக்கு பதிலாக "கால் நடை" என்று வருகிறது .,

      ஆக., மேற்கண்ட வசனம் வாயிலாக, உலக அழிவு (கியாமத்) நாள் நெருங்கும்போது பூமியிலிருந்து ஒரு விலங்கு வெளியாகி மக்களிடையே "ஓரிறையே வணங்காது அவனை நிராகரித்து அவனை விசுவாசிக்காதவர் யார் யார் என ஓரிறையை உணரும் பொருட்டு அவர்கள் மத்தியில் பேசும் என கூறுகிறது.,

   மேலும் இப்பிராணிக்குறித்து மேலதிக வசனம் ஏதும் குர்-ஆனில் இல்லையெனிலும் கியாமத் (உலக அழிவு) நாளின் மிகப்பெரும் அடையாளங்களில் ஒன்றாக ஹுதைபா (ரலி), அறிவிக்க நூல் முஸ்லிம் எண் 5162 ல் நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஹதிஸ் பதிவாகியுள்ளது., இதனடிப்படையில் ஒப்புநோக்கும் போது உலக அழிவு நாள் சமீபத்தில் மக்களிடையே பேசும் பிராணி தோன்றுவது உறுதி என வேத வரிகளும்- தூதர் மொழிகளும் சான்று பகிர்கின்றன.,
மேற்கண்ட சம்பவ அடிப்படையில் இரு கேள்விகள் முன்னிருத்தப்படுகின்றன.,

  • திடிரென பூமியை பிளந்து ஒரு விலங்கு வருவது எப்படி சாத்தியம்..?
  • அதுவும் மனிதர்களுடன் பேசுவதற்கான மொழியுடன் தோன்றுவது எவ்வாறு சாத்தியம்.?  
         -ஆக இது அறிவியலுக்கு முரண்படுகிறது ., எனவே.. குர்-ஆன் பொய்யுரைக்கிறது சொல்ல விளைகின்றன முரண்பாட்டு சிந்தனை.

  "அறிவியல் முரண்பாடு என்பது., நிருபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மையோடு நாம் உடன்படுத்தும் ஒரு சோதனை முற்றிலுமாக மாறுபடுவதே ஆகும்"      இதோடு நாம் மேற்குறிப்பிட்ட முதல் வினாவை பொருத்தினால், அதாவது திடிரென பூமியில் ஒரு உயிரினம் தோன்றுவது., அறிவியலுக்கு முரணானதல்ல., ஏனெனில் இன்றும் சர்வ சாதாரணமாக பல வகையான தாவரங்கள் பூமியிலிருந்து முளைப்பதை காண்கிறோம் ஆக ஒரு உயிரினம் பூமிக்கு அடியில் இருந்து உருவாவது விஞ்ஞானத்திற்கு எதிரானது அல்ல. இதற்கு அறிவுஜீவிதனமாக தாவரங்கள் தான் முளைக்கும் விலங்குகள் பூமியில் தோன்ற வாய்ப்பில்லை என்றால் அதற்கு அறிவியல் ரீதியான நிருபனம் வேண்டும்.,    

         ஏனெனில் அறிவியல் என்பது., நடைபெற்று முடிந்த நிகழ்வுகளின் அடிப்படையை மையமாக வைத்து காரணத்தை அலசுவது ஆகும். முடிவுற்ற செயலை அஃது அது நடைபெற்ற விதம் குறித்து காரண காரியத்தோடு தெளிவாக வரையறுத்துக்கூறுவதே ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல் நிருபனம் ஆகும்., அதாவது இந்தபொழுது வரை நடைபெற்று முடிந்தவற்றில் கிடைக்கபெற்ற தொகுப்பை மட்டுமே வைத்து.,  ஒரு செயல் உண்மையென்றோ ,சாத்தியமென்றோ நாம் கூறுகிறோம்.,


   அஃதில்லாமல் இதுவரை நாம் கண்டறியா (சாத்தியமில்லை என வரையறுத்த) ஒரு செயல் பிற்காலத்தில் நடைபெறும் போது அதனையும் அறிவியல் உண்மையாக / அதிசயமாக ஏற்றுக்கொள்கிறோம் இதற்கு ஒரு எளிய உதாரணம் உயிர் பிழைப்பதற்கு எந்த வித சாத்தியக்கூறுகளும் இல்லையென மருத்துவர்களால் விரிவாக சோதிக்கப்பட்ட எத்தனையோ நோயாளிகள் உயிர் பெற்று ஆரோக்கியமடைவதை காண்கிறோம்.
     சென்ற நிமிடம் வரை சாத்தியமில்லை என வரையறுத்த அறிவியல் அறிவு அடுத்த நிமிடமே இது ஒரு "Medical Miracle" மருத்துவ உலகின் அதிசயம் என ஏற்று புலங்காகிதமடைவதை காண்கிறோம்., ஆக மனித அறிவுக்கு உடன் படாத, முடியாது என வரையறுக்கப்பட்ட செயல்களும் உலகில் நடப்பது சாத்தியமே!

    ஆக இவ்வுதாரணம் வாயிலாக இதுவரை இதைப்போன்று ஒரு உயிரினம் உருவாவதை நம் அறிவு ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அஃது அந்நேரத்தில் அப்பிராணி வெளிபடும் போது அறிவியல் உலகம் அதிசயமாக கட்டுரை வடிக்கும் போது இறைவனின் அத்தாட்சியை இவ்வுலகம் காணும்..! 
பேசும் மொழி..? 
 ஒரு விலங்கு -மனிதர்கள் இன்னொரு மனிதருக்கு தெரியாமல் மறைத்துவைத்திருக்கும் ரகசியத்தை கண்டுணர்ந்து கூறுவது என்றால், எந்த அடிப்படையில் அது சாத்தியப்படும்?
       உண்மைதான்... சாதாரணமாக ஒருவர் மனதில் உள்ளதையே அதிபுத்திசாலியாக இருந்தாலும் பிறிதொரு மனிதனால் கண்டறிய முடியாது எனும்போது.. ஒரு விலங்கால் எப்படி கண்டறிந்து சொல்வது சாத்தியமாகும் மனித மனங்களில் உள்ளவற்றை..? எனும் நோக்கில் சிந்தித்தால்... மேலும் இந்த வசனத்தை உற்று நோக்கினால் அவனது வல்லமையின் வெளிபாடாகவும் அத்தாட்சியின் விளைவாகவும் நடைபெறும் இச்சம்பவம் இது., எனவே அந்நேரத்தில் இறைவன் ஏற்படுத்தும் ஒரு அசாதாரண செயல் என்பதை அறியலாம்..    
   அஃதில்லாமல் மேலும்,
மொழி - உயிரினம் சமூக வயப்பட்டிருப்ப‌தன் அடையாளம். தன் இனத்தைச் சார்ந்த இன்னொரு உயிரினத்துடன் தன்னுடைய கருத்தைப் பரிமாறுவதற்குறிய ஒரு வளர்ச்சி. ஆனால் இதை இன்னொரு உயிரினம் இல்லாத ஒற்றை விலங்காக பூமியிலிருந்து திடீரென வெளிப்படும் விலங்கு செய்யமுடியுமா? 
என்று கூறினால்.,
           இன்றும் வீடுகளில் வளர்க்கப்படும் கிளி, மைனா, நாய் மற்றும் ஏனைய உயிரினங்கள் மனிதர்கள் பேசும் மொழியே புரிந்துக்கொள்வதோடு அவர்களுடன் (தத்தமது பேசும் மொழியுடனான) பேச்சு தொடர்பும் வைத்திருக்கிறது., மேலும் உரியவரின் ஏவல்-விலக்கல்களுக்கும் தெளிவாக கட்டுப்படுவதையும் காண்கிறோம்., அவ்வாறு இருக்கும் போது., ஒரு உயிரினம் -தன் இனத்தை சார்ந்த சக உயிரினத்துடன் மட்டும் தொடர்புக்கொள்ள தங்கள் மொழியறிவை பயன்படுத்திக்கொள்கிறது என்று கூறுவது எப்படி உண்மையாகும்..? 


    ஆக தன் இனம் தவிர்த்தும் ஏனைய நிலையில் உள்ள உயிரினங்களுடன் தமது மொழியறிவால் தன் /பிற செய்கையே புரிந்துக்கொள்ளவும் புரிய வைக்கவும் முடியும் என்பதையல்லவா இது காட்டுகிறது., ஆக எதிர்காலத்தில் மனிதர்கள் மத்தியில் பேசும் ஓர் அறிவார்ந்த உயிரி தோன்றுவதற்கே அறிவியல் ரீதியான சாத்தியக்கூறுகள் அதிகமுள்ளது.,
   அஃறிணை உயிரினங்களின் பேசும் மொழியறிதல் மனித அறிவுகளாலே சாத்தியமெனும்போதும் மனித அறிவு உணர்த்தும் படி அவ்வுயிர்கள் உணர்ந்து செயல்படுதல் சாத்தியமெனும் போதும் நவீன விஞ்ஞானம் இதுவரை பொய்பிக்காத ஒரு நிகழ்வு எப்படி சாத்தியமில்லாமல் போகும்..?

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம். (8:22))

                                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "அதிசய பிராணி வருகை Vs அவசர அறிவியல் புரிந்துணர்வு"

Thursday, June 09, 2011

மூன்றாம் பார்வை


                                             ஒரிறையின் நற்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.,
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக..!
      அல்ஹம்துலில்லாஹ்!., இன்று வரையிலும் என் செயல்பாடுகள் குறித்து  ஆலோசனைகளயும், நல் கருத்துக்களையும் கூறும் என் சகோதரங்களுக்கு நன்றிகள்...பல

          ஏனைய ஆக்கங்களின் வாயிலாக என் வார்த்தைகளை சந்தித்த உங்களுடன் மீண்டும் "மூன்றாம் பார்வை" மூலமாக சந்திப்பதில் மகிழ்ச்சியே..
அதென்ன மூன்றாம் பார்வை..? சிலரின் புருவங்கள் உயரலாம்
   ம்ம்ம்..சிறுவயதிலிருந்தே எந்த ஒன்றையும் சரி/தவறு என்ற நிலைக்கு அப்பாற்பட்டு மூன்றாம் நிலையில் பொதுவாக ஒப்பு நோக்கம் பழக்கம் இயல்பாகவே உடையவன் தான் நான்., அதை இங்குள்ள ஏனைய ஆக்கங்களில் உணர்ந்து இருப்பீர்கள்.சரி விஷயத்திற்கு வருகிறேன்., வலையில் உலவிய போது ஏனைய தளங்களின் பாதிப்பு என் பார்வையையும் விட்டுவைக்குமா என்ன..?
கவிதை,விடுகதை,விதை ஸாரி... கதை இப்படி எனனவெல்லாம் எழுதலாம் என எதை எதையோ யோசித்தப்போது என்மனதில் ஏதோதோ தோன்றியது. அதை எழுத்தாக்க வேண்டும் என்ற ஆசையில் பிற தளங்களின் வண்ணத்தை என் மூன்றாம் நிலை எண்ணத்தோடு பொருத்திய போது...  உருவானது தான்
 3ம் பார்வை

..........................
சாம்பிளுக்கு...


ஒன்றுமில்லை 
குர்-ஆனில்....
...
..
.


பின்...?

    இன்ஷா அல்லாஹ் பார்வையிடுங்கள்., மார்க்கத்திற்கு முரணாக இருப்பின் தெரியப்படுத்துங்கள்., திருத்திக்கொள்ள வாய்ப்பிருக்கும்...
                                               இறை நாடினால் இனியும் சந்திப்போம்
                                               -ஓர் இறை அடிமை
read more "மூன்றாம் பார்வை"

Wednesday, June 01, 2011

உஜைர் நபி வரலாற்றில் பிழை.?


                                            ஓரிறையின் நற்பெயரால்.,
            இன்று நேற்றல்ல.. மனித அறிவு இந்த மண்ணில் மதியிழக்கும் போதெல்லாம் அதற்கு நேர்வழி வழங்கும் இஸ்லாமிய வாழ்வியல் நெறியை குறைகாண்பதோடு, தனது அதி மேதாவித்தனமாக (அறைகுறை) ஆய்வறிவில் குர்-ஆனில் அங்காங்கே, கைவைத்து வரலாற்றுப் பிழையும், வாழ்வியல் பிழையும் நிறைந்திருக்கிறது என்ற தன் மனம்போனப்போக்கில் வெளியிடும் போலி குற்றச்சாட்டில் ஒன்று தான் நாம் இங்கு பார்க்க போவது.,

உஜைர் நபி குறித்து குர்-ஆன் கூறுவது என்ன...?


  யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?  (9:30)


    இந்த வசனத்தை மேற்கோள் காட்டி ஈஸா நபியை கிறித்துவர்கள் கடவுளின் மகனாக கூறுவது உண்மை தான், ஆனால் நபி உஜைரை எந்த யூதனும் கடவுளின் மகனாக கூறவில்லையே...ஆக குர்-ஆனின் வரலாற்றுப்பிழை என நிறுவ முயல்கின்றன சில திரித்துவ கொள்கைகள்.,

இங்கு உஜைர் நபியை கடவுளின் மகனாக யூதர்கள் சொன்னார்களா என்பதை பார்க்கும் முன்பு சொல்ல வேண்டிய காரணம் குறித்து அறிந்தாலே.. இது வரலாற்றுப் பிழை இல்லை வழிகெட்டவர்களின் பார்வையில் பிழை என்பதை அறியலாம்.,அதற்கு முன்பாக,
குரானிய பார்வையில் நபி ஈஸா அலை மற்றும் உஜைர் நபி குறித்த ஓப்பிட்டு பார்வை


முதலி நபி ஈஸா அலை அவர்கள் குறித்து பார்ப்போம்.,

அவர்களது பிறப்புக்குறித்து,
         அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே. அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப்பின் "குன்" (ஆகுக) எனக் கூறினான்;. அவர் (மனிதர்) ஆகிவிட்டார் ((3 :59))
மர்யம் அலை இறைவனிடம் "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" 
(அதற்கு)  "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது. ((9 :47))


  மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார் ((3:46))

மேலும், அதை தொடர்ந்த வசனங்களில்,
     இஸ்ராயீலின் சந்ததியனருக்கு அவரை தூதராகவும் ஆக்குவான், 
"நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன்
பின் மர்யம் அலை அவர்கள் நபி ஈஸாவை பெற்றெடுத்தப்பின் மக்கள் முன்பாக அவர்கள் தொட்டிலிருந்தவாறே மக்களை நோக்கி
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடியானாக இருக்கின்றேன்; அவன் எனக்கு வேதத்தைக் கொடுத்திருக்கின்றான்; இன்னும், என்னை நபியாக ஆக்கியிருக்கின்றான். ((19 30))


ஆக நபி ஈஸா அலை அவர்கள்

  • ஏனையோரை போல் தாம்பத்திய உறவில்லாமல் இறைவனின் பிரத்தியேக ஆற்றல் மூலமாக அவனது ரூஹ் (ஆன்மா) கொண்டு படைக்கப்பட்டவர்கள்
  • சிறுபிரயாத்திலேயே... மக்களுடன் பேசினார்கள்.
  • சாதாரண களிமண்ணை பறவையாக்கினார்கள்
  • கடும் நோயுடையவர்களை வெறும் கைகளால் தடவியே குணப்படுத்தினார்கள்.
  • எல்லாவற்றையும் விட மிக பெரும் அற்புதமாக இறந்தவர்களை உயிர்பித்தார்கள்.

   
    நபி உஜைரை குறித்து பார்ப்போமேயானால், குர்-ஆனில் இந்த ஒரு வசனம் தவிர (9 30)  அறிந்த வரையில் வேறெங்கும் காணக்கிடைக்கவில்லை, அவர்கள் குறித்து சில ஹதிஸ்களே இருக்கிறது


குர்-ஆனின் விளக்கவுரை நூல்களில் ஒன்றான இப்னு கஸீர் நபி உஜைரை பற்றி பின்வருமாறு கூறுகிறது,

 (எஸ்ரா) கி.மு. 487 வாக்கில் யூதர்களிடையே வாழ்ந்த நல்ல மனிதர் ஒருவரின் பெயர். இவர் ஓர் இறைத்தூதாரா என்பது தொடர்பாகக் கருத்து வேறுபாடு உள்ளது. புக்த்தநஸ்ஸர் (நெபுகாட்நேஸர்- கி.மு 561) ஜெருசலத்தைக் கைப்பற்றி (கி.மு 568) அழித்தப்பின், தவ்ராத் (தோரா) வேதப் பிரதிகள் அனைத்தும் காணாமல் அல்லது அழிந்து போய்விட்டன.அப்போது உஸைர் (அலை) அவர்கள் தமது நினைவில் இருந்த தவ்ராத்தை எழுதினார்கள். இதனால் யூதர்கள் உஸைரை நபி மூஸா (அலை) அவர்களுக்கு இணையானவராகக் கருதினார்கள்.


  இவர்களை இறைத்தூதராகவே கருத்தில் கொண்டே நாம் பார்ப்போம்

  • உஜைர் நபி அவர்கள் தவ்ராவை மீண்டும் மக்கள் மத்தியில் எடுத்தியம்பினார்கள்
  • மக்கள் மூஸா அலை அவர்களுக்கு இணையாக கருதியிருந்தனர்.

       ஆக நபி ஈஸாவை போல "அற்புத செயல்கள்" என்ற பிரத்தியேக பண்புகளால் நபி உஜைர் அவர்கள் தன்னை இனங்காட்டவில்லை.
மாறாக மேற்குறிப்பிட்ட சம்பவத்தின் மூலமே அச்சமுக மக்களுக்கு மத்தியில் நன்கு பரிச்சயம் ஆனார்கள்.


    ஆக இவ்விரு இறைத்தூதர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை வைத்து ஒப்பு நோக்கும் போது நபி ஈஸா போன்று அசாதாரண செயல்கள் (ஒன்றுக்கூட) உஜைர் நபி புரியவில்லை என்பது தெளிவு!. எனவே அவர்கள் கடவுளின் மகன் என்றழைக்கப்படுவதற்கு நிரந்தர வாய்ப்புகள் குறைவு அதாவது,
    இறைவனின் வேதத்தை நினைவில் நிறுத்தி அதை புரனமைப்பு செய்ததே அவர்களின் பிரதான செயல். இச்செயலை அஃது சாதாரண மனிதரால் செய்ய இயலாது எண்றெண்ணியே இதை தெய்வீக செயலாக அங்கிகரித்து அம்மக்கள் அவர்களுக்கு ஒரு தெய்வீக அந்தஸ்தை கொடுத்து அவர்களை கடவுளின் மகன் என்றழைக்கலாயினர்.,
 
                ஆக இவர்கள் ஒரு குறிப்பிட்ட இட, சமுக சூழ்நிலையில் மட்டுமே மேற்கண்ட நிகழ்வை செயல்படுத்தி அம்மக்களிடையே வாழ்ந்ததால் அற்புத மிகுதியால் தன்னை நிலை நிறுத்திய நபி ஈஸாவைப்போல கடவுளின் மகன் என்ற தொடர் அந்தஸ்தை அக்காலம் தாண்டி அவர்கள் பெறவில்லை... ஆக இங்கு வரலாற்றுப் பிழைக்கோ /புரட்டுக்கோ வேலையே இல்லை.,
     
    இதையும் தாண்டி தங்களது திரி(பு)த்துவ வாதத்தை முன்னிருத்தி எந்த யூதருமே..... நபி உஜைரை கடவுளின் மகனாக கூறவில்லையென்று மீண்டும் முரண்பாட்டு அறிவை முன்னிருத்தினால்....அதற்கு அடுத்த வசனமே அவர்களுக்கு பதில் சொல்ல காத்திருக்கிறது...இல்லை இல்லை அவர்களின் பதிலுக்காக காத்திருக்கிறது


அத்தவ்பா அத்தியாயம் 9 வசனம் 31 ல் அல்லாஹ் 


   அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; 
 
  இங்கு கிறித்துவர்கள் நபி ஈஸாவோடு சேர்த்து பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள்களாக ஆக்கிக்கொண்டதாக குர்-ஆன் கூறுகிறது. ஆனால் எந்த கிறித்துவரும் எந்த பாதிரிகளையும் சந்நியாசிகளையும் இன்று கடவுளாக கொள்ளவில்லை.,
  உஜைர் நபி குறித்து விழி அகல வரலாற்றைத் தோண்டியவர்கள்., இந்த வசனம் பொய்யுரைக்கிறது என தற்கால ஓப்பிட்டில் திறம்பட கூறலாமே.. போலி சிந்தனை இவ்வசனம் குறித்து சிறிதும் வாய் திறக்காதது ஏன்..?
விளக்கம் வேண்டுமானால் தெளிவாக இருக்கிறது

    மேற்கூறிய உஜைர் நபி குறித்த அதே பார்வை தான் இங்கேயும்., ஒரு குறிப்பிட்ட இட மற்றும் சமுக சூழ்நிலையில் வாழ்ந்த கிறித்துவர்கள் அஃது அந்த தருணத்தில் மேற்கூறிவர்களை கடவுளாக கொண்டனர் என்பதே மிக்க பொருத்தும்... சரி இருக்கட்டும் இன்றும் நபி ஈஸாவை கடவுளின் மகனல்ல நபி முஹம்மதைப் போல அவரும் கடவுளின் தூதர் என குர்-ஆன் கூறுவதை நம்பும் கிறித்துவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்...?

       அவர்களின் கூற்று குர்-ஆனுக்கு ஆதாரமாக இருக்கிறதா....அல்லது கிறித்துவ கொள்கைக்கு மாற்றமா இருக்கிறதா? அவர்களை எந்த பட்டியலில் சேர்க்கிறது  உலகாதாய அறிவு...உஜைர் நபி குறித்து உரத்து கூறியவர்கள்,,,, மேற்கண்ட வினாக்களுக்கும் விடையளிக்கட்டும்...ஆங்கில எண்ணங்களுக்கு தங்கள் தளங்களில் எழுத்து வர்ணம் பூசுவோர்., ஒரு கணம் எழுத்தோடு சேர்த்து சிந்தனையும் விதைக்க முற்படட்டும்...  


 தம் வாய்களைக் கொண்டே அல்லாஹ்வின் ஒளியை (ஊதி) அணைத்துவிட அவர்கள் விரும்புகின்றார்கள் - ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்க மாட்டான். ((9 32))

                                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "உஜைர் நபி வரலாற்றில் பிழை.?"

Monday, May 23, 2011

உயிரின் நிழல்...

உயிரும் உருகும் என்று
உணர்ந்தேன் உன்னால்
இன்று....


நான்..தேடாமல் கிடைத்தாலோ
என்னவோ....
நீ..தேடிய போது(ம்) 
நான் உன்னை விட்டு தூரமானேன்....


தேவையற்ற நேரத்தில் கூட
தேவையானவை உணர்ந்து
தெளிவாய் தந்தவளே...


இல்லாமை வாசலில்
இயலாமை பூட்டிட்டு
நீ உறங்கிய போதும்
உள் வந்து
கல்லாமை போக்கியவளே


சோற்றில் உப்பு அதிகம் என 
அங்கலாய்த்த போது....உன் 
வேர்வைத்துளிகளை 
வேகமாக துடைத்தாய்...
அன்று உணரவில்லை...
என் உணவின் சுவை
உன் உணர்வுக
ளில் என்று




இரண்டும் இரண்டும் ஐந்தென்றேன்...
அறியாமலே...
தெரிந்தும் உண்மை என்றாய்...
நிலா சுடும் என்றேன்.. 
என் போலி பொது அறிவுக்கண்டு
உளம் பூரித்தாய்....


இடையில் மறைத்த
இறுதி ரொட்டித்துண்டும்
எனக்காகதான் என்று
உணராமலே உண்டுக்கொண்டிருந்தேனே....
நான் நானாக ஆவதற்கு
நீ நாராக ஆனாயே...


என்னவெல்லாமோ...
சாப்பிட தந்தாயே...
என்ன சாப்பிட்டாய் என நான் கேட்கின்ற போது
எண்ணற்றவைகள் என சொன்னாயே- 
எதுவும் இல்லையே நான் யோசிக்க மறந்த போது
என் எண்ணங்களை மட்டும் சாப்பிட்டு வாழ்ந்தாயே...


எனக்காக நிஜமாய்
வாழ்ந்த உனக்காக
நிழலாக கூட
வாழமுடியவில்லையெனும் போது...

விதைக்கும் நிழலுண்டு..
வந்தமரும் வழிப்போக்கன் 
யோசிப்பதில்லை ..
அதுப்போல...நானும் நேசித்ததில்லை
உன் உயிரின் நிழலை...


மொத்த நேரமும் உன் கணவருக்காக -எஞ்சிய
மற்ற நேரம் எனக்காக
எப்போது வாழ்ந்தாய்...
நீ
உனக்காக...?

தூர தேசத்திலும் பொருள் சேர்க்கும் கவனத்தில்...
நெற்றிச்சுருக்கத்தில் 
எனக்காக
உன் வாழ்வு சுருங்கி போனதை..
இறுதிவரை
நானறியாமலே...


read more "உயிரின் நிழல்..."

Saturday, May 14, 2011

போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை...

                                          ஓரிறையின் நற்பெயரால்

இது ஒரு காமெடியாக எழுதப்பட்ட சீரியஸ் விசயங்க....

     ஜிஹாதுன்னா..? 


  பொதுமக்களையும்,அப்பாவிகளையும் கொல்றதுக்கு பேருதாங்க ஜிஹாது..... இது உலக வலை விற்பனர்கள் முதல் உள்ளூர் ஊறுகாய் வியாபாரி வரைக்கும் அறியாமலே அறிந்ததாய் சொல்லும் ஒரு வாக்கியம்.... இந்த அடிப்படை தவறான வாக்கியத்திற்கு அடிப்படையில் இரண்டு காரணம்.,

  • இஸ்லாமியர்கள் ஊடகத்தை சரிவர பயன்படுத்தி கொள்ளவில்லை., 
  • ஊடகம் இஸ்லாமியர்களை தவறாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றது- அதிலும் குறிப்பாக சினிமாத்துறை மிக மோசமாக இஸ்லாமிய எதிர்ப்பை அரங்கேற்றிக்கொண்டிருக்கிறது., அத்தகைய சினிமாவில் இஸ்லாம் நிலை குறித்தே இங்கு பதிவு.

சின்ன ப்ளாஸ்பேக்


 ப்ளாக் & ஒயிட் சினிமாக்களில் இஸ்லாமியர்

 "அரே பாய் சைத்தான் நிம்மளிக்கி ப்லிம் காட்ரான்... "
      என்று உண்மை இஸ்லாமியர்களுக்கு கூட (பேச) தெரியாத மொழியில் நீள்வட்ட தொப்பியுடன், கொஞ்சம் குறுந்தாடி கறைபடிந்த பற்கள் நீண்ட ஜிப்பா சகிதமாக கையில் குச்சியுடன் வட்டியை வசூல் பண்ணும் காட்சியில் தோன்றுவார்... அதுதான் அன்றைய இஸ்லாமியர் அறிமுகம்.,
  
 இடைப்பட்ட காலங்களில் ஒரு படி மேல போய்.... வீடுகள் முழுக்க காபா படங்கள்., பாங்கு சொல்லும் போதே.. தொழுது கொண்டிருப்பார் ., எப்போதும் தலையில் வலைத்தொப்பியுடன் , கழுத்தில் தட்டை வடிவ தாயத்து அதில் முன்புறம் வளர்பிறை அதன் மேலாக 786 என பொறிக்கப்பட்டிருக்கும் ( பார்த்தீர்களா இஸ்லாத்தை எவ்வளவு ஆழமாக உணர்ந்து எடுத்திருக்கிறார்கள்)
    பெரும்பாலும் சோக செய்திகள் இவரிடம் சொல்லப்படும் போது "யா அல்லா..."(ஹ்)... என உச்சஸ்த்தாயில் கத்தி பெருமூச்சுடன் முடிப்பார்.. ப்ளாஷ் பேக் ஓவர்

 நிகழ்கால சினிமாக்களில் இஸ்லாம்


 இந்த ஆக்கத்தின் மையக்கருவே இது தான்., சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் நான் பார்த்த ஒரு காட்சி


காட்சி -1

 ஒரு நல்ல முஸ்லிம், தீவிரவாதியாக கருதப்பட்டு அடித்து செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அப்போது அங்கு குர்-ஆன் சகிதமாக நெற்றியில் தொழுதற்கான அடையாள தழும்புகளுடன், கண்டிப்பாக தாடியுடன் இருக்கும் கெட்ட முஸ்லிம் தீவிரவாதி சொல்கிறார்
"இந்த நாட்டில் இவ்வளவு நமக்குதான் மரியாதை.....
நல்ல முஸ்லிம் மிரட்சியுடன் பார்க்கிறார்...

மேலும் சில நிமிடங்கள் கழித்து
காட்சி -2

    நாட்புறமும் குண்டுகள் சத்தம் முழங்க ஏந்திய துப்பாக்கியுடன் சக முஸ்லிம் தீவிரவாதிகள் அங்கு வருகின்றனர்
நல்ல முஸ்லிம் கேட்கிறார் என்ன...... செய்ய போறீங்க......
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி தன் உடம்பில் "பாம்" கட்டிக்கொண்டே கூலாக சொல்கிறார்
இந்த நாட்டிற்கு நாம யாருன்னு காட்ட போறோம்....

காட்சி - 3

 மருத்துவ மனை வளாகத்தில் தென்படுவோரை சுட்டுக்கொண்ட முன்னேற
நல்ல முஸ்லிம் ஹீரோவுடன் இணைந்து ஏனையோரை காப்பாற்ற முற்பட...
எதிரில் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியும் வர
ஹீரோ கேட்கிறார்
எந்த கடவுள்டா மக்களை கொல்ல சொன்னீச்சு....
கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி
ஜிஹாத்...... ஜிஹாத்..... தொடர்ந்து இந்தியில் ஏதோ....சொல்ல
மீண்டும் கேட்கிறார் ஹீரோ
கடவுளை விடுங்க.. மனுஷங்களே பாருங்கடா...
ஜிஹாத்...... ஜிஹாத் 
மீண்டும் அதே உச்சரிப்பு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதியிடமிருந்து மேலும்    இந்தியில் ஏதோ... சொல்லிக்கொண்ட ஹீரோவை நெருங்க.. உடல் முழுவதும் பாம் வேறு... ஹீரோ கட்டிப்பிடித்தவாறே கட்டிடத்திலிருந்து குதிக்க வழக்கம் போல் கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சாக வழக்கத்திற்கு மாறாக ஹீரோவும் சாகிறார்,
  இந்த கேப்ல... நல்ல முஸ்லிம் உருக்கமாக பேசுகிறார் அதைக்கேட்டு ஒரு கெட்ட முஸ்லிம்  தீவிரவாதி சுப்பாக்கியால் தன்னைதானே சுட்டு சூஸைடு வேறு...
????
    _______________________ X ____________________________

 
   இங்கு ஒரு விசயத்தை கண்டிப்பாக நாம் கவனிக்க வேண்டும் இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத செயல்களை வட்டிக்கு விடுதல், தகடு தாயத்து அணிதல் போன்றவற்றை செய்பவர்களை மீடியாவில் நல்ல முஸ்லிம்களாக காட்டப்படுகின்றனர். ஆனால் இஸ்லாம் செய்ய சொன்னதை செய்வர்களாக குர்-ஆன் ஓதுதல் தாடிவைத்தல் போன்றவற்றை அடிப்படையாக கொண்டவர்கள் மீடியாவில் தீவிரவாதிகளாக அறிமுகம்,,,

      இந்த சினிமாத்துறை இஸ்லாத்தை பற்றியும் அறிந்திருக்கவில்லை., இஸ்லாமியர்களை பற்றியும் தெரிந்திருக்கவில்லை., ஆயுதபூஜைக்கு தனது பழைய TVS 50 க்கு புதிதாய் சந்தனமிடுபவர்களும், ஹோலி பண்டிகையில் எதையாவது போலியாய் எரிக்கும் முஸ்லிம்களுமே இவர்கள் பார்வையில் உண்மை முஸ்லிம்கள்.,

    அட கேடுகெட்ட சினிமாத்துறையே.... இஸ்லாமியர்களை திருத்துவதாக சொல்லி இஸ்லாத்தில் இல்லாததை விமர்சிக்கிறாயே... உன் உலக அறிவை இஸ்லாமிய அறிவோடு பொருத்துவதை எப்படி மெச்சுவது..

ஜிஹாத்., -விளக்கம் கொடுத்து கொடுத்தே ஓய்து போனவர்கள் நம்மில் அனேகம்...
அல்லாஹ் குர்-ஆனில்

"நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)


       நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ 


எவரது நாவாலும், கரத்தாலும் ஏனையவர்களுக்கு தீங்கு ஏற்படவில்லையோ - அவரே உண்மை முஸ்லிம் ஆவார்

    இவ்வாறு அல்லாஹ்வும் அவனது திருத்தூதரும் கூறியிருக்க இஸ்லாம் அங்கிகரிக்காத, அறுவெறுக்கும் ஒன்றை, தடைசெய்த, ஏற்க மறுத்த ஒன்றை, இஸ்லாத்தில் பெயரில் செய்வதாக திரிப்பது எவ்வளவு பெரிய கொடுமை.,

  • தனி மனித கொலையை., அங்கிகரிக்காத இஸ்லாம் எப்படி இறைவன் பெயரில் மக்களை கூட்டம் கூட்டமாக கொல்ல சொல்லும்., ?
  • தற்கொலை ஹராம்..( விலக்கப்பட்டது) அஃது தற்கொலை புரிவோருக்கு நரகம் என மார்க்கம் சொல்லும் போதும் தற்கொலை படை தாக்குதலை நடத்தவோரை சுவனப்பதியில் எப்படி இஸ்லாம் நுழைய செய்யும்..?

     இவையெல்லாம் பார்க்கும்போது திரைத்துறை ஊடங்களுக்கு சரியான இஸ்லாமிய புரிதல் இல்லையென்பதை காட்டிலும் இஸ்லாம் குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லை., என்பதே உண்மை.,
                                            
                                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "போலி ஜிஹாதியம் - ஊடகத்தின் ஊன பார்வை..."

Saturday, April 23, 2011

கடவுளும்- நாமும்


                                                   ஓரிறையின் நற்பெயரால்
கடவுளோடு தொடர்பு பொதுவாக மக்களுக்கு இரண்டு விதத்தில் இருக்கிறது
1.நாத்திக சிந்தனை
கடவுள் Vs நாம்
2.ஆத்திக சிந்தனை
கடவுளுக்காக நாம்


   இதில் முதலாவது சிந்தனை முற்றிலும் கடவுளை மறுக்க அனைத்து வழிகளையும் ஆராய்கிறது., அது கடவுள் மறுப்பாளர்களின் எதிர்ப்பாளர்களால் அவ்வபோது மறுக்கப்படுகிறது., எனினும் இது தர்க்க ரீதியான வெற்றியே தான் கடவுளை ஆதரிப்பவர்களுக்கு கொடுக்குமே தவிர நாத்திகவாதிகளின் மனதில் பெரியளவில் மாற்றத்தை ஏற்படுத்தாது.,

    நாத்திக சிந்தனை அடியோடு ஒழிய வேண்டுமானால் அதற்கு எதிராக இருக்கும் ஆத்திக சிந்தனை முழு அளவில் வெளிபட பெற வேண்டும். ஆதாவது இறைவனை பின்பற்றுவோரது வாழ்வியல் ரீதியான வழிமுறைகள் மிக சரியாக, எப்போதும் நிலையாக இருக்கவேண்டும்.
 எனினும் ஆத்திக சிந்தனையென வரும்போது இரண்டு விதத்தில் வித்தியாசப்படுகிறது.


1.அனைத்தும் கடவுள்
2.அனைத்தும் கடவுளுடையது


  முதாலாவது, ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் என்ற அடிப்படையில் கடவுளை ஏற்பது -இது இஸ்லாம் தவிர ஏனைய அனைத்து மதங்களும் பின்பற்றும் வழிமுறை,
இரண்டாவது, ஒரே இறைவனே இவ்வுலகம் அனைத்தையும் படைத்து அதில் உள்ள யாவற்றையும் படைத்தாக ஏற்றுக்கொள்வது இஸ்லாம் கூறும் கடவுட்கொள்கை.

ஆக., நாத்திக சிந்தனையின் பிரதான கேள்விகளுக்கு "அனைத்தும் கடவுள்" என்ற ஆத்திக கொள்கையால் பதில் தர இயலாது.ஆக அதுவல்லாத "இஸ்லாம் கூறும் கடவுட்கோட்பாடுகளாலும் அதன் கூறும் வாழ்வியல் வழிமுறைகளாலும் மட்டுமே நாத்திக சிந்தனைக்கு போதுமான பதில் தர முடியும். எனினும் கோட்பாடுகளை முன்னிருத்தி போதுமான பதில் தரப்படினும் அடுத்து அவர்களிடம் முளைக்கும் கேள்வி அத்தகைய கோட்பாடுகளின் (அதன்)படி எத்தனை இஸ்லாமியர்கள் நடக்கிறார்கள்...? என்பதே..

இக்கேள்விக்கு பதில் தரும் முகமே இக்கட்டுரையின் நோக்கம்....
  
  அல்லாஹ் தன் திருமறையில் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து ஏவல்கள்- விலக்கல்களை மிக தெளிவாக இந்த மனித சமுகத்திற்கு ஏற்படுத்தி அதனை இறுதி நாள் வரை வரக்கூடிய மக்கள் யாவரும் பின்பற்ற சாத்தியமாக அச்செயல்களை எடுத்து செயல்படுத்துவதற்கு மனிதர்களுடையே ஓர் தூதரை ஏற்படுத்தி தந்தான். அந்த தூதரும் மிக சரியாக தெளிவாக அனைத்து செயல் முறைகளையும் செய்ததோடு அதனை செய்வதற்கும் ஏதுவாக ஏனைய விஷயங்களையும் இந்த மனித சமுகத்திர்கு தெளிவாக வலியுறுத்தினார்கள்.,

    ஆக இறை கட்டளைகளை (இறைவனின் நாட்டப்படி) எல்லோராலும் எல்லா காலக்கட்டங்களிலும் பின்பற்ற முடியும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாயிலாக நாம் எளிதாக அறிந்திடலாம். அவர்கள் பிரத்தியேக பண்புகளுடன் இறைவன் பால் அனுப்பட்ட தூதராக இருந்தாலும் அவர்கள் மக்களிடையே மக்களாக வாழ்ந்ததை கண்டுதான் அச்சமுக இறை நிராகரிப்பாளர்கள்

"நீர் உண்மையாளரில் ஒருவராக இருப்பின் நீர் எங்களிடத்தில் மலக்குகளைக் கொண்டு வந்திருக்க வேண்டாமா?" (என்றும் கூறுகின்றனர்.) (15:07)


மேலும் அவர்கள் கூறுகிறார்கள்;
"இந்த ரஸூலுக்கு என்ன? இவர் (மற்றவர்களைப் போலவே) உணவு உண்கிறார் கடை வீதிகளில் நடக்கிறார். இவருடன் சேர்ந்து அச்சமூட்டி எச்சரிப்பதற்காக, ஒரு மலக்கு (வானவர்) அனுப்பப்பட்டிருக்க வேண்டாமா?" (25:07)


இதற்கு பதில் தரும் விதமாக இறைவன்
(நபியே!) நீர் சொல்வீராக "நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன்தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கிறது...(18:110)

         ஆக மனிதர்கள் யாவரும் எக்காலத்திற்கும் பின்பற்ற தகுந்த வாழ்வியல் நெறிமுறைகள் எண்ணிடங்காமல் நபிகள் நாயகம் மூலம் மிக தெளிவாக நம்மை வந்தடைகிறது எனவே தான் வல்லோன் அல்லாஹ் தன் வான்மறையில் அன்னாரைக்குறித்து

  அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)


 ஆக நம்மால் அந்த வழிமுறைகளில் எந்த ஒன்றையும் பின்பற்ற முடியாது என நம் வாழ்வின் எந்த சூழ்நிலையிலும் சொல்ல முடியாது. அஃது சொன்னால் அது நமது சுய நலத்திற்காக ஏற்படுத்திய திரிபு வாதம் அல்லது அல்லாஹ் மீது பயமின்மை.
நம்முடைய வாழ்வு தற்காலத்தில் எந்த அளவிற்கு அமைந்திருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம் பாருங்கள்...

அல்லாஹ் தொழுகை குறித்து கூறும் போது
... நிச்சயமாக தொழுகை (மனிதரை) மானக்கேடானவற்றையும் தீமையையும் விட்டு விலக்கும்... (29:45)


ஆக தொழுகையே சரிவர பேணும்போது அது வீணான தீயச்செயல்கள் மற்றும் மானக்கேடானவற்றை விட்டும் நம்மை காக்கும் என்பது குர்-ஆன் அளிக்கும் வாக்குறுதி. எனினும் தொழுவோரில் பலர் வீணான காரியங்கள் செய்கிறார்கள் என்பதும் உண்மை. எனும்போது குர்-ஆன் பொய்யுரைக்கிறதா? இல்லவே இல்லை... தொழும் அத்தொழுகை ஒரு முழுமையான தொழுகையாக அவர்களிடத்தில் இல்லை... ஏதோ கடமைக்காக தொழுகிறோம் என்பதே உண்மை.

      அதைப்போலவே நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற ஏனைய நல்லறங்கள் செய்து கொண்டும் புகைப்பிடித்தல், குடி, பொய், புறம் பேசுதல், அடுத்தவர்களின் உரிமையே பறிப்பது, வாக்குறுதி நிறைவேற்றாமை, அமானிதங்களை அபகரிப்பது,  வட்டி வாங்குவது போன்ற இழி செயல்கள் புரிவது.,
 
   இதையெல்லாம் புரிவது மார்க்கத்தை சரிவர புரிந்துகொள்ளா முஸ்லிம்கள் என்ற போதிலும் இதைப்போன்ற செயல்களை பார்ப்போருக்கு இஸ்லாம் மீதே காழ்புணர்ச்சி ஏற்படுகிறது என்பது உண்மை.ஆக வெறுமனே., பெயர் தாங்கி முஸ்லிம்களாக வாழாமல் அஃது அல்லாஹ்வும் அவன் தூதரும் பொருந்திக்கொளும் விதம் இவ்வுலக வாழ்வை அமைத்து கொண்டு ஏனையோருக்கும் ஒரு முன்மாதிரி சமுகமாக வாழ்வது நம் அனைவர் மீதும் தார்மீக கடமையாக இருக்கிறது. ஏனெனில்

அல்லாஹ் தன் வான் மறையில்
நீங்கள் வேதத்தையும் ஓதிக் கொண்டே, (மற்ற) மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவி, தங்களையே மறந்து விடுகிறீர்களா? நீங்கள் சிந்தித்துப் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
  என பெயர் தாங்கி முஸ்லிம்களை சாடுகிறான்.

  பொதுவாக, எதிரில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டினை நாம் சிறிதாக்க வேண்டுமெனில் நமது கோட்டை அதைக்காட்டிலும் சற்று பெரிதாக வரைந்தாலே போதும்.. அக்கோடு தானாகவே சிறிதாகி விடும்.
 
      அதுப்போல நாத்திகம் என்பதை இல்லாமல் ஆக்க தூய இஸ்லாமிய சிந்தனைகளை இவ்வுலகத்திற்கு எடுத்து இயம்புவதோடு மட்டுமில்லாமல் செயல் முறை ரீதியாகவும் உணர்த்தினாலே போதும். நாத்திகம் இஸ்லாத்தின் காலடியில் நசுங்கி போகும்.

  அல்லாஹ் அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் தந்தருள்வானாக...
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (03:102)
                                                                    அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளும்- நாமும்"

Saturday, March 12, 2011

-இப்படிக்கு இப்லிஸ்

ன் இறைவா..!
ஆதத்தை (அலை) வழிக்கெடுக்க
முனைந்தவன் நான்
ஆனால் அவர் தம் மக்களோ
என்னையல்லவா.... வழிக்கெடுக்க முயல்கிறார்கள்
இது உனது விதியோ...
இல்லை
பழிக்கு பழியோ...

உன் கட்டளைக்கு உடன்படாததால்
மக்களுக்கு
மாறு செய்பவன் நான்
உன் கட்டளைக்கு உடன் பட்டும் 
எனக்கு மாறு செய்வதில்லையே மக்கள்....

சஹாபாக்கள் காலத்தில்
சர்வ காலமும் போராட்டமாக இருந்தது...
பல முறை அவர்கள் வெல்ல...
சிலமுறை வென்றிருக்கிறேன்.
ஆனால்... இன்றோ
அப்துல் ரஹ்மானை வழிக்கெடுக்க முயலும் முன்
அப்துல்லாவையும் இலவசமாக
வழிகெடுத்தே என் முன் வருகிறார்.

உன்னைப் பற்றி அறியாததால்..
நான் ஏதோ ஆனேன்
என்னைப்பற்றி அறிந்தும் -மக்கள்
வீணாய் போனது ஏன்...?

நபிகளார் காலத்தில் நாளெல்லாம்
யோசித்தேன்...
துன்பம் தருவது எவ்வாறு என்று
ஆனால் இன்றோ...
யோசிக்கிறார்கள்
இன்பம் பெறுவது என்னிடம் எவ்வாறு என்று

அன்று உமரோ (ரலி) ஒரு தெரு வழி நடக்க
நானோ பிறிதொரு தெரு ஓடினேன்
இன்று எவரும் 
வருவதை கண்டு ஓடி ஒளிந்தாலும் 
கண்டறிந்தல்லவா...
என் தோள் மீது கைப்போட்டு
அழைத்து செல்கிறார்கள்
அனாச்சாரியங்கள் பல புரிவதற்கு

பாங்கொலி சத்தம் கேளாமல் இருக்க
"பாடு" பட்டேன் அப்போது
பாங்கொலி கேட்டுவிட போகிறது என்பதற்காக
'பாட்டு' கேட்கிறார்கள் எப்போதும்....

உன் இறைமறையில் 
எண்ணற்ற இடங்களில்
என்னைப்பற்றி
எச்சரித்தாய் அல்லவா... மக்களுக்கு 
ஒருமுறையேனும் 
அவர்களை குறித்து என்னிடம் சொல்லிருந்தால்
அப்போதே....
சிரம் பணிந்திருப்பேனே... 
ஆதி பிதா ஆதமுக்கு 
கியாம நாள் வரை வாழ அவகாசம் கேட்டவன் நான்
சரியென, அதுவரை சாகாவரம் தந்தவன் நீ....
போதும்....
பொய்யானவர்களுடன்
பொறுப்போடு வாழ்ந்தது
ரப்பே., இனி எனக்கு இங்கு வேலையில்லை...

உயர்ந்தோனே....
யாரை வழி கெடுப்பது இனி...
உண்மையானவர்களை 
உலகத்தில்
இனங்காட்டு...
இல்லையேல் 
உண்மையாகவே 
மரணித்து விடு... என்னை
                                                               -இப்படிக்கு இப்லிஸ் 


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
இது கற்பனையாக எழுதப்பட்டாலும்., இன்றைய சமுகத்தில் வாழும் மக்களின் நிலைபாட்டை விவரிக்கும் சில வரிகளே இது. இன்று சைத்தானே கெட்கம் கொள்ளும் அளவிற்கு தான் மனிதர்களின் நடத்தைகள் குறிப்பாக இஸ்லாமியர்களின் செயல்கள் இருக்கின்றன...கேடுகெட்ட எண்ணங்கள் மற்றும் செயல்களிலிருந்து விலகி படைத்தவனுக்கே முற்றிலும் பணிந்து சைத்தானுக்கு மாறு செய்யும் மக்களாக அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள்வானாக
பின் குறிப்பு: மேலுள்ள புகைப்படத்திற்கும் இப்லிஸூக்கும் (சைத்தான்) எந்தவித சம்பந்தமுமில்லை 
                                                                   அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "-இப்படிக்கு இப்லிஸ்"

Saturday, February 26, 2011

கடவுள் இருந்தால்...

                                              ஓரிறையின் நற்பெயரால்...

      கடவுளை மறுக்க மதங்களை பின்பற்றுவோர் செய்யும் வணக்க வழிப்பாட்டு ரீதியான தவறுகளை முன்னிருத்தி தான் கடவுள் மறுப்பதற்கு ஏதோதோ காரணங்கள் என்று சொல்ல முடிகிறதே தவிர கடவுள் இல்லை என்பதற்கு எந்தவித செயல்பாட்டு காரணங்களையும் கடவுளை நிரகரிப்போர் முன்னிருத்தவில்லை.

     எனினும் கடவுளை நம்பாமல் இருப்பதால் -கடவுளை நம்புதால் மனித சமுதாயம் பெறும் பயன்பாடு குறித்து இந்த சிறியவனின் பார்வையில்..
 எப்போதுமே., ஒன்றை ஏற்பதால் ஏற்படும் பயன் அதனை ஏற்காமல் இருக்கும்போதும் குறைவாகவோ., அல்லது முழுவதும் இல்லாமலோ இருக்கவேண்டும். அதன் அடிப்படையில் கடவுளை நம்பாதவர்களுக்கு ஏற்படும் அனேக இழப்புகள் கடவுளை நம்புவர்களுக்கும் ஏற்படுவதை காண்கிறோம்.

   இதை மையமாக வைத்து நாத்திக சிந்தனை கடவுள் இல்லை என நிறுவ முயல்கிறது. நாம் முன்னரே சொன்னதுப்போல் கடவுளின் பெயரால் அல்லது கடவுளுக்காக என அறிவற்ற மனிதர்கள் செய்யும் தேவையற்ற வணக்கங்களையும் போலி பூஜை புனஷ்காரங்களையும் காரணம் காட்டியே... கடவுளை மறுக்கிறார்களே., தவிர இதுவல்லாத வேறு எந்த செயல் ரீதியான காரணங்களும் இல்லை.
    
     முதலில் ஒன்றை விமர்சிப்பதாக இருந்தால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை வெளிபடுத்த வேண்டும் பின்பு அதன் பாதிப்பை நிவர்த்தி செய்யும் ஒரு மாற்று தீர்வை அல்லது மாற்று வழியை கொண்டுவர வேண்டும்... என்ற அடிப்படையில் கடவுளை ஏற்போர் அடையும் துன்பங்களுக்கு ஒரு தெளிவான மாற்று தீர்வை கடவுளை மறுப்போர் தெரிவித்தாக வேண்டும்.
   
              ஆனால் மாறாக அஃது ஏற்போர் அடையும் அனேக துன்பங்கள் கடவுளை நிரகரிப்போரும் அடைகின்றனர். உதாரணமாக பசி, குடும்பத்தில் பிரச்சனை,மோசடி ,வறுமை, திருட்டு, கொள்ளை, கொலை, ஏமாற்றம், இன்னும் இதைப்போன்ற தனிமனித மற்றும் சமுக ரீதியான இழப்புகள். ஆக இதைப்போன்ற இழப்புகள் இரு சாராருக்கும் பொதுவாக ஏற்படுகிறது என்பது தெளிவு. எனவே இதற்கு "கடவுளை ஏற்பது மறுப்பது " என்ற நிலை தாண்டி ஒரு மூன்றாம் காரணம் இருக்கிறது என்பது விளங்குகிறது.

 அதாவது சுய நலம்,விட்டுக்கொடுக்கும் மனபான்மையின்மை, போட்டியும் பொறாமையும் கொண்ட கெட்ட மனித மனங்களே இதற்கு காரணம்-
     இதை கடவுளை ஏற்போர் மொழியில் சொல்வதாக இருந்தால் கடவுள் கூறும் போதனைகளை ஏற்காமல் தன் மன இச்சையின் படி செயல்படும் மனிதர்களின் செயல் பாடே இதைப்போன்ற அனேக இழப்புகளுக்கு வழி வகுக்கிறது,


        சரி., அப்படியானால் சுய நல மில்லாத மனிதர்களாக வாழ்(இரு)ந்தாலே இவ்வுலகில் நன்மையே மேற்கொள்ள போதுமானது எனும் போது "கடவுளை ஏற்றுத்தான் ஆக வேண்டுமா என்ற கேள்வி இங்கு எழலாம்...

      தாராளமாக நல்லெண்ணமிக்க மனிதர்களால் பிறருக்கு எந்த வித கேடுகளையும் தாராமல் இருக்க முடியும். எனினும் சமுகத்தில் உலவும் கெட்ட மனிதர்களால் சமுகத்திற்கு ஆபத்து தானே.... மேலும் நல்ல மனிதர்களின் மனச்சாட்சியும் எப்போதும் நிலையாக இருக்கும் என்பதை சொல்ல முடியாது


    ஆனால்.,  கடவுளை ஏற்கும் போது எந்த செயலின் விளையும் நமது மனதிற்கு நன்மையோ தீமையோ ஏற்படுத்துவதாக இருந்தாலும் அஃது கடவுளுக்கு பயந்து நடு நிலையோடு செயல் பட தூண்டும் மேலும் இஸ்லாத்தை பொறுத்தவரை கடவுளுக்கு செய்யும் வணக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அதே அளவிற்கு சக மனிதர்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுக்காப்பு கொடுப்பதை ஒரு கடமையாகவே பணிக்கிறது



    ..."நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" (அல்குர்-ஆன். 5:32)   
  
தனி மனிதனின் உயிருக்கு இதை விட உயரிய வரையறையே வேறு எந்த சட்டத்தால் தரமுடியும்..?

     மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏராளமான பொன்மொழிகளும் தனி மனித வாழ்விற்கு முக்கியத்துவம் கொடுப்பதை விளக்குகிறது அதிலும் குறிப்பாக அவர்களின் இறுதி பேருரையில்

  மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: "பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. 
"ஒ... மக்களே! இந்த (துல்ஹஜ்) மாதமும், இந்த (துல்ஹஜ் 9ம்) நாளும், இந்த (மக்கா) நகரமும் எவ்வளவு புனிதமானவையோ, அப்படியே உயிர்களும், உங்கள் உடமைகளும் உங்கள் மானம் மரியாதைகளும் உங்களுக்குப் புனிதமானவை.
 
ஆக "படைப்புகள் மீது இரக்கம் காட்டாதவன் மீது படைப்பாளன் இரக்கம் காட்டுவதில்லை போன்ற பொன்மொழிகளும் தனி மனிதனுக்கு அவனது உயிர் மற்றும் உடமைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை காட்டுகிறது

      இவ்வாறு பிறருக்கு உதவுவதை பிறர் நலன் பேணுவதை ஒரு கடமையாக இஸ்லாம் பணிக்கும் போது இதை ஒரு செயலாக மட்டுமே செய்யாமல் இதற்கும் நாளை நம் இறைவனிடம் வெகுமதி உண்டு என்ற எண்ணத்தில் இதைப்போன்ற நன்மையாக காரியங்களை அதிகமாக செய்வதற்கு "கடவுள்" என்ற சொல் நமக்கு அவசியமாகிறது.
       எனவே கடவுள் இல்லை என்பதை விட கடவுள் இருக்கிறார் என்ற நிலையில் நாம் பிறருக்கு அதிக நன்மை செய்வதற்கு இயல்பாக மனம் நாடுகிறது. இதே எண்ணத்தின் அடிப்படையிலும் பிறரின் நலன் கெடுப்பதற்கும் கடவுள் தண்டனை தருவார் எனும் போது அதிலிருந்து விலகவே மனம் விரும்புகிறது.

  இந்த நேரத்தில் என் நாத்திக சகோதர்களே., ஒன்றை சிந்தியுங்கள் இஸ்லாம் ஓரே கடவுளை மட்டுமே வணங்குங்கள் என்று சொல்வதோடு சக மனிதர்களுக்கு நன்மை செய்து வாழுங்கள் என்றே சொல்கிறது. இதில் என்ன முரண்பாடு அல்லது பகுத்தறிவிற்கு ஒவ்வாத வாதத்தை கண்டு விட்டீர்கள்...?

      இறுதியாக., உங்கள் எண்ணத்தைப் போன்று இறப்பிற்கு பிறகு ஒரு வாழ்க்கை இல்லையென்றால் அஃது அது உண்மையென்றாலும் அதனால் கடவுளை நம்பியதால் அவனை வழிப்பட்டதால் எங்களை போன்றோர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை... ஆனால் நாங்கள் சொல்வதுப்போல இறப்பிறகு பிறகு ஒரு வாழ்விருந்து கடவுளை வணங்காமல் காலம் முழுவதும் வாழ்வை கழித்து அவனது முன் நிற்கும் பொழுது உங்களது நிலைமை....?
    
         எங்களுக்கு நூறு சதவிகித நம்பிக்கை இருக்கிறது இறப்பிற்கு பின் உள்ள வாழ்வில் உங்களது நம்பிக்கையே பரிசிலனை செய்ய நீங்களும் மேற்கண்ட பத்தியை மறுமுறையும் வாசியுங்கள்.

மனிதர்களே! நீங்கள் உங்களையும் உங்களுக்கு முன்னிருந்தோரையும் படைத்த உங்கள் இறைவனையே வணங்குங்கள். (அதனால்) நீங்கள் தக்வா (இறையச்சமும், தூய்மையும்) உடையோராகளாம். (அல்குர்-ஆன் 2:21)

                                                              அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுள் இருந்தால்..."

Monday, December 27, 2010

பரிணாமத்தில் மனிதன்..?

                                                ஓரிறையின் நற்பெயரால்...
        
    பொதுவாக, ஒரு செல் உயிரி மூலமாக ஏனைய உயிரிகள் வளர்ச்சியடைந்தன என்றாலும், அஃது அவ்வாறு ஒரு உயிரி பிறிதொரு உயிரியாக மாற்றமடைய அவ்வுயிரியின் சுய தேவை, வாழும் சூழல், மிக முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இவற்றை அடிப்படையாக கொண்டுதான் ஒரு உயிரி காலப்போக்கில் தன்னை பிறிதொரு உயிரினமாக மாற்றிக்கொள்கிறது. -என்பது தான் பரிணாமத்தின் தகவமைப்பு கோட்பாடு.      
 
      ஏனைய உயிரினங்களைப்போல மனிதன் என்ற உயிரினமும் மேற்கண்ட சங்கிலித்தொடர் உயிரின வளர்ச்சியிலேயே இறுதியாக உருவான ஒரு உயிரினம் என்பதும் பரிணாமம் எடுத்து வைக்கும் வாதம்.
   ஒரு உயிரிலிருந்து மேற்கண்ட அடிப்படையில் பிறிதொரு உயிரினம் உருவாவதென்றால் அதன் முந்தைய நிலையில் இருக்கும் உயிரின் அனைத்து சிறப்பியல் கூறுகளையும் மாற்றமடையும் உயிரி இயல்பாகவே பெற்று இருக்க வேண்டும்.

        எந்த ஒரு உயிரியும் அதன் முந்தைய நிலையில் இருக்கும் ஏனைய உயிரினங்களின் எந்த ஒரு சிறப்பியல் கூறுகளை தாங்கி உருவாதில்லை என்பதை ஏற்கனவே பார்த்தோம் இனி., உயிர் படைப்பில் உயர் படைப்பாக வர்ணிக்கப்படும் மனிதனின் தோற்றம் குறித்து பரிணாம கோட்பாட்டின் அடிப்படையில் சில இயல்பான சந்தேகங்கள் குறித்து காண்போம்.,

        சங்கிலித்தொடர் வரிசையில் ஏனைய உயிரிகளைப்போல் பரிணாம வளர்ச்சியில் தான் மனிதன் உருவானான் என்றால் இயல்பாகவே ஏனைய உயிரினங்களின் சிறப்பியல்புகளை தாங்கி உருவாகி இருக்கவேண்டும் அஃது உருவாகாதது ஏன்?

உதாரணத்திற்கு, எந்த ஒரு உயிரினமும்


நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன >>> பறப்பன 

போன்ற இயற்பண்புகள் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொண்டிருக்கின்றன என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.இதன் அடிப்படையில் வாழ்வை தொடரும் உயிரினத்தில் இறுதியாக உருவாகும் ஓர் உயிரி மேற்கண்ட பண்புகளை தாங்கி உருவாவது அவசியமாகும். அதுவும் ஒர் அறிவார்ந்த உயிரி மேற்கண்டவற்றை தாங்கி வளர்வது எளிதே.,

     ஆனால் மேற்கண்ட பண்புகளில் நீந்துவன >>> ஊர்வன >>> தாவுவன >>> நடப்பன போன்ற பண்புகளை பெற்று உருவான மனிதன் "பறப்பன" என்ற பறவைகளின் மிக சாதாரண ஒரு பண்பை தாங்கி உருவாகாதது ஏன்? ஏனெனில் உயிரியின் பிரத்தியேக மாற்றத்திற்கு மிக முக்கிய காரணி., அவ்வுயிரியின் சுயதேவை மற்றும் கால சூழல் ஆகும் எனும்போது மனிதன் பறக்கவேண்டும் என்பது அவனது சுயதேவை என்ற நிலையும் தாண்டி... காலகாலமாக அவனது தேடுதலின் அதிகப்பட்ச பேராசையாக இன்றும் ஆழ்மனதில் நிறைவேறாத எண்ணமாக தொடர்கிறது,

      மனிதனால் பறக்கமுடிந்தால் ஏனைய நிலைகளை விட எந்த ஒரு பணியையும் விரைவாகவும், எளிதாகவும் செய்ய முடியும். எனவே பறக்கும் மனிதனால் சாரதாரண நிலையில் இருக்கும் மனிதனை விட அதிக அளவில் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் ஆக செயல் ரீதியான காரணங்களின் உந்துதலால் ஏற்படும் மாற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பரிணாமத்தில், உயிரின வளர்ச்சி விளைவால் இன்னும் மனித உயிரி பறக்க முற்படாதது ஆச்சரியமே.....

இதைத்தவிர தர்க்கரீதியாகவும் பல இடர்பாடுகள் இருக்கிறது பரிணாமம் உருவாக்கிய மனிதனுக்கு..

     மனிதன் என்ற ஒரு உயிரினம் ஏனைய உயிரினங்களைப்போல் இல்லாமல் தனித்தொரு சீராய் ஒழுங்குப்படுத்தப்பட்டு உருவாக்கப்பட்ட படைப்பினமாக காண்கிறோம்.

     அஃதில்லாமல் பரிணாமம் தான் மனிதனை உருவாக்கியது என்றால்... ஏனைய உயிரினங்களைப்போல் ஊண், உறக்கம், பசி, இச்சை, கோபம், வேகம், பாசம் போன்ற ஏனைய வாழ்வியல் பண்புகள் மனிதனுக்கும் பொதுவாக கொண்டாலும் "வெட்கம்" என்ற உயரிய பண்பை எந்த உயிரின் மூலத்திலிருந்து பெற்றான்..? பொதுவாக உலகில் பல்வேறு பகுதியில் வாழவேண்டி இருந்ததால் மனிதன் கால சூழலுக்கு தகுந்தாற்போல் ஆடை அணிய கற்றுக்கொண்டான் என்றாலும் அஃது தங்களின் வெட்கத்தலங்கள் மறைக்கப்படவேண்டியவைகள் என்பதை எந்த பரிணாம மூலத்தில் கற்றுக்கொண்டான்.


 ஏனெனில் உயிரின மாற்றத்தின் விளைவாக உணவு, பாதுகாப்பு போன்ற வாழ்வாதார தேவையை மட்டுமே கண்டறிந்து அதற்கான செய்கைகளை 
வேண்டுமானால் அதிகப்படுத்த முடியுமே தவிர உயிர் வாழ தொடர்பே இல்லாத வெட்கம் என்ற பண்பை கற்ற வேண்டியது அவசியமே இல்லை. ஆனால் மனிதனுக்கு மட்டும் அத்தகைய பிரத்தியேக பண்பு உண்டானது எப்படி?

    இன்றும், நாம் சர்வ சாதாரணமாக பார்க்கிறோம், கால்நடைகளில் குட்டியே தன் தாயோடு கூடுவதை காண்கிறோம். மேலும் உடல் உறவில் எந்த ஒரு ஒழுக்க நெறியையும் அவை பின்பற்றுவதில்லை.

   ஆனால்., மனித உயிரி., தாய் (தகப்பன்)- சகோதரி(சகோதரன்) - மகள்(மகன்) - என்று தரம் பிரித்து மனைவியோடு (கணவனோடு) மட்டுமே கூடும் அசாத்திய ஒழுக்க மாண்பை எங்கிருந்து பெற்றது... எந்த பரிணாம உயிரியின் இயல்புகள் மனிதனுக்கு அத்தகைய சிறப்பை வழங்கியது?
  
அத்தோடு மட்டுமில்லாமல்., மனைவி/ கணவன் தவிர்த்து மாற்றாருடன் கூடுவது தவறு என்ற உயிரிய பண்பையும் எந்த பரிணாம உயிரின வளர்ச்சியில் கற்றுக்கொண்டான்...?

     ஆக மனிதன் பிரத்தியேகமாக திட்டமிடப்பட்டு ஒழுக்க நெறி முறைகளின் படி வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான தனியானதொரு படைப்பு என்பது தெளிவு! இதை தாண்டியும் உயிரின வளர்ச்சியின் விளைவாக குரங்கினம் >>>> நியண்டர்தால் >>> மனிதன் உருவானதாக சொன்னால் எதிர்ப்பார்ப்போம்.. மேற்குறிப்பிடப்பட்ட வினாவிற்கு பதில் தருமா பரிணாமம்...?

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார். அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்;. ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கும் எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை. அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (திருக்குர்-ஆன் 04:170)
                                            
                                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "பரிணாமத்தில் மனிதன்..?"

Friday, December 10, 2010

தூயோனின் தூதரகம்..!

படைத்தவனை வணங்குவதற்காக
படைப்பினங்கள் ஒன்றுகூடும்
பயிற்சி பாசறை!

அல்லாஹ்வின் பெயர்தனை - 
ஐவேளை தினம் கூறி 
அனைவரையும் வரவேற்கும் 
அருளால் அலங்கரிக்கப்பட்ட
ஆன்மிக ஆபரணம்... 

இபாதத்தோடு இணக்கத்தையும்
சலாத்தோடு சகிப்புத்தன்மையும்
மனித மனங்களில்
இறுகக் கட்டும்
இறைவனின் இல்லம்...!

இங்கு, 
தீண்டாமையையும்
தீண்டுவோர் இல்லை
மொத்த உலகமும் பேசி தீர்க்க யோசிக்க
தம் மௌனத்தால் சாதித்தது 
மறை ஓதும் மாளிகை.

ஏற்றத்தாழ்வுகள்
எங்கே? - என
எவரையும்
கேட்க வைக்கும்
இஸ்லாத்தின் அத்தாட்சி.,

ஆள்பவனும் -ஆமோதிப்பவனும்
பணம் கொண்டவனும்
தினம் உழைப்பவனும்
வாழ்வில் தேரியவனும்
வாழ்வை தேடுபவனும்
ஆகாய விமான ஓட்டியும்
அன்றாட காட்சியும்...
அருகருகே தொழ வைக்கிறது  - 
தூர தேசத்திலும்...
சகோதரத்துவத்தை எழ செய்கிறது

வணக்கத்தோடு
வாழ்வியல் வெற்றிக்கும்
வழிக்காட்டும்
வசந்தங்களின் கூடாரம்

மார்க்கத்தை முன்னிருத்தி
மற்றவை பிற -என
மனித நல்லெண்ணங்களுக்கு
மாசற்ற வர்ணம் பூசும்
மனிதநேய ஆலயம்

அல்லும் -பகலும்
அனைத்துக்காகவும்
அலைந்து திரியும்
அற்ப மனிதர்களுக்கு
அல்லாஹ்வின் நினைவை
அதிகம் ஊட்டி
அழகிய ஆதாயத்தை
அன்றாடம் தரும்
அருளாளனின் சின்னம்..!

உள்ளே ஏதுமில்லையென்றாலும்
வெளியே வரும்போது
மனது நிறைய
நம்பிக்கையும், நன்மைகளையும்
கொடுக்கும் 
தூயோனின் தூதரகம்..!

சமுகத்தில் ஓரு சிலரை
முன்னிலைப்படுத்தும்
அரங்கங்களுக்கு மத்தியில்
ஓர் சமுகத்தையே
கண்ணியப்படுத்தும்
கருணை தளம்...

வல்லோன் சொல் கேட்டு
வாக்களித்ததை நிறைவேற்ற..
விரையும் எவருக்கும்
வரையறையற்ற 
இலாபத்தினை மட்டுமே தரும் 
வாழ்வியல் வர்த்தக மையம்...



read more "தூயோனின் தூதரகம்..!"

Thursday, December 02, 2010

விதி! மாற்றமா -ஏமாற்றமா?

                                                ஓரிறையின் நற்பெயரால்

           அனைத்தும் விதிப்படி தான் நடக்கிறது என்றால் நாம் செய்யும் எந்த ஒரு செயலுக்கும் பொறுப்புதாரி கடவுளே எனவே நாம் செய்யும் தவறும் இறைவனின் விதிப்படி தானே நடக்கிறது பிறகேன் அதற்கான தண்டனையை கடவுள் நமக்கு வழங்க வேண்டும் ..
   நியாயமாக தெரியும் இக்கேள்விக்குள் அனேக சுயநலங்கள் அநியாயமாய் பகுத்தறிவு போர்வை போர்த்திருக்கின்றன.,

இப்னு மாஜா ஹதிஸ் நூலிலிருந்து
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் வாயிலாக
"உங்களுக்கு முன்னால் உள்ள சமுகங்கள் அழிந்தது விதியே குறித்து அதிகம் தர்க்கம் செய்த காரணத்தினாலே....!"


  என்ற மாநபி கூற்றுகிணங்க விதி குறித்து மேலதிக தர்க்கம் செய்யாமல் மாமறை வரிகளுக்கு உட்பட்டு இங்கு காண்போம்.
                                                                                    
     பொதுவாக அனைத்து செயல்களும் இறைவனின் நாட்டப்படித்தான் நடக்கிறதென்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. இங்கு விதி குறித்த இக்கருத்து அல்லாஹ்வின் பேராற்றலை பிரதிபலிக்கும் வல்லமையின் வெளிபாடாக சொல்லப்படுகிறது அதாவது இப்பூவியில் இருக்கும் எந்த ஒரு உயிரினத்தின் செயல்பாடுகளும் அவன் அறியாமல் நடந்தேறாது.

(நபியே!) நீர் கூறும்; "உங்கள் உள்ளத்திலுள்ளதை நீங்கள் மறைத்தாலும், அல்லது அதை வெளிப்படையாகத் தெரியப்படுத்தினாலும் அதை அல்லாஹ் நன்கறிகின்றான்;. இன்னும், வானங்களில் உள்ளதையும், பூமியில் உள்ளதையும் அவன் நன்கறிகின்றான்;. அல்லாஹ் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன் ஆவான்." 3:29

     எனினும் தர்க்கரீதியாக விதிக்கு கடவுளை காரணம் காட்டி தமது தீய செயலுக்கு நியாயம் கற்பிப்பது பொருத்தமான வாதமா?

     அல்லாஹ் மனித இனத்திற்கு ஏனைய படைப்புகளை போலல்லாமல் எந்த ஒரு செயலையும் சிந்தித்து செயல்படுத்ததும் திறனுடன் படைத்திருக்கிறான். ஆக எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒருவன் தனது சிந்தனைக்கு உட்பட்டு இது தவறு இது சரி என தெளிவாக ஆராய்ந்து முடிவெடுக்க முடியும்.

    இன்று விதியின் மேல் பழிபோடும் ஒரு இறை நிராகரிப்பாளர் இறைவன் நாடியதால் தான் நான் இறை நிராகரிப்பாளான இருக்கிறேன் என்று கூறுவாரேயானால் அது அவர் இறை குறித்து தனது சிந்தனையை ஆராய முற்படாததே தவிர இறைவன் காரணமல்ல.
 
     ஏனெனில் அஃது அவரது வீட்டில் திருட்டோ அல்லது அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டாலோ இதுவும் இறைவன் நாட்டப்படி (விதிப்படி) தான் நடக்கிறது என்று சும்மா உட்கார மாட்டார் அதை தொடர்ந்த ஆயத்த பணிகளை செய்து தான் தீருவார்,  அஃதில்லாமல் தமது வாழ்வாதார  தேவைக்கும், அதிகப்படியான பொருளாதார தேவைக்கும் நாமே முயன்று தேடித்தேடி நல்லவற்றை பெற முயலும் ஒருவர் இறைக்குறித்தும் அவனது போதனை குறித்தும் அறிய முற்படாமல் அவனது நாட்டத்தால் தானே நான் இறைவன் குறித்து அறியாமல் இருக்கிறேன் என்று கூறுவது அறிவுடைய வாதமா?

      இறுதியாக, அனைத்து நிலைகளிலும் இறைவன் தான் மக்களின் அனைத்து காரியங்களுக்கும் முழு முதற் பொறுப்பு என்று கூறி தீமையான செயல்களுக்கு விதி மூல(லா)ம் பூச முற்பட்டால் அதே இறைவன் தான் மனிதர்கள் எல்லா நிலையிலும் நல்லனவற்றை பின்பற்றி வாழ அந்தந்த கால கட்டத்தில் இறைத்தூதர்களை மக்கள் மத்தியில் அனுப்பியும் வைத்தான்.
 
        அவர்களை பின்பற்ற வேண்டியதும் இறைவனின் நாட்டம் தானே அவர்களை பின்பற்ற தவறியது ஏனோ...? நாத்திகம் வளர்க்கும் பகுத்தறிவின் பதில் என்ன?

ஏனெனில் வேத வரிகள் மனித மனங்களைப்பற்றி கூறும் போது


எந்தவொரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்ந்து கொள்ள வேண்டியவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழி கெடுப்பவனாக இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.9:115

    முடிவுற்ற ஒரு செயல் நமக்கு பாதகமாக அமைந்தாலோ அல்லது நன்கு முயற்சித்து மேற்கொண்ட ஒரு செயலின் விளைவு தோல்வியில் முடிந்தாலோ அங்கே விதி என்னும் அளவுகோலை அல்லாஹ் பயன்படுத்த சொல்கிறான்.,

     ஏனெனில் அவற்றின் மூலம் நாம் படிப்பினை பெறவும் நம்மை நாமே தாழ்வு மனப்பான்மையில் ஆளாக்கி கொள்ளமாலும் இருக்க செய்வதற்கே; அதுப்போல நாம் ஒரு திறன் மிக்க செயலை மேற்கொண்டு கிடைக்கும் புகழ், பொருள் மூலம் நாம் (அதிகம்) கர்வமடையாமல் இருக்கவுமே எல்லாம் இறை நாட்டம் எனும் விதி அங்கு அவசியமாகிறது.,

உங்களை விட்டுத் தவறிப்போன ஒன்றின் மீது நீங்கள் துக்கப்படாமல் இருக்கவும், அவன் உங்களுக்கு அளித்தவற்றின் மீது நீங்கள் (அதிகம்) மகிழாதிருக்கவும் (இதனை உங்களுக்கு அல்லாஹ் அறிவிக்கிறான்); கர்வமுடையவர்கள், தற்பெருமை உடையவர்கள் எவரையும் அல்லாஹ் நேசிப்பதில்லை. -57:23

    ஆக விதி என்பது இறைவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு நாம் மேற்கொள்ளவேண்டியவைகளை தொடர்ந்து செயலாற்றி தான் வரவேண்டுமென்ற நிலையில் அமைந்ததே  தவிர மாறாக விதிப்படித்தான் எல்லாம் நடக்குமென்று எண்ணி வெறுமனே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்குமாறு எங்கேணும் இறைவன் கூறவில்லை., ஏனெனில்


    ...மனிதனுக்கு அவன் முயல்வதல்லாமல் வேறில்லை. 53:39
                        
                                       அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "விதி! மாற்றமா -ஏமாற்றமா?"

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்