"கடவுளால் தான் எல்லாம் முடியும் என்று சொல்லவில்லை. கடவுள் இல்லையேல் எதுவும் முடியாது என்று தான் சொல்கிறேன்.."

Friday, September 20, 2013

வாக்களிப்பட்ட நன்மைகள்..!

எவனால் மட்டும் இவ்வுலகை இயக்க முடியுமோ அவனை மட்டும் வணங்கி...

மனித உற்பத்தி மண்ணில் தொடங்கும் நாள் முதலே விண்ணில் விதைக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம். அது இவ்வுலகத்தில் தமது கொள்கைக்கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தி ஓரிறையை வணங்க சொல்லியது. அதில் மட்டுமே ஈடேற்றமும் உண்டெண்கிறது. அவ்வாறு எடுத்துயம்பிய ஏகத்துவ பட்டியலில் இறுதியாக வந்த வேதமான திருக்குர்-ஆன் ஒரு தெளிவான பிரகடனத்தை மனித சமூகத்தில் முன்மொழிகிறது.

இஸ்லாம் மட்டுமே இறைவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம். (5:3) இப்படி முன்மொழிந்தாலும் தம்மை பின்பற்றுதல் குறித்து இரண்டு வாய்ப்புகளை இந்த மனித சமூதாயத்திற்கு வழங்குகிறது. (இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை; வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது; (2:256) ஆக ஒருவர் விரும்பாவிட்டால் இந்த மார்க்கத்தை முற்றிலும் புறக்கணிக்கலாம். ஆனால் ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் (2:208) என சந்தர்ப்ப வாத காலங்களில் மட்டும் ஒருவன் மார்க்கத்தை பின்பற்றாமல் ல்லா தருணங்களிலும், ஏன் இறுதி வரை தம்மை பின்பற்றியே ஆக வேண்டும் என பணிக்கிறது.

இஸ்லாம் கூறும் விசயங்களில் நூறு சதவீகிதம் உடன்பட்டால் மட்டுமே முழு முஸ்லிமாக ஒருவன் ஆக முடியும் எனும் நிலையில் இஸ்லாத்தின் மீதான கொள்கை உறுதிப்பாட்டில் நாம் இன்று எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை அலசவே இக்கட்டுரை.

பொதுவாக மகிழ்ச்சியும், சந்தோசமும் நிறைந்திருக்கும் பொழுதுகளில் இஸ்லாத்தின் மீதானப்பிடிப்பு நமக்கு குறைவதில்லை. மாறாக துன்பமோ, இழப்போ நமக்கு ஏற்படுமாயின் இறைவன் மீதான அதிருப்தி இயல்பாக ஏற்படுகிறது. இதற்கு அடிப்படை காரணம் இஸ்லாம் குறித்த போதிய அறிவின்மை. அல்லது பெயரளவிற்கே நாம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம்- இதுதான் ஆச்சரியமான உண்மையும் கூட! இவ்வுலகில் ஒருவர் நல்லவராகவோ தீயவராகவோ இருப்பீனும் இறைவனின் கருணை பொதுவாக உண்டு. அதே நேரத்தில் இஸ்லாத்தை ஒருவர் நன்முறையில் பின்பற்றினால் அவருக்கு நன்மை உண்டு என கூறும் இஸ்லாம் அவருக்கு தீமையை ஏற்படாது என கூறவில்லை.

 ஏனெனில் நமது அமல்களுக்கு தகுந்தார்ப்போல் வெகுமதி இவ்வுலகில் தரப்பட வேண்டும் என விரும்புகிறோம். ஐவேளை தொழுகிறேன், கடமையான, உபரியான நோன்புகளை நோற்கிறேன். சதாகவும், ஜக்காத்தும் கொடுக்கிறேன். ஹஜ்ஜூம் செய்கிறேன், ஹலால்-ஹராம் பேணுகிறேன். யாருக்கும் எந்த கெடுதலும் செய்வதில்லை. இருந்தாலும் எனக்கு இப்படி ஆகி விட்டதே, வேண்டியது கிடைக்கவில்லையே .. என மனவேதனைக்கு ஆட்பட்டு நமது இழப்பியல் தாரசில் இறைவனின் கருணையை எடை போடுகிறோம்.இங்கு ஒரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும். எவ்வளவு தூயவராக இருப்பீனும் இறைவனின் சோதனை இவ்வுலகில் நிச்சயம் உண்டு. இதனை மறைமொழி இப்படி இயம்புகிறது.

நாங்கள் ஈமான் கொண்டிருக்கின்றோம்என்று கூறுவதனால் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று மனிதர்கள் எண்ணிக் கொண்டார்களா? " ( 29 | 2)
சுஃப்ஹானல்லாஹ்..! இந்த வரிகளில்தான் எத்தனை எத்தனை படிப்பினை.


ஒரு மனிதனின் உறுதிப்பாடு எப்போது குறையுமென்றால் வேதனைகளும்- சோதனைகளும் தொடரும் போதே... ஆனால் ஒரு முஸ்லிம் கொள்கையில் பிடிப்போடு இருந்தால் அவனுக்கான சோதனைகள் ஏற்படும் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் வெற்றியடைய நன்மையான காரியங்கள் செய்தால் மட்டும் போதாது. தீமையான காரியங்களிலிருந்தும் தவீர்ந்திருக்க வேண்டும். நமக்கு எதிராய் சோதனைகள் நிறையும் போதே அதை சரிக்கட்ட தீமையான காரியங்கள் செய்ய இயல்பாகவே மனித மனம் நாடும். அதையும் தாண்டி அவற்றிலிருந்து விலகி நிற்கிறோமா? என்பதை உணர தான் நமது கொள்கையில் உறுதி அவசியம்!

எந்த அளவிற்கு நாம் கொள்கையில் பிடிப்புடன் இருக்கின்றமோ அந்த அளவிற்கே சோதனையின் தாக்கமும் இருக்கும். உதாரணமாக மார்க்கம் மதுவை தடை செய்திருக்கிறது. இருந்தும் சைத்தானின் தூண்டுதலால் ஒருவர் குடிப்பாரேயானால் இறை சோதனையில் அவர் அப்போதே தோல்வியை தழுவுகிறார். முதல் கட்டத்திலே தோல்வியை தழுவும் போது அடுத்தக்கட்ட சோதனைக்கு செல்ல அவருக்கு தகுதியும், அவசியமும் இல்லை. மாறாக அதிலும் ஒருவர் வெற்றி பெறுகிறார் என்றால் பிறரோடு தொடர்பு, பழக்க வழக்கங்கள், பணம், சொத்து, குடும்பம், வர்த்தகம், சமூகம் இப்படி அடுத்தடுத்த பங்களிப்பில் சோதனைகளுக்கு ஆட்கொள்ளப்படுவார். அனைத்திலும் வெற்றியடையும் போதே இறைவனின் அருட்கொடை அவர் மீது நிரப்பமாய் அருளப்படும்.  

கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்ததாலே இறைவனின் அருட்கொடை மூலம்..

இப்ராஹீம் நபியை நெருப்பு கரிக்கவில்லை
மூஸா நபியை கடல் மூழ்கடிக்கவில்லை
இஸ்மாயில் நபியை கத்தி அறுக்கவில்லை..


இன்னும் இதைப்போன்ற அற்புத சம்பவங்கள் தான் வரலாற்றில் எத்தனை எத்தனை...

அந்த உறுதிப்பாட்டை நிதர்சனமாய் உணர்ந்ததாலோ என்னவோ., பெருமானாரின் பயிற்சி பாசறையில் பாடம் பயின்ற சஹாபா பெருமக்களின் கொள்கையில் தான் எவ்வளவு பிடிப்பு. வெறும் ஆறு, ஏழு வசனங்கள் இறங்கிய காலத்தின் போதே கொண்ட கொள்கைக்காக தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயீர் ஈந்தவரும் உண்டு, தனது இயலாமையால் சுடுமணலில் கிடத்தப்பட்டு பாறாங்கற்களை நெஞ்சில் சுமந்தவரும் உண்டு. 

கழுமரங்களும்,, கொதிக்கும் எண்ணெய் கொப்பரைகளும் அந்த மக்களுக்கு சிறிதும் பயத்தையோ, கலக்கத்தையோ ஏற்படுத்தவில்லை. எதற்காகவும். யாருக்காகவும் தான் கொண்ட கொள்கையில் எவ்வித தளர்வோ, சமரசமோ செய்ய முன்வரவில்லை தங்களின் கொள்கையில் நிலைத்திருக்க தம் இன்னுயிரையும் பகரமாக்கிக்கொண்டார்கள் அந்த மேன்மக்கள்..

 ஆராயிரத்துக்கும் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு மார்க்கம் முழுமையாக்கப்பட்டு எந்தவித இன்னலும் இடைஞ்சலும் இல்லா எளிய முறையில் நம்மிடம் வந்த பிறகும் நமது கொள்கைப்பிடிப்பு எந்தளவிற்கு இருக்கிறது? ஒவ்வொருவரும் மனதில் கை வைத்து யோசிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்... இறைவனிடம் எதற்காகவும் முறையிடும் நாம் அதற்கு முன் நம் தரப்பில் அவனுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்து விட்டோமா..? என்பதை ஒரு கணம் சிந்திக்க வேண்டும். 

தினம் ஐவேளை என்ற நிலை போய் வாரம் இரண்டு ரக்அத் மட்டுமே தொழுகையை கடமையாக்கிக்கொண்டோர் நம்மில் பலர், ஆறு நாட்கள் வளர்ந்திருக்கும் சின்னஞ்சிறிய தாடியையும் ஏழாம் நாள் ஸ்பெஷல் சேவிங் செய்து சுன்னத்துக்கு அங்கே ஒரு நாள் விடுப்பு அளிக்கிறோம். எவ்வித நிர்பந்தமும் இல்லாமலே நாம் பர்ளையும், சுன்னத்தையும் புறக்கணிக்கிறோமென்றால் வரும் காலங்களில் இஸ்லாத்தை பின்பற்றுவதற்கு ஏதும் எதிர்ப்பு வந்தால் அப்போது நம் நிலை...

எண்ணிக்கையில் இருக்கின்றோம் முஸ்லிகளாக.. எண்ணத்தில் வாழ்கின்றோமா.. ? நிச்சயமாய் சுயபரிசோதனைக்கு நம்மை தயார்படுத்தி கொள்ளும் தருணம் இது! சகோஸ்

ஏசி காற்றில் கால்மேல் கால் போட்டு குஷன் நாற்காலியில் அமர்ந்து நம் வீட்டு வரவேற்பறைக்கே நொடிப்பொழுதில் மார்க்கம் குறித்து அனைத்து விசயங்களையும் வர செய்தும் அதை அடுத்தவருக்கு சொல்ல மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருக்கின்றோம். எழுதுவதால், படிப்பதால் அடுத்தவருக்கு பரப்புவதால் ஏற்படும் நன்மைகளை விட மார்க்கத்தை செயல் ரீதியில் பின்பற்றும் போதே நாம் எதிர்ப்பார்த்த பலனை அடைந்துக்கொள்ள முடியும்.

.ஏனெனில்...
இறைவனால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம்
முஸ்லிமாக பிறப்பதால் மட்டும் ஒருவருக்கு தீர்மானிக்கப்படுவதில்லை..
முஸ்லிமாக இறப்பவர்க்கே தீர்மானிக்கப்படுகிறது.
முஸ்லிமாக இறக்க வேண்டுமென்றால்
முஸ்லிமாக வாழ வேண்டும்...
அது கொள்கையில் உறுதியாக இருந்தால் மட்டுமே சாத்தியம்!

                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "வாக்களிப்பட்ட நன்மைகள்..!"

Friday, April 12, 2013

உடையும் பகுத்தறிவு..!


                                      ஓரிறையின் நற்பெயரால்

பகுத்தறிவு என்றாலே நம் சிந்தைக்கு முதலில் வருவது நாத்திகமும்- அதை பின்பற்றுபவர்களும் தான்.. அப்படியான ஒரு தோற்றதை தான் இந்த சமூகம் பொதுவெளியில் ஏற்படுத்தி வைத்திருக்கிறது. முதலில் பகுத்தறிவு என்பதோடு, நாத்திகத்தின் அடிப்படை கோட்பாடுகள் (?) எந்த விதத்தில் உடன்படுகிறது என்பதை கொஞ்சம் அலசுவோம்

பகுத்தறிவு எனப்படுவது  நிகழ்வுகளின் அல்லது கருத்துக்களின் கூறுகளை ஆராய்ந்து அவற்றின் இயல்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான நிருபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைப்பது ஆகும். சுருக்கமாக கூறினால் பகுத்தறிவின் நோக்கம் மெய்ப்பொருளை அல்லது உண்மையக் கண்டறிவதே.

நாத்திகம் (Atheism) என்பது கடவுள் இல்லை என்ற நிலைப்பாடு, கடவுள் பற்றிய எத்தகைய நம்பிக்கையும் இல்லாமல் இருத்தல் அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் மறுக்கும் கொள்கை.  

பகுத்தறிவு மற்றும் நாத்திகம் இவை இரண்டிற்கும் விக்கி பீடியா கொடுக்கும் வரைவிலக்கணம் இவை. ஆனால் மேற்கண்ட இரண்டு செயல்முறைகளும் முற்றிலும் தொடர்பற்றவை. அப்படியிருக்க இன்று பகுத்தறிவாதிகள் என சமூகத்தில் நாத்திகர்கள் அடையாளப்படுத்தப் பட்டதற்கு என்ன காரணம்..?

தொடர்வோம்.

நாத்திகர்களின் பிரதான கொள்கை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஒரே கொள்கை "கடவுள் மறுப்பு" ஒன்றே. கடவுளை மறுக்க ஆரம்பத்தில் அவர்கள் கையாண்ட வழிமுறைகள் * கடவுளின் பெயரால் சமூகத்தில் வர்த்தகரீதியான பிளவு, * கடவுளின் பெயரால் தேவையற்ற சடங்கு, சம்பிரதாயங்கள், * அறிவுக்கு ஒத்து வராத மூட பழக்க வழக்கங்கள்.

இவற்றை நன்கு கவனித்தால் ஒரு குறிப்பிட மதம் கொண்ட கொள்கைக்கு எதிர்ப்பாக மட்டுமே பொருள் கொள்ள முடியும். ஏனெனில் உலக அளவில் பெரும்பாலானோர் பின்பற்றும் கொள்கையை எதிர்ப்பதாக இருந்தால் அந்த கொள்கைகள் கூறும் அனைத்து விசயங்களையும் எதிர்க்க தன்னிடம் ஆணித்தரமான ஆதாரங்களை வைத்திருக்க வேண்டும். வரையறைகளை தன்னிடம் தெளிவாக வைத்திருக்காத மதங்கள் கூற்றை எதிர்த்தே தன்னை இந்த மண்ணில் நாத்திகம்  நிலை  நிறுத்திக்கொள்ள முயல்கிறது.

 ஆனால் இஸ்லாம் தனது கோட்பாடுகளை முன்வைத்து, கடவுள் குறித்த அனுமானங்கள், கடவுளின் பெயரால் மூட பழக்க வழக்கங்கள், கடவுளுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை கூடாது என தெளிவாக பிரகடனப்படுத்திய பிறகு நாத்திகம் தனது எதிர்ப்பை இஸ்லாத்திலும் நுழைக்க, மேற்கண்ட பட்டியலோடு தற்காலத்தில் அறிவியலையும் கடவுளை மறுக்க துணைக்கு அழைக்கிறது.

ஆகவே தான் நாத்திகம் எங்கே தனது உரையாடலை தொடங்கினாலும் கடவுள் மறுப்பு, கடவுள் இருப்பு என்ற வட்டத்தில் மட்டுமே நின்று விவாதித்துக்கொண்டிருக்கிறது. அதிலும் எதிரில் இஸ்லாம் இருந்தால் உடனே இஸ்லாமிய சட்டத்துக்குள்ளும் தம் கிளை கேள்விகளை தொடர்கிறது. இதை தான் இன்று வரையிலும் நேரடியாகவும், இணைத்திலும் கண்டு வருகிறோம்.

அதே நேரத்தில் தம் கொள்கைகளை விவரித்து, அவை மட்டுமே இந்த சமூகத்தின் நடைமுறை வாழ்வுக்கு உயர்ந்த வழியென்றும், சிறந்த வழியென்றும் எங்கேயும், எப்போதும் எடுத்து கூறி மக்களை தம் பால் அழைப்பதில்லை. மாறாக கடவுள் மறுப்பை மட்டுமே கொள்கையாக வைத்துக்கொண்டு அதையை இச்சமூகத்தில் ஒரு பிரதான ஆயுதமாக்கி தம் இருப்பை தக்கவைத்து கொண்டிருக்கிறது.


   தனக்கென பிரத்தியேகமான கொள்கை கோட்பாடுகள் இல்லாமல் எதிர்ப்பு என்ற ஒற்றை அணுகுமுறையை வைத்திருக்கும் ஒன்றை எப்படி அறிவார்ந்த பேரியக்கம் என்பதாக ஏற்றுக்கொள்ள முடியும்? இன்றைய சமூக சூழலில் இஸ்லாத்திற்கெதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதுப்போல நாத்திகத்திற்கு எதிராக விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லையே அது ஏன்...? இப்படி ஒரு அறிவார்ந்த கேள்வியும் நாத்திகர்களிடையே உண்டு.

விமர்சனம் ஒன்றின் மீது பதிவு செய்யப்படுவதாக இருந்தால் அதை விமர்சிக்க முற்படும் அளவிற்கு அதன் கொள்கை- கோட்பாடுகள் வெளிப்படையாக நமக்கு முன்மொழியப் பட்டிருக்க வேண்டும். அந்த அடிப்படையில் இன்று இஸ்லாத்தின் கோட்பாடுகள் பதிவு செய்து வைக்கப்பட்டிருப்பதுப் போல நாத்திகம் தனது கொள்கை கோட்பாடுகளை இந்த உலகத்திற்கு தெளிவாக முன் மொழிந்து இருக்கிறதா...? 

இன்னும் சொல்ல போனால் கடவுள் மறுப்பு என்பது தனிமனித வாழ்வில் ஒருவர் மேற்கொள்ளும் ஒரு நிலைப்பாடு அவ்வளவே... மாறாக, அதுக்கொள்கையல்ல... ஒருவர் தன்னை நாத்திகராக இந்த உலகில் நிலை நிறுத்திக்கொள்ள, தம் வாழ்வை தொடர எத்தகைய வாழ்வியல் கோட்பாடுகளை பின்பற்ற வேண்டும்? அதற்கு நாத்திகம் பதில் சொல்லுமா...?

மனித வாழ்வுக்கு ஏற்புடையதல்ல என்று ஒரு கொள்கையை விமர்சித்து அதை பொதுப்படுத்தினால் அதை விட மேலான ஒரு கொள்கையை இவ்வுலகிற்கு அதுவும் எல்லா காலத்திலும், எல்லா மக்களும் பின்பற்றும் வகையில் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.. அப்படி எங்காவது நாத்திகம் தம் கொள்கையை பிரகடனப்படுத்தி இருக்கிறதா...? 

தனக்கென கொள்கையையும் தெளிவான பின்பற்றலும் இல்லாத ஒன்றின் மீது எப்படி விமர்சனங்களை பதிவு செய்ய முடியும்..? அதனால் தான் அதிகமாக நாத்திகத்தின் மீதான விமர்சனங்கள் பதிவு செய்யப்படுவதில்லை. அது மட்டுமில்லை இன்று சமூகத்தில் நாத்திகராக வலம் வருபவர்கள் பெரும்பாலும் தங்களுக்கென்று எந்த பிரத்தியேக வாழ்வியல் நடைமுறைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கவில்லை. இணையத்தில் கூட அஃறிணை பெயர்களோடு தான் உலா வருகிறார்கள். மதம் சார்ந்த குறியீடுகள் தம் மீது விழாமல் இருப்பதற்காக... ஆனால்

பிறப்பு, திருமணம், இறப்பு போன்ற அடிப்படை மனித நிகழ்வுகளில் ஏதாவது ஒரு மதத்தின் அடிப்படையிலேயே தங்களை வழி நடத்திக்கொள்கின்றனர். அப்படி இல்லை என ஒரு நாத்திகர் சொல்வாரானால் பிறப்பு முதல் இறப்பு வரையிலான தனது வாழ்க்கை முறை எந்த கொள்கை அடிப்படையில் அமைந்திருக்கிறது என பொதுவில் கூறப்பட்டும்.

உள்ளூர் முதல் உலக வர்த்த மையம் வரை ஏற்படும் பிரச்சனைகளுக்கு சமூகத்தையும், அச்சமூகம் சார்ந்திருக்கும் மதத்தையும் குறை கூறி முக நூல் பக்கத்திலும், தளங்களிலும் தம் எண்ணங்களுக்கு எழுத்து வர்ணம் அடிக்கும் நாத்திகர்கள், அதற்கான தீர்வாக தாம் கொண்ட கொள்கை என்ன சொல்கிறது.. என்பதை பதிவு செய்தார்களா..? தினம் தினம் நடைமுறை வாழ்வில் நாம் காணும் ஆயிரமாயிரம் பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வு நாத்திக கொள்கையில் (?) மட்டுமே சாத்தியம் என்றாவது பகிரங்கப்படுத்துவார்களா..?

தம் நிலை குறித்து எங்கும் விவாதிக்க முற்படாமல், எதிர் தரப்பை மட்டுமே விமர்சித்து, விவாதிக்க முற்படுவதே நாத்திகத்தின் "லாவக போக்கு". இனி வரும் காலங்களிலாவது நாத்திகர்கள் தங்கள் கொள்கை கோட்பாடுகளை தெளிவாக பிரகடனப்படுத்தட்டும். அது எப்படி மனித வாழ்க்கை முழுவதற்கும் ஏற்புடையது என்பதை விளக்கி கட்டுரை எழுதட்டும். எதிர் கருத்துக்கள் இருந்தால் அதுக்குறித்து விவாதிக்க அழைப்பு விடட்டும். அப்போது உடைந்து போகும், பகுத்தறிவு முலாம் பூசப்பட்ட பானைகள்...

தனிமனித வாழ்வியல் கொள்கைகளையும், சமுகத்திற்கான சமமான கோட்பாடுகளையும் கொண்டிராத நாத்திகத்தை இனியாவது பகுத்தறிவோடு யாரும் முடிச்சிடாதீர்கள். இல்லையேல் பகுத்தறிவு என்பதற்கு அகராதியில் பொருள் மாற்றம் செய்ய வேண்டி வரும்.

தொடர்புடைய ஆக்கம் :
நடைமுறை வாழ்வில் நாத்திகத்தின் 'முரண்பாடு'..!


                                                     அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "உடையும் பகுத்தறிவு..! "

Friday, March 08, 2013

இவர்கள் தான் சஹாபாக்கள்..!

                                   ஓரிறையின் நற்பெயரால் 
"பல வரலாறுகள் மக்கள் மத்தியில் பாடமாய் சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. ஆனால் சிலர் வரலாறுகளே மக்களுக்கு பாடமாய் அமைகின்றன." 

தனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் சிதைக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டம் அது. அநியாயங்கள் நூறு சதவீகித ஆஃபரில் விற்றுக்கொண்டிருந்த  பரப்பரப்பான சூழல். கூடவே இலவச இணைப்பாக அடக்கு முறைகளும். நடக்கும் அவலங்களின் மீது கொண்ட வெறுப்பாலோ என்னவோ சூரியனுக்கே தாகம் எடுக்கும் அளவிற்கு உஷ்ணத்தை அந்த பாலை பெருவெளி வேகமாய் உமிழ்ந்துக்கொண்டிருந்தது

அந்த குரைஷிக்கூட்டத்தாரின் ஆவேச கூச்சலுக்கு மத்தியில் ஒருவர் இழுத்து வரப்படுகிறார். கொல்லப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை  நிறைவேற்றுவதற்காக. மக்காவின் எல்லைக்கு வெளியே கொண்டு வரப்பட்டு தண்டனை தர தயாரான போது "நீ உன் மார்க்கத்தை விட்டு விடுகிறாயா...?" இறுதியாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

இரண்டு ரக்அத்துகள் தொழுதுக்கொள்ள மட்டும் என்னை விடுங்கள். பதில் பொருத்தமற்றும, பொறுமையாகவும் வந்தது. அவர் செய்வதை அறிய அனுமதியும் அளிக்கப்பட்டது. 

அவர் நிதானமாக இரண்டு ரக்அத்துகள் தொழுதார். பிறகு, தன்னை கொல்ல குழுமி இருக்கும் மக்களின் பக்கம் திரும்பி 'நான் மரணத்தைக் கண்டு அஞ்கிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் தொழுகையை இன்னும் அதிகமாக்கியிருப்பேன்" என்று உரக்க கூறினார். பின்னர் அநியாயத்திற்கும் அதிகமாய் துன்புறுத்தப்பட்டு சிலுவையில் அறைந்து கொல்லப்படுகிறார். கொலை செய்வதற்கு அந்த குரைஷிக்கூட்டாதாருக்கு " அவர் ஏற்ற இஸ்லாமே" பிரதான காரணமாக இருந்தது

நபித்தோழர் குபைப் இப்னு அதீ (ரலி) அவர்களின் இறுதி நிமிடங்கள் தான் மேல விவரித்தவை. உதிரத்தால் எழுதப்பட்ட அவரது வாழ்வின் இறுதிப்பக்கங்கள் இப்படி தான் முடிக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால் அதன் பின் நடந்தவைகள் தான் படிப்பினை வாய்ந்தவைகள்

அந்த கூட்டத்தில் இச்சம்பவத்தை உற்று நோக்கிய ஒரு குரைஷி இளைஞரின் இதயத்தில் இஸ்லாம் எனும் விதை மெல்ல வளர தொடங்கியது. கொண்ட கொள்கையில் பிடிப்பு, நிதானம், வீரம், இறைவனுக்காக எதையும் துச்சமாக மதித்தல், என்னிலையிலும் உறுதி இப்படி தம் மரணத்தருவாயில் கூட அனைத்தையும் மிக சரியாக தன் கண் முன்னால் ஒருவர் செயல்படுத்திய விதம் நடு நிலைக்கொண்ட எவர் உள்ளத்தையும் சற்று உரசிப்பார்க்க தானே முற்படும். 

ஆம்! ஒரு சிறந்த மனிதரின் மரணத்தின் படிப்பினை அடுத்து ஒரு சிறந்த மனிதரை உருவாக்க வேண்டும் என்பார்கள். இதோ! குபைப் ரலியல்லாஹ்வின் மரணமும் மிக சிறந்த இன்னொரு மனிதரை உருவாக்கி சென்றது... வாருங்கள் அவரது வரலாற்றையும் சற்று அசைப்போடுவோம்...

                                               ▁▂▃▄
சிரியாவின் ஹிம்ஸ் பகுதியிலிருந்து பிரதிநிதிக்குழு ஒன்று மதீனாவிற்கு வந்திருந்தது. ஆட்சி தலைவர் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு பட்டியலை தந்தது. அது ஹிம்ஸ் பகுதியில் வாழும் வறியவர்களின் பட்டியல். தலை நகரில் இருக்கும் ஜகாத் பொருட்களை வாங்கி செல்வதற்காக வந்த குழு அவர்கள். வந்த அனைவரும் கலிஃபாவின் நம்பிக்கைக்கு உரியவர்கள். 

பட்டியலைப் பார்த்தவரின் பார்வையில் ஒரு குழப்பம் அதில் ஒரு பெயர் விளங்கவில்லை. பளிச்சென கேட்டார் கலிஃபா உமர் 
”யார் இந்த ஸயீத்?" 
"எங்கள் அமீர்" என்றனர். வந்த அனைவரும் அமீருல் மூமினிடம் 
"என்னது, உங்கள் கவர்னர், அமீர் ஏழையா?" என்ற உமர் (ரலி) கேள்வி பல ஆச்சரியத்தை வெளிப்படுத்தியது.

"ஆம்!. அல்லாஹ்வின் மேல் ஆணையாக, பல நாட்கள் அவரது வீட்டு அடுப்புகள் நெருப்பின் வாசத்தை கூட நுகர்ந்ததில்லை" என்று கலிஃபாவின் ஆச்சரியத்திற்கு மேலும் பல ஆச்சரியக்குறிகளை ஏற்படுத்தினர் வந்தவர்கள்.

மாநிலம் ஆளும் கவர்னர் ஏழையா? யோசித்த மறுகணமே அவர்களையும் அறியாமல் அழ தொடங்கினார்கள் கலிஃபா உமர் (ரலி) ! ஆயிரம் தீனார்கள் ஒரு பையில் கட்டி அவர்களிடம் கொடுத்து, "என்னுடைய ஸலாம் அவருக்குத் தெரிவியுங்கள். அமீருல் மூமினின் இந்தப் பணம் கொடுத்தார் என்று ஒப்படையுங்கள். அவரது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்".

அப்பணத்தை கூட அவர் வாங்கவில்லை என்பது வரலாற்றின் இன்னொரு பக்கங்கள் பதிவு செய்து வைத்திருக்கிறது. ஒரு பகுதியின் ஆளுனரின் நிலை கண்டு உமர் ரலி மனம் மட்டுமல்ல நம் மனமும் ஏனோ நிலைகுலைந்து தான் போகின்றன.. 

இவரின் அத்தகைய எளிய வாழ்க்கைக்கு என்ன காரணம்...? இஸ்லாம் தரவிருக்கும் இமாலய சொர்க்கத்திற்கு இவ்வுலக வாழ்க்கையின் ஆடம்பரங்களையும், அத்தியவாசிய தேவை தாண்டிய அனைத்தையும் பகரமாக்கி விட்டார்கள். 

ஹூம்ஸூக்கு கவர்னராக தேர்ந்தெடுக்க உமர் ரலி ஆவல் கொண்ட போது, அவர்கள் உதிர்த்த வார்த்தைகள் இவை:  உமர், கெஞ்சிக் கேட்கிறேன். என்னை உலக விவகாரத்திற்கெல்லாம் நிர்வாகியாக்கி அல்லாஹ்விடம் நஷ்டவாளியாக்கி விடாதீர்கள்".  என்ன மனிதர் இவர்?! பதவி தன்னை தேடிவரும் போது கூட பக்கத்தில் கூட நிற்க அனுமதி வழங்கவில்லை. 

"என்னை கலீஃபா பொறுப்பில் எல்லோரும் சேர்ந்து அமர்த்தி விடுவீர்கள். உலக விவகாரச் சுமையை என் தலையில் வைப்பீர்கள். ஆனால் உதவிக்கு வராமல் கைவிட்டுவிட்டு ஓடுவீர்கள்". என்று உமர் ரலியின் நெருப்பு வார்த்தைகளை கேட்ட பிறகே பொறுப்பில் அமர ஒப்புக்கொண்டவர். அவர் தான் ஸயீத் இப்னு ஆமிர் ரலியல்லாஹ் அவர்கள்.


குபைப் ரலியின் மரணம் வாயிலாக இஸ்லாத்தை அறியும் நோக்கில் புறப்பட்ட இவரது பயணம் ஒரு நேர்மையான, எளிமையான ஆட்சியாளராக இன்று உலகத்திற்கு காட்டியது. உதாரணத்திற்கு தான் இந்த இரு நபித்தோழர்களின் சம்பவங்களும்... இன்னும் ஆயிரமாயிரம் சம்பவங்கள் வரலாற்று பக்கங்களில் வாய்மையுடன் காண கிடைக்கிறது. 

"  பிறந்த குழந்தைகளை உயிருடன் புதைப்பதிலிருந்து, பெண்களை மோகத்திற்காக மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அடிமை மனிதர்களை அஃறிணை உயிர்களாக மட்டுமே எண்ணிக்கொண்டு, கொடுத்தல் வாங்களில் அநீதம் இழைத்துக்கொண்டு, தம்மில் எளியோர்களை தாக்கிக்கொண்டு தனக்கென நிலையான வாழ்வியல் முறைகளற்று இருந்த ஒரு நாடோடி சமூகம் பொன்னெழுத்துக்களில் பதியவேண்டிய வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாக மாறி போனது எவ்வளவு பெரிய  ஆச்சரியம்! "


குலங்களாலும், கோத்திரங்களாலும் இயல்பான மனித வாழ்க்கையிலிருந்து வேறுப்பட்டு கூறுப்பட்டு நின்ற ஒரு சமூகத்தை பின்னாளில் பொருளீட்டலில் நேர்மையாளர்களாகவும், உறவு முறை பேணுதலில் சகிப்பு தன்மை உள்ளவர்களாவும், அளவைகளில் -நீதிகளில் நீதம் பேணக்கூடியவர்களாகவும், தன்னைப்போலவே பிறரையும் எண்ணக்கூடியவர்களாகவும் மாற்றிய பெருமை இஸ்லாத்திற்கும்- அல்லாஹ்வின் தூதரின் அழகிய வாழ்வியலிற்கும் உண்டு.

அல்லாஹ்வும் ,அவனது தூதர் சொல்லும் எந்த ஒரு சொல்லுக்கும் கட்டுப்படுவதோடு மட்டுமில்லாமல், தம் ஒவ்வொரு செயலையும், நடவடிக்கையும் அதற்காகவே அர்ப்பணித்தார்கள். அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தம் நாடு , மனைவி, மக்கள், சொத்து என எல்லாவற்றையும் இழந்து, இறுதியாக தம் உயிரையும் துறந்த மேன் மக்கள் அவர்கள். 

இஸ்லாத்தை ஏற்றதற்காகவே தம் இன உறுப்பில் குத்தப்பட்டு உயிர் நீத்த அன்னை சுமையா ரலியல்லாஹ் அன்ஹா, பரந்த பாலைவெளியில் பாராங்கற்களுக்கு அடியில் கிடத்தப்பட்ட போதும் அஹத்.. அஹத் என்ற ஒற்றை சொல்லை மட்டுமே உயிர் மூச்சாக கொண்ட பிலால் ரலியல்லாஹ் அன்ஹூ போன்றவர்களின் வாழ்வை உற்று நோக்கினால் இஸ்லாம் ஒரு மனிதரின் உள்ளத்தில் ஊடுருவி விட்டால் அது ஏற்படுத்த கூடிய தாக்கத்தின் பிடிப்பை உணரலாம்!

சுய ஒழுக்கத்தோடு, பிறர் நலனில் கொண்ட அக்கறைக்கும் அவர்களிடத்தில் உச்சவரம்பு கிடையாது. பிறருக்கும் ஈயவேண்டுமென்பதற்காகவே தம் சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை ஒதுக்கியவர்கள் அவர்கள். அபுபக்கர் சித்திக், அப்துர்ரஹ்மான் இப்னு அஃவ் (ரலியல்லாஹ் அன்ஹூ) போன்றவர்களின் வாழ்வியல் அதற்கோர் அழகிய சான்று. 

அல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு கட்டளை வந்துவிட்டால் தம் விருப்பு வெறுப்புகளை தூர எறிந்து விடுவார்கள்.
உங்களுக்கு விருப்பமானவற்றை (இறை வழியில்) செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது [ஆல இம்றான்: 92] என்ற குர்ஆன் வசனம் அருளப்பட்ட மறுகணமே பெரும் செல்வந்தரான அபூதல்ஹா (ரலி) அவர்கள் அவருக்கு மிகவும் விருப்பமான செழிப்பான, பயன்மிக்க பைரஹா எனும் ஈச்சந்தோப்பை, தனது உறவினர்கள் மத்தியில் பகிர்ந்தளித்தார்கள். 

மேலும் உஸ்மான் ரலியல்லாஹ் அன்ஹூவோ யூதர்களின் கைவசம் இருந்த கிணற்றை இறை பொருத்ததிற்காக பெரும் தொகை கொடுத்து வாங்கி மதின மக்களுக்கு பொதுவில் சதாகா செய்தார்கள்.


சகோதரத்துவத்திற்கு மார்க்க அகராதியில் பொருள் தேடினால் அங்கே அன்சாரிகள் என்று பதியப் பட்டிருக்கும். பெயரளவிற்கு இல்லாமல் மக்காவை துறந்து வந்த முஹாஜிரீன்களுக்கு தம்மிடம் உள்ள அனைத்திலும் சரிபாதியை கொடுக்க முன்வந்தார்கள் அவர்கள். 

இஸ்லாமிய பாடசாலையில் பெருமானாரிடமிருந்து பயின்றவர்கள் அப்படி செய்து காட்டுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை தான்.! அதனால் தான் நபித்தோழர்கள் இன்றும் வரலாற்று நாயகர்களாக நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார்கள்.

இதைப்போன்ற பக்கங்கள் வரலாறு முழுக்க இன்னும் அதிகமதிகம். ஆனால் பதிவின் நீளம் கருதி முடித்துக்கொள்ள முயல்கிறேன்.  மனித நேயப்பிறவி மாநபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை குறித்து முத்தாய்ப்பாய் இப்படி சொன்னார்கள். 

உங்களில் ஒருவர் உஹுது மலையளவு தங்கத்தைத் செலவு செய்தாலும் (என் தோழர்களான) அவர்கள் (இறை வழியில்) செலவு செய்த இரண்டு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட (அவரின்) அந்த தர்மம் எட்ட முடியாது. என்றார்கள்

அல்லாஹ்வோ தம் மறையில் 
"அவர்களும் அல்லாஹ்வை பொருந்திக்கொண்டார்கள் அவர்களை அல்லாஹ்வும் பொருந்திக்கொண்டான்" (அத்-தௌபா: 100)

அல்லாஹ் அவனது அடிமையாக ஒருவரை ஏற்றுக்கொள்வதே பிறவிப் பலன் அடையக்கூடிய விசயம். ஆனால் அந்த மக்களை  திருப்தியுடன் தான் பொருந்திக்கொண்டதாக அல்லாஹ் கூறுவது எவ்வளவு பெரிய விசயம்...  சிந்தித்துணர கடமைப்பட்டிருக்கிறோம் நாம்.!

ரலியல்லாஹ் அன்ஹூ.. என சஹாபா பெருமக்களின் பெயர்கள் உச்சரிக்கப்படும் போதெல்லாம் ஒரு வித வியப்பும், சிலிர்ப்பும் ஒரு கணம் நம் மனதில் தோன்ற தான் செய்கின்றன... 

                                                      அல்லாஹ் மிக்க அறிந்தவன்

Thanks to :
Bro. Noorudeen,
Sis. Moulavia. M.V. Massiya. B.A (Hons)


Reference :
http://manaruddawa.org/index_files/home.htm
http://www.satyamargam.com/
http://sahaabaakkal.blogspot.com/
read more "இவர்கள் தான் சஹாபாக்கள்..!"

Friday, February 08, 2013

முஸ்லிம்களும் மனிதர்கள் தான்...

                                    ஓரிறையின் நற்பெயரால்

வகுப்பறையில் ஆசிரியர் எதுவும் எழுதப்படாத கரும்பலகையில் ஒரு இடத்தில் மட்டும் புள்ளி வைத்து மாணவர்களை நோக்கி இந்த போர்ட்டில் என்ன தெரிகிறது என கேட்டார்..? உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் ஒரு வெண்புள்ளி தென்படுவதாக கூறினர். சில வினாடிகள் மௌனித்த ஆசிரியர், பார்த்தீர்களா.. இவ்வளவு பெரிய போர்ட்டில் ஒரு சிறுப்புள்ளியை தவிர மற்ற எல்லா இடங்களும் கருப்பாக காட்சியளிக்கிறது.. ஆனால் அவ்வளவு பெரிய பரப்பளவை யாரும் கண்டுக்கொள்ளாமல் சிறிதாய் தென்படும் ஒரு புள்ளியை மட்டும் சொல்கிறீர்களே.... என மாணவர்களின் மாற்று சிந்தனையை தூண்டினார்.

உண்மைதான்..! அந்த மாணவர்களை போல தான் நம்மில் பலர் பல விசயங்களை புரிந்து வைத்திருக்கிறோம். நமக்கு ஆராய அவகாசமில்லாத எந்த செயலையும் அது எதிர்மறையாக இருப்பீனும் கூட இந்த சமூகத்தின் பெரும்பான்மை கூறும் கருத்துகளோடே உடன்படுகிறோம். அப்படியானவைகளில் ஒன்றாய் இன்று இஸ்லாமும்- முஸ்லிம்களும் ஆகி போனது தான் நாம் கவனிக்க தவறிய ஒன்று!

முஸ்லிம் என்ற ஒற்றை சொல் தொடர்புடைய எந்த செயலாக இருப்பீனும் அச்செயலின் முடிவில் இன்று இஸ்லாம் விமர்சிக்கப்படுகிறது. பொதுவெளியில் இந்த சமூகத்திற்கு முஸ்லிம்கள் எதிரானவர்களென மேற்கத்திய ஊடகங்களால் செய்யப்படும் பொய் பிரச்சாரமே இதற்கு தலையாய காரணமென்றால் அது மிகையில்லை. அதனை வெற்றிக்கரமாக இச்மூகத்தில் செயல்படுத்திய காரணத்தால் தான் இன்று ஓசாமாவும், தாலிபான்களும் இஸ்லாத்தின் அடையாளமாக வைத்து விமர்சிக்கப்படுவதோடு தாடிகளும், தொப்பிகளும் தீவிரவாதத்தின் அடையாளமாக்கப்படுகிறது.

இந்த கரும்பலகை உதாரண புரிதல் இன்று தமிழத்திலும் ஊடுருவி விட்டது என எண்ணும் போது இந்த கட்டுரைக்கு அவசியமே ஏற்பட்டது. சரி இனி கட்டுரை உள்ளே பயணிப்போம்.

இஸ்லாத்தை விமர்சிப்பது தப்பில்லை. பொதுவில் வலம் வரும் எதன் மீதும் விமர்சனம் எழுவது இயல்பு தான். அதனடிப்படையில் இஸ்லாத்தை விமர்சிப்பது ஏற்புடையது தான். ஆனால் ஒன்றை விமர்சிக்கும் முன் அதனை அறிந்து விமர்சிப்பதே முறை... இன்று இஸ்லாத்தை விமர்சிக்கும் எவருக்கும் குறைந்த பட்சம் இஸ்லாம் என்றால் என்ன, அது மனித குலத்திற்கு என்ன சொல்கிறது என்பதை கூட தெளிவாக வரையறை செய்ய தெரியாது. பொது புரிதலில் ஊடகங்கள் கொடுக்கும் தவறான சுட்டிகளை வைத்துக்கொண்டோ, அல்லது தனது சுய புரிதலில் விளங்கி வைத்திருக்கும் ஒரு சில செய்திகளை வைத்துக்கொண்டோ எதிர் மறை கண்ணோட்டத்தில் விமர்சிக்கிறார்கள்.

உதாரணத்திற்கு, தீவிரவாதத்தை இஸ்லாம் அங்கீகரிப்பதாய் சொல்பவர்களிடம் ஆதாரம் கேட்டால், முஸ்லிம் பெயர் கொண்ட தீவிரவாத அமைப்புகளின் பக்கம் கையே நீட்டி தம் சான்றை நிறுவ பார்க்கிறார்கள். இதுவா ஒன்றை உண்மைப்படுத்த எடுக்கும் அளவுகோல்...?

 இஸ்லாத்தை நீங்கள் குறைப்படுத்த வேண்டுமானால் அதற்கு குர்-ஆன் மற்றும் நபிகளாரின் வாழ்வு இவை இரண்டில் மட்டுமே ஆதாரங்களை எடுத்து முன் வைத்து குற்றம் சுமத்த வேண்டும். ஏனெனில் இவை தான்... இவை மட்டும் தான் இஸ்லாம். குர்-ஆனோ அல்லது நபிகளாரோ (அப்பாவி) மனிதர்களை கொல்லுங்கள் என்று கட்டளையிட்டிருந்தால் தீவிரவாதத்தை இஸ்லாத்தோடு முடிச்சிடுவதற்கு நியாயமான காரணங்களும் இருக்கின்றன, இஸ்லாத்தை குற்றப்படுத்துவது நூற்றுக்கு நூறு உண்மையானதும் கூட எனலாம். ஆனால்...

வீணாய் ஒருவனை கொல்வது ஒட்டுமொத்த சமூகத்தையும் கொல்வதற்கு சமமானது. (5:32 ) என தனி மனித உயிருக்கே இவ்வளவு முக்கியத்துவம் இஸ்லாம் கொடுத்து சொல்லியிருக்கும் போது இஸ்லாம் சொன்னதால் தான் அப்பாவி மக்களை கொலை செய்கிறோம் என ஒருவனோ / ஒரு குழுவோ சொன்னால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்...? குறைந்த பட்சம் அதை ஏற்பது என்பது அறிவுடைமையா...? சிந்திக்க வேண்டும் சகோஸ்...

இஸ்லாம் சொல்லாத அல்லது ஹராம் என்று தடுத்த ஒன்றை ஒருவன் செயல்படுத்தினால் முஸ்லிம் என்ற வட்டத்தை விட்டே முதலில் அவன் வெளியேறி விடுகிறான். பிறகு எப்படி அவன் செய்வதற்கு இஸ்லாத்தை பொறுப்பாக முடியும்.? இது முஸ்லிம்கள் என சொல்லிக்கொள்ளும் எவருக்கும் பொருந்தும். தீவிரவாதத்திற்கு துளிக்கூட மார்க்கத்தில் அனுமதியில்லையெனும் போது அதை செய்பவர்களை முஸ்லிம்களென யாரும் கூறுவார்களானால்.. அவர்களுக்கு இஸ்லாத்தை குறித்த அடிப்படை அறிவுக்கூட இல்லையென்பதாக தான் விளங்கிக்கொள்ள முடியும்.

தீவிரவாதத்தை செய்வதினால் தான் தாலிபான்களை எதிர்க்கிறோம் என பக்கத்திற்கு பக்கம், வரிக்கு வரி மனிதம் பேசும் மனித பிறவிகள் எவரும், அதே தீவிரவாதத்தை வெவேறு பெயர்களில், வெவ்வேறு போலி காரணத்திற்காக ஈராக்கிலும், பாலஸ்தீனிலும் அரங்கேற்றி ஆயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்று குவித்த இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஏன் பொதுவெளியில் எதிர்க்கவில்லை, நடுநிலை முக்காடு போட்டிருக்கும் ஊடகங்கள் கூட இவற்றிற்கு எதிராய் செயல்பட்டதில்லையே அது ஏன்..? புரிந்துக்கொள்ள முயற்சியுங்கள் முஸ்லிம்களும் மனிதர்கள் தான்... 

(9/11 நிகழ்வின் அடிப்படையில் தாலிபான்களை எதிர்ப்பதாக சொன்னால் அந்த நிகழ்வும் அமெரிக்காவின் உள்ளரங்க சதி என்பது நாடறிந்த உண்மை) 


இஸ்லாமிய சட்டங்களை விமர்சிப்பதிலும் அதே முரண்பாடுதான். சவுதி உட்பட எந்த நாடும் தங்களை இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியிருந்தாலும் அவற்றின் சட்ட முறைமைகள் மீறப்படும் போது இஸ்லாமே விமர்சிக்கப்படுகிறது.

குற்றம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணையின் போது இரு தரப்பையும் நன்கு விசாரித்த பிறகே நடுநிலையாய் தீர்ப்பை வழங்க சொல்கிறது இஸ்லாம். அது தம்மை சார்ந்தவர்களுக்கு பாதகமாக அமைந்தாலும் (6:152 ) நீதி செலுத்த சொல்கிறது. ஆக இங்கே குறை இஸ்லாமிய சட்ட முறைமைகளில் இல்லை. மாறாக அதை அமுல்படுத்துவோரிடம் பிரச்சனை இருந்தால் இதற்கு எப்படி மார்க்கம் காரணமாகும்..?

 இஸ்லாமிய ஆட்சியை நீங்கள் விமர்சிப்பதாக இருந்தால், அண்ணலாரின் ஆட்சியிலிருந்தோ அல்லது அதற்கடுத்து வந்த கலிஃபாக்களின் ஆட்சியிலிருந்தோ விமர்சனங்களை பதிய வேண்டும். ஏனெனில் அவை தான் இஸ்லாத்தின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆட்சியாக அங்கீகரிக்கப்பட்டவை.. ஆனால் இன்று சவுதி ஆட்சியாளர்களுக்கு எதிராக கூப்பாடும் போடும் எவரும் மேற்கண்ட ஆட்சியமைப்பு பற்றி வாய் திறப்பதில்லை...

உண்மையாக இஸ்லாம் என்ன சொன்னது என்பதை அறிய அதை செயல்படுத்தியவர்களிடம் மட்டும் தான் ஒப்பு நோக்க வேண்டும். தன் தந்தையாராலே ஓட்டகைகள் மேய்ப்பதற்கு கூட தகுதியில்லையென ஒதுக்கப்பட்ட உமர் (ரலி), பிற்காலத்தில் சுமார் 22 ½ லட்சம் சதுரமைல்களை எந்த வித முறைகேடுகளும் இன்றி திறமையான நிர்வாக திறன் கொண்டு நீதமான ஆட்சியை சுமார் 10 ஆண்டு காலம் செய்ய முடிந்தது என்றால் அதற்கு பெயர் தான் இஸ்லாமிய ஆட்சி. அதை செய்ய வைத்தது தான் இஸ்லாம்! இவர்களது ஆட்சியை விமர்சிக்க வாருங்கள் தாரளமாய் ...

இன்னும் பாருங்கள், சமீபத்தில் இஸ்லாமிய விரோத போக்குக்கொண்ட ஒரு படத்திற்கு எதிராக முஸ்லிம் அமைப்புகள் களத்தில் இறங்கியதை சேனல் நியுஸ்களிலும், இணையத்தில் எழுத்துக்கள் வாயிலாகவும் கருத்து சுதந்திரத்திற்கு எதிரான செயலாக கண்டித்த இதே ஊடகங்கள், இதற்கு முன்னர் இதே முஸ்லிம் அமைப்புகள் இரத்த தான முகாம்கள் பல நடத்திய போதும், வரதட்சணைக்கு எதிராக பல மேடைகள் போட்ட போதும், சுனாமி எனும் பேரிடர் ஏற்பட்ட தருணத்தில் மத சார்பற்று களப்பணியாற்றிய போதும் ஓரிரு வார்த்தைகள் கூட அவர்கள் குறித்து செய்திகள் வெளியிடவில்லையே ஏன்...?

  • பொதுவெளியில் முஸ்லிம்கள் என்றாலே பிரச்சனைக்குரியவர்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படுத்த கூடியவர்கள் என்ற பிம்பம் மட்டுமே நிலை பெற வேண்டும் சுய நல சிந்தனைக்கு என்ன காரணம்...? 
  • இன்று தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அனைவரும் அரேபியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள் அல்லர். மாறாக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் உங்கள் பார்வைகளுக்கு மத்தியிலே சுப்பனாகவோ, குப்பனாகவோ அல்லது தலித், கிறித்துவ, நாடார்.. இப்படி ஏதாவது ஒரு சமூகத்தை சார்ந்தவர்களாகவோ தான் இருந்திருப்போம். சாதியெனும் அடைமொழி தொலைக்கவே எங்களின் இஸ்லாமிய தழுவல். ஆரம்பத்தில் இல்லாமல் இன்று உங்களிடமிருந்து எங்களை அன்னியப்படுத்தி இருக்கிறதென்றால் அதற்கு யார் காரணம்..? அன்னியப்படுத்தப்பட்டு நிற்பது நாங்கள் மாத்திரமல்ல, உண்மைகளும் தான்.!    
  • இஸ்லாம் சொன்ன ஒரே காரணத்திற்காகவே சிகரெட் பிடிக்காமல், மது அருந்தாமல், விபச்சாரத்தின் பக்கம் நெருங்காமல், வட்டி வாங்காமல், மதுக்கடைகள் நடத்தாமல், ஹராமான தொழில் செய்யாமல் இன்று உங்களின் மத்தியில் எத்தனையோ முஸ்லிம்கள் நாள்தோறும் வலம் வருகிறார்களே அவர்களை ஏன் இஸ்லாத்தின் அடையாளமாக கருத மறுக்கிறீர்கள்...? 

நல்ல தமிழர்களாக வாழ்ந்துக்கொண்டே எங்களால் நல்ல முஸ்லிம்களாகவும் வாழ முடியும் என்கிறோம். அதை செயல்படுத்தி காட்ட உள்ளூர் சகோதரத்துவத்தை உலக அளவில் பேச முற்பட்டால் அது தவறா..?  சிந்திக்க கடமைப்பட்டிருக்றீர்கள் சகோஸ்..

முஸ்லிம் சகோதரர்களே...! இத்தருணத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இஸ்லாம் சொல்லாத ஒன்றை செய்யும் போது சிறியதாகினும், பெரியதாகினும் அது இச்சமுகத்தில் எந்த கோணத்தில் பார்க்க படுகிறது என்பதை தான் தற்கால நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகிறது.

ஹஜ் பெருநாளுக்கும், நோன்பு பெருநாளுக்கும் மாற்றார்களை அழைத்து வீட்டில் பிரியாணி கொடுத்து புளங்காகிதம் அடைந்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு உண்மையான இஸ்லாம் என்றால் என்னவென்பதை எடுத்து சொல்லும் கடமையும் நமக்கு இருக்கிறது. வேதவரிகளும் தூதர் மொழிகளும் மட்டுமே நமது வாழ்க்கைகான அளவுகோல். என்பதை (எடுத்து சொல்ல)  என்றும் மறவாதீர்கள்.

உங்கள் சகோதரன்
குலாம்

                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்.
read more "முஸ்லிம்களும் மனிதர்கள் தான்... "

Friday, January 18, 2013

கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?

                                      ஓரிறையின் நற்பெயரால்


முதன்மையாக விவாதிக்கப்படும் பொருட்களில் இன்று கடவுளின் இருப்பும் ஒன்றாகிவிட்டது. ஏற்பது அல்லது மறுப்பது என்ற நிலைப்பாடுகள் கடவுளை மையமாக கொண்டு மேற்க்கொள்ளப்படும் இரு முக்கிய செயல்பாடுகள் ஆகும். பொதுவாக கடவுள் ஏற்பு என்பது நம்பிக்கை சார்ந்த விசயமாக அணுகும் நாத்திகர்கள் தங்கள் கடவுள் மறுப்பை உறுதியான நிலைப்பாடாக கொள்கிறார்கள். ஆக இங்கே இரு நிலைப்பாடுகளிலிருந்தும் பெறப்படும் தகவல்கள் ஏற்பை விட கடவுள் மறுப்புக்கு அதிக ஆதார சான்றுகளை தர வேண்டும். 

எந்த ஒன்றையும் ஏற்கவோ, மறுக்கவோ செய்வதாக இருந்தால் அந்த ஒன்றீன் மூலம் என்னவென்பதை முதலில் அறிய வேண்டும். அதே அடிப்படையில் கடவுளை ஏற்பதாகவோ ,மறுப்பதாகவோ இருந்தால் கடவுள் என்ற நிலைக்குறித்து நேர்மறை / எதிர்மறை விளக்கங்கள் முதலில் நமக்கு தெளிவாக அறிந்திருக்க வேண்டும். 

 கடவுள் என்பவரை அல்லது என்பதை மனிதன் தெளிவாக அறிந்திருக்க வேண்டுமானால் அதற்கு இரு வழிமுறைகள் மட்டுமே இருக்கிறது,
1. கடவுளே நேரடியாக காட்சி தருவது. அல்லது
2. தம்மைக்குறித்து மனித சமூகத்திற்கு ஏதாவது ஒரு வழியில் உணர்த்துவது

இதில் முதலாவது மிக ஏற்புடையதாக இருந்தாலும் கடவுளின் நேரடி காட்சி என்பது காலத்தை அடிப்படையாக கொண்டது. ஆக எல்லா நேரங்களிலும் கடவுள் காட்சி தந்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி ஒரு நிலை இருந்தால் கடவுள் மறுப்பு குறித்து பேச வாய்ப்பில்லாமல் போகலாமே தவிர உலகம் படைத்தலின் அடிப்படை நோக்கம் அர்த்தமற்று போகும். 

ஆக கடவுள் நேரடி காட்சியின் மூலம் தன் இருப்பை உணர்த்தாத போது இரண்டாம் நிலையில் மட்டுமே மனிதர்களுக்கு தன்னை அறிமுகப்படுத்த வேண்டும். அதாவது மனிதன் அறிந்துக்கொள்ளும் முறையிலும் தன் வல்லமைக்கு உகந்தார் போலவும் மனிதசமூகத்திற்கு கடவுளின் அறிமுகம் இருக்க வேண்டும்.

கடவுள் தன்னைக்குறித்து மனித சமூகத்திற்கு சொல்லும் போது தான் தனித்தவன், தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்றும், தன்னை இவ்வுலகத்தில் யாரும் பார்க்க முடியாது என்றும், தனக்கு மேலாக ஒரு சக்தி இல்லையென்றும், உலக இயக்கம் தன்னால் மட்டுமே சாத்தியமென்றும், தம்மை எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்றும், இதனை செய்கை ரீதியாக மரணத்திற்கு பிறகுண்டான வாழ்வில் அறிந்துக்கொள்ள முடியும் -என்று தம்மைக்குறித்து பிரகடனப்படுத்தி பிறகே ஏற்க சொல்கிறார்.

ஆக இங்கே கடவுளை ஏற்பதாக இருந்தால் மேற்கண்ட செயல்முறைகளை ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி ஏற்றுக்கொண்டு கடவுளின் ஏவல்களை -விலக்கல்களை பின்பற்றுவதே கடவுள் ஏற்பாளர்கள் என்பதற்கு பொதுவான சான்று!

அடுத்து கடவுள் மறுப்பை எடுத்துக்கொள்வோம். 
கடவுளை மறுப்பதற்கு வரையறை செய்யப்பட்ட தெளிவான காரணங்கள் என்று கடவுள் மறுப்பாளர்களிடம் எதுவும் இல்லை. மாறாக கடவுள் குறித்து கடவுள் ஏற்பாளர்கள் சொல்லும் காரணத்தை எதிர்த்தே தங்கள் வாதத்தை நியாயப்படுத்துகிறார்கள். பொதுவாக கடவுள் மறுப்புக்கு சொல்லும் காரணங்களில் அறிவியல் மூலாம் பூசிவது தான் இன்னும் வேடிக்கை!

இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிணும் கடவுள் இல்லை. அறிவியல் மூலமாக அலசினாலும் கடவுளின் இருப்பு பிடிபடவில்லை. ஆக கடவுள் இல்லை! " இதுதான் நாத்திகர்களின் கடவுள் மறுப்புக்கு பிரதான ஆதாரம்.. 


சில பத்திகளை முன்னோக்குங்கள் சகோஸ்., 
 இவ்வுலகத்தில் கடவுளை யாரும் பார்க்க முடியாது
 அவருக்கு மேலாக ஒரு சக்தி இல்லை
 உலக இயக்கம் அவரால் மட்டுமே சாத்தியம்
 அவரை எதுவும் கட்டுப்படுத்த முடியாது
போன்ற நிலைகளை ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஒருவர் கடவுள் ஏற்பாளர் ஆவார். மேற்கண்ட வரிகளுக்கு எதிரான நிலைகளை கொண்டே கடவுளை மறுக்க வேண்டும் ஆனால் பாருங்கள், கடவுள் ஏற்புக்கு எவை பிரதான காரணங்களாக முன்மொழியப்பட்டதோ அவை வைத்தே கடவுளை மறுக்க நினைப்பது எப்படி பொருத்தமான வாதமாகும். இது ஆச்சரியமான முரண்பாடும் கூட., 

ஏனெனில் கடவுளை இவ்வுலகில் பார்க்க முடியாது என்பதை உள்வாங்கியே ஒருவர் கடவுளை ஏற்கும் போது, அதே காரணத்தை கடவுள் மறுப்புக்கும் ஆதாரமாக சொன்னால் அது எப்படி ஏற்பு நிலைக்கு எதிரான செயல் படாக கொள்ள முடியும்? ஏனெனில் கடவுள் மறுப்பு சிந்தனை வ(ள)ரும் முன்னமே கடவுள் இவ்வுலகில், இப்பிரபஞ்சத்தில் எங்கு நோக்கிலும் காணப்பட மாட்டார். அறிவியலிலும் அகப்பட மாட்டார் என ஏற்பாளர்களால் வழிமொழியப்பட்ட ஒரு நெறிமுறை! 

ஆக மேற்கண்ட வாதங்களுக்கு எதிரான நிலைக்கொள்வதாக இருந்தால், இவையில்லாத வேறு பிற கேள்விகள் மூலமாக தான் கடவுள் மறுப்புக்கு வலு சேர்க்க வேண்டும். இதில் இன்னும் ஒரு படி போய் அறிவியலை கடவுளுக்கு எதிராக களம் இறக்கி இருப்பது தான் அர்த்தமற்றது. அதாவது, எல்லாவற்றிற்கும் அறிவியல் ஒரு வரையரை, இலக்கணம் வகுத்து இருக்கிறது. ஆக அறிவியல் குறிப்பிடாத, வகைப்படுத்தாக ஒன்று இவ்வுலகில் இருப்பதற்கான சாத்தியமே இல்லை என்று கடவுள் மறுப்புக்கு சற்று விளக்கமாய் ஒரு காரணம் சொல்கிறார்கள்

சரி, எல்லாவற்றிற்கும் வரையறைகளையும், இலக்கணங்களையும் தெள்ளத்தெளிவாக வகுத்த அறிவியல் கடவுள் என்றால் என்ன என்பதற்கு ஒரு வரையறை ஏற்படுத்தி தந்திருக்கிறதா..? அல்லது எப்படிப்பட்ட நிலையில் இருந்தால் கடவுள் ஏற்றுக்கொள்ள தகும் என்பதையாவது அறிவியல் சுட்டிக்காட்டி உள்ளதா? அறிவியல் மூலமே கடவுளை மறுக்கிறோம் என சொல்பவர்கள் குறைந்த பட்சம் அப்படி மறுக்கும் கடவுள் எப்படியானது என்று கூற முடியுமா...? அல்லது கடவுள் இருப்பை உறுதிப்படுத்த எப்படி இருந்தால் அது உண்மையான கடவுள்? என்பதையாவது விளக்கி சொல்ல முடியுமா?

ஏனெனில் அறிவியல் ஏனையவைகளுக்கு தெளிவான விளக்கம் அளித்ததுப்போல கடவுள் என்பதற்கு தெளிவான இலக்கணம் இயற்றி.. அதன் பண்புகள், தன்மைகளை விளக்கி பின்னர் அதற்கு ஆதரவான நிலைகள் எங்கேணும் காணப்படவில்லையென்றால் கடவுளை மறுப்பதற்கு அறிவியல் ஒரு தெளிவான ஆதாரம் என்பதை ஏற்று கொள்ளலாம். ஆனால் கடவுளை மறுப்பதற்கு ஒரு எதிர் நிலை சான்றை கூட இதுவரை அறிவியல் தரவில்லை.

அறிவியலில் அகப்படவில்லையென்பதற்காக கடவுள் இல்லையென்றால் அதே அறிவியல் உலக உருவாக்கம் முதல் அறிவு சார்ந்த அன்றாட பல கேள்விகளுக்கு புதிரை தான் இன்னும் பதிலாக தந்துக்கொண்டிருக்கிறது. அறிவியல் என்பது வரையறைக்கு உட்பட்டு தொடரும் ஒரு பயணம் என்பதை இங்கேயும், முடிவுற்ற ஒரு தொகுப்பல்ல என்பதை இங்கேயும் பார்த்தோம்

ஆக அறிவியல் மூலமாக ஒருவர் கடவுளை மறுக்கிறேன் என்று கூறுவாரானால் கடவுளை மறுத்து வெளிக்கொணரப்பட்ட அறிவியல் சான்றுகள் என்ன என்னவென்பதை தெளிவாக முன்மொழிய வேண்டும். கடவுள் ஏற்புக்கு ஆதரவாக எழுப்பப்படும் அனைத்து கேள்விகளுக்கும் அறிவியல் விரல் நுனியில் தங்கள் பதிலை வைத்திருக்க வேண்டும். கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படியானது அல்லது எப்படி இருந்தால் கடவுளை உண்மையாக ஏற்க முடியும் என்பதையாவது சொல்ல வேண்டும்., 

அதுவரை கடவுளை மறுக்க வாய்ப்புகள் இன்னும் அரிதாகிக்கொண்டு தான் போகும்...   

                                                             அல்லாஹ் மிக்க அறிந்தவன்
read more "கடவுளை மறுக்க ஓர் அரிய வாய்ப்பு ?"

Friday, December 07, 2012

"நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!"


                                        ஓரிறையின் நற்பெயரால்..

விலக்கப்பட்டது என்றோ, அனுமதிக்கப்பட்டது என்றோ தெளிவாக மார்க்கத்தால் உறுதி செய்யப்பட்ட செயல்பாடுகள் தவிர்த்து, காலத்தினையோ, சூழ் நிலையோ கருத்தில் கொண்டு மேற்கொள்ளபடும் ஒரு செயலில் நமக்கு ஐயம் ஏற்பட்டால் அதை தெளிவுப்படுத்த அல்லாஹ்வும், அவனது தூதரும் கூறிய வார்த்தைகளுடன் ஒப்பு நோக்க வேண்டும்.

இதை இன்னும் எளிதாக சொன்னால் இன்று உபயோகிக்கும் சாதரண குடிநீரிலிருந்து இனிவரும் காலங்களில் பயன்படுத்த போகும் எந்த குடிபானங்களாக இருந்தாலும் அவற்றை பயன்படுத்திக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. அக்குடிபானங்களில் போதைகளை உண்டாக்கும் எவ்வித சாரம்சமும் இல்லாதிருக்க வேண்டும் என்ற அடிப்படை விதி ஒன்றை தவிர! இதுவே ஒரு குடிக்கும் திரவத்தின் பயன்பாட்டிற்கான இஸ்லாத்தின் பொதுவான அளவுகோல்.

இறை மறையில், அத்தியாயம் 55 வசனம் 33 ல்
"மனு, ஜின் கூட்டத்தார்களே! வானங்கள், பூமி ஆகியவற்றின் எல்லைகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெறுவீர்களாயின், (அவ்வாறே) செல்லுங்கள்;.என அல்லாஹ் சொல்கிறான்.

இந்த ஆயத்தை கொஞ்சம் சிந்தித்து பார்த்தால் மனித சக்தியின் திறன் எங்கெல்லாம் வெளிப்படுமோ அவற்றை செயல்படுத்த மார்க்கத்தில் அனுமதியளிக்கப்பட்டிருப்பதை அறியலாம். ஆக இணையம் உட்பட மனிதன் சக்தியில் உருவான எந்த நவீனத்துவங்களையும் பயன்படுத்திக்கொள்வதற்கு இஸ்லாம் பொதுவாக தடைகளை விதிக்கவில்லை. ஆனால் அந்த பயன்பாடுகளின் இறுதியில் வெளிப்படும் விளைவுகளின் தரத்திற்கு தகுந்தாற்போல் சில விதிகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்று இணையம் தடம் பதிக்காத இடம் என்று உலகில் எதுவுமில்லை, காற்று நுழைய முடியாத இடங்களில் கூட இணையங்களின் இருப்பு நிலையாகி விட்டது உள்ளூரில் ஊறுகாய் வியாபாரம் செய்வது எப்படி? என்பது முதல் உலக வங்கியின் செயல் திட்டங்கள் வரை அனைத்து தகவல்களும் முழுமையாய் பெற இணையமே இலகுவான வழியாக இருக்கிறது, ஆக மனித வாழ்வில் இணையத்தின் தேவை இன்றிமையாத ஒன்றாகி விட்டது.

ஏனைய தகவல் பரிமாற்றங்களை விட இணையங்கள் மூலமாக ஒரு செய்தி அல்லது ஒரு நிகழ்வை மிக விரைவாக எல்லோருக்கும் தெரியப்படுத்த முடியும். சில வினாடிகளிலேயே நம்மை குறித்த அனைத்து செய்திகளையும் பிறிதொருவருக்கு மிக இலகுவாக வெளிப்படுத்தவும் இணையத்தில் சாத்தியம்.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் இணையம் என்ற பொதுவெளியில் நாம் சார்ந்த கருத்துக்கள், கொண்ட கொள்கைகள் எல்லாவற்றையும் மிக தெளிவாக எல்லோருக்கும் சேர்ப்பிக்க முடியும். அதிலும் குறிப்பாக முஸ்லிம் சகாக்கள் இஸ்லாத்தை மிக அழகான முறையில் மாற்றார்களுக்கு விளக்க ஏதுவாக இந்த இணையத்தினை பயன்படுத்தி வருவது மிகவும் வரவேற்புகுரிய செயல்

இப்படி தகவல் பரிமாற்றத்திற்காக இணையத்தை பயன்படுத்தப்படும் வரை மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. இதன் ஒரு பகுதியாக பேஸ்புக், டுவீட்டர் போன்ற சமூக வலை தளங்களையும் மார்க்கம் குறித்த செயல்பாடுகளுக்காக நாம் பயன்படுத்தி வருவது ஆரோக்கியமான ஒன்றுதான்.

ஆனால் இங்கே ஒரு விசயத்தை நாம் தெளிவாக புரிந்துக்கொள்ள வேண்டும்.
பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்கள் முழுக்க முழுக்க மார்க்கம் சார்ந்த செயல்பாடுகளுக்காக உருவாக்கப்பட்ட தளமல்ல. மாறாக ஆண் பெண் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒன்று. இங்கே மார்க்கம் குறித்து பிறருக்கு சொல்லும் அதே நேரத்தில் தமது அந்தரங்க செய்திகளை காத்துக்கொள்வதும் ஆண், பெண் இருபாலருக்கும் மிக அவசியமான ஒன்று.

ஏனெனில் பொதுவாக இஸ்லாம் உலகளாவிய சகோதரத்துவத்தை பேண சொன்னாலும் தன் உடன் பிறந்தவர்களையே உண்மையான சகோதரங்கள் என்கிறது. மாறாக உடன் பிறவா எல்லோரையும் சகோதர்களாக நினைக்க சொன்னாலும் அவர்கள் உண்மையான சகோதரங்கள் போன்றவர்கள் இல்லையென்பதையும் அழுத்தமாக விளங்க சொல்கிறது. இந்த நூலிடை வித்தியாசத்தை நாம் தெளிவாய் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் இங்கே பொதுப்படையாக ஒருவர் பழக வேண்டி இருப்பதால் ஒன்று, உண்மையாகவே அவர் நல்லவராக இருக்கலாம். அல்லது நல்லவராக நடிக்கலாம். ஏனெனில் எவரின் நம்பகத்தன்மையும் நூறு சதவீகிதம் நமக்கு தெரியாது. இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்றை நம் அறிவில் தீர்மானித்து பின் தேவையற்ற விளைவுகளை சந்தித்தால் அதற்கு நாம் தான் பொறுப்பு.

இறைவன் குறித்து இறைவனின் தூதர் சொன்ன செய்திகளை பிற மக்களிடம் எத்தி வைப்பதற்காகவே நாம் இணையத்தில் கூடி இருக்கிறோமென்றால் அதற்கான மார்க்க வரம்பில் மட்டுமே எதிர் பாலினத்துடன் பழகி செல்வது போதுமானது. தேவையற்ற தம் அந்தரங்க செய்திகளையும், குடும்ப புகைப்படங்களையும் பகிர்வது அவசியமற்றது என்பதை விட ஒரு நிலையில் அது ஆபத்தாய் கூட முடியலாம் என்பதையும் இதே இணையத்தில் கேள்வியுறும் அன்றாட பல நிகழ்வுகள் உண்மைப்படுத்துகின்றன.

ஏனெனில் எங்கே ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கிறார்களோ அங்கே மூன்றாவதாய் சைத்தான் வந்து விடுகிறான் - என்பது நபிமொழி. இங்கே சகோதரர்களாக பழகும் உங்களை நான் நம்புவதோ, என்னை நீங்கள் நம்புவதோ பெரிய விசயமல்ல.,  நாம் இருவருமே அல்லாஹ்வின் தூதர் வார்த்தைகளை நம்பியாக வேண்டும்! அது தான் இங்கே ரொம்ப முக்கியமும் கூட.

இணையமும் ஒரு தனிமையான சூழல் போல தான். ஆக ஆணோ, பெண்ணோ தேவையில்லாத பேச்சுக்களை தனிமையில் பேசுவதை தவிர்ந்துக்கொள்ளுங்கள். எல்லா நேரங்களிலும் அல்லாஹ் நம்மை கண்காணித்துக்கொண்டிருக்கிறான் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

புகை, மது, போதைபொருட்கள், சினிமா, போன்றவை ஏற்படுத்தும் தனிமனித, சமூக பாதிப்புகளை விட தவறான இணைய நட்பு ஏற்படுத்தும் பிரச்சனைகள் குடும்ப வாழ்வை அதிக அளவில் பாதிக்கும்.

இங்கே யார் சரி யார் தவறு என்று ஆராயும் பொறுப்பு நமக்கில்லையென்றாலும் நாம், நம் தரப்பில் முன்னெச்சரிக்கை உணர்வோடு நடந்துக்கொள்வது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டதும் கூட.

கட்டற்ற சுதந்திரம், முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் நட்புக்கு எதுவும் தடையில்லை என்று வாழ்க்கை பயணத்தை தொடர்ந்தால் அவை எஞ்சியுள்ள வாழ்வை கேள்விக்குறியாக்குவதுடன் நரகை நோக்கி பயணிக்க செய்யும் நவீனக் கலாச்சார குறியீடுகளாகதான் மாறும்.

யாரையும் குற்றப்படுத்தவேண்டும் என்பது இந்த ஆக்கத்தின் நோக்கமல்ல. ஏனெனில் அதற்கான தகுதிகளும், உரிமைகளும் யாருக்கும் இல்லை. என்னையும் உங்களையும் சுய பரிசோதனைக்கு உட்படுத்தி கடந்த காலத்தை நிகழ்காலத்தோடு ஒப்பிட்டு எதிர்காலத்தில் செய்பவை குறித்து நினைவூட்டவே இந்த பதிவு!
ஒரு கணமேணும் உங்கள் உள்ளத்தில் ஒரு கேள்விக்குறியே இந்த பதிவு உண்டாக்கினால் அதுவே போதுமானது.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                           அல்லாஹ் நன்கு அறிந்தவன்
read more " "நரகை நோக்கி நவீனக் கலாச்சாரங்கள்..!" "

Friday, November 02, 2012

கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..!


                                     ஓரிறையின் நற்பெயரால்...


அறிவியல் வரையறை செய்த எல்லாவற்றையும் ஆராய்ந்து அவற்றை உண்மையென்றோ பொய் என்றோ வகைப்படுத்த முடியும். ஆனாலும் ஒன்றீன் மூலத்தை குறித்து அறிவியல் எதை பதிவு செய்து வைத்திருக்கிறதோ அதனை தவிர்த்து மாற்று திறனால் அதை அளவிட முடியாது, மேலும் அதன் ஆளுகை ஒரு குறிப்பிட்ட நிலை வரை மட்டுமே நீடித்து செல்லும். என்பதை சென்ற பதிவில் பார்த்தோம்.

இப்படி அறிவியல் இவ்வுலகிற்கு வெளிக்கொணர்ந்த செயல்பாடுகளை மட்டுமே வைத்து ஒன்றை உண்மையென்றோ அல்லது பொய்யென்றோ ஒன்றை கூறுகிறோம். இதனடிப்படையில் நாம் புரிந்துக்கொள்வது அறிவியல் ஒன்றை ஆதார குறியீடுகளும் தரும் போது மட்டுமே அவற்றை குறித்த தகவல்களை நேர் மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ ஏற்றுக்கொள்கிறோம்.

எந்த ஒன்றையும் நாம் உறுதிப்படுத்திக்கொள்ள அறிவியலை மட்டுமே துணைக்கழைத்தால் அறிவியல் அனைத்தையும் இவ்வுலகிற்கு முழுமைப்படுத்தி சொல்லி இருக்க வேண்டும். ஆனால் எல்லாவற்றையும் முழுமைப்படுத்தி விட்டதா என்றால் அதற்கு இல்லையென்பது தான் அறிவுடையோரின் பதிலாக இருக்கும். ஆம்! அறிவியல் இன்னும் தொடாத செயல்பாடுகள் ஏராளம் இவ்வுலகில் உண்டு.

 கடவுள் குறித்த அறிவியல் நிலைப்பாடும் இப்படி தான். விஞ்ஞான ரீதியில் கடவுளை ஏற்க ஒரு குறியீடும் இல்லையென்று சொல்வோர் அதற்கு எதிர்க்கேள்வியாக கடவுளை மறுக்கும் விஞ்ஞான குறியீடுகள் குறித்து கேட்டால், அறிவியலில் கண்டறியப்படாத எதுவும் ஏற்றுக்கொள்ள தகுதியானது அல்ல. ஆக கடவுளின் இருப்பு எங்கும் இருப்பதாக அறிவியல் இதுவரை கண்டறியவில்லை. ஆக கடவுள் இல்லை! - இப்படி ஒரு அறிவார்ந்த பதில்(?) தருகிறார்கள். இது எப்படி ஏற்றுக்கொள்ளும் வாதமாக இருக்கும்.?

எந்த ஒன்றை குறித்தும் இதுவரை அறிவியல் நிருபணம் தரவில்லையோ அது இல்லையென்று சொல்வது ஏற்புடையதன்று. மாறாக அதுக்குறித்த நேர்/ எதிர் தகவல்கள் இதுவரை நமக்கு கிடைக்கவில்லை என்று சொல்வது தான் பொருத்தமானதாக இருக்கும். ஏனெனில் இன்றும் நாம் புதிது புதிதாக செய்திகளை அறிந்துக்கொண்டே இருக்கிறோம். ஆக அறிவியல் இன்னும் முழுமையடையவில்லை என்பது கண்கூடு!

சரி விசயத்திற்கு வருவோம். அப்படியானால் கடவுளின் இருப்பை நேரடியாக பிற்கால அறிவியலால் உண்மைப்படுத்த முடியுமா..? என்றால் முடியாது என்பது தான் தர்க்கரீதியான பதிலாக இருக்க முடியும். ஏனெனில் கடவுள் என்பது / என்பவர் மறைந்திருக்கும் அல்லது கண்டறியப்பட வேண்டிய ஒரு பொருளல்ல அதி நவீன தேடு பொருள் மூலம் கண்டுப்பிடிக்கப்பட! அறிவியல் என்பது நமது தேவைகளுக்காக பிறவற்றை ஆராய்வது, முடிந்தால் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது. 

அப்படி ஆராயவும், ஆதிக்கம் செலுத்த முடியா நிலையிலும் கடவுள் இருப்பதால் அறிவியலால் கடவுளின் இருப்பை நேரடியாக உணர்த்த முடியாது. மாறாக இல்லையென்று அறிதிட்டு சொல்லவும் வாய்ப்பில்லை. ஏனெனில் நம் கண்களுக்கு புலப்படவில்லை என்ற புறக் காரணி தவிர்த்து எந்த ஆதாரபூர்வமான சான்றுகளும் கடவுளை மறுக்க இல்லை. இப்படி சரி தவறு என தெளிவாய் கூறப்படாத ஒன்றின் உண்மை நிலையை தர்க்கரீதியாக ஆராயலாம்..

உதாரணமாக நான் அமெரிக்கா என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன், காரணம் நான் அந்த நாட்டை பார்த்தில்லை, அது குறித்த செய்திகளை கேட்டதில்லையென்கிறேன். ஆகவே அமெரிக்க இல்லையென்பது என்பது என் வாதம் என வைத்துக்கொண்டால்.. இதை மறுப்பதாக இருந்தால் நீங்கள் மேற்கண்டவற்றிற்கு எதிராக எனக்கு ஆதார நிருபணம் தர வேண்டும்.

அதாவது, அமெரிக்கா என்ற நாடு இந்த  புவியில் வட அமெரிக்க கண்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.பசிபிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையே அமைந்துள்ளன. வடக்கே கனடாவும் தெற்கே மெக்சிகோவும் எல்லைகளாக அமைந்துள்ளன. வல்லரசு நாடாக இருக்கிறது,  வாஷிங்டன் டி.சி.இதன் தலை நகரம்.

இப்படி அமெரிக்கா குறித்து எனக்கு அதிகமாக தகவல்களை உங்களால் தரமுடியும். நேரடியாக போய் வந்தவர்களின் சாட்சியமும் இருந்தால் வேறு வழியில்லை நான் பார்க்கவில்லையென்றாலும் அமெரிக்க உண்டென்பதை ஒப்புக்கொண்டாகதான் வேண்டும். அது தான் உண்மையும் கூட..

அடுத்து லாம்கு ..?
லாம்கு என்ற ஒரு நாடு இல்லையென்கிறேன். மேற்கூறப்பட்ட அதே காரணங்கள் தான்.  அதை மறுப்பதாக இருந்தால் மேற்கண்ட அதே வழிமுறைகளை பின்பற்றி எனக்கு மறுப்பை தரவேண்டும். ஆனால் நீங்கள் எப்படி தேடியும்  அப்படி ஒரு நாடு குறித்த தகவல்கள் உங்களுக்கு கிடைக்கவே இல்லை .அதை உண்மைப்படுத்த உங்களிடம் எந்த ஆதார சான்றும் இல்லை என கொள்வோம். ஆக நீங்கள் வேறு வழியின்றி நான் சொல்வதை ஒப்புக்கொண்டாக வேண்டும். ஏனெனில் லாம்கு என்ற ஒரு நாட்டை நீங்கள் இதுவரை கண்டறியவே இல்லை.

இங்கு தான் சற்று சிந்திக்க வேண்டும். முதலில் நான் இல்லையென்ற அமெரிக்காவை நீங்கள் உண்டென்பதற்கு ஆதாரங்கள் தந்தீர்கள். இரண்டாவதாக நான் மறுத்த லாம்குவிற்கு ஆதரவாக உங்களால் ஒரு சான்றை கூட தர முடியவில்லை. அதற்காக லாம்கு என்ற நாடு பறக்கும் தன்மையுடையது, ஒரு பச்சை பெட்டிக்குள் வைக்கப்பட்டிருக்கும் என்று மாற்று வரைவிலக்கணமும் தர முடியாது. ஏனெனில் புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு, தட்ப வெப்ப நிலை, மக்கட்தொகை, இனம், மொழி போன்றவையே ஒரு நாட்டிற்கான அடையாளம்.

ஒரு நாடென்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரைவிலக்கணம் நமக்கு அறிவியலால் வழங்கப்பட்டிருக்கிறது. அதை முதல்  நாட்டிற்கு கூறியதால்  அதை நான் ஏற்றுக்கொண்டேன். லாம்குவை பொறுத்தவரை அப்படி ஒன்றை உங்களால் தரமுடியவில்லை ஆக மேற்கண்டவை இல்லாமல் வேறு செயல்பாடுகளை அடையாளப்படுத்தினால் அதுவும் தவறே! அப்படி அடையாளப்படுத்தப்பட்டாலும் ஒரு நாடு என்பதற்கான அடையாளத்தின் கீழ் அது வராது.

ஆக லாம்கு என்ற ஒன்று இல்லை. என்பதை எல்லோரும் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இப்படி தான்  அறிவியல் மூலமாக நாம் ஒன்றை அறிந்துக்கொள்கிறோம் (யாரும் லாம்கு நாட்டை தேடி அலைய வேண்டாம். எனது பெயரை தான் (கு+லாம்) திருப்பி போட்டிருக்கிறேன்)



இதே உதாரணத்தை கடவுள் என்ற நிலையோடு பொருத்தினால் உண்டென்பதற்கும், மறுப்பதற்கும் சான்று தரவேண்டும். கடவுள் உண்டென்பவர்கள் கடவுளை புறக்கண்களால் பார்க்க முடியாது, அவரது ஆளுமை எல்லாவற்றிலும் மிகைத்திருக்கிறது. மாறாக எந்த ஒன்றீன் ஆளுமையும் அவர் / அதன் மீது செலுத்த முடியாது. என்று கூறுகிறார்கள்.

இது தற்காலத்தில் கூறப்பட்ட வறட்டு தத்துவமல்ல.. இந்த மனித சமூகத்திற்கு கடவுள் எப்போது அறிமுகம் செய்து வைப்பட்டாரோ அன்றிலிருந்து முன்மொழியப்பட்ட வார்த்தை இது. இதை மறுப்பதாக இருந்தால் இதற்கு மாற்றமான ஆதார சான்றுகள் தரவேண்டும் மாறாக கடவுள் நேரடியாக தெரிவதில்லை. அறிவியலிலும் உட்படவில்லை என்றால் அது மேற்கண்ட நிலைக்கு எதிர் நிலை தான் தவிர மறுப்பாகாது.

கடவுளின் நிலை குறித்து அறிவியல் தொடக்கத்திற்கு முன்னரே தெளிவாய் பிரகடனப்படுத்திருக்கும் போது கடவுளை மறுப்பதாக இருந்தால் அந்த கூற்றுக்கு உடன்பட்டே மறுப்பை கூற வேண்டும். அதாவது நேரடியாகவும் இல்லாமல், அறிவியல் சாதனங்களில் நிறுத்தாமல் கடவுளின் இருப்பை எப்படி காட்டுவது..? என்பதை கடவுள் மறுப்பாளர்கள் தெளிவாக சொல்ல வேண்டும்..

அஃதில்லாமல் மீண்டும் மீண்டும் கடவுளை மறுக்க அறிவியலை அழைத்தால் அது அறியாமை வாதமே.. ஏனையவைகளை கண்டறிந்து அவற்றிற்கு இலக்கணம் வகுத்ததுப்போல கடவுள் குறித்து நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ வரைவிலக்கணம் அறிவியல் ஏற்படுத்தி தரவில்லை.  கடவுளை குறித்து அறிய கடவுள் ஏற்பாளர்கள் / மறுப்பாளர்கள் கூறும் வாதங்களை அடிப்படையாக வைத்தே அறிவியலோடு பொருத்த வேண்டும். ஆனால் இங்கே கடவுள் மறுப்பாளர்கள் தங்களின் மறுப்புக்கு அறிவியலையே பதிலாக்க பார்க்கிறார்கள்.

ஆராய்வதற்கு வாய்ப்பே கொடுக்கப்படாத ஒன்றை ஆராய முடியவில்லையென்பது எப்படி பொருத்தமான வாதமாகும்?  கடவுளை பொய்படுத்த அறிவியலுக்கு வாய்ப்பே இல்லை, சொல்ல போனால் மெய்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தான் அறிவியலுக்கு கேள்விகளாக  காத்திருக்கிறது.

  •  உலக உருவாக்கத்திற்கு பிக்பாங் தியரி வரை விவரித்து செல்லும் அறிவியல் அதற்கு முந்திய நிலை குறித்து விளக்க முற்படுவதில்லை. அதாவது பிக்பாங் ஏற்பட்ட விதத்தை மட்டுமே பேசுகிறது. -பிக்பாங் எனும் பெரு வெடிப்பு ஏன் நிகழ வேண்டும்?  
  • ஆயிரமாயிரம் கேமராக்களும், விதிமுறைகளும், பாதுக்காப்பு வசதிகளும் ஏற்படுத்தி இருந்தும் போக்கு வரத்து, விபத்துகளை சரிசெய்ய முடியவில்லை ஆனால் பரந்து விரிந்த பால்வெளிகளில் பல்லாயிரக்கணக்கான கோள்களும் தத்தமது நீள் வட்ட பாதையில் மிக சரியாக சுழன்று வருகிறதே . எது அப்படி சாத்தியமாக்கியது?  
  • மனிதனோ ஏனைய உயிரினங்களோ உயிர் வாழ தகுதியற்ற இலட்சகணக்கான கோள்கள் ஏன் ஏற்படுத்த பட வேண்டும்?
  •  இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கழித்து வரும் சூரிய/ சந்திர கிரகணங்களை துல்லியமாக வரையறுக்கும் அறிவியலால் ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தை துல்லியமாக வரையறுக்க முடியவில்லையே..?
  • மருத்துவ துறையில் அளப்பரிய சாதனை படைக்கும் அறிவியலால் ஒருவரின் மரணத்தை ஏன் தடுத்து நிறுத்த முடியவில்லை.?  அட குறைந்த பட்சம் ஒருவர் மரணிக்கும் நேரத்தையாவது அறிந்து சொல்ல முடிவதில்லையே... அது ஏன்?
இப்படி அறிவுப்பூர்வமான கேள்விகளுக்கு விடையளிக்க முடியாமல் அறிவியல் குறைப்பட்டுக்கொண்டிருக்கும் போது... கடவுளின் இருப்பை அறிவியல் உண்மைப்படுத்தவில்லையென்பது எவ்வளவு பெரிய முரண்பாடான சிந்தனை...!

மேற்கண்ட வினாவிற்கு அறிவியல் விடை அளித்தால் கடவுள் இருப்பதென்பது அவசியமே இல்லாத ஒன்று தான். அதுவரை கடவுளின் இருப்பை அறிவியல் மெய்ப்படுத்திக்கொண்டே தான் இருக்க வேண்டும்...

அறிவியலை கடவுளுக்கு எதிராக முடிச்சிட பார்க்காதீர்கள். ஏனெனில் அறிவியல் கடவுளின் எதிரியல்ல. மனித பயன்பாட்டிற்கு கடவுள் கொடுத்திருக்கும் ஓர் கருவி!

                                                 அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
read more "கடவுளை மெய்ப்பிக்கும் அறிவியல்..! "

Friday, October 12, 2012

உங்களில் சிறந்தவர்..

                                            ஓரிறையின் நற்பெயரால்.

பொதுவாக தலைமை பொறுப்பை பயன்படுத்தி தனக்கு வேண்டிய ஆதாயங்களை தேடிக்கொள்வது தான் எழுதப்படாத சட்டமாக நம் தலைவர்கள் மத்தியில் கண்டு வருகிறோம். அதிலும் அரசியல் அதிகாரங்களை பயன்படுத்தி பெறும் ஆதாயங்களை விட ஆன்மீகத்தை பயன்படுத்தினால் கிடைக்கும் ஆதாயத்தின் மடங்கு இரட்டிப்பாகும். சில தலைவர்களின் உண்மை முகங்கள் ஊடகங்களில் செய்திகளாக வரும் போது அதை நாம் தெளிவாக அறிகிறோம்.

மனிதக்குலம் தோன்றிய காலத்திலிருந்தே எந்த ஒரு தலைவரானாலும் அது ஆன்மீகத்திலோ அல்லது அரசியலிலோ அவருக்கென்று சீடர்களோ, தொண்டர்களோ இருப்பது மரபு. அதை தான் இன்று வரையிலும் இந்த உலகம் கண்டு வருகிறது. ஆனால் இப்படி ஆன்மீகம் மற்றும் அரசியலில் ஒரே நேரத்தில் ஒருவர் தலைவராக இருந்து அவருக்கு சீடர்களோ தொண்டர்களோ இல்லையென்றால் அதை விட ஆச்சரியமான செய்தி ஒன்றுமில்லை. அந்த ஆச்சரியத்திற்குரிய தலைவர் மாமனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் குறித்து சில செய்திகள் இங்கே...

தங்களை தலைவர் என மக்கள் மத்தியில் இனங்காட்டும் எவருமே முதலில் செய்யும் ஒரு காரியம் மக்கள் கூட்டத்திலிருந்து தம்மை வேறுப்படுத்தி காட்டுவதற்காக தனக்கென்று தனி உடை, ஆசனங்கள், பின்னாலும் முன்னாலும் தம் தேவையை நிறைவேற்ற சில வேலையாட்களை நியமிப்பார்கள். ஆனால் ஒரு நாட்டை நிர்வகிக்க கூடிய தலைமை பொறுப்பு மற்றும் இறைத்தூதர் என்ற இமாலயப்பொறுப்பு இரண்டையும் கொண்ட முஹம்மத் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவ ஸல்லம் அவர்கள் கூறும் வார்த்தைகளை கவனியுங்கள்... சகோஸ்

ஒரு நபித்தோழர் குறிப்பிடுகிறார்...
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்யக் கூடாது என தடுத்தார்கள். 
அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி) நூல் : அபூதாவூத் 1828

ஏனெனில் காலில் விழுபவரும், விழப்படுபவரும் ஒரே மனிதர்கள் தாம் என சுயமரியாதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் அதுமட்டுமில்லாமல் தாம் இறந்த பிறகும் கூட தம் அடக்கஸ்தலத்திற்கு கூட சிரை வணக்கம் செய்ய கூடாது கண்டிப்புடன் கூறினார்கள். 

மற்றொரு நிகழ்ச்சி...
எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்' என்றார்கள்.
நூல் : அஹ்மத் 12093 ,15726, 15717 

ஆன்மீகமோ அரசியலோ, தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்த வாதிகள் இங்கே போராடியதுண்டு. அவர்களின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதும் உண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்கு தரப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம். 

அதைக்கூட மக்களை செய்ய விடாமல் அதிலும் குறிப்பாக ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அந்தச் சீர்திருத்தத்தை தம் இறப்பிற்கு பின்னரும் கூட முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே.

அடுத்த ஒரு நிகழ்ச்சி பாருங்கள்...
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடினமான நஜ்ரான் நாட்டுப் போர்வை ஒன்றை அவர்கள் அணிந்திருந்தார்கள்.
அப்போது எதிரே வந்த கிராமவாசி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்வையுடன் சேர்த்துக் கடும் வேகமாக இழுத்தார்.
இழுத்த வேகத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கிராமவாசியின் மார்பில் சாய்ந்தார்கள்.
அவர் கடுமையாக இழுத்ததன் காரணமாகப் போர்வையின் கனத்த கரைப்பகுதி அவர்களின் தோள்பட்டையைக் கன்றிப்போகச் செய்தது.
பிறகு கிராமவாசி, 'முஹம்மதே! உம்மிடமுள்ள செல்வத்தில் எனக்கும் தருமாறு கட்டளையிடுவீராக!' என்று கூறினார்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தார்கள்.
பிறகு அவருக்கு ஏதேனும் வழங்குமாறு கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பாளர்: அனஸ் ரலி நூல்கள்: புகாரி 6088, முஸ்லிம் 2296.

தமக்காக உயிரையும் கொடுக்கும் ஒரு சமூகத்தின் மத்தியில் நின்றுக்கொண்டிருக்கும் போதே ஒரு காட்டரபி நபிகள் மீதுள்ள போர்வையை பிடித்து இழுக்கிறார். அதுவும் அவர்கள் மேனி சிவக்கும் அளவிற்கு. ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் பாருங்கள்... வந்தவரின் சுபாவம் இப்படியானது தான் என தெளிவான தெரிந்தவர்கள் அவர்கள் அதனால் தான் அவருக்கு சிறை தண்டனை கொடுக்காமல் சிரித்துக்கொண்டே கருவூல நிதியிலிருந்து அவருக்கு சிறிது கொடுக்க சொல்கிறார்கள் .இன்றைய ஆட்சியாளர்கள் முன் இப்படியாய் ஒரு சம்பவம் நடந்தால்...

புகழை விரும்பா தலைவர்கள் கூட அதுவாக தம் மீது விழும் போது மவுனமே சாதிப்பார்கள். ஆனால் இந்த தலைவரோ எப்பேற்ப்பட்ட சூழ் நிலையிலும் தம் கொண்ட கொள்கையில் உறுதியாய் இருந்தார் பாருங்கள்...
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது மகன் இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று கூறினார்கள்.
நூல் : புகாரி: 1043, 1061, 1063

இங்கே சொன்ன செய்தியை விட சொல்லப்பட்ட தருணமே மிக முக்கியத்துவம் வாய்ந்தது. தன் மகன் மரணித்த சோகத்தில் கூட மக்கள் தவறான புரிதலில் சென்று விடக்கூடாது என்ற எண்ணத்தில் தக்க சமயத்தில் விளக்கமளிக்கிறார்கள்.  எந்நிலையிலும் தம் மீது புகழின் நிழல் கூட விழ மறுத்து விட்டார்கள்.
அவர்களின் நீத தன்மைக்கு ஒரு சான்று பாருங்கள்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், 'முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அவரைக் கூப்பிடுங்கள்' என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) 'இவரை முகத்தில் அறைந்தீரா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் 'மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக' என்று கூறக் கேட்டேன். உடனே நான், 'முஹம்மத்(ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்' என்றார். 

நபி(ஸல்) அவர்கள் 'இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள்.ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா(அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்தபடி (நின்றுகொண்டு) இருப்பார்கள். அவர்கள் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது 'தூர்' (சினாய்) மலையில் (இறைவனைச் சந்தித்த போது) அவர்கள் அடைந்த மூர்ச்சைக்குப் பகரமாக (இப்போது மூர்ச்சையாக்கப்படாமல்)விட்டுவிடப்பட்டார்களா? என்று எனக்குத் தெரியாது' என்று கூறி நபி மூஸாவை விட தம்மை உயர்த்தி பேச வேண்டாம் என தீர்ப்பு கூறுகிரார்கள்.
அறிவிப்பாளர் அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) புஹாரி பாகம் 7, அத்தியாயம் 87, எண் 6917

இந்த  நிகழ்வை சற்று ஆழமாக சிந்தியுங்கள். வழக்கை கொண்டு வருபவர் ஒரு யூதர் அதுவும் வழக்கே முஸ்லிமுக்கு எதிராக தான். அதிலும் நபி முஹம்மதை காட்டிலும் தம் சமூகத்தின் தலைவரை உயர்ந்தவர் என்கிறார். ஆனால் இங்கே வழக்கை விசாரித்து நீதி சொல்பவர் நபி முஹம்மத் அவர்கள். என்ன ஆச்சரியம் தமக்கு சாதகமில்லாமல் கொண்டு வரப்பட்ட வழக்கிற்கு தானே நீதி சொல்கிறார்கள். அதுவும் நீதமாய். ஏனெனில் நியாயமான தீர்ப்பைதான் நபி முஹம்மத் வழங்குவார்கள் என்பதை அவர்கள் ஆட்சிக்காலத்தில் சிறுபான்மையினராய் இருந்த யூதர்கள் கூட நிதர்சனமாக அறிந்து வைத்திருந்தார்கள்.  

இன்னும் சொல்லலாம்... 
உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி எண்: 1082

  உலகில் எத்தனையோ செயல்கள் செய்வதன் மூலம் தம்மை உயர்ந்தவர்களாக காட்டிக்கொள்வர்கள் உண்டு. ஏன் எத்தனையோ சிறந்த மனிதர்கள் என பெயர் பெற்றவர்கள் கூட தம் குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சரிவர செய்தார்களா என்பது சந்தேகமே... ஆனால் இங்கு நபி முஹம்மத் அவர்களோ ஒருவன் சிறந்தவனாக இருப்பதற்கு அடிப்படை அவன் மனைவி இடத்தில் நற்பெயர் பெற வேண்டும் என்று சொல்கிறார்கள். இது பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் என்பதோடு மட்டுமில்லாமல் பெண்களை அஃறிணை பொருளாக பயன்படுத்திய அந்த சமூக சூழ்நிலையில் சொல்லி இருப்பது எத்தகைய முற்போக்கான சிந்தனை. 

கலாச்சாரம், நாகரிகம், சுந்தந்திரம் என பெண்களுக்காக குரல் கொடுக்கும் இந்த காலத்திலும் இப்படியான ஒரு வாக்கியத்தை எந்த சிந்தனைவாதியும் முன்மொழியவில்லையென்பது சிந்திக்க தகுந்த ஒன்று!

மனிதக்குல மேன்மைக்காக மட்டுமே தங்கள் வாழ்வை அற்பணித்த அந்த மாமனிதர் அரசியலாகட்டும், ஆன்மிகமாகட்டும், குடும்ப பொருளாதரமாகட்டும் எல்லாவற்றிற்கும் முன்மாதிரியாக வாழ்ந்து உலகிற்கு பாடம் புகட்டினார்கள். வெறுமனே ஏட்டில் மட்டும் வடித்து தங்கள் வாழ்வை மனம் போன போக்கில் அமைத்துக்கொள்ளவில்லை அவர்கள்.

 தலையில் எண்ணெய் தேய்ப்பதிலிருந்து காலில் செருப்பு அணிவது வரை இன்று வரையிலும் ஒரு சமூகம் அவர்கள் சொன்னதை, செய்ததை அவர்கள் அங்கீகாரம் கொடுத்ததை மட்டுமே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறதென்றால் அவர்கள் மனிதமனங்களில் ஏற்படுத்திய தாக்கம் எவ்வளவு உண்மையானது வலிமையானது என்பதை சிந்திப்போர் புரிந்துக்கொள்வார்கள். 

இறுதியாக... 
அவர்களது இறுதி காலக்கட்டத்தில் ஒரு சம்பவம்!
'மக்களே! நிச்சயமாக நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான். உங்களை விட்டுப் பிரியும் நேரம் நெருங்கி விடலாம். எனவே, உங்களில் எவருடைய மானத்திற்காவது, எவருடைய முடிக்காவது, எவருடைய உடம்புக்காவது, எவருடைய செல்வத்திற்காவது நான் பங்கம் விளைவித்திருந்தால் இதோ இந்த முஹம்மதிடம் கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! இதோ முஹம்மதின் மானம், முஹம்மதின் முடி, முஹம்மதின் உடல், முஹம்மதின் செல்வம். பாதிக்கப்பட்டவர் எழுந்து கணக்குத் தீர்த்துக் கொள்ளுங்கள்! 

அவ்வாறு செய்தால் முஹம்மதின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளாக நேரிடுமோ என்று நான் அஞ்சுகிறேன் என்று உங்களில் எவரும் கூற வேண்டாம். அறிந்து கொள்க! நிச்சயமாக பகைமையும், வெறுப்பும் எனது சுபாவத்திலேயே இல்லாததாகும். அவை எனது பண்பிலும் இல்லாததாகும்' என்று கூறி விட்டுத் திரும்பினார்கள்.

மறு நாளும் இது போன்றே பள்ளிவாசலுக்கு வந்து இவ்வாறே பிரகடனம் செய்தார்கள். 'யார் என்னிடம் கணக்குத் தீர்த்துக் கொள்கிறீர்களோ அவர்கள் தாம் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்' என்பதையும் சேர்த்துக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! உங்களிடம் ஒருவர் யாசகம் கேட்டு வந்தார். அவருக்கு அளிப்பதற்காக யாரேனும் எனக்குக் கடன் தருகிறீர்களா? என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நான் மூன்று திர்ஹம் (அன்றைய வெள்ளி நாணயம்) கடன் தந்தேன்' என்று கூறினார். உடனே என்னை அழைத்து 'இவர் கேட்டதை இவருக்குக் கொடுங்கள்' என்றார்கள்.
இவ்வாறே பெண்கள் பகுதிக்கும் சென்றார்கள். அவர்களுக்கும் இவ்வாறே கூறினார்கள். 
நூல் : முஸ்னத் அபீ யஃலா 6824

இங்கே பேசுவது ஒரு சர்வசாதரண மனிதர் அல்ல., ஒரு சம்ராஜியத்தின் தலைவர். இஸ்லாமெனும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையின் தலைமை தளபதி. கையசைத்தால் ஏவளுக்கு எண்ணற்றோர் காத்திருக்க. அந்த மாமனிதரோ தம்மை பழித்தீர்த்துக்கொள்ள மக்களை அழைக்கிறார்.. என்ன ஒரு சமத்துவம்.. இன்றைய தலைவர்களில் எவராவது இதைப்போன்று செய்ய முன்வருவார்களா.. அல்லது குறைந்த பட்சம் தம் தவறுக்கு பொது மன்னிப்பாவது இந்த சமூகத்திடம் கேட்பார்களா.... ஊழலிலும் இலஞ்சத்திலும் குளிர்காயும் தலைவர்கள் மத்தியில் தனக்கென ஒருவரையும் பழிவாங்காமல் தம் வாழ்வு முழுவதையும் கழித்த அந்த மாமனிதர் மக்கள் மன்றத்தில் தம் மீது ஏதும் குற்றமிருக்கிறதா என முறையிடுகிறார்...

அவர் தாம் உலகில் வாழ்ந்த நாளிலும் இனி இந்த உலகம் வாழும் நாள் வரையிலும் தம் செய்கையின் மூலம் சிறந்தவர் என்பதை நிருபித்து சென்று விட்டார்கள். அவர்கள் பெயரில் அவதூற்றை மட்டுமே அச்சேற்றிக்கொண்டிருக்கும் கூட்டங்கள் இனியாவது பகுத்தறிவு பார்வையோடு சிந்திக்கட்டும் அந்த மாமனிதரின் உண்மை வரலாற்றை..
.

தொடர்புடைய ஆக்கம்

                                                            அல்லாஹ் நன்கு அறிந்தவன்

Reference :
read more "உங்களில் சிறந்தவர்.."

Friday, September 14, 2012

#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்!

                                           ஓரிறையின் நற்பெயரால்

 உலகில் நாம் பின்பற்றும் எந்த செய்கையானாலும் அவை இரண்டு விசயங்களை மையமாக கொண்டிருக்கிறது. அதாவது ஒன்றின் மூலங்களை ஆதார குறியீடுகளுடன் ஆராய்ந்து அவற்றை ஏற்பது அல்லது மறுப்பது. மற்றொன்று விளக்க வழி ஏதுமின்றி மனதளவில் அதை உண்மை அல்லது பொய்யென நம்புவது. 

உலகில் பெரும்பாலான செய்கைகள் முதல் நிலையில் பின்பற்றபட்டாலும் மிக குறைவான விசயங்களே நம்பிக்கை சார்ந்ததாக கூறி இரண்டாம் நிலையில் அங்கீகரிக்கப்படுகிறது.

அப்படி, மனித வாழ்வில் இரண்டாம் நிலையில் வைத்து பார்க்கப்படும் நம்பிக்கை சார்ந்த விசயமாகவே "கடவுள்" இருப்பதாக பெரும்பான்மையானவர்கள் நினைக்கிறார்கள். உண்மையாகவே எதையும் விளக்க முடியா நிலையில் வெற்று ஊகங்களில் மட்டுமே கடவுளும் அவர் சார்ந்த கோட்பாடுகளும் இருக்கின்றனவா என்பதை விளக்கவே இக்கட்டுரை.

தொடர்வோம்...

 கடவுள் இருக்கிறாரரா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டுமானால் அதற்கு முதலில் குறைந்த பட்சம் கடவுள் குறித்த நேர்மறை தகவல்களோ அல்லது எதிர்மறை செய்திகளோ நமக்கு தெரிந்திருக்க வேண்டும். ஆனால் இன்று கடவுளை ஏற்போர் நம்பிக்கை சார்ந்து மட்டுமே கடவுளை ஏற்கின்றனர் அதற்கு எந்த வித ஆதார நிருபணமும் தரவில்லையென குறைகூறும் கடவுள் மறுப்பாளர்கள் தாங்கள் மறுக்கும் கடவுள் எப்படிப்பட்டது / எப்படிப்பட்டவர் என்பதை இது வரை தெளிவுறுத்தியது இல்லை. 

 இன்று உலகில் இயங்கிவரும் சமூக ஏற்றத்தாழ்வுகளை பார்த்தும், நடைமுறை வாழ்வில் அப்பாவிகள், வறியவர்கள் போன்றவர்கள் பாதிக்கப்படுவதை பார்த்தும் கடவுள் இல்லையென்று சொன்னால் அது எப்படி கடவுளை மறுப்பதாகும்? வேண்டுமானால் இப்படிப்பட்ட செய்கைகளுக்காக அவரை கெட்ட கடவுள் என வேண்டுமானால் சொல்லலாம். அஃதில்லாமல் கடவுள் இல்லையென்று சொல்ல முடியாது. ஆக, 

ஒன்றை ஆதார ரீதியாக மறுப்பதற்கு முதலில் அதுக்குறித்து விளக்கப்படவேண்டும். ஆக கடவுள் இல்லையென்று சொன்னால் அதற்கான ஆதாரக்குறியீடுகள் தந்தாக வேண்டும். ஆனால் இன்று கடவுளை விமர்சிக்கும் எவரும் கடவுள் என்றால் என்ன என்பது குறித்து விளங்கவில்லையென்பது கண்கூடு.

சரி அப்படியானால் கடவுள் உண்டு என்பதை விளக்கும் ஆதார நிருபணம்...?

மனிதன் தெரிந்து வைத்திருக்கும் அனைத்து விசயங்களையும் சரி தவறு என தீர்மானிப்பதற்கு மனிதனிடம் இருக்கும் மிகப்பெரிய அளவுகோல் அவனது அறிவு மட்டுமே. அதாவது மனித அறிவு தம் புறக்காரணிகள் மூலம் எதை கேட்டதோ, பார்த்ததோ, உணர்ந்ததோ, அதை அடிப்படையாக வைத்து ஆராய்ந்து அந்த செய்கைக்கு ஒரு வரைவிலக்கணம் மனித அறிவு கற்பிக்கிறது. 

அதையே பிறிதொருவர் அறிவும் ஏற்றால் அதை உண்மை என்கிறோம்.  ஆனால் இங்கே கவனிக்க வேண்டிய விசயம் எதை நாம் அறிந்திருக்கிறோமோ, அறிகிறோமோ அதை மட்டுமே உண்மை என்கிறோம். மாறாக அறியாத அல்லது புலப்படாத ஒன்றை பொய் என்று கூறிவிட முடியாது. 

இதை இன்னும் எளிதாக விளக்கிட... 
நல்ல நிலையில் உள்ள மனித காதுகளுக்கு சுமார் 20 டெசிபல் முதல் 20000 டெசிபல் வரை உள்ள சப்தங்கள் மட்டுமே கேட்க முடியும். இந்த டெசிபல் அளவிற்கு மேலாகவோ அல்லது கீழாகவோ நம்மால் கேட்க முடியாது. அதனால் தான் எறும்புகளின் கமிஞ்சைகள் ,குண்டுசீ விழும் சப்தம் போன்றவற்றை கேட்க முடிவதில்லை. 

அதுப்போலவே குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகோ அல்லது மிக மிக அருகாமையிலோ நம் பார்வையில் எதுவும் தெளிவாக தெரிவதில்லை. எனினும் 20 டெசிபலுக்கு கீழாக எந்த ஓலியும் கிடையாது என்றோ நம் பார்வையில் இறுதியில் தெரிவதே உலகின் முடிவு என்பதையோ நாம் ஏற்றுக்கொள்வதில்லை. மாறாக மனித செவிகளுக்கும், பார்வைகளுக்கும் இவ்வளவு தான் சக்தி என்பதை ஏற்றுக்கொள்கிறோம்.

எப்படி செய்திகளை கேட்பதற்கு செவிகளும், காட்சிகளை பார்ப்பதற்கு விழிகளும் மனிதனின் உபயோகத்திற்கு வழங்கப்பட்டிருப்பதுப்போல எதையும் ஆராயும் நோக்கிற்காக அவனுக்கு சிந்திக்கும் திறனும் வழங்கப்பட்டிருக்கிறது. செவிகளும், விழிகளும் ஒரு நிலைக்கு மேலாக செயல்பட முடியாது என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாம் நமது அறிவு மட்டும் எப்போதும் எதையும் விளங்கும் என்று எண்ணுவது எப்படி நியாயமானதாகும்? அதுவும் அவை தரும் விளக்கம் மட்டுமே உண்மையானது, மனித அறிவு குறைபாடே இல்லாதது என்று நூறு சதவீகிதம் யாரால் உத்திரவாதம் தர முடியும்?

வெயிட் வெயிட்... இந்த இடத்தில் ஒரு கிராஸ் கொஸ்டீன்....
இன்று சாதரணமாக மனிதனால் பார்க்க முடியாத, கேட்க முடியாதவற்றையெல்லாம் மனித அறிவு அறிவியல் சாதனங்களை பயன்படுத்தி கண்டறிந்து அப்புறம் தானே அதை உண்மையென்கிறது. அப்படி இருக்க கடவுள் என்பவர்/ என்பது உண்மையானால் அதையும் அறிவியலால் கண்டறிந்து உண்மைப்படுத்தி இருக்கலாமே.. இதுவரை அறிவியலால் அப்படி ஒன்றை கண்டறிய முடியவில்லையென்றால் கடவுள் இல்லையென்றுதானே அர்த்தம்... என்ன சொல்றீங்க?



Good Question! But...
அறிவியல் கொடுக்கும் விளக்கமும்- ஆதார சான்றும் மனித அறிவுக்கு எதாவது ஒரு விதத்தில் புலப்படக்கூடியதாக இருக்கும். அதாவது பெரிய மலைகளிலிருந்து சிறிய அணுத்துகளாகட்டும். இவை மனித அறிவால் ஆராயும் தன்மைகள் கொண்டவை. அதனால் தான் அவைக்குறித்த செய்திகளை வெளிக்கொணர்ந்தது மனித அறிவால் சாத்தியமாயிற்று. 

இனியும் இதை விட கூடுதலாக பல விசயங்கள் கூட மனித அறிவால் கண்டறிய முடியும். அதைப்போலவே கடவுள் என்ற நிலையும் அவ்வாறே நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால் அறிவியலால் அதை மெய்படுத்த அல்லது மறுக்க முடியும்

ஆனால் கடவுள் என்பவர் / என்பது கண்களில் விரியும் காட்சியாகவோ, அகப்படும் பொருளாகவோ இருக்க வேண்டும் என்பது யார் சொன்னது? 
மனித அறிவுகளில் கட்டுப்பட வேண்டிய ஒன்று என்று யார் தீர்மானித்தது?
மனித உருவாக்க சாதனங்களால் ஆய்ந்தறிந்து அளவிட முடியும் என்பதை மனித அறிவுக்கு யார் உணர்த்தியது.? 

இன்னும் பாருங்கள் உலகில் எல்லாவற்றையும் அளவிட முடிந்தாலும் அவற்றிக்கே உரிய சாதனங்களை பயன்படுத்தினால் மட்டுமே அவற்றின் தன்மைகளை துல்லியமாக அறிந்துக்கொள்ள முடியும். 

அதாவது ஓளியின் வேகத்தை அளவிடுவதற்கு வெப்ப மானிகள் உதவாது. ஆயிரம் டன்களை துல்லியமாக எடைபோடும் கருவிகளால் கூட மூன்றில் ஐந்தை கழித்தால் எவ்வளவு என்று கூற தெரியாது. லிட்டர் அளவுகோலை வைத்துக்கொண்டு காற்றின் வேகத்தை அறிய முடியாது. ஒரு கிராம் கத்திரிக்காயை துல்லியமாக எடை போட ரிக்டர் அளவுகோலை பயன்படுத்த முடியாது.  

இப்படி அறிவியல் சாதனங்களால் கூட அவற்றின் செயல் திறனுக்கு மாறுபடும் ஒன்றின் மேல் ஆதிக்கம் செலுத்த முடியாத போது... மனித அறிவுக்கு உட்படாத, அறிவியல் சாதனங்களால் சோதித்து வரையரை செய்ய முடியாத ஒன்றை இல்லையென்று கூறுவது வெற்று ஊகங்கள் மட்டுமே... 

கடவுள் இல்லையென்று சொல்பவர்கள், தான் மறுக்கும் கடவுளுக்கு தவறான புரிதலை தான் தன்னிடம் வைத்திருக்கிறார்கள். கடவுள் இல்லையென்று தீர்மானிப்பது இருக்கட்டும்! அதற்கு முன் கடவுள் என்றால் என்ன... என்பது குறித்தாவது முதலில் தெரிந்துக்கொள்ள முற்படுங்கள்... 

ஏனெனில் நீங்கள் மறுக்கும் கடவுள்களை நான் கடவுளாகவே ஏற்பதில்லை.

உங்கள் சகோதரன்
குலாம்.

                                                                அல்லாஹ் நன்கு அறிந்தவன்

மேலும் தொடர்புடைய ஆக்கங்கள்:
பகுத்தறிவாளர்களின் கடவுள்..!
கடவுளின் "பிறப்பும்.- இருப்பும்."
read more "#கடவுள்# ஒரு மெகா தவறான புரிதல்! "

Sunday, July 22, 2012

முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்!

                                            ஓரிறையின் நற்பெயரால்

                 இஸ்லாத்தில் ஏனைய ஆக்கங்களை விட ரமலான் குறித்தே அதிக ஆக்கங்கள் இணையத்தில் நிறைந்து காணப்படுகின்றன.,ரமலான் குறித்து புதிதாய் அறிந்து கொள்வதற்கு எதுவுமில்லை என்ற அளவிற்கு அதிகமதிகம் செய்திகள் கிடைக்கின்றன., அல்ஹம்துலில்லாஹ்..!
        
    அத்தகைய சங்கைமிகு ரமலான் மாதத்தில் இப்போது நாமும் இருக்கிறோம். ரமலான் மாதத்தின் நோன்பை முழுவதும் நோற்க அல்லாஹ் அருள்புரிவானாக..! 

நோன்பு நோற்பதால் உடலுக்கு ஏற்படும் மருத்துவ ரீதியான நன்மைகள் ஆயிரமாயிரம் நிருபனமானாலும் (benefit of islamic fasting என கூக்ளியிட்டால் ஏராளமாக கண்டுக்கொள்ளலாம்) நோன்பின் உண்மையான நோக்கமும் அதன் அடிப்படையில் செயல்படும் முஸ்லிம்களின் நிலையும் குறித்தே இந்த கட்டுரை

ஏனைய வணக்கங்களைப்போல் அல்லாமல் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே நோன்பு குறித்து இறை வசனங்கள் இருக்கின்றன அல்குர்-ஆனில்

 ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.  (2:183)
   
     இங்கு நோன்பு நோற்பதின் நோக்கத்தை எளிதாக அறிந்திட அல்லாஹ்
" நோன்பின் மூலம் நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்." 
என குறிப்பிடுகிறான். இங்கு தூய்மை என்பது உள்ளத்தூய்மையை குறிக்கிறது. மேலும் இரட்சகனின் இறுதித்தூதரும் ,

    யார் பொய்யான பேச்சையும் கெட்ட நடவடிக்கைகளையும் விட்டு விடவில்லையோ அவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!"
அறிவிப்பாளர்:அபூ ஹுரைரா(ரலி) அவர்கள்
புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1903 

                   பொதுவாக நோன்பு பட்டினி கிடப்பதை மையப்படுத்தியிருந்தாலும் அதை முன்னிலைப்படுத்தி கடமையாக்கப்படவில்லை. பசித்திருப்பதும்-தாகித்திருப்பதும் நோன்பு காலங்களில் ஒரு அம்சமாக இருந்தாலும், தனி மனித ஒழுக்கத்தை பிரதானப்படுத்தியே நோன்பு இருக்கிறதென்பதை தான் மேற்கண்ட வேத வரியும் தூதர் மொழியும் எடுத்து இயம்புகின்றன. ஆக பட்டினி கிடப்பது மட்டுமே நோன்பின் சாரம்சமாக இருந்தால் மேற்கண்ட இறை வசனங்களில் அல்லாஹ் அவ்வாறு கூற வேண்டிய அத்தியாவசியமும் இல்லை., அவனுடைய தூதரும் வழிமொழிய வேண்டிய அவசியமும் இல்லை.
        
            ஆக மேலதிக விளக்கம் இல்லாமலே நோன்பின் அடிப்படை நோக்கம் என்ன என்பதை எளிதாக அறியலாம்., எனினும் அத்தகைய சங்கை மிகு நோன்பு காலங்களில் முஸ்லிம்கள் செயல்பாடுகள் குறித்து காண்போம்.



      எந்த ஒரு முஸ்லிமும் ரமலானிற்கு முன்னதாகவே அதனை வரவேற்க மிகுந்த ஆர்வமுடன் இருக்கிறார் என்பதில் இரு வேறுகருத்துக்கள் இல்லை. எனினும் நோன்பு காலங்களில் இரவு காலங்களில் சில நபர்கள் சஹருக்கு முன்புவரை நன்கு எங்கேணும் அமர்ந்து விளையாடி (அல்லது சக நண்பர்களோடு அரட்டை அடித்து)விட்டு சஹருக்கு பின் நன்றாக தூங்கி நோன்பு திறப்பதற்கு முன் தன் கண்களை திறக்கும் சகோதரர்களின் நிலை மாறி...
      
             பதினான்கு மணி நேரத்திற்கு மேலாக பசித்திருப்பதும், தாகித்திருப்பதும் மட்டுமல்லாது தனது அன்றாட அதிக அலுவல்களுக்கு மத்தியிலும் அந்தந்த தொழுகைக்கான பாங்கு சொல்லப்பட்டவுடன் மிகச்சரியாக (பள்ளி வாசலுக்கு) தொழ செல்வதும், ஏனைய பர்ளான தொழுகைகளை போலவே சுன்னத்தான இரவு தொழுகைக்கு மிக முன்னதாக அல்லது தனது அலுவல் பணி முடிந்தும் விரைவாக வந்து ஜமாத்தோடு கலந்து தொழுகையே தொடர்வதும், 
      
             ஆயிரமாயிரம் மக்கள் உலவும் கடை வீதிகளில் அரைகுறை ஆடையுடன் காட்சியளிக்கும் அனேக அனாச்சாரியங்களுக்கு மத்தியிலும் பார்வையை தாழ்த்தி ஈமானை அதிகரிக்கும் மாண்புடன் உலவுவதும், தீய பேச்சுக்க்கள் பேசிடினினும், கெட்ட எண்ணங்கள் வந்திடினும் மறுகணம் "அஸ்தாஃபீருல்லாஹ்..!" எனக்கூறி எண்ணத்தை தூய்மையாக்குதலும்,

    திரைப்படத்திற்கு திரையிட்டு தன்னின் நேரங்களை குர்-ஆனோடு உரையாடுவதற்காக செலவிடுவதும், அதிக பசி இருப்பதை அறிந்தும் அருகே வந்தவருக்கு தன்னிடமிருந்து ஏராளமான உணவும் அதை விட தாரளமான இடமும் கொடுக்கும் பொறுமையும் மன சகிப்புதன்மையும் பொரும்பாலான முஸ்லிம்களின் நோன்பாக இருக்கிறது... எனினும் அத்தகைய சங்கை மிகு ரமலான் கடந்து விட்டால்...

  • இரட்சிப்புக்காக தம் கைகளை உயர்த்தியவர்களின் கையில் உயர்ரக சிகரெட்டுகள்..!
  • பாங்கு சொல்வதற்கு முன்னதாக பள்ளிக்குள் நுழைந்தவர் தொழுகை நேரம் முடிந்தும் பள்ளியின் பக்கம் எட்டிப்பார்பதில்லை...!
  • கடைவீதீகளில் தரையுடன் மட்டுமே விழிகளால் பேசியவர்களின் பார்வை தேடும் விரச காட்சிகள்
  • தீயப்பேச்சுகள் இவையாவும் அடியோடு தவிர்த்த அனேகர்களின் வாயில் அநாகரிக பேச்சுக்களின் அடிச்சுவடுகள்...!
  • பெரு நாள் தொழுகை முடிந்து துஆ கேட்பதற்கு முன்பாகவே திரையரங்க வளாகங்களில்...டிக்கெட் கிடைத்த பெருமிதத்தோடு
       இப்படி சிலர்..!

  இப்படித்தான் பல வருட ரமலானும் அதைத்தொடர்ந்த மாதங்களும் வெற்று சடங்காக பலர் வாழ்கையில் வந்தும்- சென்றும் கொண்டிருக்கின்றது.

↻ இதுதான் ரமலான் மாதம் முழுக்க நமக்கு அளிக்கப்பட்ட பயிற்சியா ? 

↻ இதுதான் நோன்பு நோற்பதன் மூலம் நாம் அடைந்து கொண்ட பயன்பாடா..? 

↻ தூய்மையுடையோர் என்பதற்கு இது தான் விளக்கமா?

சில பள்ளி வாசல்களில் ரமலான் முழுக்க நிறைந்த மக்கள் கூட்டம் காணப்பட்டாலும் ரமலான் முடிந்த பிறகு அவ்வாறு காண்பது அரிதாகிறது... இதற்கு என்ன காரணம்  இன்னும் வேதனை ஒரு சில பள்ளிவாசல்களில் நோட்டிஸ் அடித்து தொழுகையாளிகளை தேடும் நிலை... 

நோன்பு காலங்களில் மட்டும்தான் ஒழுக்கத்துடன் செயல் பட வேண்டும் என அல்லாஹ் வரையரை ஏற்படுத்தி தந்திருக்கின்றானா..? 

 சிந்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம் நாம்... 
  மேலும் புஹாரி பாகம் 2, அத்தியாயம் 30, எண் 1894 ல் அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்க
இரட்சகனின் இறுதித்தூதர் மேலும் கூறுகிறார்கள்

  "நோன்பு ஒரு கேடயமாகும்..!"


      ஆம்! அது பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயம்.,  அக்கேடயத்தை பயன்படுத்தி பாவ செயல்களிலிருந்தும், மன இச்சையிலிருந்தும் நம்மை தற்காத்து நோன்பில் நாம் கொண்ட பயிற்சியின் விளைவாக இறைவனுக்கு பயந்து ரமலான் மாதம் முழுக்க எவ்வாறு ஒழுக்க சீலர்களாக நம்மை தயார்படுத்தினோமோ அதன் தாக்கம் அதை தொடர்ந்த ஏனைய மாதங்களிலும் நம்மீது இருக்கவேண்டும்.,

         ஏனெனில் ஆதம் அலையை படைப்பதற்கு முன்னதாக இருந்த அதே அல்லாஹ் தான் நம்முடன் நோன்பிலும் இருக்கின்றான் -நோன்பல்லாத பிற காலங்களிலும் இருக்கின்றான். மேலும் ஒரு நல்ல செயலை தொடர்ந்து செய்வதற்கும், அதுப்போல கெட்டச்செயலை விட்டொழிப்பதற்கும் ஏனைய நிலைகளை விட ரமலான் மாத்திலேயே முறையாக பின்பற்றுதலுக்குரிய சாத்தியக்கூறுகள் அதிகம் இருக்கிறது.

      அந்த வாய்ப்பை நாம் நன்கு பயன்படுத்தி ரமலானில் மட்டும் முஸ்லிம்களாக இல்லாமல் நோன்பில் கொண்ட பயிற்சியின் விளைவால் உயிர் வாழும் காலம் முழுவதும் அல்லாஹ்விற்கு பயந்து அவனது ஏவல்-விலக்கல்களை பின்பற்றும் முன்மாதிரி முஸ்லிம்களாக வாழ வேண்டும். அத்தகைய நல்ல பாக்கியத்தை உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் தந்தருள்வானாக..!

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரிக்காதீர்கள். (3:102)


                                                 அல்லாஹ் நன்கு அறிந்தவன்

 குறிப்பு : கடந்த ஆண்டு ரமலானில் வெளியிட்ட "ரமலானில் முஸ்லிம்கள்" என்ற ஆக்கத்தின் மீள்பதிவு இது.
read more "முஸ்லிம்கள் பார்வையில் ரமலான்!"

Wednesday, June 13, 2012

சுதந்திரம் எனப்படுவது யாதெனில்....


ஓரிறையின் நற்பெயரால்

மத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்டு வெளியே வந்தால் மட்டுமே முழுமையான சுதந்திர காற்றை நம்மால் சுவாசிக்க முடியும் என்கின்றனர்... நவீனத்துவ வாதிகள்(?)

சுதந்திரம் என்ற வார்த்தை உரிமையை அளவுகோலாக கொண்டு கணிக்கப்படுகிறது. உரிமைகளே பெறப்பட்ட சுதந்திரத்தை பறைசாற்றும். உரிமைகள் பலவழிகளில் பெறப்பட்டாலும் பொதுவாக நான்கு மிகமுக்கியமாக இருக்கிறது.

  • கருத்துரிமை
  • பேச்சுரிமை
  • அரசியல் உரிமை
  • சமய உரிமை

இப்படி தனிமனித மற்றும் சமூகம் சார்ந்த நிலைப்பாடுகளின் கீழாக நாம் எடுக்கும் எந்த ஒரு தன்னிச்சையான முடிவுகளிலும் நமது விருப்பத்திற்கு மாற்றமாக அடுத்தவரின் தலையீடோ, துன்புறுத்தலோ, கட்டாயப்படுத்துதலோ இல்லாதிருப்பதே தனிமனித சுதந்திரம் எனப்படுகிறது.

இப்படி பொது பார்வையில் சுதந்திரம் என்பது நமது செயல்களை நாமே தீர்மானித்துக்கொள்ளும் உரிமையை வழங்குவதாக சொல்லப்பட்டாலும் உண்மையில் நமது உரிமைகள் நம்மால் முழுவதும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது தான் ஆச்சரியமான உண்மையும் கூட! இதை சில உலகியல் நிகழ்வுகள் வாயிலாக நிதர்சனமாக உணரலாம்.

சுதந்திரம் நமது பிறப்புரிமை... என்பதே எல்லோர் வாழ்விலும் முன்மொழியப்படும் முதன்மையான முழக்கமாகும். ஆனால் எங்கே பிறக்க வேண்டும், எப்படி பிறக்க வேண்டும் என்ற பிறக்கும் உரிமை கூட நம்மில் எவருக்கும் அவரவர் வசம் வழங்கப்படவில்லை. அது போலவே எப்போது மரணிக்க வேண்டும், எங்கே மரணிக்க வேண்டும் என்று சுயமாய் இறப்பை தேர்வு செய்யும் உரிமையும் நமக்கு வழங்கப்படவில்லை.

இப்படி பிறப்பையும் - இறப்பையும் தேர்ந்தெடுக்க உரிமம் பெறாத நமக்கு இவற்றுக்கு இடைப்பட்ட காலத்திலாவது நமது தனிமனித சுதந்திரத்தின் கீழாய் ஒன்றை செயல்படுத்துகிறோமா என்றால் அதுவும் இல்லை...

நமது உணவு பழக்கவழக்கமாகட்டும், கல்வியாகட்டும், ஆடை அணியும் முறையாகட்டும், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகட்டும் இவை எல்லாம் ஏற்கனவே வரையறை செய்து வைக்கப்பட்ட முறைமையின் கீழாக தான் தொடர்கிறோம். புதிதாய் நாம் ஒன்றையும் நமது உரிமையின் அளவுகோலாய் வைத்து தொடங்குவதில்லை. அப்படி சுய தீர்மானிப்பின் கீழ் ஒன்றை பெறுவதாய் இருந்தாலும் அது எதிர்மறை விளைவை தான் ஏற்படுத்தும்.

சின்ன உதாரணம் பாருங்கள், நமக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு போட்டியில் ஈடுபடும் போது அந்த விளையாட்டிற்கான விதிமுறைகளுடன் உடன்பட்டால் மட்டுமே அந்த போட்டிகளில் நம்மை சேர்த்துக்கொள்வார்கள். இல்லை எனக்கு எல்லாம் தெரியும் நானாக தான் எல்லா முடிவுகளும் எடுப்பேன் என்றால்.. அந்த விளையாட்டில் நம்மை சேர்த்துக்கொள்ளவே மாட்டார்கள்.

அது போலவே,நாம் பெரும் தொகை கொடுத்து வாங்கும் வாகனம். அதில் நமது காசில் வாங்கிய எரிபொருள், ஓட்டுனரும் நாமே அதற்காக சாலைகளில் நமது விருப்பத்திற்கு ஓட்ட முடியுமா??? அட சாலைகளும் நம்முடையது என்றே வைத்துக்கொண்டாலும் அப்பவும் நமது பயணத்தை நமது தனிமனித சுதந்திரம் என கூறி நமது விருப்பமாய் அமைக்க முடியாது.

மாறாக சிறியதாய் எரியும் சிவப்பு விளக்கிற்கு கட்டுப்பட்டுதான் நிற்க வேண்டும். அட அந்த சிவப்பு விளக்கு கூட நமது காசில் வாங்கிக்கொடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரியே! இல்லை... இல்லை எனது சுதந்திரத்தை தீர்மானிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது என கூறி அந்த சிவப்பு விளக்கை அலட்சப்படுத்தி பயணம் மேற்கொண்டால்...

சுதந்திரம் குறித்த நமது அடிப்படை புரிதலே முதலில் தவறு, சுதந்திரம் என்றால் கட்டுப்பாடுகளை உடைப்பது அல்லது மறுப்பது அல்ல. மாறாக அத்தகைய கட்டுபாடுகளால் ஏற்படும் விளைவு நமக்கு நன்மை ஏற்படுத்த வல்லதா தீமை ஏற்படுத்த வல்லதா என்பதை சுய அறிவுடன் தீர்மானித்து அதை ஏற்று சுதந்திரமாய் செயல்படுத்துவதே..!


இறுதியாய்
சுதந்திர கொடியாக இருப்பீனும் கூட அது வானில் பட்டொளி வீசி பறக்க வேண்டுமானால் உயர்ந்த கம்பத்தில் கட்டப்பட்ட கயிறு அக்கொடியுடன் இணைப்பட்டிருந்தால் மட்டுமே அது சாத்தியம்.

அது போல விண்ணில் அங்குமிங்குமாய் அலையும் பட்டம் கூட கீழே நிற்கும் ஒரு சிறுவனின் கைப்பிடியில் கட்டுண்டால் மட்டுமே அவை தன்னை எப்போதும் விண்ணில் நிலை நிறுத்திக்கொள்ள முடியும். இவை இரண்டும் சுதந்திரம் எனும் பெயரில் தன்னிச்சையாய் செயல்பட எண்ணி அவை இணைக்கப்பட்ட பிணைப்பிலிருந்து தன்னை விடுவிக்க முற்பட்டால்...

பதில் தரும் பொறுப்பை உங்களிடமே தருகிறேன்.

மாற்று சிந்தனை தவிர்த்து தன் மன இச்சைகளை பின்பற்றி எடுக்கும் முடிவுகளுக்கு பெயர் தான் சுதந்திரம் என்றால் அப்படிப்பட்ட சுதந்திரத்தால் இறுதியில் ஒழுக்கக்கேட்டை தான் நாம் அடைய முடியும்.

எவ்வளவு பிரபலமான ஆளாக இருப்பீனும் ஐம்பது பைசா போஸ்ட்கார்ட்டில் கூட பெறுநராக அவர் பெயர் எழுதாவிட்டால் அது அவரிடத்தில் போய் சேர்வதில்லை. உலகியல் கட்டுப்பாடுகளே இப்படி இருக்க

எல்லாம் அறிந்த ஓர் உயரிய சக்தி வழங்கும் தெளிவான மற்றும் பாதுகாப்பான வழிமுறையை பின்பற்றினால் ஈருலகிலும் நாம் வெற்றி பெறலாம் என்ற மனித வாழ்வில் பின்பற்ற உகந்த செயல்களை கட்டுப்பாடுகளுடன் விதித்திருக்க, நமக்கு வழங்கப்பட்ட சிற்றறிவு மூலம் அவை தனிமனித சுதந்திரத்திற்கு எதிரானது என எதிர்க்க முற்பட்டால் இறுதியில் நமக்கே அது நஷ்டத்தை ஏற்படுத்தும்.

சிந்தியுங்கள் ...
எது சுதந்திரம்..?
எது முழுமையான சுதந்திரம்..?

அல்லாஹ் மிக்க அறிந்தவன்

read more "சுதந்திரம் எனப்படுவது யாதெனில்...."

Categories

அமல்கள் அறியாமை அறிவியல் அல்லாஹ் அவதாரம் ஆத்திகம் ஆரோக்கியம் இணையம் இப்லிஸ் இயற்கை இயற்கை சீற்றம் இயேசு இறுதிநாள் அடையாளம் இறைத்தூதர் இறைவன் இஸ்லாம் ஈஸா(அலை) உஜைர் நபி உணவு உண்மை உயிரனங்கள் உயிர் உருவாக்கம் உலக அழிவு உலகம் எதிரி ஏன் இஸ்லாம் ஏற்றத்தாழ்வு ஒப்பிடு ஒருவன் ஒற்றுமை கடவுள் கட்டுப்பாடு கல்கி கவனம் கவிதை காஃபிர் குர்-ஆன் சகோதரத்துவம் சமுதாயம் சிந்தனை சினிமா சைத்தான் சொர்க்கம் தஜ்ஜால் தண்டனை தாய் திருமணங்கள் தேவை நன்மைகள் நபிமொழி நரகம் நாத்திகம் நாம் நீதி பகுத்தறிவு பயங்கரவாதம் பரிணாமம் பல தெய்வங்கள் பள்ளிவாசல் பாதுகாப்பு பாலஸ்தீன் பூமி பெண்கள் பைபிள் போர்கள் மடல் மனசாட்சி மனம் மனிதன் மனிதர்கள் மரணம் மறுமை மஸ்ஜித் மார்க்கம் முந்தைய வேதங்கள் முரண்பாடு முஸ்லிம் முஹம்மது நபி ருக்கையா அப்துல்லாஹ் வரலாறு வானவர்கள் வாழ்க்கை விதி விமர்சனம். விளக்கம் ஹராம்